கட்டுரை 10 நிமிட வாசிப்பு

உழவர் எழுக!

பாலசுப்ரமணியம் முத்துசாமி
22 Sep 2021, 12:00 am
3

குஜராத்தில் உள்ள பன்னாட்டு நீர்வள மேலாண்மைக் கழகத்தில் பணிபுரிந்துவருகிறார் பேராசிரியர் துஷார் ஷா. இவர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான நீர் மேலாண்மை வல்லுநர்களில் ஒருவர். தான் பணிபுரியும் பன்னாட்டு நீர்வள மேலாண்மைக் கழகம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் உதவியுடன் 2016ல், ஓர் உழவர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்து, வெற்றிகரமாகச் செயல்படுத்தினார் துஷார் ஷா. அது விஸ்தரிக்கப்பட்டு, இந்தியா முழுமைக்கும் பரவினால் இந்திய உழவர்களின் வாழ்வில் ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கும்.

கூட்டுறவு முறையில் மின் உற்பத்தி

குஜராத் மாநிலத்தில் உள்ள கேடா மாவட்டத்தில், துண்டி என்னும் கிராமத்தில் ஒரு சூரிய ஒளி மின் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கினார். ஆறு உழவர்கள் இணைந்து இந்தப் பரிசோதனைக் கூட்டுறவு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இவர்கள் தங்கள் நிலங்களில், 56.4 கிலோவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் கலன்களை நிறுவினார்கள். இது வருடம் 85,000 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். இதில், தங்கள் சொந்தத் தேவைக்கு, 40,000 யூனிட்களை வைத்துக்கொண்டு, மீதம் 45000 யூனிட் மின்சாரத்தை, மத்திய குஜராத் நிறுவன மின்பகிர்வுக் கட்டமைப்புக்கு அளிக்கிறார்கள். இதனால், வேளாண்மைக்காகத் தேவைப்படும் மின்சாரம் போக, வருடம் 3 லட்சம் வரை உற்பத்தியாளர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட முடிந்திருக்கிறது.

இதன் பலன்கள் பலவகைப்படும்.

1. மின் விநியோகத்தில், 20%-க்கும் அதிகமான மின்சார இழப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. உழவர் உற்பத்தி முறையில், உற்பத்தித்தளத்திலேயே மின்சாரம் நுகரப்படுவதால், விநியோக நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.

2. உழவர்களுக்கு மின்சாரம் பகலில் கிடைக்கிறது.

3. அரசுக்கு மின்சார மானியம் மிச்சமாகிறது.

4. உழவர்களுக்கு நிரந்தரமான கூடுதல் வருமான கிடைக்கிறது. மழை பொய்த்தல், விலை வீழ்ச்சி போன்ற அபாயங்களுக்கு எதிரான காப்பீடாக இந்த நிரந்தரக் கூடுதல் வருமானம் அமைகிறது.

5. கரிமத் தாக்கம் (Carbon Footprint) மிகக் குறைவான, சுற்றுச் சூழலைப் பாதிக்காத மின் உற்பத்தி முறை இந்த வாழ்வாதார மேம்பாட்டுப் பரிசோதனையின் ஒரு பகுதியாக, துண்டி கிராம உழவர்கள், தங்கள் மின்சார மானியத்தை 25 ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். மத்திய குஜராத் மின்பகிர்வு நிறுவனத்துடன் 25 ஆண்டு கால மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த வாழ்வாதாரப் பரிசோதனையானது ஒன்றிய அரசின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை உருவாக்கும் ஒரு காரணிகளுள் ஒன்றாக மாறியது.

 

இதன் வெற்றியை அடுத்து, 2018-ல், முஜ்குவா சூரிய ஒளிக் கூட்டுறவு மின் உற்பத்தித் திட்டத்தை, பிரதமர் மோதி திறந்துவைத்தார். உழவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத் அரசு ரூ.900 கோடியில், உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை அறிவித்தது. முஜ்குவா சூரிய ஒளிக் கூட்டுறவுத் திட்டத்தின் செயலர் லாபு படேல், உழவர்கள் மாதம் இரண்டாயிரம் மின்சாரக் கட்டணம் செலுத்திக்கொண்டிருந்த நிலை மாறி, இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.6,000 வருமானம் ஈட்டும் நிலை உருவாகும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, 2019 ஆகஸ்ட்டில், சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை வெளியிட்டது ஒன்றிய அரசு.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

அ. மின் பகிர்வுக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட 500 கிலோவாட் முதல் 2 மெகாவாட் வரை சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்யும் அலகுகள் மூலமாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல். இதில் தனிப்பட்ட உழவர்கள், பஞ்சாயத்துகள், கூட்டுறவு நிறுவனங்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற அலகுகளும் பங்கேற்கலாம். இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி அலகுகள், மின் பகிர்வு துணைநிலையங்களில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள்ளாக இருக்க வேண்டும்.  மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் விலையில், மின் பகிர்வு நிறுவனங்கள் இந்த சூரிய ஒளி உற்பத்தி அலகுகளிடமிருந்து 25 ஆண்டு கால ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யும். ஒருவேளை, இத்திட்டத்துக்கான முதலீட்டைத் திரட்ட முடியவில்லை எனில், உற்பத்திசெய்ய ஆர்வமுள்ளவர்கள், மின் பகிர்வு நிறுவனத்தையோ அல்லது வேறு முதலீட்டாளர்களையோ அணுகி, தங்கள் நிலத்தை நீண்ட கால அலகில் குத்தகைக்கு விடலாம். குத்தகைத் தொகை, நில உரிமையளாரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனம் முன்னெடுக்கும். இந்தக் கொள்முதலுக்காக, இந்திய அரசு, கொள்முதல் செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 40 பைசா ஊக்கத் தொகை வழங்கும். இத்திட்டத்தின் நன்மை என்னவெனில், மின்சாரம் உற்பத்தி செய்யுமிடத்திலேயே பயன்படுத்திக்கொள்வதால், மின் பகிர்வு நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. இது 25 ஆண்டுகளுக்கு உழவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நிலையான துணை வருமானத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. வேளாண்மையில் இருக்கும் உழவரின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.

ஆ. 17.50 லட்சம் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகள் உழவர்களுக்கு அளிக்கப்படும். இந்தப் பம்புகளின் அதிகபட்ச குதிரைத் திறன் 7.5 ஆகும். இதில், மத்திய மாநில அரசுகள் 60% மானியம் தருகின்றன. மீதி 40% விலையில், உழவர், 30% வரை வங்கிக்கடன் பெறலாம். உழவர் 10% முதலீட்டில் 7.5 குதிரைத்திறன் உள்ள பம்புசெட்டைப் பெறுகிறார். இது ஏற்கனவே நீராதாரம் குறைந்த பகுதிகளிலுள்ள டீசல் பம்புசெட்களை மாற்றும் திட்டம் ஆகும். உழவர்கள் டீசலுக்காகச் செய்யும் செலவைக் குறைக்க இது உதவுகிறது.

இ. மின் பகிர்வுக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பம்புசெட்கள் திட்டம். இது உழவர்கள் தங்கள் நீரிறைக்கும் தேவைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டு, உபரியை மின் பகிர்வுக்கு அளிக்கும் திட்டம். இது உழவரின் தேவையைப் போல இரு மடங்கு அலகில் அமைக்கப்படும்.  இதற்கு ஒன்றிய - மாநில அரசுகள் 60% வரை மானியம் அளிக்கும். மீதமுள்ள 40% விலையில், 30% வரை வங்கிக் கடன் பெற முடியும். இங்கும் உழவர் 10% மட்டும் முதலீடு செய்தாலே போதும். இதன் அதிகபட்ச உற்பத்தி அலகு 15 கிலோவாட் ஆகும். இதில் ஏற்கனவே மின் பகிர்வுக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் பம்புகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைய முடியும். இது உழவருக்கு ஒரு உபரி வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இது, உழவர்களின் வாழ்வாதாரத்தை ஓரளவு மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இது முழுமையான திட்டமா எனில், இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

வேளாண் துறையும், உழவர் மேம்பாடும்

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், இந்திய உணவு தானிய உற்பத்தி 5 கோடி டன்னாக இருந்தது. அது இப்போது 30 கோடி டன்னாக இருக்கிறது. சராசரி இந்தியருக்கு வருடம் 220 கிலோ உணவு தானியம் இன்று உற்பத்திசெய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் தற்சார்பு என்னும் நிலையைத் தாண்டி, உபரியாக உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், உற்பத்திசெய்யும் உழவர் நஷ்டத்தில் இயங்குகிறார்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் 1.7 கோடி டன் பால் உற்பத்திசெய்துகொண்டிருந்தது. வெண்மைப் புரட்சி என்னும் கூட்டுறவுப் பால் உற்பத்தித் திட்டம் மிக வெற்றிகரமாக இயங்கி, தற்போது அது 20 கோடி டன்னாக மாறியுள்ளது. இதிலும் பெரிதாக லாபம் இல்லை எனினும், வெற்றிகரமான வணிகச் சங்கிலியின் வழியாக விற்பனை செய்த பொருளுக்கான மதிப்பு சீராக உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கிறது.  உற்பத்தியாளர்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க பெரும் உதவியாக இருக்கிறது.

2020 நவம்பர் தொடங்கி, ஒரு மாபெரும் தொடர் போராட்டத்தை உழவர்கள் தில்லியில் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு உலகமெங்கிலும் இருந்து உழவர்களும், உழவர் நலன் சார் துறை வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றுதான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும், பெரும் அலகுப் பண்ணைகள் கொண்டிருக்கும் அமெரிக்கா உள்பட, வேளாண்மை பெரும் நஷ்டத்தைத்தான் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும், உழவர்கள், நஷ்டத்தைத் தாங்க இயலாமல் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில், வேளாண் துறையின் லாபமின்மை என்பது மற்ற நாடுகளைவிடத் தீவிரமான பிரச்சினை. ஏனெனில், இந்திய மக்கள்தொகையில் 50% பேர் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் 80% பேர், 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் உருவான தொழில் துறை, சேவைத் துறை இரண்டும், அனைவருக்குமான மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்கவில்லை. இன்று இத்துறைகள், வேகமாக இயந்திரமயமாகிவருகின்றன. வருங்காலத்தில், அவை வளர்ந்தாலும், மிகக் குறைவான வேலைகளையே உருவாக்கும். எனவே, இன்னும் 50 ஆண்டு காலம் கடந்தாலும், வேளாண்மையில் வேறுவழியில்லாமல் ஈடுபட்டிருக்கும் மக்கள்தொகை இந்தியாவில் கணிசமாக இருக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தட்டில், நிலையற்ற வாழ்வாதாரப் பிரச்சினையோடு உழவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் எதிர்கொண்டு தீர்க்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை இதுதான். இதற்கான தீர்வு, நீடித்து நிலைக்கும் ஒன்றாக, உழவர்களுக்கும், ஊரக மக்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாக, சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஒன்றாக அமைய வேண்டும். இங்குதான் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் தொழில், ஒரு நம்பிக்கை தரும் தீர்வாக நம் முன்னே நிற்கிறது.

பங்குதாரர்களாக வேண்டும் உழவர்கள்

ஒன்றிய அரசின் இன்றைய சூரிய ஒளிக் கொள்கை, உழவரை ஒரு பயனாளியாகப் பார்க்கிறது. சராசரி இந்திய உழவர், குறு அலகுத் தொழில் முனைவர். அவரால், சாதகமான கொள்கையை வைத்துக் கொண்டு வெற்றிகரமான ஒரு தொழில் அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாது. எனவே அரசுகள், கொள்கையுடன் நின்றுவிடாமல், அதைச் செயல்படுத்தும் ஒரு வாழ்வாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுக்க வேண்டும். இங்கே வெறும் கொள்கைகள் என்பது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சொட்டுநீர்ப்பாசனத் திட்டம் போல, பெரும் ஊழல் நிறைந்த ஒன்றாகத்தான் நடைமுறைப்படுத்தப்படும். எனவே, அரசு, இந்தக் கொள்கையை, ஒரு வாழ்வாதாரத் திட்டமாக, முழுமையான உழவர் மின் உற்பத்தி வணிக நிறுவனமாக வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும்.

இதற்கான வெற்றிகரமான உதாரணம் நம் கண் முன்னே உள்ளது. அது, 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘அமுல்’ பால் உற்பத்தியாளர் கூட்டுறவுத் தொழில் முறை. அதன் வெற்றியைக் கண்ட அன்றைய பிரதமர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திரா காந்தியும், அதை, அரசின் தலையீடு இல்லாமல், அரசின் துறைகளின் திட்டங்களாக இல்லாமல், தனித்துவத்துடன் இயங்க அனுமதித்தார்கள். அது இன்று 50 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் மிகப் பெரும் வணிக நிறுவனமாக வளர்ந்து, 36 லட்சம் உற்பத்தியாளர்களுக்கு நல்ல பலனை 75 வருடங்களாக அளித்துக்கொண்டிருக்கிறது.

அதேபோல, அரசு இன்று, இத்திட்டத்தை, உழவர்கள் கூட்டுறவு நிறுவனமாக உருவாக்கி, மின் உற்பத்தியின் பலன் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் வகையில் ஒரு வணிக நிறுவனமாக உருவாக்க வேண்டும். உழவர்களுக்குத் தேவையெல்லாம், தங்கள் உற்பத்திக்கு ஒரு சீரான வருமானம். அது உறுதி செய்யப்படுகையில், அவர்கள் இத்தொழிலை உற்சாகத்துடன் முன்னெடுப்பார்கள்.

நடைமுறைச் சிக்கல்

இதில் ஒரு நடைமுறைச் சிக்கலும் உள்ளது. இன்றைய மின் உற்பத்தி மையப்படுத்தப்பட்டது. ஒரு மாநிலத்தில், சில உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பெரும் மின் பகிர்வுக் கட்டமைப்பின் வழியே கோடிக்கணக்கான பயனாளிகளைச் சென்றடைகிறது. இந்தக் கட்டமைப்பு பெரும் செலவு பிடிக்கக் கூடியது.

ஆனால், உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தி என்பது, உற்பத்தியை மையத்திலிருந்து, கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறது. கிராமங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், உள்ளூரில் முடிந்தவரை நுகரப்பட்டு, உபரி அங்கிருந்து, கட்டமைப்புகள் வழியே மற்ற பயனாளிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மையப்படுத்தப்படாத சிறு அலகு உற்பத்தி மற்றும் உள்ளூர் நுகர்வுக்கேற்ப, மின்பகிர்வுக் கட்டுமானம் மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கும். இந்த மாற்றம் அவ்வளவு சுலபமல்ல.

சொல்லப்போனால், உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் தோல்வியடைய இந்த ஒரு காரணம் மட்டுமே போதும். மையப்படுத்தப்படாத மின் பகிர்வுக் கட்டமைப்பை உருவாக்க அதிக செலவாகும் என பயமுறுத்தியே, அதிகாரிகள், இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். ஏற்கனவே மையப்படுத்தப்பட்ட மின் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்த மையப்படுத்தப்படாத சிறு உழவர் மின் உற்பத்தித் திட்டத்தை எதிர்ப்பார்கள். ஏனெனில், உழவர் மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால், அவர்கள் வருங்காலம் பாதிக்கப்படும்.

கவனிக்க வேண்டிய வேறுபாடுகள்

மையப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி மற்றும் மையப்படுத்தப்படாத உள்ளூர் உற்பத்தி மற்றும் பகிர்வு இடையே கவனிக்க வேண்டிய முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. இதில் பிரதானமானது, மையப்படுத்தப்பட்ட மின் உற்பத்திக்கான (நிலக்கரி, டீசல்) சூழல் சேதாரம், மின் பகிர்வு மின் நஷ்டம் முதலியவை ஒட்டு மொத்தமாகக் கணக்கிடப்பட்டால், உள்ளுர் உற்பத்தி, நுகர்வு, உபரி, மாற்று மின் பகிர்வுக்கட்டமைப்பு மூலம் பகிரப்படுதல் என்னும் தொழில்முறை அதிகச் செயல்திறன் மிக்கதாகவும், பொருளாதார அடித்தட்டு மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாகவும் இருப்பதை அரசுத் தலைமைகள் உணர முடியும்.

அப்படி உணர்ந்தால், இந்த அடிப்படை மாற்றத்தைச் செயல்படுத்த முடியும். ஆனால், ஒட்டுண்ணி முதலாளித்துவம் கோலோச்சும் இக்காலத்தில் அரசுகளும், அதிகாரிகளும் உழவர் நலனை முன்னெடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகையால்தான், இந்தத் திட்டத்தை, உழவர்கள் ஆர்வத்துடன் முன்னெடுத்து, செயல்படுத்தும் வழிகளை கையகப்படுத்திக்கொள்வது மிக முக்கியமாகிறது.

இந்தியாவில் வேளாண்மையில் உள்ள நிலப்பரப்பு 17 லட்சம் சதுர கி.மீ. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32 லட்சம் சதுர கி.மீ. உழவர்கள் இந்திய நிலப்பரப்பின் 54% சதத்தை வைத்திருக்கும் உரிமையாளர்கள் என்பதை உணர்தல் மிக முக்கியம். சூரிய ஒளி மின் உற்பத்திக்குத் தேவை தொழில்நுட்பமல்ல, நிலம்தான்.

எனவே, 54% நிலத்தை வைத்திருக்கும் உழவர்கள், தங்கள் அதிகாரத்தை உணர்ந்து, பெரும் குழுவாகத் திரண்டு, இந்தச் சூரியஒளி மின் உற்பத்தித் திட்டத்தை, தங்கள் வாழ்வாதார உரிமையாக அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். இது நூறாண்டுகளில் சில முறையே கிடைக்கும் வாய்ப்பு. தவறவிட்டால், மீண்டும் தலைநகருக்குச் சென்று மழையிலும், குளிரிலும் வாடி, மானியத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அவல நிலையே தொடரும்.

பஞ்சமும் பட்டினியுமாக விடுதலை பெற்ற இந்தியாவை உழவர்கள், பசுமைப் புரட்சியின் மூலம், உணவுத் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றினார்கள். வெண்மைப் புரட்சியின் மூலம், இந்தியாவை உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக மாற்றினார்கள். மின்சாரப் புரட்சி செய்ய அரசு உழவர்களுக்கு வாய்ப்பளித்தால், கரிமத்தாக்கம் இல்லாத மின்சாரத்தை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பார்கள்!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1


பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

V B Ganesan   2 years ago

உரிய தருணத்தில் இக்கட்டுரை வந்துள்ளது. மகிழ்ச்சி. கிராமத்தை ஓர் அலகாகக் கொண்டே இத்தகைய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டுறவு முறையில் குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் போன்றவையும் விவசாயிகளின் தாங்கு சக்தியை மேம்படுத்தும். ஒரு சிறிய வேண்டுகோள். கருத்துக்கள் பதிவு செய்வது குறித்த பகுதியில் ஆசிரியர் இலாகாவினரால் என்று இருப்பதை வேறு ஒரு பொருத்தமான சொல்லைக் கொண்டு மாற்றினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganesh   2 years ago

இந்திய விடுதலைக்கு பின்னான உழவு மக்களின் பங்கு அளப்பரியது. இன்றைய சேவை துறை உலகம் தங்கள் கரங்களை உழவர் முன்னேற்றத்திற்கு நீட்டுவது தலையாய கடமை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Dev Anand Radha   2 years ago

அருமையான தகவல், தாங்கள் இதுகாறும் ஒன்றிய அரசு எனும் பதத்தை கையாண்டீர்களா அல்லது சமீபத்தில் எனில் அனைவரும் அறியும் மத்திய அரசு என எழுதலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அனுபவ அடிப்படைஇயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது:தேர்வுகள்விமான நிலையக் காவல்: காவலன் காவான் எனின்சிறப்புச் சட்டம்ஹண்டே அருஞ்சொல்யோசாகார்கே: காங்கிரஸின் புதிய நம்பிக்கைபுராஸ்டேட் சுரப்பிதொல்லியல் சான்றுகள்இசைகற்பிப்பதில் வேதனைகுஜராத் 2002சிறுநீர்க் குழாய்சிஐஎஸ்எப் காவலர்கள்மேட்டிமைத்தனம்காளைகள்முக்காடு அணிந்த பேய்முதல்வர்பூனா ஒப்பந்தம்கோம்பை அன்வர் அருஞ்சொல்ஷுபாங்கி கப்ரே கட்டுரைஎம்.ஐ.டி.எஸ். வரலாறுஅத்திமரத்துக்கொல்லைசமூக ஜனநாயகக் கட்சிஅதிகாரப் பரவலாக்கல்ஆர்.என்.ரவிபஞ்சாபி உணவகம்எல்.இளையபெருமாளும் மதுவிலக்கும்எச்எம்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!