கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

விவசாயிகள் போராட்டம் ஏன் முக்கியமானது?

யோகேந்திர யாதவ்
28 Feb 2024, 5:00 am
0

வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான விவாதத்தை வெற்றிக்கு மிக அருகில் நகர்த்திவிட்டது விவசாயிகளின் சமீபத்திய போராட்டம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் விவசாயிகள் நடத்திய 13 மாத தொடர் போராட்டம் காரணமாக, ‘குறைந்தபட்ச ஆதரவு விலையா – அப்படியென்றால் என்ன?’ என்று கேட்டவர்களை, ‘ஏன் - குறைந்தபட்ச ஆதரவு விலை?’ என்று கேட்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. இப்போதோ, ஏன் என்ற கேள்வி மாறி, ‘எப்படி?’ என்ற கேள்விக்கு இட்டுச் சென்றுள்ளது போராட்டம். அடுத்து, ‘இனி எப்போதிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை?’ என்ற கட்டத்தை எட்டிவிடும்.

விவசாயிகளும் ஊடங்களும்

‘ஜெய் கிசான் ஆந்தோலன்’ இயக்கம் சார்பில் 2016, 2017 ஆண்டுகளில் பல்வேறு ஊடகங்களின் அலுவலகங்களுக்கும் மண்டிகளுக்கும் சென்றது நினைவுக்கு வருகிறது. ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்று அரசு அறிவித்தற்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் மிகக் குறைந்த விலைக்கு, (அரசால் அங்கீகரிக்கப்பட்ட) மண்டிகளில் மொத்தமாகக் கொள்முதல் செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

கிராமங்களில் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிய விலை பற்றிக் கேட்கவே வேண்டாம். பெரும்பாலான பகுதிகளில் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்று அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து விவசாயிகளுக்குத் தெரியவே இல்லை. இதையடுத்து அரசு அறிவித்த விலைக்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அடிமாட்டு விலைக்கும் இடையிலான வேறுபாட்டை, ‘விவசாயிகளிடம் அடித்த கொள்ளை’ என்ற தலைப்பில் அன்றாடம் பகுதிவாரியாக பிரசுரிக்கத் தொடங்கினோம்.

இதை எந்த ஊடகமும் அக்கறை எடுத்துத் தங்களுடைய நாளேட்டில் பிரசுரிக்கவில்லை, தொலைக்காட்சிகள் எடுத்துரைக்கவில்லை. ஒரு சில ஆர்வம் மிக்க பத்திரிகையாளர்கள் மட்டும் தங்களுடைய சிற்றிதழ்களில் வெளியிட்டனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இதற்குப் பிறகே பெரிய ஊடகங்கள் மெல்ல கண் விழித்தனர். ‘இப்படிக்கூட நடக்கிறதா?’ என்று சிலர் கேட்டனர்.

இந்த நிலையில்தான் 2020 - 2021இல் நடந்த ‘கிசான் ஆந்தோலன்’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மீதுதான் அப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதில் இரண்டாவது முக்கிய கோரிக்கை, ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ பற்றியது. அதைத் தீர்மானிக்க விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கொண்ட குழு அமைப்போம் என்று கூறி அரசு அதிலிருந்து அப்போதைக்கு மீண்டது.

அறிவித்தபடி குழுவும் அமைக்கப்படவில்லை, தீர்வும் காணப்படவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இருப்பதைப் பெரும்பாலான விவசாயிகள் அதற்குப் பிறகுதான் தெரிந்துகொண்டனர். இது தங்களுடைய விளைச்சலுக்குத் தரப்பட வேண்டிய விலை, ஆனால் தருவதில்லை என்று புரிந்துகொண்டார்கள். அப்படியும் பலருக்கு இந்த விலையை எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தாலும் அதை எப்படி அமல்படுத்த வைப்பது என்பது தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்கள் தங்களுக்குள் பேசி கருத்தொற்றுமை கண்டார்கள்.

கருத்தொற்றுமையின் 3 அம்சங்கள்

விவசாய இயக்கம் கருத்தொற்றுமை கண்டவற்றில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. வேளாண் விளைபொருள்களுக்கு அதிகக் கொள்முதல் விலை, விரிவான வாய்ப்புகள், அரசிடமிருந்து திட்டவட்டமான உறுதிமொழி ஆகியவற்றைப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.

முதலாவது, குறைந்தபட்சக் கொள்முதல் விலையை இப்போது தீர்மானிக்கும் முறை நியாயமற்றது; விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விலை இருக்க வேண்டும். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி இதை நிர்ணயிப்பது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். அவருடைய பரிந்துரையானது, சாகுபடிக்காகும் மொத்தச் செலவுகளையும் சேர்த்துவரும் தொகையுடன், அந்தத் தொகையில் 50%ஐ மீண்டும் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது. இந்த 50% விவசாயிகளுக்குச் சேர வேண்டிய லாபமாகும்.

இரண்டாவது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு பட்டியலில் வைத்துள்ள 23 பயிர்களுக்கு மட்டும் போதாது, அதை அனைத்து சாகுபடிப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவதுடன் பழங்கள், பால்படுபொருள்கள், கோழி - வாத்து போன்ற பறவைப் பண்ணைகளை வைத்திருப்பவர்கள் விற்கும் முட்டை- குஞ்சு போன்றவற்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 

மூன்றாவது, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக அரசின் வாக்குறுதி மட்டும் போதாது, அது சட்டத்தால் உறுதிசெய்யப்பட வேண்டும். இந்த மாறுதல் பேசி முடிவுசெய்யப்பட வேண்டியது. 

விவசாயிகளைத் தாக்காதீர்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து இந்த விவசாய இயக்கம் இரண்டு வகைகளில் விலகிச் செல்கிறது.

ஒரு பக்கம், விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து சாகுபடிப் பயிர்களையும் - மொத்த அளவையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரும் ‘அதிகபட்ச கோரிக்கையாளர்கள்’; அரசால் செய்ய முடியாததை அவர்கள் கோரிக்கையாக வைக்கிறார்கள் என்பது விமர்சகர்களின் வாதம். நாடு முழுவதும் - எல்லா விளைச்சலையும் வாங்கும் கொள்முதல் அமைப்புகளும் அரசிடம் இல்லை, அவ்வளவு நிதி வசதியும் கிடையாது. அப்படியே செய்தால், அதில் ஊழலும் விரையமும்தான் அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் விவசாயத் துறையே அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். பிறகு கொள்முதல் நடவடிக்கையும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்.

ஆக, விளைச்சல் அனைத்தையும் அரசே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று போராடும் விவசாயிகளும் கேட்கவில்லை. சந்தையில் விலை சரிந்தால், குறைந்தபட்ச விலையில் அரசு எந்த வகையில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் என்ற சட்டப்பூர்வ உத்தரவாதத்தைத்தான் அவர்கள் கோருகிறார்கள்.

‘குறைந்தபட்ச கோரிக்கையாளர்களோ குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக யாரும் வாங்கக் கூடாது - அது சட்ட விரோதம், அப்படி வாங்கினால் தண்டனை உண்டு என்று சட்டம் இயற்றினால் போதும் என்கின்றனர். இப்படிச் சட்டம் போட்டுவிட்டாலே யாரும் அதற்கும் குறைவாக வாங்க மாட்டார்கள் என்று அப்பாவித்தனமாக நினைக்கின்றனர். ஆனால், பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையும் அனுபவமும் இது சாத்தியம் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்

ஸ்வாமிநாத் ஈஸ்வர் 07 Jul 2023

விவசாய இயக்கத்தவரும் அவர்களுடைய சகாக்களும் இந்தவித வாதங்களை எல்லாம் கடந்து தீர்வைத் தேடுகின்றனர். நான்கு அல்லது ஐந்து வகை அரசின் கொள்கைகளை ஆயுதமாகக்கொண்டு, விலை சரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய முயற்சிகளாகும். குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கும் குறைவாகத்தான் விவசாயிகள் விற்க நேர்கிறது என்றால், குறைந்தபட்ச விலைக்கும் விவசாயிகள் விற்ற விலைக்கும் உள்ள வேறுபாட்டை, விவசாயிகளுடைய இழப்பாகக் கருதி, அந்த இழப்பை மட்டும் அரசு தந்தால் போதும் என்கிறார்கள்.

மூன்று வழிகளில் தீர்வு

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக அரசு மூன்று வெவ்வேறுவித நடவடிக்கைகளை ஒருங்கே எடுக்கலாம் என்பது புதிய தீர்வாக யோசிக்கப்படுகிறது.

முதலாவது, சில வகைப் பயிர்களை அரசு கூடுதலாகக் கொள்முதல் செய்வது. அடுத்தது பொது விநியோக முறையில் வழக்கமாக விற்கும் அரிசி கோதுமை பருப்பு ஆகியவற்றுடன் வேறு வகை பருப்புகளையும், சிறு தானியங்களையும், எண்ணெய் வித்துகளையும் முட்டை – பால் ஆகியவற்றையும்கூட விற்கலாம் என்பது.

இரண்டாவது, விலை சரியும்போது அரசு தீவிரமாகச் செயல்பட்டு சரிவைத் தடுத்து நிறுத்துவது. காய்கறி, பூ, பழங்கள் போன்றவை வழக்கமான தேவையளவைவிட அதிகம் விளைந்தாலும் சந்தைக்கு வரத்து அதிகரிப்பதாலும் அவை வெகு விரைவில் அழுகிக் கெட்டுவிடும் என்பதாலும் பெருமளவுக்கு விலை சரிந்துவிடும். இதைத் தடுக்க விளைச்சலில் ஒரு பகுதியை அரசு முதலில் கொள்முதல் செய்துவிட்டால் பிறகு சந்தையின் தேவைக்கேற்ப வழக்கமாகக் கொள்முதல் செய்கிறவர்கள், எஞ்சிய சரக்கை நல்ல விலைக்கே வாங்கிக்கொள்வார்கள்.

வேளாண் விளைச்சலை மூலப் பொருள்களாகக் கொண்டு மதிப்பு கூட்டிய பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் கொள்முதல் செய்ய ரொக்க ஊக்குவிப்புகளை அரசு அளிக்கலாம் என்பது இன்னொரு யோசனை. விவசாயப் பொருள்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் அரசு விதிக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்; சாகுபடியாளர்கள் – நுகர்வோர்கள் என்று இருதரப்பினருடைய நலன்களையும் காப்பாற்றும் வகையில் ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கையை வகுக்க வேண்டும் என்பன முக்கியமான யோசனைகள்.

இந்த யோசனைகளுக்கு அரசு செலவுசெய்யப்போகும் தொகை, அனைத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டிவந்தால் ஆகக்கூடிய தொகையில் சிறுபகுதிதான் என்பதால் அரசுக்கும் நிதியிழப்போ, அதிக நிதித் தேவையோ ஏற்படாது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலே கூறிய வழிமுறைகள் பயன் அளிக்காதபோது, சட்டப்பூர்வ உத்தரவாதப்படியான குறைந்தபட்ச கொள்முதல் விலை முறை கைகொடுக்கும். அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், விவசாயிகள் உண்மையில் சந்தையில் விற்ற விலைக்கும் உள்ள வேறுபாட்டை மட்டும் அரசு இழப்பீடாகக் கொடுத்தால் போதும். இப்போதே இதைச் சில மாநிலங்கள் அமல்செய்கின்றன.

சராசரி சந்தை விலை, சராசரி விளைச்சல் அடிப்படையில் இந்த இழப்பு கணக்கிடப்படுகிறது. விலை வேறுபாட்டுத் தொகை இப்படிக் கணக்கிடப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

புதிய ஏற்பாடு

இதை அமல்செய்ய புதிய நிறுவனரீதியிலான ஏற்பாடு அவசியமாகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுவதற்கான தகுதியான உணவுதானியங்கள் பட்டியலிடப்பட வேண்டும். விவசாய சாகுபடிச் செலவை கணக்கிட இப்போதுள்ள அமைப்பும் வழிமுறைகளும் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டு, அவற்றின் மூலமே கணக்கிடப்பட வேண்டும்.

இது தொடர்பான நடவடிக்கைகளைச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு மேற்பார்வை செய்ய வேண்டும். இவற்றை அமல்படுத்த நிர்வாக அமைப்புகளை அரசு ஏற்படுத்தி, கொள்முதலுக்குப் போதிய அளவு நிதியைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். 

விவசாயிகளின் போராட்டமும், குறைந்தபட்ச கொள்முதல் விலைக்குச் சட்டம் இயற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதியும், இவை அமலுக்கு வருவது எப்போது என்ற கேள்விக்கு இந்த விவாதத்தைக் கொண்டு சென்றுள்ளன. இதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற அரசியல் உறுதி இருந்தால் சட்டமும் அதற்கு நிச்சயம் துணை செய்யும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேர்தல் ஆயுதம்!
இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
நாட்டை திவாலாக்கிவிடுமா கு.ஆ.வி. நிர்ணயம்?
ஆள்வோரின் ஆணவத்துக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி
மோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்
மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தேவையா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐசக் சேடினர் பேட்டிதிருவாரூர்கள்ளக்குறிச்சி கலவரம்: காவல் துறையின் அம்மணம்உடல்மொழிஉண்மை போன்ற தகவல்மத்திய பிரதேசம்அசோகர் அருஞ்சொல் மருதன்தொடை இடுக்கு குடல் இறக்கம்வனப் பகுதிகல்வித் துறையோசாபள்ளிக்கூடம்ஹிண்டன்பர்க் அறிக்கைமுத்தலாக்வறுமைக் கோடுடிக்டாக்சாதி முறைபெஜவாடா வில்சன்தேசிய ஊடகம்வழுக்கைக்குச் சிகிச்சைஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிஅமெரிக்க அரசமைப்புச் சட்டம்தலைவர்கள் நினைவகம்: தேவை புதிய கற்பனைதனிப்பாடல் எனும் தூண்டில் புழுவாக்குரிமையும் சமத்துவமும்உணவு தானியங்கள்நாடாளுமன்றம்சனாதன தர்மம்இன்டிகாஎம்ஜிஆர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!