கட்டுரை, அரசியல், விவசாயம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேர்தல் ஆயுதம்!

யோகேந்திர யாதவ்
20 Feb 2024, 5:00 am
0

ம்முடைய குடியரசின் தலையெழுத்தும், 2024 மக்களவைத் தேர்தலின் முடிவும் - ஒரேயொரு கேள்விக்கான விடையில்தான் இருக்கின்றன; இந்தத் தேர்தலில் ஏன் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வலுவான பிரச்சினை எது? அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டிய சாதனை போன்று - மக்களைப் பெரிதும் பாதிக்காத - பல விஷயங்களைக் கூறுவார்கள். இந்த நிலையில்தான், மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு பிரச்சினை அரங்கத்துக்கு வந்திருக்கிறது. 

முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் என்ற சிற்றூரில் ‘பாரத் ஜோடோ நியாய் யாத்திரை’ நிகழ்ச்சியில் அது நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் யாத்திரைத் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில்தான் புதிய அறிவிப்பை வெளியிட்டனர்; வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலையை விளைபொருள்களுக்கு வழங்குவதற்குச் “சட்டப்பூர்வ உத்தரவாதம் தரும் வகையில், ஆட்சிக்கு வந்ததும் சட்டம் இயற்றுவோம்” என்று இருவரும் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்து என்பதை அரசியல் உணர்வுள்ள அனைவருமே அறிவார்கள்; காங்கிரஸ் கட்சி இதுநாள் வரையில் இந்த விவகாரத்தில் எடுத்த நிலைக்கு நேர்மாறானது இந்த அறிவிப்பு. ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரித்தபோதுகூட – எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த நிலையிலும் – இப்படியொரு வாக்குறுதியைக் காங்கிரஸ் அளிக்கவில்லை.

ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டிலாவது இப்படியொரு அறிவிப்பு 2022இல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போதுதான் முதன்முறையாக மிகத் தீவிரமானதும், பொருள் செறிவுமிக்கதுமான முடிவைக் காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது. விவசாய இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை இது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விவசாய இயக்கங்களைப் பொருத்தவரை இது மிகவும் முக்கியமான அறிவிப்பாகும். விவசாயிகளின் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளையும் ஒரு தேசியக் கட்சி முதன்முறையாக ஏற்று அங்கீகரித்திருக்கிறது.

முதலாவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை சுவாமிநாதன் வகுத்த உத்தியின்படி மாற்ற வேண்டும்; அதாவது, சாகுபடிக்காகும் அனைத்துச் செலவுகளையும் கூட்டிவரும் தொகையுடன், அதன் மதிப்பில் 50% அளவை மேலும் சேர்த்துக் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதே அந்த உத்தி.

இரண்டாவது, இதை அரசு சட்டப்படி உறுதிசெய்ய வேண்டும். இது வெறும் வழிகாட்டிக் கொள்கையாக மட்டும் தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் அரசு ஒப்புக்கொண்டால் – அல்லது அதிகாரிகள் மனமுவந்து செயல்படுத்த முன்வந்தால் மட்டும் வழங்கப்படும் விலையாக இருந்துவிடக் கூடாது. மூன்றாவது, இந்த உரிமையானது அரசு இப்போது கொள்முதல் செய்யும் 23 வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, எல்லாவிதப் பயிர்களுக்கும் - நாட்டின் எல்லாப் பகுதி விவசாயிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

நல்ல நேரம்

இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் கட்சி இதைவிட வேறு நல்ல தருணத்தில் வெளியிட்டிருக்க முடியாது. இரண்டு ஆண்டுகள் அமைதி காத்த விவசாயிகள், தங்களுடைய கோரிக்கைகள் அமல்செய்யப்படாததால் மீண்டும் தில்லி நோக்கி பெரும் படையாகத் திரண்டுவிட்டார்கள். ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (எஸ்கேஎம்) என்ற விவசாயிகள் அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டிருந்தாலும், இரண்டு பிரிவுகளுமே இப்போதைய போராட்டத்தை ஆதரிக்கின்றன. இதில் மூலமான எஸ்கேஎம், பிப்ரவரி 16இல் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் நடத்திவிட்டது.

இந்த விவசாயிகள் சங்க அமைப்பில் ஜோகீந்தர் சிங் உக்ரான், ராகேஷ் திகைத் தலைமையிலான பாரதிய கிசான் ஒன்றியம் (பிகேயு), கர்நாடக ராஜ்ய ரயத்துகள் சங்கம், இடதுசாரிகள் ஆதரவிலான கிசான் சங்கங்கள், பல்பீர் சிங் ராஜேவாலுடைய அமைப்பு உள்பட பஞ்சாப் – ஹரியாணா மாநிலங்களின் விவசாய அமைப்புகள் இணைந்துள்ளன. ‘அரசியல் சார்பற்றது’ என்று கூறிக்கொண்டு, தனி அமைப்பாக விலகிய ‘எஸ்கேஎம்’தான் இப்போது ‘தில்லி நோக்கி பேரணி’ என்ற கிளர்ச்சியை நடத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எஸ்கேஎம் அமைப்பின் இரண்டு பிரிவுகளும் இணைந்துவிடவில்லை என்றாலும் கிளர்ச்சியில் இணைந்து செயல்படும். ‘அரசியல் சார்பற்றது’ என்று அறிவித்துக்கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் மீது ஹரியாணா மாநில காவல் துறை நிகழ்த்திய கண்ணீர் புகைகுண்டு வீச்சை, தாய் அமைப்பு வன்மையாகக் கண்டித்திருக்கிறது. எல்லா விவசாயிகள் சங்க அமைப்புகளின் முதல் கோரிக்கை, சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.

மிகவும் வலிமையான விவசாய சங்கங்களுடன் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக இணைந்து செயல்படத் தொடங்கியிருக்கிறது.

2024 தேர்தல் முடிவு என்ன ஆகும்?

மக்களவை பொதுத் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக் கூடியதா இந்தப் பிரச்சினை? மோடிக்குப் பெரிய சவாலாக இருக்குமா இந்தக் கிளர்ச்சி? திட்டவட்டமாக எதையும் இப்போது கூறிவிட முடியாது. தேர்தல் காலத்தில் மக்களுடைய முடிவுகளை மாற்றக்கூடிய பிரச்சினைகள் களத்தில் தானாக உருவாகிவிடாது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்று அரசியல் ஆர்வலர் ஒருவர் என்னிடம் முன்னர் கூறியிருந்தார்.

அப்படியொரு பிரச்சினை மக்களுடைய கவனத்தைக் கவர வேண்டும் என்றால் அதற்கு ஆறு அம்சங்கள் இருக்க வேண்டும். காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு இதில் நான்கைப் பூர்த்திசெய்திருக்கிறது, இன்னும் இரண்டு எஞ்சியிருக்கிறது, அவற்றை உருவாக்க காங்கிரஸ் கட்சி உழைக்க வேண்டும்.

முதல் அம்சம் 

அந்தப் பிரச்சினை வாக்காளர்களில் கணிசமானவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் தொடர்வதாகவும், வேதனை தருவதாகவும் இருக்க வேண்டும். ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ இதைப் பூர்த்திசெய்கிறது. எந்தக் காலத்திலும் விவசாயிகளுக்கு - அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு - ஆதரவு விலை அல்லது கொள்முதல் விலை கிடைப்பதே இல்லை. விவசாயிகளிலேயே மிகச் சிலர்தான் தங்களுடைய சாகுபடிச் செலவையும் மிஞ்சி சிறிது லாபம் அடையும் வகையில் விளைபொருள்களுக்கு விலை பெறுகின்றனர்.

அரசின் கொள்முதல் நடவடிக்கைகள் நெல், கோதுமையைத் தவிர ஏனைய பயிர்களைப் பொருத்தவரை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இன்றளவும் நீடிக்கிறது. கட்டுப்படியாகக் கூடிய விலையையாவது கொடுங்கள் என்று விவசாயிகள் 1980கள் தொடங்கி தொடர்ந்து கோரிவருகின்றனர்.

இரண்டாவது அம்சம் 

அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும், அது விவசாயிக்கும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்டப்பூர்வ உத்தரவாதம் என்பதே அந்தத் தீர்வு. இதற்கு மட்டும் சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் அதை நிறைவேற்றுவது ஆளுங்கட்சியின் பொறுப்பாகிவிடும். இதை வலியுறுத்த விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னமும்கூட விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதைக் கேள்விப்படாதவர்களாகவே இருக்கின்றனர்.

மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த கிளர்ச்சியால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம் வராமல் இருந்திருக்கலாம், ஆனால் அப்படி என்றால் என்ன என்று விவசாயிகளால் பரவலாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. சொந்தப் பயன்பாட்டுக்குப் போக உபரியாக விளைவிக்கும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமல்ல - அனைவருக்குமானதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் முதல் முறையாகப் புரிந்துகொண்டது.

இந்த விலையை எப்படி நிர்ணயிக்கிறார்கள் அல்லது நிர்ணயிக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், இந்த விலை தங்களுக்கானது, இதைக் கேட்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது, ஆனால் அரசு இதைத் தர மறுக்கிறது என்பதை விவசாயிகள் தெரிந்துகொண்டார்கள். அனைத்து விவசாயிகளும் – ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட – குறைந்தபட்ச ஆதரவு விலை, சுவாமிநாதன் குழு பரிந்துரை, சட்டப்பூர்வ உத்தரவாதம் என்ற மூன்று சொற்களை நிறைவேற்றியாக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு இந்த வகையில் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

மூன்றாவது அம்சம் 

சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் கேட்பவர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று எதிர்த் தரப்பு கூறிவிட முடியாது.

மோடி இதில் வசமாக சிக்கியிருக்கிறார். குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரே முன்வைத்த கோரிக்கைதான் இது, இப்போது அதை மறுப்பதன் மூலம் தனக்கு விவசாயிகளிடத்தில் உண்மையான அக்கறை இல்லை என்று காட்டுகிறார். மோடியின் இந்த நிலை மாறுபாட்டை விவசாயிகள் மறந்துவிடவில்லை.

விவசாயிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆண்டுகள் ஆன பிறகும் அரசு செயல்படாமல் இருப்பதற்குத் தகுந்த சமாதானம் கூறவே முடியாது.

நாலாவது அம்சம் 

இந்த அறிவிப்பை வெளியிட்ட நேரம் – அதாவது தருணம். மக்களவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும்போது காங்கிரஸ் தனது முடிவை அறிவித்திருக்கிறது. இதைச் செய்ய முடியாது என்று அறிவித்த அரசுத் தரப்பு தன்னுடைய நிலையை இனி மாற்றிக்கொள்வது கடினம். அப்படியே செய்தாலும் வாக்காளர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் இதை முதலில் செய்ய முன்வந்தது காங்கிரஸ்தான் என்று.

பிரச்சினையல்லாத விஷயங்களையே பெரிதாக்கி மக்களை திசை திருப்பிவந்த (நொய்டா) தேசிய ஊடகங்கள்கூட, வேறு வழியின்றி விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளையும் காட்சிகளையும் வெளியிட நேர்ந்திருக்கிறது. தேசிய அளவில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, குறைந்தபட்ச ஆதரவு விலை தலைப்புச் செய்தியாகிவிட்டது.

செய்ய வேண்டியன இரண்டு

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் இரண்டு உள்ளன. இதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும், இதையே தேர்தல் பிரச்சாரத்திலும் முதன்மைப்படுத்த வேண்டும். காங்கிரஸின் இந்த முடிவு இன்னமும் அரசியல் விழிப்புணர்வுள்ள விவசாயியைக்கூட சென்றடையவில்லை.

தில்லிக்குச் செல்லும் வழியை ஆக்கிரமித்த விவசாயிகளுடைய செயல்களை மட்டும்தான் தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து காட்டின, காங்கிரஸின் அறிவிப்புக்கு அவை முக்கியத்துவம் தரவில்லை - இனியும் தராது. ஊடகங்களின் இந்த இருட்டடிப்பையும் மீற காங்கிரஸ்தான் வழிகாண வேண்டும். ‘இப்படிச் செய்தால் அரசு திவாலாகிவிடும், மொத்த உற்பத்திக்கு விவசாயத்தின் பங்களிப்பு குறைவாக இருக்கும் நிலையில் அரசின் வருமானத்தில் பெரும்பங்கை விவசாய விளைபொருள்களை வாங்க மட்டும் செலவிட முடியாது’ என்றெல்லாம் ‘பொருளாதார அறிஞர்கள்’ அரசின் சார்பில் கருத்து தெரிவிப்பார்கள்.

அரசும் இப்படிப் பலரை அமர்த்தி, கட்டுரைகள் எழுத வைக்கும். ‘இது சாத்தியமில்லை, அரசு கஜானாவை காலிசெய்துவிடும்’ என்று அரசு அதிகாரி ஒருவர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுவிட்டார். இவையெல்லாம் கலப்படமில்லாத பொய்கள். நானும் என்னுடைய நண்பர் கிரண் விஸ்ஸாவும் இதைப் பற்றிக் கட்டுரைகள் எழுதிவிட்டோம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் தர முடியும் என்று எங்கள் தோழர் கவிதா குருகந்தியும் ஆய்வறிக்கை அளித்திருக்கிறார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பதாலேயே, விளையும் அனைத்துப் பயிர்களையும் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் அரசு கட்டாயம் வாங்கியாக வேண்டியதில்லை. எங்கெல்லாம் அவசியமோ, எங்கே விலை வீழ்ச்சி அடைகிறதோ அந்த இடங்களில் மட்டும் கொள்முதல் செய்தால்கூடப் போதும். அரசின் மொத்த ஜிடிபி மதிப்பில் ஒரேயொரு சதவீதத்தை இதற்கு ஒதுக்கினாலும் போதுமானது, அது நாட்டின் வளமான எதிர்காலத்துக்கான முதலீட்டு செலவாகவும் அமையும்.

இறுதியாக...

இதை வெற்றிகரமாக விவசாயிகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்க காங்கிரஸ் கட்சி அரசியல்ரீதியாக தொண்டர்களைத் திரட்ட வேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும். விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு காங்கிரஸுக்கு அனேக ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, விவசாய அமைப்புகளை அணுகி, ‘நாங்கள் உங்களுடைய தோழர்கள்தான்’ என்று நம்பவைக்க, முயற்சிசெய்துதான் ஆக வேண்டும்.

காங்கிரஸ் மட்டும்தான் என்றில்லை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளின் உதவிகளையும் இதில் பெறலாம். சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் போன்றவை இயல்பாகவே விவசாயிகளுடைய கோரிக்கைகளை ஆதரிப்பவை, அவர்களுக்கு நெருக்கமானவை. ஒரேயொரு விஷயம், இதைச் செய்யும்போது ‘உங்களைவிட நான்தான் விவசாயிகளுக்கு நெருக்கமானவன்’ என்பதைப் போல எந்தக் கட்சியும் நடந்துகொள்ளக் கூடாது.

இப்படிக் காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும் தயாரான பிறகு, தேர்தல் களத்தைச் சந்திக்க நல்லதொரு பிரச்சார ஆயுதமாக இது மாறிவிடும். இதனால் வெற்றி கிட்டிவிடுமா என்று தெரியாது ஆனால், தேர்தல் களத்தில் ஆளுங்கூட்டணியை பலமாக எதிர்க்க ஓர் ஆயுதம் கிடைத்திருக்கிறது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

விளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவு
காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி?
இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
நாட்டை திவாலாக்கிவிடுமா கு.ஆ.வி. நிர்ணயம்?
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தேவையா?
நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






பாலு மகேந்திராஉள்ளதைப் பேசுவோம் உரையாடல்பாதுகாப்பு அமைச்சகம்நீதிபதியின் அதிகாரம்அறநிலைத் துறைசாதியப் பாகுபாடுஷியாம்லால் யாதவ் கட்டுரைபொருளாதார நெருக்கடிமரிக்கோஅரசியலதிகாரம்துர்நாற்றம்பென் ஸ்டோக்ஸ்ஐந்து மாநிலத் தேர்தல்கள்தொன்மக் கதைசிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?ஆடிப் பெருக்குஎம்.ஜி.ராமச்சந்திரன்முரசொலி 80வது ஆண்டு விழாக் கட்டுரைகீர்த்தனைஜனநாயகத் திருவிழாபசுமைத் தோட்டம்ஏழைகளே இல்லை - இந்தியாவில்!உயிரணுக்கள்குஜராத்தில்ஆசிரியர் தலையங்கம்தைராக்சின் ஹார்மோன்மகாதேவ் தேசாய்இமையம் சமஸ்பீட்டரிடம் கொள்ளையடித்துபாஜக வெற்றியைத் தடுக்க மூன்றுவித உத்திகளே போதும்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!