கட்டுரை 10 நிமிட வாசிப்பு

நாட்டை திவாலாக்கிவிடுமா கு.ஆ.வி. நிர்ணயம்?

யோகேந்திர யாதவ்
06 Dec 2021, 5:00 am
1

ம் நாட்டை ஆளும் வர்க்கத்தின் மனங்களை ஒரு மாயப் பிசாசு ஆட்டிப்படைக்கிறது. அது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ – எம்எஸ்பி!

சில ஆண்டுகளாகவே ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவினர் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்திய விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்துவிடக் கூடிய வாய்ப்புக்கு, முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுப் பார்க்கின்றனர்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்து, பிரதமர் மோடி திடீரென – நீண்ட காலதாமதத்துக்குப் பிறகுதான் – விவசாயிகள் முன் பணிந்துவிட்டதால், இனி கிராமவாசிகளின் கைகள்தான் ஓங்கியிருக்கும் என்று இந்தக் கும்பல்  பீதியடைந்துவிட்டனர். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இப்போது புதிய போராட்டக் களமாகிவிட்டது. ‘அவ்வளவுதான், பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகள் அஸ்தமித்துவிட்டன’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைக்கு சட்டப்பூர்வ ஆதரவு தேவை என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (எஸ்கேஎம்) வலியுறுத்திய பிறகு, பிரதமர் இந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டுவிடக் கூடாது என்று தடுப்பதற்காக ஏகப்பட்ட கட்டுரைகள், தலையங்கங்கள், விவாதங்கள் - ஊடகங்களில் அருவியாகக் கொட்டுகின்றன.

சித்தாந்தம் சார்ந்த பிரச்சாரங்களில் பெரும்பாலும் நிலவுவதைப் போல, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைக்கு எதிரான இந்த வசைமாரிகளும் முழுக்க முழுக்க அறியாமையாலும், விவசாயத்துக்கு எதிரான விரோதக் கண்ணோட்டத்தாலும், ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக் கதைகளாலும் உருவானவை.  வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகளின் போராட்டம், நல்ல முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக தரப்படும் எதிர்மறையான எண்ணங்களைக் களைய அதுபற்றிய குற்றச்சாட்டுகளின் பின்னுள்ள பொய்களை அம்பலப்படுத்துவது அவசியம் ஆகிறது!

கோரிக்கைகளை மாற்றுகிறார்களா விவசாயிகள்?

மூன்று வேளாண் சட்டங்களின் ரத்து குறித்து மட்டுமே போராடிவந்த விவசாயிகள் இப்போது தங்களுடைய கோரிக்கைகளையே மாற்றிக்கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டுப் போராடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது அற்பமானது. குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும் என்று எஸ்கேஎம் ஆரம்பம் முதலே வலியுறுத்திவருவது அனைத்துத் தரப்பினராலும் நன்கு அறியப்பட்டது, விரிவாக பிரசுரமானதும்கூட. மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளுடனேயே இதுவும் வலியுறுத்தப்பட்டுவந்ததுதான். இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசுடன் நடத்திய 11 பேச்சுகளின்போதும் இது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நடந்த அத்தனை விவசாயிகள் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிர்வினையாக அரசு அளித்த ‘பவர்-பாயிண்ட்’ பதில் விளக்கத்திலும் இக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் தந்து, பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது புதிதும் அல்ல, வியப்பதற்கான புதுமையும் அல்ல. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் இயக்கங்களில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

குஆவி ஏற்கெனவே இருக்கிறதா?

அடுத்த குற்றச்சாட்டு வெளிப்படையானது, எளிமையானது: "குறைந்தபட்ச ஆதரவு விலைதான் ஏற்கெனவே அமலில் இருக்கிறதே, ஏன் இதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கேட்டு தொல்லை செய்கிறீர்கள்?!" - என்பதே அது!

"இது ஏற்கெனவே அமலில் இருக்கிறது!" என்று பிரதமர் கூறிய பதில், இந்த மாயைக்கு புதிய உயிர் கொடுத்திருக்கிறது. உண்மை என்னவென்றால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஏட்டளவில்தான் இருக்கிறது. அரசின் தரவுகளின்படியே 6% விவசாயிகள்தான் அதனால் பலன் அடைகிறார்கள் (சரியாக கணக்கிட்டால் 15% வரைகூட இருக்கலாம் என்பது என் எண்ணம்). எப்படியாயினும் இது போதாது!

இதனால்தான் கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயிகளும் அவர்களுடைய இயக்கங்களும் குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்பட மூன்று கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

மூன்று ஆதார அம்சங்கள்

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான மூன்று அம்சங்கள் என்று இவற்றை நாம் கூறலாம்.

முதலாவது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வெறும் நிர்வாக உத்தரவாக இல்லாமல், சட்டப்பூர்வ பாதுகாப்புள்ளதாக வேண்டும். (மோடி தலைமையிலான முதல்வர்களைக் கொண்ட பணிக் குழுதான் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 2011-ல் இந்தப் பரிந்துரையை அளித்திருக்கிறது. வேளாண் செலவுகள், விலைகள் தொடர்பான ஆணையமும் 2017-18-ல் இதே கருத்தைத் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது).

இரண்டாவதாக, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வெறும் வாக்குறுதியாகவோ - நிர்வாக ஆணையாகவோ மட்டும் இல்லாமல், தன்னுடைய விளைபொருளை விற்க விரும்பும் ஒவ்வொரு விவசாயிக்கும் பலன் தருவதாக, நல்ல நிதி வசதியும் வலுவான நிர்வாக நடைமுறையும் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த அரசு உள்பட - அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும், நிர்வாக நடைமுறையை ஏற்படுத்தாமல் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து வருகின்றன. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மூன்றாவதாக, நியாயமான - சாகுபடி தொடர்பான அனைத்துச் செலவுகளையும் சேர்த்து, அனைத்து விளைபொருள்களுக்கும் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இதை சுவாமிநாதன் குழு அறிக்கையும் பரிந்துரைத்திருக்கிறது. இந்த மூன்றும் இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லையா?

சுற்றுச்சூழல் நல நோக்கில், குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது நல்லதல்ல என்று அடுத்ததாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கிவிட்டால் அதிகத் தண்ணீரைக் குடிக்கும் நெல் போன்ற பயிர்களின் சாகுபடிதான் அதிகரிக்கும் நாட்டுக்குத் தேவைப்படும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், புன்செய் தானியங்கள் போன்ற பயிர்களையும் விளைவிக்கும் பன்மைத்துவச் சாகுபடிக்கு ஆதரவு குறைந்துவிடும் என்பது அவர்கள் வாதம்.

நெல் அல்லது கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதற்குக் காரணம் குறைந்தபட்ச ஆதரவு விலை தாராளமாக இருக்கிறது என்பதால் அல்ல. அரசின் கொள்முதல் நடைமுறைகள் எல்லாப்  பயிர்களுக்கும் முக்கியத்துவம் தராமலிருப்பதுதான் முக்கியக் காரணம். 23 விளைபொருள்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தாலும், நெல், கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே அரசு  வாங்குகிறது. அதிலும் சில மாநிலங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கிறது.

ஆகையால், நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்தாலும் அந்த மாநிலங்களில் எல்லா விவசாயிகளுமே கோதுமை அல்லது நெல் சாகுபடியால் ஈர்க்கப்படுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கையைக் கைவிடுவதல்ல இதற்குத் தீர்வு, மாறாக கடலைப்பருப்பு, மக்காச்சோளம், கம்பு, இதர பருப்பு வகைகள் ஆகியவற்றையும் அரசு கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். பருப்பு, எண்ணெய் வித்துகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை லாபம் தரும் அளவில் நிர்ணயித்து வாங்க வேண்டும். அர்விந்த் சுப்ரமணியன் குழுவின் பரிந்துரையும் இதுதான்.

இது சந்தையைச் சீர்குலைக்குமா?

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயமானது, சந்தையை சீரழித்துவிடும் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. பொருளாதாரத்தில் ஆரம்பப் பாடமாக இருப்பது: குறைந்தபட்ச ஆதரவு விலை இவ்வளவு என்று நிர்ணயித்துவிட்டால் அது சந்தையை இயல்பு நிலையிலிருந்து மாற்றிவிடும்!

ஆமாம், உண்மைதான், அதைத்தான் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்கிறது; நெரிசல் நேரத்தில் வாடகை வாகனங்களுக்கான கட்டணம், தேவைக்கேற்ப அதிகமாகிறது; வான் பயணமும் அப்படியே பண்டிகைக் காலங்களில் கட்டண உயர்வுக்கு ஆளாகிறது. இதையெல்லாம் சந்தையைச் சிதைக்கும் செயல்கள் என்று சுதந்திரச் சந்தை ஆதரவாளர்கள் எப்போதாவது கண்டித்திருக்கிறார்களா?

தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச ஊதியத்தை நாம் நிர்ணயிப்பதில்லையா? அப்படித்தான் இதுவும். விலைவாசி உயரும் என்றால், அதைச் சமாளிக்க ஏழைகளுக்கு மட்டும் நாம் மானியம் தந்தால் போதும், அதற்காக சாகுபடியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தடுக்கக் கூடாது.

சுதந்திரச் சந்தை, தாராள சந்தை என்றால், தேவைக்கும் அளிப்புக்கும் இடையிலான பரிமாற்றத்துக்கேற்ப விலை உருவாக அனுமதிப்பதல்ல. சமூகத்தின் ஏழைகளுக்கு விலை மலிவாகவும், உற்பத்தியாளர்களுக்கு லாபகரமாகவும் விலை கிடைப்பதை உறுதி செய்வதுதான் சுதந்திரச் சந்தையின் செயல்பாடாக இருக்க வேண்டும்.

அரசால் தர முடியாதா?

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது நல்ல யோசனையாக இருக்கலாம்; ஆனால் நடைமுறையில் சாத்தியமல்ல; அரசு எப்படி 23 வகைப் பயிர்களையும் மொத்தமாக வாங்கிக் கொள்ள முடியும்; எங்கே அவற்றைச் சேமித்து வைப்பது; அரசு அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இப்படியாக பல கேள்விகளை அடுக்குவதன் மூலம் இந்தக் கோரிக்கையையே குற்றச்சாட்டு ஆக்குவது அடுத்த குரல். அதிகார வர்க்கத்தினர் இதை முன்வைக்கிறார்கள்.

இதற்கான பதில் எளிமையானது.  எல்லா விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தந்து கொள்முதல் செய்யும் முட்டாள்தனமான வேலையை எந்த அரசும் செய்ய வேண்டியதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்க, பல வழிகளைக் கையாளலாம். பருப்பு வகைகள், புன்செய் தானியங்கள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை இப்போதைய அளவைவிட அதிகமாக அரசு கொள்முதல் செய்யலாம். எஞ்சியவற்றை அரசு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு அறிவித்த கொள்முதல் விலைக்கும், சந்தையில் அந்தப் பொருளுக்குக் கிடைக்கும் விலைக்குமான வித்தியாசத்தை மட்டும் அரசு விவசாயிக்குக் கொடுத்தால் போதும்.

இந்த ஆண்டு கம்பு சாகுபடியாளர்களுக்கு ஹரியாணா அரசு அப்படித்தான் செய்தது. மிகவும் அவசியப்பட்ட நேரத்தில் மட்டும் அரசு சந்தையில் தலையிட்டால் போதும். சர்வதேச சந்தையில் உள்ள போட்டி காரணமாக, நம் நாட்டில் விளையும் தானிய ரகங்களை விலை குறைத்து இங்கே பிற நாட்டார் விற்பதற்கு முன்வந்தால், அவற்றுக்குத் தீர்வை விதிப்பதன் மூலம் உள்நாட்டு விவசாய சாகுபடியாளர்களுக்கு உதவலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாக யாராவது கொள்முதல் செய்ய முற்பட்டால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

இதெல்லாம் ஒரே சீரான நடவடிக்கையாக இல்லாமல், எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறதே என்று கேட்கலாம். அரசுத் துறை நிறுவன சொத்துகளை விற்பதற்கும், கனிம வளங்களை அகழ்ந்தெடுக்க ஒப்பந்தம் அளிப்பதற்கும் இதைப் போன்ற கூட்டு நடவடிக்கைகளைத்தான் அரசு எடுக்கிறது, அதைவிட இது சிக்கலாக இருந்துவிடப்போவதில்லை.

இதனால் நாடு திவாலாகிவிடுமா?

இறுதியாக, அரசின் நிதி தொடர்பான ஒரு குற்றச்சாட்டு. எல்லா விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்தால் திவாலாகிவிடும்!

நானும் என் நண்பர் கிரண் விஸ்ஸாவும் கணக்கு போட்டுப் பார்த்தோம். ஒவ்வொரு பயிருக்கும் அரசு அறிவிக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்ன, சந்தை விலை என்ன, ஒவ்வொன்றுக்குமான விலை வித்தியாசம் என்ன, பயிர் வாரியாக எவ்வளவு சாகுபடியாகிறது என்பதையெல்லாம் எழுதி கணக்குப் போட்டுப் பார்த்தோம்.

உறுதியாகத் தெரிந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2017-18-ம் ஆண்டுக்கு கணக்கிட்டுப் பார்த்ததில் அரசுக்கு மொத்தச் செலவு ரூ.47,764 கோடி வந்தது. இது மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பில் 1.6%, ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு- ஜிடிபியில் 0.3%. சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த விலையில் கணக்கிட்டால் ரூ.2.28 லட்சம் கோடி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இது 7.8%, ஜிடிபியில் 1.2%.

நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்குப் பலன் அளிக்கும் இதை இந்திய அரசால் தாங்க முடியாதா? இந்தியா இன்று கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விவசாயிகளின் கிளர்ச்சிக்கு மிகுந்த நன்றி. புதிய அரசியல் யதார்த்தத்துக்கு விடியல் ஏற்பட்டிருக்கிறது.  விவசாயிகள் வரலாற்றின் குப்பைக்கூடைக்கு உரியவர்கள் அல்ல, இந்த நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமானவர்கள். ஏ.ஆர். வாசவி கூறுவதைப் போல, ‘அதிகபட்ச ஆதரவு விலையை நோக்கி நாம் பயணப்பட வேண்டிய நேரம் இது’. இதைச் செய்வதற்கான அரசியல் உறுதி அரசுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரிபின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மானாவாரியாக பணத்தை வீண்டிக்கும் அரசு விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும்போது மட்டும் மிக்க பொறுப்புடன் நடந்துகொள்கிறது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கால் டாக்ஸிஜெயகாந்தன்சிஏஏதிருமஞ்சன தரிசனம்செளந்தரம் ராமசாமிகேஜிஎஃப் 2தேர்வுக்குழுவீடு கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ.சாரு நிவேதிதாஎம்.ஐ.டி.எஸ். வரலாறுகாங்கிரஸின் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரஆதிதிராவிடர்பத்திரிகையாளர் ஹார்னிமன்ஆயில் மசாஜ்அமைச்சர் ஷாஜி செரியன்சிறுகதைகாவிரி உரிமை மீட்புக் குழுஇந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்! ஒரே துருவம்!ஓப்பன்ஹெய்மர்ஐன்ஸ்டைன்சட்டப் பேரவைத் தேர்தல் 2022படுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்பகவத் கீதைஇந்திய தேர்தல் முறைமழைநீர் வெளியேற்றம்6வது அட்டவணைதிருமாவளவன் பேட்டிபெண் ஏன் அடிமையானாள்?: பெரியாரின் அடி தொட்டுஉபநிஷத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!