பேட்டி, சமஸ், விவசாயம், ஆளுமைகள், ரீவைண்ட் 4 நிமிட வாசிப்பு

நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி

சமஸ் | Samas
29 Sep 2023, 5:00 am
2

சுதந்திர இந்தியாவின் விஞ்ஞானிகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் அளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இல்லை; தூற்றப்பட்டவரும் இல்லை. ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் அவர், இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார். ‘டைம்' இதழ் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற 20 பேரில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது. ஆட்சியாளர்கள் பலருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடருக்காக இந்திய விவசாயம் - இந்திய விஞ்ஞானம் இரு துறைகளைப் பற்றியும் அவரிடம் பேசினேன்.

இன்றைக்கு உங்களைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இந்திய வேளாண்மையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகவா? இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவராகவா?

நீங்கள் என்னுடைய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்னுடைய அப்பா சாம்பசிவம் பெரிய மருத்துவர். கும்பகோணத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தவர். அந்த மருத்துவமனையை அவருக்குப் பின் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே என்னுடைய குடும்பத்தார் ஆசைப்பட்டார்கள். 1954ல் நான் டெல்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தபோது, எனக்கு முன் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வாய்ப்புகள் எல்லாவற்றையும் உதறிவிட்டுதான் உள்ளே நுழைந்தேன்.

அன்றைக்கெல்லாம் பலராலும் அவநம்பிக்கையோடு பார்க்கப்பட்டது விவசாய ஆராய்ச்சித் துறை. இருந்தும் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தேச பக்தி என்றால், அதை ஏதோ ஒரு விதத்தில் காரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமுறை என்னுடையது. வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது.

இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம்.

நாட்டில் அன்றைக்கு இருந்த உணவுப் பற்றாக்குறையையும் ஒரு வேளாண் புரட்சிக்கான தேவையையும் யாரும் மறுப்பதற்கில்லை. அதேசமயம், ஆயிரக் கணக்கான வருஷ விவசாயப் பாரம்பரியமிக்க நாடு இது. இப்படியொரு பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும்போது, நீங்கள் எந்த அளவுக்கு நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளையும், நவீன வேளாண் முறை உண்டாக்கக் கூடிய சுற்றுச்சூழல் அபாயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்?

ஏற்கெனவே இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் ஒரு ஆராய்ச்சியாளன் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. ஏற்கெனவே உள்ள ஆராய்ச்சிகள்  போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி அவன் நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்.

ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏன் நமக்குத் தேவைப்பட்டன என்றால், அவைதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய வல்லவையாக இருந்தன. ஒரு டன் நெல்லை உற்பத்திசெய்ய 20 கிலோ நைட்ரஜனும் 15 கிலோ பாஸ்பரஸும் வேண்டும். செயற்கை உரங்கள் என்றால், இது ஒரு மூட்டை போதும். இயற்கை உரங்கள் என்றால், வண்டி வண்டியாக வேண்டும்.

இன்றைக்கும் எரு நல்ல உரம்தான். ஆனால், வீட்டுக்குப் பத்து மாடுகள் வளர்ப்பது எத்தனை சிறு விவசாயிகளுக்குச் சாத்தியம்? அடிப்படையில் இந்த மனோபாவம் மோசமானது. எல்லாத் தரப்பினருக்கும் அறிவியலும் வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும்; விவசாயிகள் மட்டும் அப்படியே அன்றைக்கிருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது. தபால் அனுப்புவதில்கூடத்தான் நமக்குப் பாரம்பரியம் இருக்கிறது - புறாவிடம் கொடுத்தனுப்பிய பாரம்பரியம். ஏன் நமக்கு செல்போன்கள்?

அப்படி என்றால், இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா?

இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலேயே எனக்கு நம்பிக்கை இல்லை.

அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது.

இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள்.

உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா?

ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

விவசாயிகள் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொடுக்கும்போது அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுப்பது கடமை அல்லவா?

உண்மைதான். விவசாயிகளிடத்தில் இவற்றையெல்லாம் எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்; கூடுதலாகப் போனால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுக்க நம்முடைய வேளாண் துறை ஒரு பெரும் இயக்கத்தை நடத்தியிருக்க வேண்டும். அதேசமயம், எல்லா விவசாயிகளுமே தெரியாமல்தான் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். இந்தப் பயன்பாட்டில் அறியாமையும் இருக்கிறது; பேராசையும் இருக்கிறது.

இந்தியாவுக்கு மரபணு மாற்றப் பயிர்கள் தேவைதானா?

தேவை. ஆனால், அவற்றின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன? மக்களிடத்தில் அவை கொண்டுசெல்லப்படும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என்பதையெல்லாம் உறுதிப்படுத்த நமக்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு அமைப்பு தேவை. முதலில் அது உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு இந்தியாவில் சாலையோரக் கடைகளில்கூட மரபணு மாற்றக் காய்கறிகள் விற்கப்படுகின்றன. விற்பவர்-வாங்குபவர் இரு தரப்பினருக்குமே அவை மரபணு மாற்றப் பயிர்கள் என்பது தெரியவில்லை. மக்கள் பரிசோதனைக் கூட எலிகளாக்கப்படுகிறார்கள்?

இது தவறு. அரசின் அமைப்புகள் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி அளிக்க வேண்டும்.

சரி, ஜனநாயகத்துக்கு விஞ்ஞானிகளின் கடமை என்ன?

ஒரே கடமை. அது புதிய ரகப் பயிர் கண்டுப்பிடிப்பாக இருந்தாலும் சரி; கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி; அது மக்களின் நல்வாழ்வுக்கான பணியாக இருக்க வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பசுமைப் புரட்சியின் முகம்

ஆர்.ராமகுமார் 30 Sep 2023

ஆனால், மக்கள் நலனுக்கு எதிரான விஷயங்கள் அவரவர் துறைகளில் நடக்கும்போது பெரும்பாலும் இந்திய விஞ்ஞானிகள் ஏன் வாய்மூடிகளாக இருக்கிறார்கள்? அரசாங்கம் சொல்லித்தான் விஞ்ஞானிகள் ஒரு விஷயத்தில் இறங்குகிறீர்கள், நல்ல நோக்கத்துக்காகத்தான் அதைச் செய்கிறீர்கள் என்றாலும், காலப்போக்கில் அதன் விளைவுகள் தீமையை நோக்கிச் செல்லும்போது அதை மக்களிடம் தெரிவிப்பது கடமை இல்லையா?

அப்படி இல்லை. விஞ்ஞானிகள் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறார்கள். ஆனால், பொதுவில் அவர்கள் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பதை நாம் உணர வேண்டும்.

இந்திய விஞ்ஞானிகளின் பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கங்கள்தான் வழிநடத்துகின்றனவா?

எல்லா நாடுகளிலுமே பன்னாட்டு நிறுவனங்கள் பணம் பண்ணவே ஆசைப்படுகின்றன. எல்லா நாடுகளிலுமே நாட்டுக்காக உழைக்கும் விஞ்ஞானிகள் நாட்டின் நலனையும் தேவையையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் விஞ்ஞானம் தீர்மான சக்தி இல்லை. அரசியலும் பொருளாதாரமுமே தீர்மான சக்திகள்.

நவீன வேளாண் முறைக்கு மாறி அரை நூற்றாண்டு ஆகும் சூழலிலும்கூட, இந்திய விவசாயம் மெச்சக்கூடிய நிலையில் இல்லை. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கிறது, வேளாண் சாகுபடிப் பரப்பளவு வீழ்கிறது, விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது... இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சினைகளெல்லாம் விஞ்ஞானத்தினால் ஏற்பட்டவை அல்ல. அரசியலால் ஏற்பட்டவை. அரசாங்கங்கள் பின்பற்றும் கொள்கைகளால் ஏற்பட்டவை.

விஞ்ஞானத்தையும் அரசியலையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதேசமயம் ஒரு குடிமகனாக இந்திய விவசாயத்தைப் பற்றி எனக்கும் கவலைகள் இருக்கி்ன்றன. நான் இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல் இல்லை. வேளாண் ஆணையம் வேண்டும் என்று நான் என்னென்ன விஷயங்களை அன்றைக்குச் சொன்னேனோ, அதைத்தான் இன்றைக்குப் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேளாண் பொருட்களுக்கான விலை நிர்ணயம் என்பது இப்போது உற்பத்திச் செலவு + 15% என்று இருக்கிறது. இதை உற்பத்திச் செலவு + 50% என்று மாற்றுவதில் நாம் சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். இந்திய விவசாயிகளின் பங்கு வெறுமனே வயலோடு முடியாமல், சந்தையும் அவர்கள் கைகளில் வர வேண்டும். விவசாயம் ஒரு கூட்டுத்தொழிலாக மாற வேண்டும். இந்திய விவசாயிகள் வளம்குன்றா வேளாண்மைக்கு மாற வேண்டும். இந்திய விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துவிட நம்மால் முடியும்!

  • மே 2014, ‘தி இந்து’

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Raja   1 year ago

இந்த பேட்டியை பலருக்கு அனுப்பி படிக்க சொன்னேன், அவர்களையும் அனுப்புமாறு கேட்டு கொண்டேன். எப்பேர்ப்பட்ட மனிதர்! தெளிவான, நேர்மையான வெளிப்படையான பதில்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய எந்த கட்டுரையை விடவும் இந்த பேட்டி அவருடைய மாண்பை புரிய வைக்கிறது.அமைப்பில், சமூகத்தில் இருக்கும் ஓட்டைகளால் விளைந்த சகல பிரச்சினைகளுக்கும் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற முன்னோடி ஒருவரையே பிரதான காரணமாக்கித் தூற்றுவதால் தான் நாம் கடைத்தேற முடியாமல் தத்தளிக்கிறோமோ?! காந்தியைப் போல் இவரும் தூற்றுதலுக்கு ஆளாகி இருக்கிறார்!,இத்தகைய கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறார் என்பது வேதனை!சென்னையிலேயே வாழ்ந்திருக்கிறார்.. எத்தனை ஆசிரியர்கள் தம் மாணவருக்கு இவர் இருக்கும் திசையைக் காட்டி இருப்பார்கள்?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி உடல் எடைக் குறைப்புவாக்குரிமைபி.டி.டி.ஆசாரி கட்டுரைதமிழ் அன்னைமுன்னோடிநவீனத் தொழில்நுட்பம்சட்டப் பரிமாணம்அரசியல் சட்ட நிர்ணய சபைசிட்லின் கே. சேத்தி கட்டுரைஆளுமைஊட்டச்சத்துக் குறைபாடுபால் பொருட்கள்Samas articleஉயர்கல்விக்கு நிபுணர்கள் உதவி அவசியம்சோஷலிஸ்ட் தலைவர்மாமிச உணவுஹண்டே பேட்டிஜயலலிதாஅமெரிக்கை நாராயணன்புதிய அரசமைப்புச் சட்டம்முகேஷ் அம்பானிபுதிய சட்டம்தேச விடுதலைஅறிவொளி இயக்கம்ஊழல்கள்இந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்கிங் மேக்கர் காமராஜர்சோஷியல் காபிடல்ஹைதராபாத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!