கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 3 நிமிட வாசிப்பு

கண்ணுக்கு ஒளி கொடுக்கும் கண் தானம்!

கு.கணேசன்
08 Sep 2024, 5:00 am
1

த்திய சுகாதாரம் – குடும்பநலத் துறை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேசிய கண் தான இருவார விழாவைக் கடைப்பிடித்துவருகிறது. ஆகவே, இந்த வாரம் கண் தானம் குறித்த விவரங்களை இங்கே தந்திருக்கிறேன்.

‘கண் தானம்’ என்றால் என்ன?

‘கண் தானம்’ பற்றி மக்கள் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கொடையாளரிடமிருந்து தானமாகப் பெற்ற கண்கள் அப்படியே முழுவதுமாகப் பயனாளிக்குப் பொருத்தப்படுவதாகவே பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற கண்ணிலிருந்து ‘கருவிழி’ எனப்படும் ‘கார்னியா’ (Cornea) திசு மட்டுமே பயனாளிக்குப் பொருத்தப்படுகிறது. இந்த அடிப்படையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கார்னியா தானம்’ என்றால் என்ன?

கார்னியா என்பது கண்ணின் முன்புறத்தில் உள்ள திசுக்களின் தெளிவான வெளிப்புற அடுக்கு ஆகும். இதுதான் கண்ணுக்குள் ஒளியைப் பாய்ச்சுகிறது. இதை நீங்கள் பார்க்கவும் முடியும். இது ‘கருவிழி’ என அழைக்கப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது கருவிழியைத் தானம் செய்ய முன்வந்தால், அவர் நான்கு பேருக்குப் பார்வையைப் பரிசாகக் கொடுக்கிறார் என்று அர்த்தம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஏன் கண் தானம் முக்கியமாகக் கருதப்படுகிறது?

கண்ணில் கார்னியா மேகமூட்டமாக இருந்தாலோ அல்லது சிதைந்துபோனாலோ பார்வை இழப்பை ஏற்படுத்தும். கார்னியாவில் நோய் அல்லது காயம் பட்டாலும் பார்வை குறையும். ‘கார்னியல் அல்சர்’ போன்ற நோய்த்தொற்றுகளுக்குப் பிறகு கார்னியாவில் ஏற்படும் வடு பார்வை இழப்பைக் கொடுக்கும். ‘கெரடோகோனஸ்’ (Keratoconus) நோயின்போது கண் பார்வை இழக்கும். இது கூம்பு வடிவக் கருவிழி எனப்படுகிறது. கண்ணின் முன்பகுதியான கருவிழியானது மெலிந்து, கூம்பு வடிவத்தில் துருத்திக்கொண்டு இருக்கும். இது ஆரம்ப நிலையில் தீவிரமாக இருக்காது; ஆனால், நாளடைவில் பார்வையைப் பாதிக்கும். உடல் வளர்ச்சி பெறும்போது இந்தக் குறைபாடு வெளியில் தெரியும். பொதுவாக, வாலிப வயதில் இது வெளிப்படும்.

வயதானவர்களுக்கு மூப்பு காரணமாகக் கார்னியா மேகமூட்டத்திற்கு வழிவகுக்கும். சிலருக்குப் பரம்பரை நிலைமைகள் காரணமாகவும் கார்னியா பாதிக்கப்படும். அக்கி அம்மை (Herpes zoster), வைரஸால் ஏற்படும் வடு கார்னியாவுக்கு ஆபத்து தரும். இந்த நிலைமைகளில் கார்னியாவை மாற்றுவது ஒன்றுதான் பார்வையை மீட்டும் வழி. அதற்குக் கார்னியா தேவை. இந்தியாவில் கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உதவுவதற்குப் போதுமான அளவு தானம் செய்யப்பட்ட கார்னியாக்கள் தற்போது இல்லை. ஆகவேதான், கண் தானம் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

உயிர் காக்கும் ரத்த தானம்

கு.கணேசன் 01 Sep 2024

கண் தானம் யார் செய்யலாம்?

கண் தானம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம்.

கண் தானம் யார் செய்ய முடியாது?

எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, ரேபிஸ், செப்டிசீமியா, ரத்தப் புற்றுநோய், டெட்டனஸ், மூளைக்காய்ச்சல், மூளை உறைக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய் உள்ளவர்கள் கண் தானம் செய்ய முடியாது.

கண் தானம் செய்வது எப்படி?

கண் தானம் செய்ய விரும்புவோர் முதலில் கண் வங்கியில் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ளலாம். அவர்களுக்குக் கண் தான அட்டை வழங்கப்படும். ஆனால், இப்படிப் பதிவுசெய்துதான் கண் தானம் வழங்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்ய வேண்டும். கண் வங்கிக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அல்லது சுழற்சங்கம், அரிமா சங்கம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம். அவர்கள் ஒரு மருத்துவக் குழுவை வீட்டுக்கே அனுப்பிக் கண் தானம் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டு சாட்சிகள் முன்னிலையில் குடும்பத்தினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே கண் தானம் செய்ய முடியும்.

முடிந்தால், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்விசிறிகளை அணைத்துவிட்டு ஏ.சி.யைப் பயன்படுத்தலாம். இறந்தவரின் கண் இமைகளை மூடி, ஈரமான துணி அல்லது பஞ்சை இமைகளுக்கு மேல் வைக்கலாம். தலையணையால் அவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்கவும். இறந்தவரின் கண்களை அகற்ற 10 நிமிடங்களே தேவைப்படும். கண்களை அகற்றியவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது.

இறந்தவரிடம் 10 மி.லி. அளவுக்கு ரத்தமும் எடுக்கப்படும். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற தொற்றுநோய்கள் ஏதாவது இருக்கிறதா என்று ரத்தத்தைப் பரிசோதித்த பிறகே, தானமாகப் பெற்ற கண்களை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஏற்கெனவே கூறியது போன்று கண்களை அப்படியே முழுவதுமாகப் பயனாளிக்குப் பயன்படுத்தமாட்டார்கள். ‘கார்னியா’ எனும் கருவிழியை மட்டுமே பயன்படுத்துவார்கள். 

கண் வங்கி என்பது என்ன?

ஒரு கண் வங்கி என்பது தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளைப் பாதுகாத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான நிறுவனமாகும், குறிப்பாக, பார்வையை மீட்டெடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. இறந்த கொடையாளர்களிடமிருந்து கார்னியா திசுக்களை வாங்குவதிலும், அவற்றை உன்னிப்பாக மதிப்பிடுவதிலும் கண் வங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது. கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சையை எளிதாக்குவதன் மூலம், கண் வங்கிகள் கார்னியா பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குப் பார்வைக்கான பரிசை வழங்குகின்றன.

எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?

திசு மாற்று அறுவைச் சிகிச்சைக்குக் கார்னியா ஏற்றது என்று கண்டறியப்பட்டால், 2 - 8 டிகிரி செல்சியஸ் குளிர் வரை உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அது பாதுகாக்கப்படுகிறது. இப்படி 14 நாட்களுக்குப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்குள் அதைப் பயானாளிக்குப் பயன்படுத்திவிட வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஊடுகொழுப்பு உணவுகள், உஷார்!

கு.கணேசன் 14 Jul 2024

பார்வை இழப்பின் தாக்கம்

உலகளாவிய பார்வைக் குறைபாட்டிற்குக் கார்னியா பார்வை இழப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தந்துகொண்டிருக்கிறது. உலகளவில் மதிப்பிடப்பட்ட 2.2 பில்லியன் பார்வையற்றவர்களில், சுமார் 4.2 மில்லியன் பேர் கார்னியா பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளாவிய பார்வை இழப்பின் ஆழமான தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கார்னியா பார்வை இழப்புக்குக் குறிப்பிடத்தக்க தீர்வு கார்னியா தானம் அல்லது கண் தானமே ஆகும். இது குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதிலும் பரவ வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்தியாவில் கண் தானம் 

தற்போது இந்தியாவில் கார்னியா பாதிப்பினால் மட்டும் 18 லட்சம் பேர் பார்வை இழந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குப் பார்வை அளிக்க வருடத்துக்கு ஏறத்தாழ 1 லட்சம் கண் தானம் தேவைப்படுகிறது. இந்தியாவில் கண் தானம் என்பது கண் வங்கிகளும் கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சைக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

உங்கள் கண்களைத் தானம் செய்ய நீங்கள் முடிவுசெய்யும்போது, கார்னியா காரணமாகப் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டுவருவதில் நீங்கள் ஒரு கருவியாக மாறுகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி அடையலாம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

உயிர் காக்கும் ரத்த தானம்
குரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்!
மாரடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்வது?
ஊடுகொழுப்பு உணவுகள், உஷார்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

PALANISAMY K   4 months ago

இந்த கட்டுரை மூலம் கண் தானம் குறித்து தெளிவாக தெரித்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி அய்யா.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பயம்பொதிதல்உயர் நீதிமன்ற தீர்ப்புதிருவாவடுதுறைகதீஜா கான் கட்டுரைஹார்ட் ஃபெயிலியர்therkilirundhu oru suriyanஉலகம் ஒரு நாடக மேடைகேசவானந்த பாரதி தீர்ப்புஎன் சரித்திரம்சமஸின் புதிய நகர்வுடேவிட் ஷுல்மன் கட்டுரைஆன்மாதீவிரவாத அமைப்புதேசிய சராசரி வருமானம்சமஸ் எனும் புனிதர்வத்திராயிருப்புசிஆர்ஏஒரே நாடு ஒரே மொழிமத அரசியல்அறிஞர் அண்ணாகாங்கிரஸின் புதிய பாதை!மதமாற்றம்அமெரிக்கா - தைவான் உறவுஐபிசி 124 ஏஅப்துல் மஜீத் வழிபாட்டுத் தலம் அல்லமகுடேஸ்வரன் கட்டுரைதென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுபிராமண சமூகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!