கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு
விவசாயிகள் போராட்டம்: இரு தரப்பின் பிரச்சினைகள் என்ன?
தில்லி விவசாயிகள் போராட்டம் மீண்டும் வேளாண்மை பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ‘விவசாயிகள் பேரணி’, ‘டிராக்டர்கள் - ஜேசிபிக்களுடன் அணிவகுப்பு’, ‘தில்லி முற்றுகை’ எனும் செய்திகள் மக்களுடைய பார்வையை விவசாயிகள் நோக்கியும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பிலும் பார்வையைத் திருப்பியுள்ளது.
பல கோரிக்கைகள் பேசப்பட்டாலும், ‘தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை சட்டபூர்வ உறுதிமொழி வேண்டும்’ என்பதே இந்தப் போராட்டங்களின் மையக் கோரிக்கை. அடுத்து, விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்துகின்றனர். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைப்படி அனைத்து சாகுபடிச் செலவையும் கூட்டிவரும் தொகையுடன், அதன் 50% அளவை மேலும் சேர்த்து அதையே குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நீண்ட காலமாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது. அதேபோன்றுதான் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் விவகாரமும். பிரச்சினை என்னவென்றால், இந்தக் கோரிக்கைகளை எப்படி அமலாக்க வேண்டும் என்பதில் விவசாயிகளின் குரல் யதார்த்தத்துக்கு அருகில் இல்லை என்கிறது அரசு.
எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்க்க இந்த விவகாரத்தை ஓர் ஆயுதம் ஆக்கியுள்ளன. விவசாயிகள் கேட்கும் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் தொடர்பில் வாய் திறக்காவிட்டாலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உறுதி தருவோம்” என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால், பாஜக இந்த இரு விவகாரங்களிலுமே தொடர்ந்து அமைதி காக்கிறது. விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எதுவும் பலன் தரவில்லை.
உள்ளபடி விவசாயிகளின் கோரிக்கைகளை நாம் எப்படிப் பார்ப்பது? விவசாயிகள் தரப்பிலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகும் யோகேந்திர யாதவ், பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டோரின் பல கட்டுரைகளை ‘அருஞ்சொல்’ தொடர்ந்து வெளியிட்டுவரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளில் உள்ள அதீதக் குரலையும், அரசு அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுப்பதன் பின்னணியில் பேசப்படும் காரணங்களையும் மையப்படுத்தி நான் இங்கே பேசலாம் என்று நினைக்கிறேன். பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொள்ள இது உதவலாம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
குறைந்தபட்ச ஆதரவு விலை
விவசாயிகள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களுக்கு அவற்றின் சாகுபடிச் செலவு அடிப்படையில் அரசு நிர்ணயிப்பதே குறைந்தபட்ச ஆதரவு விலை. இது விவசாயிகள் விலை வீழ்ச்சியால் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக நீண்ட காலமாக அமலில் இருப்பது. நெல், கோதுமை, சில பருப்பு வகைகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இது படிப்படியாக கரும்பு, எண்ணெய் வித்துகள் என்று மேலும் பல ரகங்களுக்குமாக மொத்தம் 23 பயிர்கள் இந்தப் பட்டியலில் சேர்ககப்பட்டுள்ளன.
மூன்று வேளாண் சட்டங்களைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய வேளாண் சங்கங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையையும் சேர்த்திருந்தன. அதை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்து குழு அமைக்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதி காரணமாக, 2020 - 2021இல் 13 மாதங்களாகத் தொடர்ந்த விவசாயிகள் கிளர்ச்சி விலக்கப்பட்டது.
மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் நெல், கோதுமைக்காக மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.18 லட்சம் கோடியை விவசாயிகள் பெற்றுள்ளனர். இதே போன்று எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் சாகுபடி செய்தவர்கள் கடந்த பத்தாண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி பெற்றுள்ளனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் பருப்பு, எண்ணெய் வித்துகள் கொள்முதல் அளவு குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இருக்கவில்லை. அதேபோல, நெல் - கோதுமைக்காக வழங்கப்பட்ட தொகையும் இன்றைக் காட்டிலும் குறைவு.
மேலும் 23 விளைபொருள்களில் ஏழு, நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, பார்லி, மக்காச் சோளம் ஆகியவை, பருப்புகளில் அவரை, துவரை, உளுந்து, கடலை, மசூர், எண்ணெய் வித்துகளில் சோயா மொச்சை, கடுகு, எள், குதிரைவாலி, சூரியகாந்தி, குங்குமப்பூ, உச்செள்ளு (நைஜர் சீட்), வணிகப் பயிர்களில் நிலக்கடலை, பருத்தி, கொப்பரை, சணல் ஆகியவை அடங்கும். இப்படிப் பல பயிர்களுக்குக் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் நெல், கோதுமைதான் கொள்முதல் செய்யப்படுகிறது.
விரயமாகும் தானியங்கள்
அரசிடம் இருக்கும் கிடங்குகளில் பெரும் பகுதி இவற்றுக்குத்தான் ஒதுக்கப்படுகின்றன. ஆனாலும், நாட்டில் சாகுபடியாகும் நெல், கோதுமைகளில் அரசு கொள்முதல் செய்யும் அளவை சேமிக்க கிடங்குகளில் இடம் போதாமல் – ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வெட்டவெளிகள் என்று மழைக்கும் வெயிலுக்கும் பூச்சி தாக்குதலுக்கும் பெருச்சாளிகளின் வேட்டைக்கும் இரையாகும் அளவுக்குத் தார்ப்பாலின் போட்டு மூடப்படுகின்றன. முடைக்கால கையிருப்புக்கு எவ்வளவு தேவையோ அதைப் போல இரண்டு மடங்கை அரசுகள் வாங்குகின்றன என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வு ஏற்படும்போதெல்லாம் தேர்தல்களில் அது பிரதிபலிப்பது இயல்பாகிவிட்டதால் ஆளும் அரசுகள் நஷ்டக் கணக்கைப் பாராமல், அவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக்கொள்வதை இப்போது ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளன. பாஜகவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், இப்படி கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் கணிசமானவை புழுத்தும் அழுகியும் வீணாவதும் நடக்கிறது. இது ஒரு விரயச் செலவுதான்.
ஆதரவு விலை சார்ந்ததாகிவிடக் கூடாது விவசாயம்
விவசாயிகள் இப்போது முன்வைக்கும் கோரிக்கைகளில் நடைமுறை யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளும் உள்ளன. ‘23 வகைப் பயிர்கள் என்பதை எல்லா விளைபொருள்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் ‘விளைகிற எல்லாவற்றையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் கோருவதும் அவற்றில் ஒன்று. நுகர்வோரின் தேவை, சந்தையின் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப சாகுபடிகள் அமையாமல், அரசின் தானிய ஆதரவுக் கொள்கை சார்ந்து விவசாயிகளின் சாகுபடியைக் கொண்டுசெல்ல இது வழிவகுத்துவிடும். இது பெரிய அபாயம்.
இந்தியா ஏற்கெனவே நெல்-கோதுமை மைய விவசாயத்தைக் கொண்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிப்படையில் விவசாயம் ஒரு தொழில். மக்களுடைய உணவு விருப்பத்தை சந்தை பிரதிபலிப்பதும், சந்தையின் போக்கு விவசாயத்தில் பிரதிபலிப்பதும் முக்கியம். ஓரளவுக்கு மேல் அரசின் ஆதரவு அதிகரிக்கையில், விவசாயத்தின் போக்கே மாற அது வழிவகுத்துவிடும்.
விவசாயத்துக்கு இயற்கையால் ஏற்படும் சோதனைகளைப் போல, அரசுக்கும் பல சோதனைகள் ஏற்படுகின்றன. விவசாயப் பொருள்களின் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் விலையைப் பொறுத்தும், வரத்தைப் பொறுத்தும் மாறும் தன்மையது. உலகின் எந்த மூலையிலாவது நடைபெறும் போர், வறட்சி, பூச்சித் தாக்குதல், பயிர் சுழற்சி முறையில் ஏற்படும் மாறுதல், தொழில் துறையில் ஏற்படும் திடீர் தேவைகள் அல்லது திடீர் வீழ்ச்சி, நுகர்வில் ஏற்படும் மாற்றம், போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கடல் கொள்ளையர்களின் தாக்குதல், பெரிய நாடுகளின் திடீர் அரசியல் முடிவுகள், பொருளாதாரத் தடைகள் என்று பல அம்சங்கள் விவசாயத்தையும் பாதிக்கும்.
இந்தியாவின் குறைந்தபட்சக் கொள்முதல் விலை, உலக அளவிலான சராசரி விலையைவிட இப்போதே அதிகம், இது விவசாயிகளுக்கு அரசு மானியம் தந்து விற்கும் தந்திரம் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யுடிஓ) குற்றஞ்சாட்டுகிகிறது. இதனால் இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுவதுடன் இந்தியப் பொருள்களைப் புறக்கணிக்கும் முடிவுக்கும் இட்டுச் செல்கிறது.
தவிர, குறைந்தபட்சக் கொள்முதல் விலைக்கும் குறைவாக, சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விற்க நேரிட்டால் அதனால் ஏற்படும் விலை வேறுபாட்டை ஈடுகட்டும் ‘பவந்தர் புக்டன் யோஜனா’ மத்திய பிரதேசத்திலும் ஹரியாணாவிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் முறைகேடுகளும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவதும்தான் அதிகம், அதிகாரிகளின் விருப்ப அதிகாரமும் கோலோச்சுகின்றன. இதை எப்படிச் சீரமைப்பது எனும் கேள்விக்குப் பதில் கிடைத்த பாடில்லை.
இவையெல்லாமும் அரசின் முன்னுள்ள நிர்ப்பந்தங்கள்.
மாதம் ஓய்வூதியக் கோரிக்கையில் உள்ள சிக்கல்
விவசாயிகளின் அடுத்த முக்கியமான கோரிக்கை, 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் (நில உடைமை எவ்வளவு என்று பாராமல்) மாதந்தோறும் ரூ.10,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பது ஆகும். மூன்று விவசாயச் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற போராட்டத்தின்போதும் இந்தக் கோரிக்கை இருந்து. இப்போது இதை அமல்படுத்த வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்துகிறார்கள்.
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் மூத்த குடிமக்கள் கண்ணியமாக வாழ அந்தச் சமூகம் நடவடிக்கை எடுப்பது அவசியம். உலகின் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் இந்தியாவுக்கு, இந்த நாட்டின் விவசாயிகளுக்கு அவர்களுடைய முதுமைக் காலத்தில் துணை நிற்க வேண்டிய கடப்பாடு உண்டு. அந்த வகையில், ஓய்வூதியத் திட்டம் விவசாயிகள் உள்பட அமைப்புசாரா ஒவ்வொரு துறையினருக்கும் தரப்படுவது அவசியம்தான். ஆனால், அரசால் அப்படி எவ்வளவு தொகை தர முடியும் என்பதும் இங்கே முக்கியம். ரூ.10,000 ஓய்வூதியம் எனும் கோரிக்கையை முன்வைப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை, இது போன்ற ஒரு தொகை அளிக்கப்பட்டால் அதற்கு ஆகும் ஆண்டுச் செலவு, நம்முடைய பட்ஜெட்டின் அளவு இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தார்களா என்றே தெரியவில்லை.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என்று தமிழ்நாடு மூலம் உருவான நலத்திட்டம் அடுத்தடுத்த மாநிலங்களில் ரூ.2,000, ரூ.2,500 என்று பேசப்பட்டு இப்போது ஆந்திராவில் நாங்கள் தேர்தலில் வென்றால் ரூ.5,000 வழங்குவோம் என்று முழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால், எங்கெல்லாம் இத்திட்டம் தொடங்கப்பட்டதோ அங்கெல்லாம் இன்று அரசுகள் நிதிநிலை சார்ந்த நெருக்கடியை மெல்ல உணர்கின்றன; வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கிட முடியாமல் தடுமாறுகின்றன எனும் செய்திகள் கசிகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசு இந்தச் சங்கடங்களையும் உணருகிறது.
இந்த அளவில்தான் விவசாயிகள் கோரிக்கையையும் அரசின் மறுதலிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.
இரு தரப்பும் நெகிழ வேண்டும்
அக்கறையுள்ள ஓர் அரசு எப்படியாகிலும் விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்; ஆகையால், அரசின் நிர்ப்பந்தங்களை உணர்த்தி விவசாயிகளுடைய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல, விவசாயிகளும் அரசின் நிர்ப்பந்தங்களை உணர்ந்து நெகிழ்வுத்தன்மையோடு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
விவசாயிகள் போராட்டம் ஏன் முக்கியமானது?
காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேர்தல் ஆயுதம்!
இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
நாட்டை திவாலாக்கிவிடுமா கு.ஆ.வி. நிர்ணயம்?
ஆள்வோரின் ஆணவத்துக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி
மோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்
மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தேவையா?
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Raja 6 months ago
மிக சிறந்த பதிவு, பிரச்சனையின் இன்னொரு பக்கத்தை பலரும் யோசிக்காத கோணத்தில் தெளிவாக சொல்லி இருக்கீங்க. எல்லோருக்கும் அனுப்பி படிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்தேன்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 6 months ago
Well explained
Reply 1 0
Raja 6 months ago
Yes, well explained in a detailed manner.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.