கட்டுரை 10 நிமிட வாசிப்பு

பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் என்ன வேறுபாடு?

அருண் மைரா
05 Jan 2022, 5:00 am
2

ந்தியாவில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சியின் மூல நாயகர் வர்கீஸ் குரியன். சொந்தமாகக் கறவை மாடு வைத்திருந்த லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் வருமானத்தையும் வளத்தையும் அதிகரிக்கச்செய்தது வெண்மைப் புரட்சி என்கிற பால் உற்பத்தித் திட்டம். இதில் அதிகம் நேரடியாகப் பயன்பெற்றவர்கள் பெண்கள்.

குரியனின் நூற்றாண்டு கொண்டாட்டப்பட்ட அதே நவம்பர் 26, 2021-ல்தான், பசுமைப் புரட்சிக் கொள்கைகளைக் கைவிடும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, வன்முறையில்லாத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருந்தது. பங்குச்சந்தைகள் உச்சம் பெறும்போது, விவசாயிகளின் வருமானம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு சரிந்துகொண்டேவருகிறது. இதைச் சரிசெய்ய, சிறு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில்தான் அரசு புதிய வேளாண் கொள்கைகளை வகுத்தது. புதிய கொள்கையால் பெரிய தொழில் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும், நாம் மேலும் கீழே தள்ளப்படுவோம் என்று சிறு விவசாயிகள் அஞ்சினர். விவசாயிகளின் வருவாயைப் பெருக்க அரசு இனி புதிய திட்டத்தைத்தான் யோசிக்க வேண்டும்.

புரட்சிகள் வேறு, நோக்கங்கள் வேறு

வெண்மைப் புரட்சிக்கும் பசுமைப் புரட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் அவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவுகின்றன. இரண்டு புரட்சிகளின் நோக்கங்களும் வெவ்வேறானவை. பசுமைப் புரட்சியின் நோக்கம் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியை அதிகப்படுத்தி வெளிநாடுகளிடம் கையேந்தாமல் தடுப்பது. வெண்மைப் புரட்சியின் பிரதான நோக்கம் சிறு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது; அதாவது, பால் உற்பத்தியைப் பெருக்குவதுகூட அல்ல.

பசுமைப்புரட்சி என்பது முழுக்க முழுக்க நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைக் கையாள்வது. அதற்கு அறிவியலும் திறமையும்தான் அடிப்படை. வெண்மைப் புரட்சியோ சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான வருவாய் பெருக்குத் திட்டம். இதைக் கொண்டுவந்தவர்கள் அரசியல் தலைவர்கள். வெண்மைப் புரட்சியின் நோக்கம் விவசாயிகள் அனைவருக்கும் அதிக வருவாய் கிடைத்து அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்தை எட்ட வேண்டும் என்பது ஆகும்.

சர்தார் வல்லபபாய் படேலும், திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேலும் குஜராத் விவசாயிகளின் வருவாயை உயர்த்த, கூட்டுறவு முறை உதவும் என்ற தொலைநோக்குடன் இதைத் தொடங்கினார்கள். இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் அவர்கள் எப்படித் தன்னை அணுகினார்கள், தன்னை இதில் ஈடுபடுத்தி விவசாயிகளின் சேவகனாக  மாறியது எப்படி என்பதை ‘எனக்கும் ஒரு கனவு உண்டு’ (I Too Had a Dream) என்ற தனது சுயசரிதையில் குரியன் விவரித்திருக்கிறார். விவசாயிகளின் நல்வாழ்வுக்காகத்தான் அந்தக் கூட்டுறவு அமைப்பு தொடங்கப்பட்டது, குரியன் அவர்களோடு ஒருவராக அங்கேயே வாழ்ந்தார்.

இந்தியாவில் ‘அமுல்’  மிகவும் விரும்பப்படும் பிராண்டு, சர்வதேச அரங்கிலும் அதன் தரத்துக்காக மிகவும் மதிக்கப்படுகிறது. அந்த அமைப்பின் நிர்வாகத் திறமையும், அமுல் தயாரிப்புகளின் தரமும் சுவையும் அனைவராலும் விரும்பப்படுகிறது.  உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுடனும் அவற்றின் பெயர் பெற்றுவிட்ட தயாரிப்புகளுடனும் ‘அமுல்’ வெற்றிகரமாகப் போட்டியிட்டு சந்தையைப் பிடித்துவிட்டது.

இரண்டு படேல்களால் தொடங்கப்பட்ட, விவசாயிகளுக்குச் சொந்தமான அந்தப் புதிய நிறுவனம் தீர்க்கப்பட வேண்டிய பல தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியது. அதனால்தான் அவர்கள், அமெரிக்க நாட்டில் பொறியியல் படித்த வர்கீஸ் குரியனை உதவிக்கு நாடினார்கள் (அரசு தந்த கல்வி உதவித்தொகையில்தான் குரியன் படித்தார்).

வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், இம்மாதிரியான திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்று கூறியபோது வர்கீஸ் குரியனும் அவருடைய சக பொறியாளர்களும் தீர்வுகளை உள்நாட்டிலேயே கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

சம பங்கு முக்கியம்

இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்தியர்களால் முடியும் என்ற உணர்வோடு கூட்டுறவு அமைப்பில் மிகப் பெரிய பால் பண்ணையை நிர்வகித்து, அதிலிருந்து பால் பொருள்களைத் தயாரித்த குரியனும் சக பொறியாளர்களும் பிரச்சினைகளுக்குக் கண்ட தீர்வுகள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவை. உற்பத்தி அதிகரிப்பால் கிடைக்கும் பயன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்ற லட்சியம் காரணமாகவே ‘அமுல்’ நிறுவனத்தால் சாதனை புரிய முடிந்தது. அப்படி சாதிப்பதற்கு திறமையான உற்பத்தி நடைமுறைகள் என்ற செயல்பாடு பின்னணியாகச் செயல்பட்டது.

பசுமைப் புரட்சியின் நோக்கம் என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளை, சரியான நிர்வாக வழிமுறைகளைக் கலந்து கையாண்டு உற்பத்தியைப் பெருமளவுக்கு அதிகரிக்கச்செய்து சாதனை படைப்பது ஆகும். அப்படிச் செய்ய அதற்கு ரசாயன உரங்கள் போன்றவை அவசியமான இடுபொருள்களாக இருந்தன. மிகக் குறைந்த சாகுபடிச் செலவில் அதிக அளவு சாகுபடியை ஏற்படுத்த விதை, உரம், பூச்சிக்கொல்லிகள், தண்ணீர் போன்ற இடுபொருள்கள் அவசியமாக இருந்தன.

ஆகையால், பசுமைப் புரட்சியைக் கொண்டுவருவதற்காகவே அதிக அளவில் உரங்களைத் தயாரிக்க மிகப் பெரிய உர நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் வழங்க மிகப் பெரிய அணைக்கட்டுகளும் பாசன வாய்க்கால் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. விதை, உரம், தண்ணீர் என்று எல்லாவற்றையும் ஒரே சீராக முறையான விகிதத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ள ஒரே விதமான பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வது அவசியமாக இருந்தது. ஒரு சமயத்தில் ஓரிரு வகைப் பயிர்களை மட்டுமே சாகுபடிசெய்வது என்ற நடைமுறையால், நிலங்களை அத்தியாவசியமற்ற பயிர்களுக்குத் திருப்பிவிடாமல் அரசு விரும்பியபடி நெல், கோதுமைச் சாகுபடிக்கே நிலங்கள் கிடைத்தன.

அபரிமிதமான எண்ணிக்கையில் பொருள்களை உற்பத்திசெய்து குவிக்கும் பொறியியல் இயந்திர ஆலைகளைப் போல, விவசாய நிலங்களும் மாற்றப்பட்டன. ஒரு பெரிய தொழில் நிறுவனம் வெவ்வேறு பொருள்களை, வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே சமயத்தில் தயாரிப்பில் ஈடுபடுவது சிக்கலானது. எனவே பலபொருள் தயாரிப்பு முறை கைவிடப்பட்டு, எந்தப் பொருளுக்காக ஆலை வடிவமைக்கப்பட்டதோ அதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. மிகப் பெரிய விவசாயப் பண்ணையும் தோட்டமும் அதே விதமாக ஒரே பயிர்ச் சாகுபடியில் மட்டும் கவனம் செலுத்தி சாகுபடியை அதிகப்படுத்தின. 

உற்பத்தித் திறனில் கவனம்

நவீன காலத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் என்போர் உற்பத்திக்கு உதவும் ஒரு காரணி மட்டுமே. உற்பத்தியை அதிகப்படுத்தவும், வீணடிப்பு இல்லாமல் மிகத் திருத்தமாக உற்பத்திசெய்யவும் - முடிந்த இடங்களில் எல்லாம் - மனிதர்களுக்குப் பதிலாக பெரிய இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே உற்பத்தித்திறன் என்றாலே ஒரு தொழிலாளரால் எத்தனை பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான். உற்பத்தித் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்றால் தொழிலாளர்களைக் குறைத்து இயந்திரங்களைப் புகுத்தினால் மட்டுமே முடியும்.

தொழில் நிறுவனத்தின் முக்கிய நோக்கமே முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய முதலீட்டுக்குப் பல மடங்கு லாபத்தைப் பெருக்கித் தருவதுதான். அதற்கு உற்பத்தியும்கூட வேண்டும், அதைவிட உற்பத்தித் திறனும் அதிகரிக்க வேண்டும். அதிக விவசாயிகளை ஈடுபடுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும்போது உற்பத்தித் திறனுக்கு முக்கியத்துவம் தருவது தவறான அணுகுமுறையாகிவிடும். இங்கு நோக்கம், சிறு விவசாயிகளுக்கு விவசாயம் அல்லாது இன்னொரு வகையில் கூடுதல் வருவாயைப் பெற்றுத்தருவதுதான்.

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க புதிய தீர்வுகளைக் கண்டுபிடித்தாக வேண்டியது அவசியமாகிவிட்டது. நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கியதால் கெட்டுவிட்ட சுற்றுச்சூழலை, மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவர பொருளாதார, நிர்வாக மேலாண்மைத் துறைகளில் கொள்கை மாற்றங்கள் அவசியம்.

குரியனின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாட ‘ஆனந்த் ஊரக மேலாண்மைக் கழகம்’ (ஐஆர்எம்ஏ) நடத்திய கருத்தரங்கம், பசுமைப் புரட்சிக்கு புதிதாகப் பசுமையூட்ட, வெண்மைப் புரட்சியில் கற்ற பாடங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று விவாதித்தது. விவசாயிகளின் நலனை அதிகப்படுத்த எப்படியெல்லாம் செயல்படலாம் என்று பயிற்சியளிக்க குரியன் தொடங்கிய மேலாளர்களுக்கான புதிய நிர்வாக அமைப்புதான் ஐஆர்எம்ஏ.

இயற்கைச் சூழலைக் கெடுக்காமல் விவசாயம் செய்வது எப்படி என்பதில் ஆர்வம் கொண்ட, களத்தில் நின்று பணியாற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் கெடாமல் நல்ல விதமாகத் தொடரவும் அனைவருக்கும் பயன்கள் கிடைக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாக நடைமுறைகளையும் கையாள்வது குறித்து கருத்தரங்கம் ஆராய்ந்தது.

வழிகாட்டு நெறிகள்

முதலாவது: சிறு விவசாயிகளின் நலனுக்கான அமைப்புகளின் நிர்வாகத்தில் அனைவரும் சேர்க்கப்பட வேண்டும், அனைவரும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதைவிட தொழிலாளர்களுக்கு அதிக ஊதியமும் அதிக செல்வ வளமும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது: தொழில் நிறுவனத்துக்கு வர்த்தகப் பகுதி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சமூகப் பக்கமும் முக்கியம். தொழிலாளர்களின் செயல்திறனை அளக்க புதிய முறை பயன்படுத்தப்பட வேண்டும். சமூக இழையை வலுப்படுத்த, பெருநிறுவன வழிமுறைகள் அல்லாத நிர்வாக நடைமுறைகள் கையாளப்பட வேண்டும்.

மூன்றாவது: பிரச்சினைகளுக்கும் சவால்களுக்குமான தீர்வு, உள்ளூர் அளவிலானதாக இருக்க வேண்டும். உலகளாவியதோ, தேசிய அளவிலானதோ அவசியமில்லை. உள்ளூர்ச் சூழலில் கிடைக்கும் வளங்களே உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் – உள்ளூர் தொழிலாளர்கள் உள்பட – என்பதே முக்கியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றனவோ அந்த இடத்தின் உள்ளூர் சமூகத்துடன் அந்த நிறுவனம் பின்னிப் பிணைய வேண்டும். அந்தச் சமூகத்தின் நல்வாழ்வுதான் அதற்கு குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நான்காவது: களத்தில் உள்ள மக்களால் பயன்படுத்தக்கூடிய அறிவியலாக இருக்க வேண்டும். ஒரு நிபுணர் – இதர நிபுணர்களை நம்ப வைக்கத் தயாரித்த தொழில்நுட்பமாக இருக்கக் கூடாது. உற்பத்தியில் ஈடுபடும் உள்ளூர் மக்கள் தேர்ந்த அறிவியலாளர்கள். பல்கலைக்கழக அறிவியலாளர்கள்கூட அவர்களிடம் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

ஐந்தாவது: திடீர்ப் புரட்சிகளால் அல்ல, தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் மூலமாகத்தான் நீடித்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சில வகை நோய்களுக்கு வீரியம் மிக்க மருந்தை திடீரென அதிக அளவில் உட்செலுத்தினால் எப்படி விளைவு மோசமாகுமோ அப்படியே சமூகத்திலும் நடைபெறும். மேலிடத்திலிருந்து திணிக்கப்படும் எந்த மாற்றங்களுக்கும் மோசமான பக்க விளைவுகள் நிச்சயம் ஏற்படும். அப்படிப்பட்ட முறை நோயாளியின் உடல் நிலையை மெதுவாக நலிவுறச் செய்துவிடும். பசுமைப் புரட்சியின்போது விளைச்சலைப் பெருக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வட இந்திய மாநிலங்களில் நிலம், நீர், காற்று மூன்றிலுமே நஞ்சைப் பரவச்செய்தன.

நவீன விவசாயக் கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் கையாண்டு நூற்றுக்கணக்கான ஹெக்டேர்கள் பரப்பளவுள்ள பெரிய பண்ணைகளில் விவசாயம் செய்யும் நடைமுறை சோவியத் ஒன்றியத்திலும், அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டன. அதனால் அபாரமான விளைச்சலும், உற்பத்தித் திறனும் ஏற்பட்டன. ஆனால், அது சோவியத் ஒன்றியத்தில் விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் அதிலிருந்து வெளியேற்றியது, அமெரிக்காவில் சிறிய விவசாயிகள் காணாமலே போய்விட்டனர். சோவியன் ஒன்றியத்தின் பிரதமர் அலெக்சி கோசிஜின் குஜராத்தின் ‘அமுல்’ நிறுவனத்துக்கு வந்து அதன் செயல்பாட்டை நேரிலேயே பார்த்தார். ‘அமுல்’ நிறுவனத்தினுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்று குரியனிடம் கேட்டார். “மேலிருந்து திணிக்கப்படும் நிர்வாகம் அரசாங்கத்துடையதாக இருந்தாலும் சரி (சோவியத் ஒன்றியம்), கண்ணுக்குத் தெரியாத முதலீட்டாளர்களுடையதாக இருந்தாலும் சரி (முதலாளித்துவம்) சரியான தீர்வல்ல” என்று பதில் அளித்தார் குரியன்.

ஜனநாயக வழிப்பட்ட பொருளாதார நிர்வாகம் என்றால் அந்த நிறுவனம் மக்களுடையதாக இருக்க வேண்டும், மக்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும், மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அருண் மைரா

கட்டுரையாளர் முன்னாள் திட்டக்குழு உறுப்பினர். ‘The Solutions Factory: A Consultant’s Problem-Solving Handbook’ நூலின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

எங்கள் ஊரில் கொத்தமல்லி தழை கிலோ 40 விற்ற பொழுது, 150 கிமீ தள்ளி இருந்த விவசாயிகள் விலை கிடைக்கவில்லை என்று சாலையில் கொட்டிவிட்டு சென்றார்கள். அநியாய போக்குவரத்து செலவுகளே விவசாயிகள் மற்றும் உபயோகிப்பாளர்களின் எதிரி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   3 years ago

பொதுநலத் திட்ட உருவாக்கத்தின் --------------------------------------------- நோக்கங்கள் ----------------- பொதுநலத்திட்ட உருவாக்கம் (Public Policy Planning) என்பது மிகவும் முக்கியமான துறை.. அரசு நிர்வாகங்கள் இயங்கும் விதம், அதன் எல்லைகள் முதலியவற்றை நன்கு அறிந்த, அத்துடன் துறைசார் அறிவுடைமையும் கொண்ட பேரறிஞர்களே அதை வெற்றிகரமாக உருவாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் மிக வெற்றி பெற்ற இரண்டு மக்கள் நல உரிமைச் சட்டங்கள் - தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம். மக்கள் நலப் பொருளாதாரப் பேராசிரியரான ஜான் ட்ரெஸ், இந்தியாவில் 42 ஆண்டுகளாக ஊரகப் பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறார். ஏழை மக்களோடு மக்களாக வசிக்கும் இவர் இரண்டாண்டுகள், ஒரு சிறு விவசாயியாகப் பயிர் செய்து, இந்திய வேளாண்மையைப் பற்றிய நேரடி அனுபவமும் பெற்றவர். இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்களான Integrated Child Development Scheme (ICDS) மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் போன்றவற்றை பல பத்தாண்டுகளாக கள ஆய்வு செய்து வருபவர். இவர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கும் போது, திட்ட வடிவமைப்பில் சில முக்கியமான விதிகளை இணைத்தார். 1. இத்திட்டம், கிராம நிர்வாக அலகுகளால் மட்டுமே செயல்படுத்தப்படும். ஒப்பந்ததாரர்கள் இருக்கக் கூடாது 2. ஆண் / பெண் இருவருக்கும் சமமான கூலி 3. 50% வேலைகள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் 4. 30% வேலைகள் தலித்களுக்கு அளிக்கப்பட வேண்டும் 5. திட்டச் செலவுகளில், 60% உழைப்பாளர்களுக்கான கூலியாகவும், 40% பொருளுக்கான செலவாகவும் இருக்க வேண்டும். 6. ஊரகப் பகுதிகளில், பாசன வசதி, நீர்ப்பிடிப்புத் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. இது போன்ற விதிகள் அந்தப் பொதுநலத்திட்டத்தில் இருந்ததே அதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இதே போல, அருணா ராய் அவர்கள், ராஜஸ்தானில் வறட்சி நிவாரணப்பணிகளில் உள்ள ஊழலைத் தட்டிக் கேட்கத்தான் முதலில் ஒரு இயக்கம் தொடங்கினார்.. அது, கிராம நிர்வாகங்களில் செய்யப்படும் செலவுகள் பற்றிய கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்னும் ஒரு கோரிக்கையாக உருவானது. பின்னர் அது மாநில அரசுகளின் நடவடிக்கைகள், வெளிப்படையாக இருக்க வேண்டும் என வளர்ந்தது. அருணாராய், ஷங்கர் சிங், நிகில் டே போன்ற தோழர்களுடன், பி.டி.ஷர்மா, சக்சேனா, ஹர்ஷ் மந்தர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ப்ரபாஷ் ஜோஷி, ரஜ்னி பக்‌ஷி போன்ற பத்திரிக்கையாளர்கள் உதவியுடன், ராஜஸ்தானின் சாதாரண ஊரகக் கூலித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, சாலைப் போராட்டம் நிகழ்த்தியதன் விளைவாக, ‘தகவல் உரிமைச் சட்டம்’, 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. வழக்கமான பொதுநலத் திட்ட உருவாக்குனர்கள், மேசையில் அமர்ந்து, புள்ளி விவரங்களை திரட்டி உருவாக்கும் ஒரு மனச்சாய்விலேயே இருக்கிறார்கள். அது ஒரு அறிவு சார் முயற்சி. ஆனால், மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை, அந்தச் சமூகமே தீர்த்துக் கொள்ளும் வல்லமை கொண்டது என்னும் பார்வையை, மாநில, மத்தியத் திட்டக்குழுவில் பணியாற்றுபவர்கள் எளிதில் ஒத்துக் கொள்வதில்லை. காந்தி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, மக்களுடன் ஒன்றாக இணைந்து பொருளாதாரமும், சமூக முன்னேற்றமும் நடைமுறையில் இயங்கும் ஒரு கம்யூன் வாழ்க்கையின் ஊடாகத்தான் தன் திட்டங்கள், போராட்டங்களை வடிவமைத்தார். காந்தி உருவாக்கிய அகில இந்திய ஊரகத் தொழிக் கூட்டமைப்பின் வழியே உருவான, கதர் கிராமத் தொழில் அமைப்புகள், அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்கள், இன்று நாட்டின் 3.1 கோடி குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. ஒப்பீட்டளவில், இன்று இந்தியப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பதாக நம்பப்படும் முறையான தனியார் துறை 1.1 கோடி வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்கியிருக்கிறது. இந்தப் பின்ணணியில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில் இன்று வெளியாகி இருக்கும் அருண் மைராவின் கட்டுரை, பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அலசுகிறது தவற விடாமல் படிக்க வேண்டிய கட்டுரை

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

உயிரியல் பூங்காலட்சியவாதம்புஸ்டிகாந்தி சாவர்க்கர் பெரியார்சேரன்மகுடேஸ்வரன் கட்டுரைமாதிரிகள்ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்சாஹேபின் உடல்தொகுதி மறுவரையறைகன்ஷிராம்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்ஜப்பான்ப்ராஸ்டேட் புற்றுநோய்இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள்நியாய் மன்சில்மாஸ்க்வாதெலங்கானாபா.சிதம்பரம் கட்டுரைஹிண்டன்பர்க்பெகஸஸ்ஆதீனகர்த்தர்வேளாண் சட்டங்கள்நடுக்கம்மோர்பி நகர்ஆம் ஆத்மிசாகுபடிஅகவிலைப்படிபுத்தக வெளியீட்டு விழாமாநில அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!