கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

சமஸ் | Samas
12 Apr 2023, 5:00 am
6

நேருவின் மகளும் தோற்பாரா என்றார்கள் மக்கள். நெருக்கடிநிலைக் காட்டாட்சிக்குப் பிறகு நடந்த 1977 பொதுத் தேர்தலில், ஆட்சியை இழந்ததோடு தன்னுடைய சொந்த தொகுதியையும் இந்திரா காந்தி இழந்திருந்தார்.

மக்களவையின் 542 தொகுதிகளில் 299 இடங்களை வென்று ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 153 இடங்களை மட்டுமே பெற முடிந்ததால், அதன் முப்பதாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டியிருந்தது. நாட்டிலேயே பெரியதும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானதுமான உத்தர பிரதேசத்தின் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றிருந்தது. ரே பரேலி தொகுதியில் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார் பிரதமர் இந்திரா. முந்தைய ஆட்சியில் சர்வ வல்லமையுடன் திகழ்ந்த அவருடைய மகன் சஞ்சய் காந்தி 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமேதி தொகுதியில் தோற்றிருந்தார். சஞ்சய் காந்தி அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசின் புதிய பிரதமராக மொரார்ஜி தேசாய் அமர்ந்தார். இந்திராவால் இந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாது; அவர் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவார்; எங்கேனும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார் என்று பலர் எண்ணினார்கள். முன்னதாக நேருவின் மறைவுக்குப் பின் அப்படி ஒரு யோசனையும் இந்திராவுக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் பிரிட்டன் சென்றுவிடலாம் என்று எண்ணியவரை அப்போது தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கு நாட்டை முன்னகர்த்துவதைக் காட்டிலும் காங்கிரஸை முடக்குவதில் பெரும் முனைப்பு இருந்தது. இந்திரா மீது தாளாத வெறுப்பு பல தலைவர்களுக்கு இருந்தது. அரசியலிலிருந்து இந்திரா விலக வேண்டும்; அதேசமயம் அவர் வெளிநாட்டுக்கும் சென்றுவிடக் கூடாது; இங்கே தங்கள் முன் குறுகி நிற்க வேண்டும் என்ற சிந்தை அவர்களை ஆக்கிரமித்திருந்தது. இந்திராவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!

சமஸ் | Samas 05 Apr 2023

இந்திரா இனி வாழ்வும் சாவும் இந்திய அரசியலில்தான் என்பதில் இப்போது தீவிர உறுதியோடு இருந்தார். தன்னுடைய தோல்வியை ஆத்ம பரிசோதனைக்கான வாய்ப்பாகப் பார்த்தார் என்றும் சொல்லலாம். முந்தைய ஆட்சியில் தன்னால் தவறிழைக்கப்பட்டவர்கள் பலரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். கட்சிக்காரர்களோடும் மக்களோடும் தன்னுடைய உறவையும் நெருக்கத்தையும் அதிகரித்தார்.

இந்திராவைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் ஜனதா கூட்டணித் தலைவர்கள் இடையே போட்டியே இருந்தது என்று சொல்லலாம். கொஞ்ச காலம் ஆகட்டும்; படிப்படியாக அவரை நிலைக்குலைவுக்கு ஆளாக்கலாம் என்ற அணுகுமுறையை அவர்கள் கையாண்டார்கள்.

இந்திரா அப்போது சப்தர்ஜங் சாலையின் முதலாவது வீட்டில் வாழ்ந்துவந்தார். வீட்டைக் காலி செய்யச் சொன்னது அரசு. அது பிரதமருக்கு உரிய இல்லம் இல்லை; அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் வாழ்வதற்கான ஒதுக்கீட்டு வரிசையில் இருந்தது. இந்திராவுக்கு அது பிடித்திருந்ததால் அங்கே வாழ்ந்தார். இப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அந்த வீடு பிடித்திருப்பதாகவும் அவர் அங்கே வசிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்திரா திகைத்துப் போனார்.

இந்திரா வாழ்வின் அசாதாரண தருணம் என்று அதைச் சொல்லலாம். இந்திரா தன்னுடைய மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்துவந்த வீடு அது. “எனக்கு உடனடியாக எங்கே செல்வது என்று அந்தத் தருணத்தில் தெரியவில்லை; எனக்கு என்று சொந்த வீடு என்ற ஒன்றை நான் கற்பனை செய்யவில்லை என்பதைக்கூட அப்போதுதான் உணர்ந்தேன்” என்றார்.

இந்திய அரசியல் தலைவர்களின் வீடுகளிலேயே பிரசித்தி பெற்ற வீடு அவருக்குச் சொந்தமான ‘ஆனந்த பவன்’. அன்றைய அலகாபாத்தில் உள்ள அந்த வீடு உள்ளபடி ஒரு மாளிகை. 20 ஏக்கர் பரப்பில் 1871இல் கல்வியாளர் சையது அஹம்மது கானுக்காக ‘மஹம்மது மன்ஜில்’ என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆளுநர் வில்லியம் முய்ர் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டு, பின்னர் சிதைந்துவிட்டிருந்த கட்டிடத்தை 1900இல் மோதிலால் நேரு வாங்கினார். கிழக்கு – மேற்கு இணைந்த பண்பாட்டைப் பிரதிபலிக்கும் மாளிகையாக அதை மீட்டுருவாக்கினார். ‘ஆனந்த பவன்’ என்று பெயரிடப்பட்ட அந்த மாளிகையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்டவை.

மோதிலால் நேருவைப் போலவே, மகன் ஜவஹர்லால் நேருவும் பிற்பாடு காங்கிரஸில் தன்னைக் கரைத்துக்கொண்டதால், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையங்களில் ஒன்றாக அந்த வீடு மாறியது. காங்கிரஸ் அலுவலகம்போலவே மாறிவிட்டிருந்த வீட்டை 1931இல் ‘சுயராஜ்ய பவன்’ என்ற பெயரில் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, அதன் அருகிலேயே இன்னொரு வீட்டைக் கட்டி அதில் குடியேறினர். பிரம்மாண்டமான அந்த வீட்டையும் சேர்த்து, சில ஆண்டுகளுக்கு முன்புதான் - 1970இல் – நேருவின் நினைவாக நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார் இந்திரா. 42 அறைகளைக் கொண்ட மாளிகையை நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பத்தைத்தான் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர் ஜனதா கூட்டணியினர்.

இந்திராவின் குடும்ப நண்பரான முஹம்மது யூனூஸ் தன்னுடைய ஒரு வீட்டை உடனடியாகக் காலி செய்து கொடுக்க அங்கே இந்திராவின் குடும்பம் குடியேறியது. இந்திராவின் உதவியாளர்கள் பலரும் வெளியேறினர். தனிச் செயலர் ஆர்.கே.தவான் மட்டும், “எனக்கு ஊதியம் ஏதும் வேண்டாம், நான் வேலையைத் தொடருகிறேன்” என்று உடன் இருந்தார். இந்திராவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் இனியும் பொறுக்க முடியாது என்று தோன்றியதுபோல, 1977, காந்தி ஜெயந்திக்கு மறுநாள் (அக்.3) இந்திரா கைதுசெய்யப்பட்டார். தன்னைக் கைதுசெய்ய வந்தவர்களிடம் “விலங்கு ஏதும் கொண்டுவந்திருக்கிறீர்களா?” என்று சிரித்தபடியே கைகளை இந்திரா நீட்டினார். மும்பையில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோலியத் திட்டம் ஒன்றில் அரசின் முடிவால் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்கள். முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டு என்று கூறி அன்று மாலையே இந்திராவை நீதிமன்றம் விடுவித்தது.

அடுத்த ஆண்டில் கர்நாடகத்தின் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரை ராஜிநாமா செய்ய வைத்து, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இந்திரா. ஆனாலும், அவர் நாடாளுமன்றத்தில் நுழைவதை விரும்பாத ஜனதா கூட்டணி அரசு அவர்  ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ பதவியை ஏற்பதற்கு முன்பே நாடாளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா இழைத்திருப்பதாகச் சொல்லி அவருடைய பதவியைப் பறிப்பதாக அறிவித்து, அவரைச் சிறையில் அடைத்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஜனநாயகத்தைச் சூழும் அதிகார இருள்

ப.சிதம்பரம் 27 Mar 2023

மக்கள் அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் எல்லாவற்றையும் பார்த்திருந்தார்கள். இந்திராவையும் காங்கிரஸையும் கடந்த காலத் தவறுகளுக்காக மோசமாக அவர்கள்தான் தண்டித்தவர்கள். ஆனால், ஒரு மக்கள் தலைவர் இவ்வளவு மோசமாக நடத்தப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்திராவை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மொரார்ஜி அரசு கூறிய ஒரே நியாயம், “இந்திரா இப்போது சாதாரண பிரஜைதானே!”

இதன் இடையிலேயே ஜனதா கூட்டணிக்குள் ஏகப்பட்ட கோஷ்டிகள், அதிகாரச் சண்டைகள். கடைசியில் இரண்டரை ஆண்டுகளில் ஜனதா கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த 1980 தேர்தலில் ஜனதா கூட்டணியை வீழ்த்தி, 351 இடங்களில் வென்றது இந்திராவின் காங்கிரஸ். இந்திரா இந்த இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலுமே வென்றிருந்தார்.

ஜனநாயக அரசியலில் சாதாரண பிரஜைதான் அதிக சக்தி மிக்கவர்!

இன்றைக்கு ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப்பட்டு, அவருடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சூழலைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் பெண் பிரதமரும் அவருடைய பாட்டியுமான இந்திராவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வந்து செல்கின்றன. “அது எப்படி எல்லாத் திருடர்களின் பெயர்களிலும் மோடி எனும் பெயர் வருகிறது?” என்று ஒரு கூட்டத்தில் ராகுல் பேசியதைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கில், ஒரு சமூகத்தையே ராகுல் இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதன் தொடர் நடவடிக்கை என்ற பெயரில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தொடர் நடவடிக்கையாக அரசு அவருக்கு அளித்த இல்லத்தைக் காலி செய்ய சொல்லி உத்தரவு பறந்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ் 17 Mar 2023

ராகுல் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகக் குறிப்பிட்டிருந்தாலும் அது கண்டிக்கத்தக்க செயல். ஆனால், இங்கே ராகுல் குறிப்பிடுவது மோடி எனும் சமூகத்தையா, தனிநபரையா என்பது வெளிப்படை. ஒருவர் தன்னுடைய பெயரில் சாதியின் பெயரையும் சேர்த்துக்கொள்வார்; பெயர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது சாதியை இழிவுபடுத்திவிட்டதாக இன்னொருவர் வழக்கு தொடர்வார்; நீதிமன்றமும் அப்படியே சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கருதும் என்றால், இனியேனும் எவரும் தன்னுடைய பெயரில் சாதியைச் சேர்க்கக் கூடாது என்ற இடம் நோக்கி இந்தச் சமூகம் நகர்வதே உத்தமமாக இருக்க முடியும். பலர் ராகுல் மீதான நடவடிக்கையை முன்வைத்து சட்டபடி இந்த நடவடிக்கை சரியா என்று விவாதிக்கிறார்கள். உள்ளபடி அவதூறுச் சட்டம் போன்ற ஜன விரோதச் சட்டங்கள் இனியும் நீடிப்பது சரியா என்றே நாம் விவாதிக்க வேண்டும்.

மோடி அரசு எந்த விமர்சனத்தையும் துளியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும் நிலை நோக்கி இன்று நகர்ந்திருக்கிறது. பிபிசி வெளியிட்ட செய்தி அறிக்கைக்கான அரசின் எதிர்வினைகள் விமர்சனத் தளத்தில் உள்ள ஊடங்கள், கருத்துருவாக்கர்கள், பத்திரிகையாளர்களுக்கான பகிரங்க மிரட்டல். இதற்கு முன்னதாகவே ராகுலைக் குறிவைத்து இந்த அரசு நடத்திவரும் தாக்குதல்கள் எதிர்க்கட்சிகளுக்கான பகிரங்க மிரட்டல்.

எவரும் கண்ணியத்தோடு பேசவும் செயல்படவும் வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவன் நான். ஆயினும், ஜனநாயகம் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில், அதற்கு எதிராகக் கூப்பாடு போடுபவர்களின் வார்த்தைகளில் கண்ணியம் குறைந்திருப்பதே பிரதான குற்றம் என்று ஒருவர் சொன்னால், அவர் காரியக்கார முட்டாளாகத்தான் இருக்க முடியும். நம்முடைய கவனம் ஜனநாயகச் சீர்குலைவின் மீதே இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் உயிர் சக்தி எதிர்க்குரல்கள். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்தே ஆட்சி மன்றத்தை அர்த்தப்படுத்துகின்றன. இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத நாடாளுமன்றத்தை நடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி புதிதாகக் கட்டப்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிடும் படங்கள் இந்த சமயத்தில் வெளியாகி இருப்பது வரலாற்று முரண்.

தலைவர்களைக் காலம்தான் உருவாக்குகிறது. அரசியலில் நுழையும்போது, பலரும் விமர்சித்ததுபோல் ஓர் இளவரசராகத்தான் களத்தில் இறங்கினார் ராகுல்; சரியாக இரு தசாப்தங்களுக்குப் பின் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி எதுவும் இல்லாமல் சாதாரண பிரஜை - சாமானியன் என்ற இடத்தில் இன்று மக்கள் முன் அவர்  நிறுத்தப்பட்டிருக்கிறார்.  பிரதமர் மோடிக்குத் தெரியாதது இல்லை… ஜனநாயகத்திலேயே சக்தி வாய்ந்த பதவி அதுதான்!

- ‘குமுதம்’, ஏப்ரல், 2023 

 

தொடர்புடைய கட்டுரைகள்

வரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!
சட்டம் தடுமாறலாம், இறுதியில் நீதியே வெல்லும்
ஜனநாயகத்தைச் சூழும் அதிகார இருள்
புதிய ராகுல்
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்
ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரை
தமிழ்நாடு கற்றுக்கொடுக்கிறது: ராகுல் உரை
ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

4

1

1



பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Pachaiyappan ge   2 years ago

அண்மைக் காலத்தில் நான் படித்த அபத்தமான கட்டுரை இதுவாகத்தானிருக்கும்.அரசியலில் இன்னமும் முதிராத ராகுலின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கொடுப்பதில் சமஸ் தன் ஆற்றலை செலவிட வேண்டாம்.ஆர்எஸ்எஸ் பற்றிய அவதூறுக்கும்,மோடியை திருடர் என நீதிமன்றமே கூறியது என்று உளறியமைக்கும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டவர் ராகுல்.ராகுல் vs மோடி என்ற சமன்பாடு உள்ளவரை வெற்றி மோடிக்கே.இப்போதே ராகுலின் தோல்விக்கான முட்டுக்கொடுக்கும் கட்டுரையை சமஸ் தயாரிக்கலாம்.வெற்றியின் வாயிலிருந்து தோல்வியைப் பறிப்பது எப்படி என ராகுலிடம் பயில லாம்.

Reply 2 14

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

"ஜனநாயகம் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில், அதற்கு எதிராகக் கூப்பாடு போடுபவர்களின் வார்த்தைகளில் கண்ணியம் குறைந்திருப்பதே பிரதான குற்றம் என்று ஒருவர் சொன்னால், அவர் காரியக்கார முட்டாளாகத்தான் இருக்க முடியும். நம்முடைய கவனம் ஜனநாயகச் சீர்குலைவின் மீதே இருக்க வேண்டும்." இது சமஸ் அவர்கள் கட்டுரையின் ஒரு பகுதி. ஜனநாயகத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுபவர் அனைத்து ஜனநாயக நெறிகளையும் காட்டு பறக்க விட்டு தன்னுடைய சுயநலத்துக்காக நெருக்கடி நிலை அறிவித்து கொடும் சர்வாதிகாரியாக இருந்த இந்திரா காந்தியை முறையாக விசாரணை கமிஷன் அமைத்து அதனால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இந்திரா காந்தி மீது நடவடிக்கை ஜனதா அரசு எடுத்தது என்ன தவறு? உண்மையில் அவருடைய குடியுரிமையைப் பறித்து ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைத்திருக்க வேண்டும். பல கோடி பொதுமக்களின் சுதந்திர வாழ்வில் பெரும் கேடு விளைவித்தவருக்கு பரிந்து சமஸ் போன்றவர்கள் ஒருதலை பட்சமாக எழுதுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

Reply 6 3

Login / Create an account to add a comment / reply.

S.Elangovan   2 years ago

காமராஜர் பற்றி கூறியுள்ள தவறான தகவலை இப்பதிவிலாவது நீக்கம் செய்ய வேண்டும்.. அடுத்து வரும் குமுதத்திலும் கூட காமராஜர் குறித்த தகவல் தவறானது என்று விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். சமஸ் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

Reply 2 1

Gopi Selvam   2 years ago

கட்டுரையில் சொல்லியிருப்பது 1977 தேர்தலுக்குப் பின் அல்ல. நேருவின் மறைவுக்குப் பின் (1964). அதாவது, 1977 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இந்திரா வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார் என்று எதிரணியினர் நினைத்தனர். இந்திரா காந்திக்கு அப்போது வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லை. ஆனால் அதற்கு சில ஆண்டுகள் முன்பு, அவரின் தந்தை நேரு 1964ல் மறைந்தபோது அவருக்கு அப்படியொரு எண்ணமும் இருந்தது. அதனைத் தடுத்து நிறுத்தியவர் காமராஜர்//

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

L.Malarvannan   2 years ago

1977 தேர்தலுக்கு முன்பே இறந்துவிட்ட காமராசர் எப்படி இந்திராவிற்கு அரசியலிலிருந்து விலக வேண்டாம் என அறிவுறுத்தி இருக்க முடியும் தோழர். உண்மையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பின் நிலைகுலைந்து போன காமராசர் அதிலிருந்து மீளாமலே இறந்து போனார். அந்நிகழ்வுகளுக்கு வெளிப்படையான மன்னிப்பு கேட்பதன் மூலம் காங்கிரஸ் பெருமதிப்பை அடையமுடியும். ஆனால் நம் முன் உள்ள பணி இந்திராவை புனிதப் படுத்துவதல்ல. நெருக்கடி நிலை பற்றிப் பேசிக்கொண்டே அதை விட ஆயிரம் மடங்கு கொடுங்கோல் ஆட்சி நடத்தி நாட்டின் கட்டமைப்பையே சீர்குலைத்து ஜார்ஜ் ஆர்வெலின் '1984 ' னை உலகத்தில் நடைமுறைப்படித்திக் காட்டி வரும் கயமைக் கும்பலை அம்பலப்படடுத்துவதாகத்தான் இருக்க முடியும்.

Reply 2 0

Gopi Selvam   2 years ago

கட்டுரையில் சொல்லியிருப்பது 1977 தேர்தலுக்குப் பின் அல்ல. நேருவின் மறைவுக்குப் பின் (1964). அதாவது, 1977 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இந்திரா வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார் என்று எதிரணியினர் நினைத்தனர். இந்திரா காந்திக்கு அப்போது வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லை. ஆனால் அதற்கு சில ஆண்டுகள் முன்பு, அவரின் தந்தை நேரு 1964ல் மறைந்தபோது அவருக்கு அப்படியொரு எண்ணமும் இருந்தது. அதனைத் தடுத்து நிறுத்தியவர் காமராஜர்// என்று கூறியுள்ளார்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சமூக யதார்த்தம்நீர் ஆணையம்காலவதியாகும் கருதுகோள்இலவச மின்சார இணைப்புகள்நவீனம்பிரமோத் குமார் கட்டுரை பாஜக 370 ஜெயிக்காதுமனமாற்றம்பழைய விழுமியங்கள்கால் பாதிப்புராய்பரேலிநேரு-காந்தி குடும்பம்இலக்கியம்உருவாக்கம்சுவைமிகு தொப்புள்கொடிபாடப் புத்தகம்ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?போட்டிகளும் தேர்வுகளும்பங்களிப்புகுமுதம்சட்டப்பிரிவு 370சேவைத் துறை நிறுவனங்கள்தேசியத் தலைநகர்கொரோனாசாப்பாட்டுப் புராணம் சமஸ்பொதுவுடைமைரோபோட்தஞ்சை பிராந்தியம்தமிழி எழுத்து வடிவம்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!