கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவ நிராகரிப்பு அல்ல; பாஜக நிராகரிப்பு

பிரதாப் பானு மேத்தா
23 Jun 2024, 5:00 am
0

ந்திய அரசியல் முப்பதாண்டுகளுக்கு முன் நிலவியதைப் போன்றதொரு நிலைக்குத் திரும்பிவிட்டதில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு நிம்மதி; மக்களவைக்கு எதிர்க்கட்சிகள் வலிமையுடன் திரும்பிவிட்டன, கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்துள்ளது, பெரிய கட்சியின் தலைவருடைய ‘கர்வம்’ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, இந்துத்துவ ஆதிக்கத்திலிருந்து அரசியல் இப்போதைக்கு மீண்டுவிட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய ‘சிஎஸ்டிஎஸ்’ கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதைப் போல - வறுமை, வேலைவாய்ப்பு, விலைவாசி ஆகிய பொருளாதாரப் பிரச்சினைகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன - அதாவது பாஜகவுக்கு எதிராக வாக்களித்த வாக்காளர்களைப் பொருத்தவரை. அதேவேளையில், ஒன்றிய அரசில் ஆட்சியையும், அதிகாரத்தில் தனது பிடியையும் இழந்துவிடாமலிருக்கும் பாஜகவின் நிலையையும், வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளதையும் - வாக்குச் சதவீத ஆய்வுகளுக்கும் அரசியல் கள உத்திகளுக்கும் அப்பாற்பட்டு – எப்படிப் புரிந்துகொள்வது?  

முதலாவது அம்சம்

இந்தியா போன்ற பரந்ததொரு நாட்டை நிர்வகிப்பதும் அதன் பொருளாதாரம் தொடர்பாக கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்வதும் எளிதல்ல என்பதைத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் - எவ்வளவு வலிமை மிக்கவராக இருந்தாலும் அதன் தலைவரும் - உடனடியாக இல்லாவிட்டாலும் சிறிது காலம் கழித்து அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே இதற்கு விளக்கம் அளிக்க முடியும்.

அரசியல் கட்சிகள் இரண்டு அம்சங்களை மையமாக வைத்து கூட்டணியை உருவாக்குகின்றன, முதலாவதாக - வேலைவாய்ப்பு திட்டங்கள், மக்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை, மாணவர்களுக்கு மிதிவண்டி – மடிக்கணினி போன்று பொருளாக வழங்குவது ஆகியவை. இரண்டாவதாக, சாலை – குடிநீர் – மின்சாரம் – மருத்துவமனைகள் – கல்விக்கூடங்கள் - நெடுஞ்சாலைகள் – பாலங்கள் - ரயில் பாதைகள் போன்ற அடித்தளக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருதல்.

சமீப ஆண்டுகளாக இப்படிப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழிமுறைகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.

ஆனால், இவற்றுக்கெல்லாம் பொதுவாக ஓர் அம்சம் இருக்கிறது, அது இந்தத் திட்டங்களை மட்டுமே முக்கிய லட்சியமாகக் கருதி நிறைவேற்றும் அரசின் ‘முனைப்பு’.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பொது விநியோக முறை மூலம் கோதுமை - அரிசி ஆகியவற்றை ஏழைகளுக்கு விலையில்லாமலும் மற்றவர்களுக்கு மானிய விலையிலும் வழங்குவது, ஏழைகளுக்கு வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தருவது, சாலைகளை அமைப்பது போன்ற திட்டங்களை முறையாகவும் வெற்றிகரமாகவும் அமல்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஓரிரு தேர்தல்களில் மக்கள் ஆதரவையும் தொடர்ந்து அளிக்கின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அரசியல் நோக்கில் பார்க்கும்போது, இந்தத் திட்டங்களை அமல்செய்த பிறகும்கூட ஆளுங்கட்சிகள் தேர்தலில் தோற்றுவிடுகின்றன. இந்தச் சமூக நலத் திட்டங்கள் நிறுவனமயமாக்கப்பட்டுவிடுவதால், அவற்றால் பயன்பெறும் வாக்காளரே, ‘சரி அடுத்து என்ன?’ என்று அந்த அரசிடமே எதிர்பார்க்கத் தொடங்குகிறார்.

சமீப காலங்களில் இத்தகைய சமூக நலத் திட்டங்களை நன்கு அமல்படுத்திய – எல்லாவிதச் சமுதாய மக்களையும் அரவணைத்துச் சென்ற கூட்டணி அல்லது தனிக்கட்சி அரசுகள் - ஒடிஷா, தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியையே இழந்துவிட்டன.

ராஜஸ்தானில் கடந்த முறை சமூக நலத் திட்டங்களை நன்றாக அமல்படுத்திய பிறகும்கூட சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தலில் பாஜக சில மாநிலங்களில் சமூக நலத் திட்டங்களை நன்கு அமல்படுத்திய பிறகும், வாக்காளர்களுடைய முழுமையான ஆதரவைப் பெறத் தவறியிருக்கிறது, அதற்குக் காரணம், வாக்காளர்கள் அடுத்து புதிதாக எதையாவது எதிர்பார்க்கத் தொடங்கியிருப்பதுதான்.

எனவே, இப்படிச் சமூக நலத் திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டாலும் – வெற்றிகரமாக அமல்படுத்தினார்கள் என்றே வைத்துக்கொள்வோமே – அடுத்த வெற்றிக்கு அதுவே ஒரு தளையாகவும் மாறிவிடுகிறது! ஒருகட்டத்துக்கு மேல் வாக்காளர்களுக்குக் கையூட்டு தர முடியாது என்றும் இதை நீங்கள் பாராட்டலாம், அல்லது அவர்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது என்றும் கருதலாம்.

இரண்டாவது அம்சம்

அடுத்து, இத்தகைய திட்டங்களால் ஏற்படும் பொருளாதார விளைவுகளின் தன்மை ஏற்படுத்தும் அரசியல் வரம்புகள். அடித்தளக் கட்டமைப்பை மாற்ற அரசு எவ்வளவு முதலீடு செய்தாலும் அதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது மந்தமாகத்தான் இருக்கிறது.

பொருளாதார அடுக்கில் மேலே உள்ள 20% மக்களுக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கின்றன, வறுமை ஒழிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஊதியம் அதிகமாக உயராததால் வாழ்க்கையை நடத்த அதிகம் செலவாகிறது, நகர்ப்புற ஊதியத்துக்கும் இதே நிலைதான். கிராமங்களில் வசிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு விவசாயம் என்பது கட்டுப்படியாகக்கூடிய தொழிலாக இல்லை, அதேசமயம் அதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற, மாற்றுத் தொழில் வாய்ப்புகளும் இல்லை என்பதால் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது.

வேலையும் ஊதியமும் கிடைக்கும் சில பகுதிகளிலும் விலைவாசி உயர்வும் கல்வி – மருத்துவ சிகிச்சைகளுக்காகும் செலவும் விண்ணைத் தொடுவதால் கிடைக்கும் பயன்களும் நீர்த்துப்போகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண, வழக்கமான அரசு நிர்வாக நடைமுறைகளைத் தொடர வேண்டும்; பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புள்ள வெவ்வேறு துறைகளுடன் பேசி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்; அதேசமயம் சின்னச் சின்னச் சீர்திருத்தங்களை நிர்வாகத்திலும் கொள்கைகளிலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; இவற்றில் பலவற்றுக்கு அரசியல்ரீதியாக ஆதாயம்கூட (வாக்காளர்களுடைய ஆதரவு) கிடைக்காது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்

பார்த்த எஸ். கோஷ் 16 Jun 2024

புல்டோசரும் அதிருப்தியும்

வீடுகளில் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டுவது எளிது - ஒரு நகரின் பாதாள சாக்கடை கட்டமைப்பை உருவாக்குவதைவிட; காற்றை சுத்தப்படுத்த ஒட்டுமொத்தமான நடவடிக்கைகளை எடுப்பதைவிட – தனிப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மின்சார ஸ்கூட்டர், மிதி வண்டிகளை வழங்குவது எளிது; விவசாயத் துறையையே புரட்டிப்போடும் அளவுக்குச் சீர்திருத்தங்களைச் செய்வது கடினம் - அதற்குப் பதிலாக குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கூட்ட முடியும்; விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் பணம் போட முடியும்; தனியார் துறையில் வேலைவாய்ப்பையும் உற்பத்தியையும் ஊக்குவிக்க தனியார் துறையைக் கேட்டுக்கொள்வதைவிட, வேலைவாய்ப்பு உயர்வதற்கேற்ப தொழில் நிறுவனங்களுக்கு ரொக்க ஊக்குவிப்பு அல்லது வரிச் சலுகை வழங்குவது எளிது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதால் சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டாலும், அதனால் தனிப்பட்ட முறையில் தனக்கென்ன லாபம் என்றுதான் வாக்காளர் பார்க்கிறார்; அது மட்டுமல்லாமல் காவல் துறையையும் நீதித் துறையையும் விரிவுபடுத்திச் சீர்திருத்தாமல் - புல்டோசர்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவதால் நன்மைகளுக்குப் பதிலாக அதிருப்தியே அதிகமாகிறது.

பொருளாதார கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்றால், மிகவும் வலிமையானதும் – மெதுவாக மட்டுமே செயல்படுத்த முடிவதாகவுமான நடவடிக்கைகளைத்தான் கையாண்டாக வேண்டும், அது வெளிப்பார்வைக்கு உடனடியாக பலன்களையும் தராது, ஆதரவையும் அதிகப்படுத்திவிடாது. மக்களிடையே கவர்ச்சிகரமான தலைவராக இருக்க விரும்புகிறவர் அல்லது ஏதாவது ஒன்றை மட்டும் இலக்கு நிர்ணயித்து எண்ணிக்கைகளுடன் நிறைவேற்ற நினைப்பவர் இத்தகைய கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நிச்சயம் ஆர்வம் காட்டமாட்டார்.

அடையாள அரசியல்

பொருளாதாரம் பற்றிய இந்த உண்மைகள், அடையாள அரசியலுக்கும் பொருந்தும். ஏதேனும் ஒரு சமுதாய – மத பிரச்சினையைக் கையிலெடுத்து அரசியல் செய்வோருக்கு இது பெரிய சோதனையாகவே இனி தொடரும். மண்டல் பரிந்துரையை அமல்செய்யக் கோரிய கட்சிகளுக்கு சாதிவாரி இடஒதுக்கீடு என்பதும் முக்கியம். அதை ஆட்சியில் இருக்கும்போதோ அல்லது ஆட்சியாளர்களை விட்டோ செய்த பிறகு, அந்தக் கோரிக்கைக்காக ஆதரித்தவர்களிடையே அது மறக்கப்பட்டுவிடுகிறது.

இந்துத்துவக் கொள்கையைத் தூக்கிப்பிடித்த கட்சி - அயோத்தியில் ராமருக்குக் கோயில், காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை என்று தேர்தலுக்குத் தேர்தல் கூறி அவற்றைச் செய்துமுடித்த பிறகு ஆதரவாளர்களிலேயே பெரும்பாலானவர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறத் தவறிவிட்டது. அவர்களிடம் புதிதாக ஆதரவு தர, மேலும் புதிதாக இதேபோன்ற இலக்குகளுடன்தான் கட்சி வர வேண்டும்!

மண்டல் பரிந்துரையை ஒன்றிய - மாநில அரசுகள் ஏற்று அமல்படுத்திய பிறகு, அதே பிரச்சினையில் மேற்கொண்டு எந்தக் கட்சியையும் ஆதரிக்க வாக்காளர்களுக்கு ஏதுமில்லை; ஏற்கெனவே செய்துவிட்ட செயலுக்காக காலம் முழுவதும் நன்றிக்கடனாக வாக்களிப்பது அவசியம் என்று வாக்காளர்கள் கருதுவதில்லை.

எனவே, மண்டல் பரிந்துரைக்காகப் போராடியவர்கள் அடுத்த கட்டமாக அதிலேயே சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். மண்டல் பரிந்துரைக்கு ஆதரவாக இருந்ததால் மக்களால் ஆதரிக்கப்பட்டு ஆட்சியையும் பிடித்த சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளால் நிலையான ஆட்சியையும் பொருளாதார மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1

ப.சிதம்பரம் 16 Jun 2024

இந்துத்துவ நிராகரிப்பு அல்ல

இப்போது பாஜகவுக்கு மக்களவைத் தொகுதிகள் குறைந்திருப்பது இந்துத்துவ நிராகரிப்பு அல்ல. ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்துக்கு நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் ஆதரவு அளித்தார்கள், அதற்காக தேர்தலில் வாக்களித்தார்கள். ஆனால், இதுவே நமக்கு நிரந்தர அரசியல் மூலதனமாக இருந்துகொண்டு வாக்குகளைத் தொடர்ந்து அள்ளித் தரும் என்று பாஜகதான் தவறாகக் கணித்துவிட்டது. இந்துத்துவம் தொடர்பாகவே அடுத்து என்ன என்று கேட்கும் மனநிலையில்தான் பெரும்பாலான ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

தங்களால் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்தால் மட்டுமே சாதி – மதம் சார்ந்த அரசியல் கட்சிகளால்கூட வெல்ல முடியும். அது அவ்வளவு எளிதல்ல என்பதை மோடியும் இப்போது தெரிந்துகொண்டுவிட்டார். மோடி அரசின் தோல்விகளும் தவறுகளும் தங்கள் மீது நிழலாக படிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆர்எஸ்எஸ் இப்போது அவரிடமிருந்து விலகுகிறது.

சமாஜ்வாதி, ஆர்ஜேடி அரசுகளின் நிர்வாகத் தோல்விகள், மண்டல் பரிந்துரை சார்பு அரசியல் கருத்துகளை எப்போதும் கறைபடுத்திவிட முடியாது. இவை எல்லாமும் சேர்ந்து எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்தும் பாடம் ஒன்றுதான், நீங்கள் சாதித்தாலும்கூட மக்கள் கேட்பது – அடுத்து என்ன?

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மண்டல் அரசியலுக்குப் புதிய உருவம் தந்தாக வேண்டும்; மக்களை மதரீதியில் திருட்டுவதற்கான அடுத்த பிரச்சினை எது என்று பாஜக தீவிரமாக ஆராய வேண்டும்!

இரண்டு தரப்புமே இந்த அம்சங்களுடன், மக்களுக்கு ஆதாயங்களைத் தரும் நல்வாழ்வுத் திட்டங்களையும் தயாரித்தாக வேண்டும். ஆட்சியில் இருப்பதால் பாஜகவுக்கு இதைச் செய்வதில் வாய்ப்புகள் அதிகம். இப்படி இரு அணிகளும் வாக்குகளுக்காகவும் வெற்றிகளுக்காகவும் கொள்கைகளையும் சமூக நலத் திட்டங்களையும் தொடர்ந்து தீட்டிக்கொண்டிருந்தால் இந்தியாவை ‘வளர்ந்த நாடாக’ மாற்றுவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அரசியலின் சாபக்கேடு என்னவென்றால், நாமெல்லாம் கேட்கும் கேள்விகளுக்கு எந்த அரசியல் கட்சியிடமும் நம்பிக்கை தரும் பதில் ஏதும் இல்லை என்பதே!  

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
இந்திய மக்களின் மகத்தான தீர்ப்பு!
2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்
பாஜக அடைந்தது தோல்வியே!
இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பிரதாப் பானு மேத்தா

பிரதாப் பானு மேத்தா, கல்வியாளர். அரசியல் விமர்சகர். அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், அரசியல் ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஜேஎன்யுவிலும் கற்பித்திருக்கிறார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


மகாகாசம்குமரியம்மன்வாசகர் குரல்நடிகைகளின் காதல்இடைக்கால அரசுகட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்!பெருமாள்முருகன் கட்டுரைஆரோக்கிய பிளேட்பண்டிட்டுகள்அலர்ஜிதொலைத்தொடர்புபணி நீட்டிப்புஇன்ஷார்ட்ஸ்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிரெட் ஜெயன்ட் மூவிஸ்பி.எஸ்.கிருஷ்ணன்கோவை ஞானிகலக மரபுசர்வதேச மகளிர் தினம்கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டிஎழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டிசிறிய மாநிலம்எஸ்பிஐமீனாட்சி தேவராஜ் கட்டுரைகாங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்ட ராகுல் செய்ய வேண்டவெள்ளியங்கிரி மலைவே.வசந்தி தேவி கட்டுரைகோளாறுகள்காப்பி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!