கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்

ஸ்வாமிநாத் ஈஸ்வர்
07 Jul 2023, 5:00 am
0

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2023 ஜூன் 21, 22 தேதிகளில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். பல வகையிலும் முக்கியமான பயணம் என அரசு தரப்பிலும், முக்கியமான துறை வல்லுநர்களாலும் பாராட்டப்பட்ட பயணம் இது. 

பயணத்தின் இறுதியில் பாதுகாப்பு, மரபுசாரா சக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என அரசின் அறிக்கை சொன்னது. ரஷ்ய - உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு, சீனம் என இரண்டு நாடுகளுக்கும் பொதுவான அரசியல் விஷயங்களும் பேசப்பட்டன.

இரண்டு தகவல்கள்

இந்தப் பயணம் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் வெளியான இரண்டு தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

முதலாவது, வாஷிங்டன் ஆப்பிள்களுக்கான இறக்குமதி வரிகள் 70% என்பதிலிருந்து 50%ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளின் விலை குறையும். இதனால் இந்திய ஆப்பிள் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர். “நாங்கள் இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தோம். மாறாக, குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது” என்கிறார் காஷ்மீரின் ஷோப்பியன் பழ மண்டியின் முன்னாள் தலைவரும், பெரும் ஆப்பிள் உற்பத்தியாளருமான முகம்மது அஷ்ரஃப் வானி. 

ஆப்பிள் வணிகத்தில் மொத்த கொள்முதல் செய்து குளிர் கிடங்குகளில் வைத்து விற்பனை செய்யும் வணிகத்தில், ‘அதானி குழுமம்’ ஈடுபட்டுவருகிறது. 2020இல் கிலோ ரூ.88க்கு ஆப்பிளைக் கொள்முதல் செய்த அதானி குழுமம், 2021இல் கொள்முதல் விலையை ரூ. 72 என அறிவித்தார்கள். அவர்கள் கொள்முதல் விலையைக் குறைத்து அறிவித்ததும், ஆப்பிளுக்கான விலை உள்ளூர் அளவிலும் மளமளவெனச் சரிந்தது.

இதையொட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அதானியின் கிட்டங்கிகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். விளைவாக, ‘இந்த ஆண்டு கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 4-6 வரை அதிகரித்திருக்கிறோம்’ என அதானி நிறுவனத் தரப்பு சொல்கிறது. அவர்கள் கொள்முதல் செய்யும் விலைக்கும், அங்காடிகளில் ஆப்பிள் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தால் நமக்கு என்ன நடக்கிறது என்பது புரியும்.

இரண்டாவது அதிர்ச்சி, ரீஃபைண்ட் சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணையின் இறக்குமதி வரிகள் 5% வரை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது ரீஃபைண்ட் சோயா எண்ணெயின் இறக்குமதி வரி 12.5% ஆகும். இதில் சோயா எண்ணெய் இறக்குமதி வரிக் குறைப்பு, அமெரிக்க சோயா பீன் லாபியின் வேலை.

சூரிய காந்தி எண்ணெய் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இறக்குமதி வரிக் குறைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுவெளியில் பேசப்படாமல் போன ஒன்று.

சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன் எண்ணெயின் இறக்குமதி வரி இரண்டு ஆண்டுகளில் 49% என்பதிலிருந்து 12.5% ஆகக் குறைந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயின் இறக்குமதி வரி, 38.5% என்பதிலிருந்து 5.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதில் மிகப் பெரும் குறைப்பு என்பது சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதான இறக்குமதி வரி. 2021இல் சுத்திகரிக்கப்படாத பாமாயிலின் மீதான இறக்குமதி வரி 30.25% என்பதிலிருந்து இன்று 5.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு, சமையல் எண்ணெய் விலைகளைக் குறைக்கவும், உள்ளூர் உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு ஆதரிக்கவும் செய்யப்பட்டது என அரசு காரணம் சொன்னது. இங்கும் பயனீட்டாளர் இடத்தில் ‘அதானி குழுமம்’ இருக்கிறது. அதற்கு முன் இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இதில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

ஏற்கெனவே படிப்படியாகக் குறைந்துவந்த பாமாயில் மீதான இறக்குமதி வரிக்குறைவானது, இந்திய எண்ணெய் வித்துகள், குறிப்பாக தேங்காய் எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. தேங்காய் எண்ணெய் விலைகள் 2023 ஆண்டில், கிட்டத்தட்ட 40% சரிந்தன. இதற்கும், தேங்காய் உற்பத்தி முந்தைய ஆண்டைவிடக் குறைவு. இதன் காரணம், குறைக்கப்பட்ட இறக்குமதி வரிகளினால், இறக்குமதி எண்ணெய்களின் விலை குறைந்ததே.

இதில் 2020 - 2022ஆம் ஆண்டுகளில் இருந்த உயர் விலைகளைவிட எண்ணெய் விலைகள் குறைந்தால் நுகர்வோருக்கு நல்லதுதானே என நினைக்கலாம். ஆனால், 40% போன்ற விலை வீழ்ச்சி என்பது உற்பத்தியாளரைப் பாதிக்கும் என எவருமே நினைப்பதில்லை. இதை நாம் எண்ணெய் வித்துத் துறை கடந்த 40 ஆண்டுகளில் கடந்துவந்த வரலாற்றின் பின்னணியில் அலச வேண்டும்.

முந்தைய வரலாறு

இந்தியாவுக்கு 1980களின் மத்தியில் அன்னியச் செலாவணிச் சிக்கல் ஏற்பட்டது. அதை நீக்கும் வழிகளை ஆராய்ந்த அரசு ஓர் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை உணர்ந்தது. அது எரிபொருளுக்கு அடுத்து, அதிகமாக அன்னியச் செலாவணியைக் கோரும் பொருள் சமையல் எண்ணெய் என்று. 1980களில் வேகமாக வளரத் தொடங்கிய இந்தியா, பற்றாக்குறையைப் போக்க உணவு எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்தில், உலகின் மிகப் பெரும் உணவு எண்ணெய் இறக்குமதியாளராக உருவெடுத்திருந்தது. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி, உள்நாட்டிலேயே அதிக அளவு சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து, எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதுதான் என அரசு முடிவுசெய்தது.

தங்கத்தாரைத் திட்டம் (Operation Golden Flow) என்னும் ஒரு திட்டத்தை, சாம் பிட்ரோடாவின் தொழில்நுட்ப இயக்கமும், பால் உற்பத்திக் கூட்டுறவுகளை வெற்றிகரமாக உருவாக்கிய தேசிய பால்வள நிறுவனமும் இணைந்து முன்னெடுத்தனர். 7 மாநிலங்களில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 

தேசிய பால் வள நிறுவனம், ‘தாரா’ என்னும் ஒரு எண்ணெய்ச் சின்னத்தை வடிவமைத்து, கடலெண்ணெய், கடுகு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் எனச் சந்தைப்படுத்தியது. சந்தைப்படுத்திய 2 ஆண்டுகளில், சந்தையில் 50%த்தை தாரா பிடித்தது. திட்டம் தொடங்கிய 4 ஆண்டுகளில், 1990இல் தனது தேவையில் 98% உற்பத்தி செய்தது. இறக்குமதி நின்றுபோனது. 

உலகின் மிகப் பெரும் சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இறக்குமதியை நிறுத்தியது, உலகின் மிகப் பெரும் சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளர்களான அமெரிக்காவுக்கும், மலேசியாவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்திய உற்பத்தித் தலங்கள்

அன்று உலக வர்த்தக நிறுவனம் அளித்திருந்த உழவர் பாதுகாப்பு விதிகளின்படி, இந்தியா மிக அதிகமான இறக்குமதி விதிகளை விதிக்க இடமிருந்தது. இந்தியா தன் உழவர்களைப் பாதுகாக்க 90% இறக்குமதி விதிகளை விதித்திருந்தது.

இதில் 1991ஆம் ஆண்டு பதவியேற்ற நரசிம்மராவ் அரசு, 1994ஆம் ஆண்டு சமையல் எண்ணெய் இறக்குமதியை இலகுவாக்கி, இறக்குமதி வரிகளை 65% எனக் குறைத்தது. அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் சோயா எண்ணெய்க்கு இறக்குமதி வரியை 45% என தளர்த்தியது. இதனால், உள்ளூர் எண்ணெய் வித்துக்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. உற்பத்தி குறைந்தது.

அடுத்த நான்கே ஆண்டுகளில் இந்தியா மீண்டும் தனது தேவையில் 30% இறக்குமதி செய்யத் தொடங்கியது. பின்னர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி வரிகள் 15%ஆகக் குறைக்கப்பட்டன. அது எண்ணெய் வித்துகள் துறையைக் கொன்று புதைத்தது. இன்று இந்தியா தனது தேவையில் 80%க்கும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

இப்படி இந்திய எண்ணெய் வித்துக்கள் துறை வீழ்ச்சி அடைவதற்கு முன்பு, இந்தியாவில் பல மாநிலங்களில் எண்ணெய் உற்பத்தித் தலங்கள் இருந்தன.  கேரளத்தின் கோழிக்கோடு, தமிழ்நாட்டின் ஈரோடு, விருதுநகர், விழுப்புரம், கர்நாடகத்தின் செல்லக்கெரே, தாவன்கெரே, ஹோஸ்பேட், ராய்ச்சூர், ஆந்திரத்தின் அதோனி, அனந்தப்பூர், சித்தூர், மஹாராஷ்டிரத்தின் ஜல்காவ்ன், அக்கோலா, அமராவதி, குஜராத்தின் ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்திர பிரதேசத்தின் கான்பூர் என இந்தியா எங்கும் எண்ணெய் உற்பத்தித் தலங்கள் வெற்றிகரமாக இயங்கிவந்தன.

உள்ளூர் உற்பத்தியில் லாபமின்மை

நரசிம்மராவ் அரசு எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியைத் திறந்துவிட்டதும், மிகப் பெரும் கப்பல்களில் (20 முதல் 30 ஆயிரம் டன் கொள்ளளவு) எண்ணெய் இறக்குமதி செய்யப்படத் தொடங்கியது. மலிவான வெளிநாட்டு எண்ணெய் இந்தியாவுக்குள் வெள்ளமெனப் பாயத் தொடங்கியது, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தித் தலங்கள் லாபமின்றி வீழ்ச்சியைச் சந்தித்தன. 

இந்தப் பெரும் பொருளாதார மாற்றத்தின் தனிப் பெரும் பயனாளி அதானி. குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியே பெருமளவில் பாமாயிலை இறக்குமதி செய்தது அதானி நிறுவனம். வில்மார் என்னும் சிங்கப்பூரின் பெருவணிக நிறுவனத்துடன் இணைந்து பல சின்னங்களில் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை விற்கத் தொடங்கியது. இந்த ஆண்டு அந்த நிறுவனம் ரூ.58,000 கோடி அளவில் வணிகம் செய்துள்ளது.

இந்தியாவின் பெரும் துறைமுகங்களை ஒட்டித் தமது சுத்திகரிப்பு நிலையங்களை அதானி நிறுவனம் நிறுவியுள்ளது. கப்பலில் இருந்துவரும் கச்சா உணவு எண்ணெய் நேரடியாகப் பெரும் குழாய்கள் வழியே சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் குறைந்த செலவில் கொண்டுசெல்லப்பட்டு, குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 

இந்தப் பெரும் பொருளாதார மாற்றத்தால், உள்ளூர் எண்ணெய் வித்துகளின் விலை வீழ்ந்து, உள்ளூர் எண்ணெய் உற்பத்தி லாபமில்லாததாக மாறியது. தேசிய பால்வள நிறுவனத்தின், ‘தாரா’வின் விற்பனையும் பாதிக்கப்பட்டது. இன்று உள்ளூர் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் எவையுமே உயிருடன் இல்லை.

வேளாண்மையின் நிலை

இந்தப் பின்னணியில் இருந்துதான் பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயத்துக்குப் பின் வேளாண் துறையில் நிகழ்ந்த இந்த இறக்குமதி வரிக் குறைப்பு மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். 4-5 லட்சம் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மற்றும் சில கோடி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் உழவர்களின் வாழ்க்கை, சில தொழில் அதிபர்களின் நன்மைக்காக, அமெரிக்க விவசாயிகளின் நன்மைக்காகப் பலியிடப்பட்டிருக்கிறது. உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனச் சொல்லிக்கொண்டே அவர்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது அரசு.

இன்று உழவர்களின் பிரச்சினையைப் பேசுவதே பாவம் என்னும் அளவுக்குத்தான் ஊடகங்கள் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் கடந்த ஆண்டு சென்னையில் தங்களது பொருளாதாரக் கொள்கைகளை விளக்கும்போது, வேளாண்மையைப் பற்றிப் பேசவே இல்லை. ப.சிதம்பரத்தின் பார்வையில், இந்தியாவில் விவசாயிகளே இல்லை போல. 

எவராலும் ஆதரிக்கப்படாமல், தாழ்வுற்று லாபம் இல்லாமல் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது வேளாண்மை! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!
காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்
ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் புதிய முகம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2





1

பத்ம விருதுகள் அருஞ்சொல்பூக்கள் குலுங்கும் கனவுஇளம் தாய்மார்கள்ஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாஇல்லம் தேடிக் கல்விமழைநீர்ஏவூர்திசோவியத் ஒன்றியம்நாகூர் இ.எம்.ஹனீஃபாசேவகம்கணவன் மனைவிஆல்-ரவுண்டர்அரசியல் பண்பாடுஅலுவலகப் பிரச்சினைசிந்தனைத் தளம்மகிழ் ஆதனின் காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது?பெங்களூருகொலைகள்திருமாவேலன்பஞ்சாப் முதல்வர்மியான்மர்மகிழ்ச்சிஅழிந்துவரும் ஒட்டகங்கள்பிரிட்டன் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை!புகைமகாத்மாஅஜீத் தோவல்நிபுணர்கள் கருத்துதீட்டுமேற்குத் தொடர்ச்சி மலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!