கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ்
17 Mar 2023, 5:00 am
1

ரம்பரையாகக் கிடைத்த தலைமைத்தன்மையை, பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல் காந்தி சாதித்துக் காட்டிவிட்டார்; இது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கும் காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்கும் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்கே நல்லது. 

புதிய ராகுல் காந்தியை நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ரஃபேல் விமான பேரம் தொடர்பாக 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் மேடைதோறும் தொண்டை கிழிய கத்தியதைப் போல அல்லாமல், அதானி விவகாரத்தில் பிரதமருக்கு உள்ளத் தொடர்பையும் அதானியின் வளர்ச்சிக்கு மோடியின் நெருக்கம் எப்படி உடந்தையாக இருக்கிறது என்பதையும் துல்லியமாகவும் அமைதியாகவும் கேள்விகள் மூலம் வெளிப்படுத்திவருகிறார். இது வழக்கமாக எல்லோரும் கொண்டாடும் அரசியல் மேடைப் பேச்சு உத்தி அல்ல; இந்த விவகாரத்தில் தான் திரட்டியிருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஏளனக் குரலோசைகளுக்கு நடுவிலும் அயராது கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்.

என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன ஆதரியுங்கள் என்று தன் கட்சிக்காரர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உறுதிகூறும் விதத்தில் பேசிவருகிறார். அரசின் கட்டளைக்கேற்ப அடக்கிவாசிக்கும் ஊடகங்கள் மறைக்க முயன்றாலும் அதானி - மோடி கூட்டு தொடர்பான இந்த சர்வதேச ஊழல் விவகாரம் இன்னும் நெடுந்தொலைவுக்குப் பயணிக்கவிருக்கிறது.

பனிப்பொழிவுக்கு இடையே உரையாடல்

நாடாளுமன்றத்தில் சென்ற கூட்டத்தில் தீவிரமாகப் பேசிய ராகுலை, அதற்கும் முன்னால் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். எப்போது என்று கேட்டால், பாரத் அஜோடோ யாத்திரை முடிந்த ஜனவரி 30 அன்று. கடைசி நாள் கூட்டத்தின்போது ஸ்ரீநகரில் மழை அல்லது கடும் பனிப்பொழிவு இருக்கப்போவது 90% நிச்சயம் என்று ராகுலின் நெருங்கிய சகாவான பைஜு இரு நாள்களுக்கு முன்னதாகவே என்னிடம் தெரிவித்தார். அவர் கூறியபடியே ஸ்ரீநகரில் அன்று அதிகாலையிலிருந்தே பனிப்பொழிவு அதிகரித்துவிட்டது. கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை நோக்கிச் செல்ல முடியாதபடிக்கு சாலையில் பனிக்கட்டிகளும், சேறும், சகதியுமாக இருந்தன. அனைவரும் திரண்டுவிட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டதைப் போல பனிப்பொழிவின் வேகமும் அடர்த்தியும் அதிகமாகிவிட்டன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி

ப.சிதம்பரம் 31 Jan 2023

பனிக்காலத்தில் நடப்பதற்காக நான் வாங்கியிருந்த சிறப்புக் காலணிகள் பல்லை இளித்துவிட்டன. மைனஸ் ஐந்து டிகிரி குளிரைக்கூட தாங்கும் என்று சொல்லி விற்கப்பட்ட மேல் கோட்டு, மழைத் தண்ணீரைக்கூடத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் என்னைக் கடும் குளிரில் நனைத்துவிட்டது. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அமர்வதற்காக போடப்பட்ட மேடைக்கு மேலே கூரை ஏதுமில்லை. கூட்டத்துக்கு வரும் மக்கள் திறந்தவெளியில்தான் இருப்பார்கள் என்றால் மேடைக்கும் கூரை ஏதும் கூடாது என்று ஆணையிட்டுவிட்டார் ராகுல். கூட்டத்துக்கு வந்தவர்கள் சில நூறு பேர்தான் என்றாலும் அவர்களில் பலர் உள்ளூர்வாசிகளின் எச்சரிக்கையை ஏற்று கனமான குடைகளுடன் வந்திருந்தனர். தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் – முதல்முறையாக காஷ்மீர் பனிப்பொழிவு எப்படி இருக்கும் என்று நேரிலேயே அனுபவித்தார்கள்!

பனிப்பொழிவு அதிகமாகிவிட்டதால் கூட்டத்தைச் சீக்கிரமாக முடித்துக்கொள்ள, பேச்சாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டது. ராகுல் அதை நிராகரித்துவிட்டு, அனைவருக்கும் முழு நேரம் பேச வாய்ப்பு கொடுங்கள் என்றார். எல்லோரும் பேசிய ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் அவர் 40 நிமிஷங்கள் பேசினார். அவர் பேசத் தொடங்கியபோது அவர் மீது பனி விழாமல் இருக்க குடையுடன் அருகில் வந்தவரை, வேண்டாமென்று போகச் சொல்லிவிட்டார். பிறகு நிதானமாக, வார்த்தைகளைத் தெளிவாகக் கோர்த்து கோர்த்துப் பேசினார். பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் என்ன என்று விவரித்தார்.

தனக்குள்ளிருந்த, தன்னுடைய உடல் வலிமை குறித்த கர்வத்தை இந்தப் பயணம் அழித்துவிட்டது என்றார்; இந்த அனுபவம் புதிதாக இருந்தபோது, உடல் சோர்வைப் பொருள்படுத்தாமல் யாத்திரையைத் தொடர்ந்து நிகழ்த்த ஒரு இளம் பெண்ணின் கடிதம் ஊக்குவிப்பாக இருந்தது என்று நினைவுகூர்ந்தார். காஷ்மீரிகள் அணிவதைப் போல நீண்ட மேல் அங்கியும் கம்பளிக் குல்லாவும் அணிந்திருந்த அவர், வெறும் டீ-ஷர்ட் மட்டுமே ஏன் அணிந்து நடந்தார் என்று விளக்கினார்; எவ்வளவு பனியாக இருந்தாலும் யாத்திரையைத் தொடர வேண்டும் என்ற உறுதியை வீதியோரச் சிறார்கள் மூவர் தனக்கு ளித்ததாகத் தெரிவித்தார்.

தங்களுடைய குடும்பத்துக்கும் காஷ்மீருக்கும் உள்ள பிணைப்பை எடுத்துக் கூறிய ராகுல், காஷ்மீரத்தின் ஆன்மீக மரபு அசாம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மரபுகளுடன் எப்படி இணைந்திருக்கிறது என்று விளக்கினார்.

பால்யம் முழுவதும் படுகொலைகள்

பையிலிருந்த செல்போனை வெளியே எடுத்து, செல்போன் அழைப்புக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான இரு நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பை நெகிழும் வகையில் விவரித்தார். சிறுவனாக இருந்தபோது, பாட்டி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி பள்ளிக்கூடத்தில் இருந்த தனக்கு செல்போன் மூலம் வந்ததையும், கல்லூரியில் படித்தபோது தந்தை ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது கொல்லப்பட்ட செய்தி கிடைத்ததையும் கூறினார். இதைப் போலத்தான் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஜவான்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் செல்போன்களில் செய்திகள் செல்கின்றன, காஷ்மீரில் வாழும் பலருடைய குடும்பங்களுக்கும் துக்கச் செய்திகள் செல்போன் மூலம் கடத்தப்படுகின்றன என்ற யதார்த்தத்தைத் தொட்டுக்காட்டினார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுல் நடை சாதித்தது என்ன?

யோகேந்திர யாதவ் 03 Jan 2023

இப்படிப்பட்ட அவல செல்போன் அழைப்புகளே எவருக்கும் வராமல் தடுப்பதற்காகத்தான் தன்னுடைய யாத்திரை என்று காரணத்தைத் தெரிவித்தார். இப்படிப் பேசும்போது அவருடைய கண்கள் குளமாகவில்லை, உதடுகள் துடிக்கவில்லை, நா தழுதழுக்கவில்லை, வார்த்தைகள் வராமல் குரல் கம்மிவிடவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அதில் எந்தக் கபட நாடகமும் இல்லை. அவர் அரசியல் வியூகத்தோடு பேசவில்லை, அரசியல் போட்டியாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சாடவில்லை, தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் – அதைச் செய்வோம் என்று வார்த்தை ஜாலமும் காட்டவில்லை. இந்த யாத்திரை முடிந்ததும் தனது அடுத்தகட்ட திட்டம் குறித்தோ, அரசியல் உத்தி குறித்தோ ஏதாவது நிச்சயம் பேசுவார் என்றே - நாங்கள் உள்பட - எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் பேசப்போகிறார் என்று நாங்கள் நினைத்திருந்த வேளையில் பேச்சை முடித்துவிட்டார்.

நாடி நரம்புகளையும் எலும்புகளையும் சில்லிட வைத்த அந்த உறைபனி நாளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்களும் அதற்கும் வெளியே வாழ்பவர்களும் மனம் வெதுவெதுப்படையும் வகையில் நம்பிக்கையூட்டினார். இந்தியா எப்படி இருந்தது – இனி எப்படி இருக்க வேண்டும் என்றார். உள்ளுக்குள் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும் ஒரு தலைவரால்தான் அவ்வளவு சாத்வீகமாகவும் எளிமையாகவும் பேச முடியும். தூய்மையான உள்ளத்தோடு, ஆழ்ந்த உறுதியுடன் பேசினார். 3,700 கிலோ மீட்டர் நடைப்பயணத்துக்குப் பிறகு அப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை, நான் அவரிடம் எதிர்பார்த்த பேச்சும் அதுவல்ல. அதேசமயம், வேறு யாராவது இதைவிடச் சிறந்த பேச்சை எழுதிக்கொடுத்து அதை அவர் வாசித்திருந்தாலும் இந்தப் பேச்சைப் போல அது சிறப்பாக இருக்காது என்ற எண்ணமும் எனக்குள் தோன்றியது.

ராகுல் பப்புவா? 

அப்போதுதான், தேசிய அரங்கில் அவர் தலைவராகத் தோன்றிவிட்டதை உணர்ந்தேன். அவரை ஏதும் அறியாத ‘சிறு பையன்’ (பப்பு) என்று கேலிசெய்து உருவாக்கிய பிம்பம், இப்போது அவருடைய மிகப் பெரிய சொத்தாகிவிட்டது. ஆமாம்! இந்த யாத்திரையில் அவரைக் கண்டவர்கள் அனைவருமே, இவரையா பப்பு என்று ஏளனம் செய்கின்றனர் என்றே மனம் கொதித்தனர். ராகுல் காந்தி பெரிய இடத்துப் பிள்ளை, அவரால் வெயில், மழை, குளிர் இவற்றைத் தாங்க முடியாது, நீண்ட தொலைவு நடக்க நிச்சயம் முடியாது என்று கூறியவர்களும் பேசியவர்களும்தான் அனேகம்.

யாத்திரை தொடங்கிய முதல் சில நாள்களுக்கு அன்றாடம் 25 கிலோ மீட்டர் நடந்து இந்த விமர்சனங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டார். ராகுல் காந்தி உண்மையில் நடக்கவில்லை, வாகனத்தில்தான் வருகிறார் என்றெல்லாம் ஆளுங்கட்சியின் ஐடி பிரிவு பொய்களைப் பரப்பியது. அத்துடன் அவர் பிடிவாத குணமுள்ள, எவருடனும் கலந்து பழக விரும்பாத முசுடு என்றெல்லாமும் கூறினார்கள். அவரோ யாத்திரையைக் காணவும் அவருடன் பேசவும் வந்த அனைத்துத் தரப்பினருடனும் வெகு இயல்பாக உரையாடினார். கை கூப்புவது, தோளில் தட்டுவது, கையைப் பிடித்துக்கொண்டு நடப்பது, ஆரத்தழுவிக்கொள்வது, முத்தமிடுவது என்று மக்கள் அவரை நெருங்கி தங்களுடைய அன்பைப் பொழிந்தனர்.

எவரையும் அவர் வெறுத்து புறந்தள்ளவில்லை. குழந்தைகள், சிறுமிகள், வளரிளம் பெண்கள், வயதான பெண்கள், திருமணமான பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள் என்று அனைத்துத் தரப்பினரையும் அருகில் அழைத்துப் பேசினார். அவர்கள் சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டார். இந்தியாவைப் பற்றியும் அரசியல் பற்றியும் எதுவுமே தெரியாதவர் என்றே கதை கட்டப்பட்டுவந்தாலும் தன்னைச் சந்தித்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல் இயக்கத் தலைவர்கள் என்று அனைவரிடமும் உரையாடி தனக்கு எவ்வளவு தெரியும் என்று கோடிட்டுக் காட்டி வியப்பில் ஆழ்த்தினார். அவரைப் பப்பு என்று கேலி பேசிவந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி தரும் வகையில், அவருடைய உண்மையான உருவம் வெளிப்பட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டது.

உண்மையான ராகுல் காந்தி இப்போது முழுமையாக வெளிப்பட்டுவிட்டார். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை, சமூக நீதி, பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்யைுள்ள ராகுல் காந்தி, நாட்டையும் உலகையும் சூழ்ந்துள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்துவைத்திருக்கிறார். அரசியல் எதிரியாக இருந்தாலும் வெறுப்பு கூடாது என்பதை வலியுறுத்தும் அவர் தயை, கருணை ஆகிய குணங்களைக் கடைப்பிடிக்கிறார். உடனடியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அதிகார வெறி அவருக்கில்லை. பொய்களையும் நாடகங்களையும் கையாள விரும்பாத நேர்மையான அரசியல் தலைவர் அவர். நரேந்திர மோடிக்கும் ராகுலுக்கும் இவற்றில்தான் எவ்வளவு பெரிய வேறுபாடுகள்!

ராகுலின் கடமை என்ன?

இப்படி அரசியலுக்கு வந்துவிட்டு நல்லவராகவும் சாவதானமாகச் செயல்படுகிறவராகவும் இருப்பதும் நல்லதல்ல; ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்படுகிறார் என்று கருதாமல், தான் நம்பும் விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார் என்று முத்திரை குத்திவிடுவார்கள். தொலைநோக்குப் பார்வையைக்கூட, அரசியலுக்கு ஒத்தே வராது என்று நிராகரித்துவிடுவார்கள். தார்மிக அடிப்படையில் நல்ல கொள்கைகள் என்றாலும் அதை அரசியலில் சாதிப்பதற்கு ஏற்ற வழிகளையும் கண்டாக வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை

யோகேந்திர யாதவ் 22 Sep 2022

அரசமைப்புச் சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையை காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும், மக்களும்கூட கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைத் தன்னுடைய ஆன்மாவுடன் அவர் இணைக்க வேண்டும். பதவி வேண்டாம் என்று நினைப்பது நல்ல குணமாக இருக்கலாம், நல்ல செயல்களைச் செய்ய அதிகாரத்தைப் பெறும் எண்ணம் இல்லாமலிருப்பது பொறுப்பைத் துறக்கும் செயலாகவே பார்க்கப்படும்.

ராகுல் காந்தியின் பிம்பம் மாறிவிட்டது, அவர் தலைமையேற்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்; காங்கிரஸைச் சீர்திருத்தி, தேர்தலில் வெற்றி காண்பதற்கான இயந்திரமாக மாற்ற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. மக்களுடைய மனங்களைத் தொடும் வகையில், தான் நினைக்கும் உண்மைகளைப் பேச வேண்டும்.

அரசியல் என்பது எல்லா நல்ல குணங்களையும் கொண்டிருப்பது மட்டுமல்ல, அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டே குழப்பமான, யதார்த்தமான இந்த உலகை நாம் வாழ்வதற்கேற்றவாறு மாற்றுவதுதான். இது ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அல்லது அதைப் போன்ற கட்சிகளுக்கு மட்டுமான சவால் அல்ல, இந்தியக் குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என்று கருதும் ஒவ்வொருவருக்கும் சவாலான கடமையாகும்.

ராகுல் காந்தியைத் தழுவி தலைவராக ஏற்க நாடே தயாராகிவரும்போது, இருள் சூழ்ந்த இந்த சோதனையான காலத்தில், சவால்களையும் ஆரத்தழுவி வெற்றி காண வேண்டிய கடமை ராகுலுக்கும் இருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி
ராகுல் நடை சாதித்தது என்ன?
வீதி வேடிக்கையா ராகுலின் பாத யாத்திரை?
தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

jaimadhan amalanath   1 year ago

ராகுல் நற்குணம் கொண்டவராகத் தோன்றும் அதே நேரத்தில், சூழ்ச்சி, பொய்களையே நம்பி இருக்கும் தற்போதைய அரசியல் சூழலில் தன்னுடைய அரசியலை எப்படி எடுத்து செல்வார் என்பது கவனிக்கத்தக்கது. ராகுல் காந்தி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆண்டாள் உபி தேர்தல் மட்டுமல்ல...வள்ளலார்சாஹேபின் உடல்விளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவுaruncholஜோதிராதித்யா சிந்தியாஉலகை மீட்போம்லால்தன்வாலாஆங்கிலச் சொல்தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்களா?மராத்தா இடஒதுக்கீடுஆளுநரைப் பதவி நீக்க முடியுமா? வர்ணமா?மொழியியல் தத்துவம்சமூக நலத் திட்டம்நாளை சென்னையா?சொற்கள் என்னும் சதுரங்கக் காய்கள்தி.ஜ.ரங்கநாதன் கவலை தரும் நிதி நிர்வாகம்!துஷார் ஷா திட்டம்அரசியலர்கள்சமஸ் திருமாவளவன்முரசொலி செல்வம்பூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்மொழி மீட்புப் பணிகள்hindu samasமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புமகப்பேறுவசந்திதேவி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!