கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, அருஞ்சொல்.காம் 10 நிமிட வாசிப்பு
தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்
இந்திய அரசியலில் ஒரு யுத்தமாகப் பார்க்கப்படும் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக 2022 உத்தர பிரதேச தேர்தல் பார்க்கப்படுவதில் வியப்பு ஏதும் இல்லை. நாட்டின் மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் 80 இருக்கைகளைக் கொண்ட மாநிலம் என்பதோடு, நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் இந்தி பிரதேச மாநிலங்களின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல மாநிலமும் உத்தர பிரதேசம். 2025இல் ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட நூற்றாண்டு தருணத்துடனும் இணைத்தே இது பார்க்கப்படுகிறது.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரலாம் என்பதைப் பலர் அச்சத்தோடு பார்க்கிறார்கள். இந்த நாட்டின் பெயர் இந்துஸ்தான் அல்லது பாரத் என்று பாஜகவால் மாற்றப்படுமோ? நடக்கலாம். நாடு தழுவிய அளவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கப்படுமோ? நடக்கலாம். மாநிலங்கள் வசம் மிச்சசொச்சம் உள்ள அதிகாரங்களும் பறிக்கப்பட்டு மேலும் ஒற்றையாட்சி நாடாக இந்தியா மாற்றப்படுமோ? நடக்கலாம்!
இந்த அச்சங்கள் எதுவும் தனிப்பட்ட நபர்களுடைய பதற்றங்களின் வெளிப்பாடு இல்லை. அவை பாஜகவின் செயல்திட்டத்தோடும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் நூற்றாண்டுக் கனவோடும் பிணைக்கப்பட்டவை என்பதுதான் 2024 பொதுத் தேர்தலை அவ்வளவு முக்கியமானதாகப் பார்க்க வைக்கிறது. இந்தியா எனும் கருத்தை, இந்நாட்டின் ஜனநாயகத்தை, கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்கான யுத்தமாக அதனாலேயே இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. இந்தியாவின் சில கட்சிகள் மிகச் சரியாகவே ஒரு யுத்தத்துக்குத் தயாராகும் தீவிரத்தன்மையுடன் தேர்தல்களை அணுகுகின்றன.
மோடியின் காலத்தில் பாஜக அடியெடுத்துவைத்த பிறகு, எந்தவொரு தேர்தலையுமே மிகத் தீவிரமாக அது அணுகிவருகிறது. நாடாளுமன்றத்தில் ஒரே ஓர் இருக்கையை வைத்திருக்கும் புதுச்சேரி போன்ற தனக்கு ஒருபோதும் பரிச்சயம் இல்லாத மாநிலத்தைக்கூட அது விட்டுவைக்க விரும்பவில்லை. இந்த அதிதீவிரப் போக்கின் அபாயத்தை பிராந்திய கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன.
சித்தாந்தரீதியாக இன்றைய பாஜகவை உறுதிபட ஆரம்பத்திலிருந்து எதிர்க்கும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் தொடங்கி பாஜகவின் தோழமையிலிருந்து விலகி எதிரே நிற்கும் சிவசேனா, தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி வரை அவற்றின் உள்ளார்ந்த அபாய உணர்வே எதிர்ப்பு நிலைப்பாட்டை அவை எடுப்பதற்கான உயிர் சக்தி ஆகியிருக்கிறது. அரசின் அமைப்புக்குள் நடக்கும் அதிவேக மாற்றங்களை அவர்கள் உயிர் இயல்பிலிருந்து உணர்கிறார்கள்.
பாஜகவின் திரிசூல வியூகம்
இந்த யுத்தத்துக்கு இயல்பாகத் தலைமை வகிக்கக் கூடிய நாட்டின் பிரதான எதிர்க் கட்சி இந்தப் போரின் தீவிரத்தன்மையை இன்னும் உணர்ந்திராததுதான் ஆகப் பெரிய சோகம். உத்தர பிரதேச தேர்தலை எடுத்துக்கொண்டால், அங்கு மாநிலத்தில் பாஜகவுக்கு அடுத்த நிலையில் உள்ள மூன்று கட்சிகளுமே தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தும் சாத்தியங்கள் மிக்கவை. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மூன்றுமே போதிய தீவிரத்தன்மை இல்லாமலேயே தேர்தலை அணுகிவருகின்றன. இந்த மூன்று கட்சிகளும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால் உத்தர பிரதேசத்தைத் தாண்டியும் தேசிய அரசியலுக்கு இவை பங்களிக்க முடியும். மூன்றுமே அப்படி ஒரு வாய்ப்பைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீணடித்திருக்கின்றன.
2014 பொதுத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக அடைந்த வெற்றி ஒரு பெரிய எச்சரிக்கை. இந்தியத் தேர்தல் களம் ஒரு ரசாயன மாற்றத்துக்கு உள்ளாகி இருப்பதையும் ஒரு திரிசூல வியூகத் தாக்குல் உத்தியை பாஜக உருவாக்கி இருப்பதையும் அந்தத் தேர்தல் பிரகடனப்படுத்தியது. துல்லியமாக அது உத்தர பிரதேசத்தில்தான் ஆரம்பித்தது.
ஒரு முனையில் இந்துத்துவத்தை உள்ளடக்கிய மதரீதியான அணித்திரட்டல். இன்னொரு முனையில் சமூக நலத் திட்டங்களை உள்ளடக்கி, முதலாளித்துவத்தை முன்னெடுக்கும் பொருளியல். வேறொரு முனையில் கட்சிக்குள் சமூகப் பிரதிநிதித்துவ மாற்றம் என்று ஒரு திரிசூலச் சமன்பாட்டை பாஜக முன்னெடுக்கலானது.
இந்த ஒவ்வொரு அம்சத்திலும் மேலும் பல அடுக்குகள் இணைந்திருந்தன.
முதலாவது அம்சம், இந்துத்துவத்துடன் அதிதீவிர தேசியம் இணைந்திருந்தது. இது நீண்ட காலமாக பாஜகவின் அடையாளத்தோடு பிணைந்தது; அதன் எதிரிகளுக்கு ஓரளவு பழக்கப்பட்டது என்றாலும், அதற்கு ஒரு மனித முகத்தை பாஜகவால் இப்போது உருவாக்க முடிந்திருந்தது கூடுதல் வீரியத்தைக் கொடுத்திருந்தது.
இரண்டாவது அம்சம், 2014-க்குப் பிறகு பாஜக உருவாக்கிக்கொண்டது. அக்கட்சியின் கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டால் மக்கள் நலத் திட்டங்களுக்கு அது இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. ஒரு முதல்வராக மோடியின் செயல்பாட்டையும், பிரதமராக மோடியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டால் இது புரியும். பல மாநிலங்களிலிருந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளிலிருந்தும் சில மக்கள் நலத் திட்டங்களை அது உருவாக்கிக்கொண்டது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டமும், கழிப்பறைகள் கட்டுமானத் திட்டமும் நல்ல உதாரணங்கள்.
மூன்றாவது அம்சமும் அப்படிதான்! இதை பாஜகவின் அரசியல் எதிரிகள் அங்கீகரிக்கவோ, அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவோ விரும்பவே இல்லை. ஆனால், இது உண்மை. பாஜகவுக்குள் ஒரு அதிகாரப் பரவல் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பாஜக ‘உயர் சாதி’ அரசியல் சக்திதான் என்றாலும், அது முந்தைய ‘பார்ப்பன – பனியா கட்சி’ இல்லை. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மேல் தட்டுக்காரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஈடாக தலித்துகள் மற்றும் இடைநிலைச் சாதியினருக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிநிதித்துவம் மடை மாற்றப்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேசம் இவை எல்லாவற்றுக்குமான களமாக இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மூன்று அம்சங்களுக்கு மேலே மோடி போன்ற சக்தி வாய்ந்த பிரச்சாரகர், கறாரான நிர்வாகம் தரும் கட்சி என்ற பிம்பம்.
இவை எல்லாமும் கூடியே பாஜகவை ராட்சத தேர்தல் ரதமாக்கி உள்ளன. இவை எல்லாவற்றையும் கலந்த ஒரு கருத்தியலையும், அந்தந்த பிராந்தியத்துக்கும் தேர்தலுக்கும் ஏற்ற பிரச்சாரத்தையும் பாஜக முன்னெடுக்கிறது.
காங்கிரஸின் எதிர்வினை என்ன?
காங்கிரஸின் மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், கருத்தியல் தளத்தில் பாஜகவுக்கு எதிரான ஒரு கதையாடல் சட்டகத்தை அதனால் உருவாக்க முடியவே இல்லை. பாஜகவின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது அது எதிர்வினை ஆற்றுகிறது. ஆனால், இந்த எதிர்வினைகளைக் கோர்த்து ஒரு மாற்றுக் கதையாடல் சட்டகத்தை உருவாக்கும் திராணி அதற்கு இல்லை.
நாட்டின் நுழைவு வாயிலான தமிழகத்திலிருந்து இங்கே ஒரு மாற்றுக்கான உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். காஷ்மீர் மீதான நடவடிக்கையோ, ஜிஎஸ்டியையோ, நீட் தேர்வையோ எதிர்க்கும்போது அந்தந்தப் பிரச்சினைகளின் அடிப்படையிலான எதிர்ப்பாகவோ அல்லது தேர்தல் அரசியல் சார்ந்த நிலைப்பாடாகவோ திமுக அதை வெளிப்படுத்துவது இல்லை. மாறாக கூட்டாட்சி எனும் சட்டகத்திலிருந்து தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்கிறது. பாஜகவின் நிலைப்பாடு ஒற்றையாட்சித்தன்மையிலானது என்று திமுக பிரகடனப்படுத்துகிறது. ‘பெரும்பான்மைவாத ஒற்றையாட்சிக்கு ஒரே மாற்று பன்மைத்துவம் மிக்க கூட்டாட்சி!’ என்று அது முன்னிறுத்துகிறது. கருத்தியலைக் கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ளும் வழிமுறை இதுவே!
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தமிழ்நாட்டைச் சுட்டிக்காட்டி மாநில உரிமையின் மேன்மைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், ‘மாநிலங்களை அதிகாரப்படுத்தும் வகையில் அரசமைப்பைச் சீரமைக்க வேண்டும்’ என்று குரல் கொடுத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடைய பேச்சு தேச விரோதம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. 48 மணி நேர தர்ணாவை அறிவிக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த முரண்பாடு எங்கிருந்து முளைக்கிறது?
ராகுல் மாறிப் பிரயோஜனம் இல்லை; காங்கிரஸ் மாற வேண்டும். காங்கிரஸை ராகுல் மாற்ற வேண்டும். ஒரு புதிய கருத்தியல் சட்டகத்தை காங்கிரஸ் உருவாக்கிக்கொள்ள வேண்டிய காலம் இது. காலங்காலமாக காங்கிரஸ் மாறியேவந்திருக்கிறது.
இதே பிரச்சினைதான், அகிலேஷ் மற்றும் மாயாவதிக்கும்! யோகி ஆதித்யநாத் ஒரு பெரும் கருத்தியல் பீடத்தின் மீது நிற்கிறார். சமாஜ்வாதி கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ எந்ததெந்த விவகாரங்களில் பாஜகவுக்கு மாற்றான பார்வையைக் கொண்டவை? காஷ்மீர், ராமர் கோயில், பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு இந்த விவகாரங்களில் எல்லாம் அகிலேஷ் மற்றும் மாயாவதியின் நிலைப்பாடுகள் என்ன? பாஜகவை வெல்லும் வியூகம் என்று எண்ணி பிராமணர்களை குஷிப்படுத்த முற்படும் இந்த மூன்று கட்சிகளின் ‘சமூகநீதிப் பார்வை’யை எப்படிப் புரிந்துகொள்வது?
சமூகரீதியாக தமிழ்நாட்டில் இடைநிலைச் சாதிகளும் தலித்துகளும் எப்படி அரசியல் களத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர் அல்லது உத்தர பிரதேசத்தில் ஏன் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலும் இதில் அடக்கம். திமுக, விசிக இரண்டுமே கூட்டாட்சியைத் தம் கொள்கையாக வரித்துக்கொண்டிருக்கின்றன; சனாதானத்தையும் பாஜகவையும் தம் எதிரியாக உறுதிபட கருதுகின்றன. இந்தக் கருத்தியல்தான் சமூகங்களுக்கு இடையிலான பாலம்.
தமிழகத்தில் தாங்கள் வேறுபடும் புள்ளிகளைத் துல்லியப்படுத்தி வெளிப்படுத்துகின்றனர் தலைவர்கள். வரலாற்றுரீதியாகச் சொல்வதென்றால், இந்தியாவில் கூட்டாட்சியின் முன்னத்திஏரான திமுக அண்ணாவின் 1950-கள், கருணாநிதியின் 1970-களுக்குப் பிறகு மிக வலுவாகக் கூட்டாட்சியைப் பேசலானது, 2014-க்கு பிறகுதான்!
அடிமைகளா தொண்டர்கள்?
எல்லாவற்றிலும் மேலாக அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் என்பது பொறுப்புணர்வுமிக்க சவால். நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் என்றால், உங்களுக்குக் கீழே உள்ள பல லட்சம் தொண்டர்களின் பல கால அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைப் பெறுகிறீர்கள்; அதற்கான பலனான சமூக மாற்றத்தைத் தர நீங்கள் கடமைப்பட்டவர் ஆகிறீர்கள். வியூகத் தெளிவும், வெளிப்படையான பேச்சும் அவசியம்.
என்னைப் பொருத்தளவில் 2014, 2019 தேர்தல் தோல்விகள்கூட காங்கிரஸை இவ்வளவு பலவீனபடுத்தவில்லை. ராகுலுடைய ராஜினாமா முடிவும், 2019-க்குப் பிந்தைய இந்த மூன்றாண்டு கால மௌனமுமே காங்கிரஸுக்கு இழைக்கப்பட்ட பெரும் சேதம். ராகுல் என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது அவருக்கேனும் புரிபடுமா என்று தெரியவில்லை.
உத்தர பிரதேசத்தில் 2019 பொதுத் தேர்தலில் 51.19% வாக்குகளை வாங்கியது பாஜக கூட்டணி. அதாவது, நோட்டா உட்பட ஏனைய அத்தனை தரப்புகளும் வாங்கிய ஓட்டுகளைச் சேர்த்தாலும் பாஜக கூட்டணிக்குக் கீழே. தன்னுடைய குடும்பத்தினர் காலங்காலமாக நின்ற அவருடைய சொந்த தொகுதியான அமேதியில் தோற்றுப்போனார் ராகுல். காங்கிரஸ் கூட்டணி பெற்ற மொத்த ஓட்டு விகிதம் வெறும் 6.4%.
இப்படிபட்ட பலவீன நிலையில் எந்தவொரு வியூகத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் மாநிலத்தின் 401/403 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தார் ராகுல்? எவ்வளவு யோசித்தும் இதன் பின்னால் ராகுல் மறைத்து வைத்திருக்கும் ‘ராஜ தந்திரம்’ பிடிபடவே இல்லை. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மூவரும் சேர்ந்தால் பாஜவை வெல்ல முடியும் என்பதை 2019இல் அங்கு நடந்த சில இடைத்தேர்தல் முடிவுகள் நமக்குக் கூறின. அப்படி ஒரு முடிவை 2021 தேர்தலில்கூட ராகுல், அகிலேஷ், மாயாவதி எடுக்க முடியாததற்கு என்ன காரணம்?
கட்சிக்குள் மூவரையும் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நிலையும், அவர்களுடைய தன்னகங்காரத்தையும் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குப் பிடிபடவில்லை. 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய கால் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால் சமாஜ்வாதி, பாஜக, பகுஜன் சமாஜ் மூன்றுமே குறைந்தபட்சம் 20% வாக்கு வங்கியைக் கையில் வைத்திருக்கும் கட்சிகள். காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் 10%-20% வரையிலான வாக்குகளைக் கையில் வைத்திருந்தன. விளைவாக 30% வாக்குகளை எட்டும் கட்சி ஆட்சியில் அமர்வது உத்தர பிரதேசத்தில் வழக்கமாக இருந்தது. அதாவது, 10% ஓட்டுகளே ஆட்ட மாற்றத்துக்கான விசைப்பந்து. 2014 மக்களவைத் தேர்லிலோ 42.30% வாக்குகளைப் பெற்றது பாஜக. 2019 மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் கிட்டத்தட்ட 10% அதிகரித்தது. அதாவது, சமாஜ்வாதி 10% ஓட்டுகளை இந்தத் தேர்தலில் அதிகம் பெற்று, பாஜக 10% ஓட்டுகளை இழந்தாலும்கூட ஆட்சி பாஜக கையில் இருக்கும் என்பதே கணக்கு. அப்படி இருக்க எந்த ஒரு நம்பிக்கையில் இப்படி ஒரு சூதாட்டத்தில் ராகுலும், அகிலேஷும், மாயாவதியும் இறங்கினார்கள்?
அரசியலின் உயிர்நாடி
எல்லாவற்றையும் தாண்டி தேர்தல் அரசியலில் வெற்றிக்கான மிக முக்கியமான இன்னோர் அம்சம் இருக்கிறது. அதுதான் அடித்தளமும்கூட. நீங்கள் ஒரு தலைவராக மக்கள் அணுகும் இடத்தில் இருப்பதும், அன்றாடம் அவர்களின் கதையாடலில் இருப்பதும்!
இது ஒன்றும் ரகசியம் இல்லை. மாநிலத் தலைவர்கள் உட்பட கட்சித் தலைவர்கள் எவரும் ராகுலை விரும்பிய நேரத்தில் சந்தித்து விரிவாக உரையாடும் நிலைமை இல்லை என்பதும், களத்தில் அவருடைய தொடர்ச்சியின்மையும் விரிவாக மீண்டும் மீண்டும் பேசப்பட்டுவரும் கதைகள். சரியாக ஒரு வருஷத்துக்கு முன்பு வரை அகிலேஷும் ‘ட்விட்டர்வாசி’ என்று அழைக்கப்பட்டவர்தான். மாயாவதி அவருடைய மாளிகைக்குள் முடங்கிப்போய் நெடுங்காலம் ஆகிறது.
இதற்கும் தமிழ்நாட்டிலிருந்து உதராணத்தை எடுத்துக்கொள்கிறேன். பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக எந்தவொரு சின்ன கட்சியுடனும் இன்று கூட்டணி உறவு சிதறிவிடாமல் பராமரிக்கிறது. ஏற்ற இறக்கங்களுக்கு அப்பாற்பட்டு, பொது எதிரி வீழ்த்தப்படுவது முக்கியம் என்ற நோக்கில் திமுகவுடன் முறிந்துவிட்டாத உறவைப் பராமரிக்கின்றன கூட்டணிக் கட்சிகள். திமுக தலைவர் ஸ்டாலின் கடினமானவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலும் கட்சியினர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, சமூக தளத்தில் செயல்படும் அமைப்புகளும் அணுகும் விததில் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறார். அன்றாடம் களத்தில் மக்கள் மத்தியில் எப்போதும் உயிர் துடிப்பு மிக்க எதிர்க்கட்சியாக அது பணியாற்றியதே மீண்டும் இன்று அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறது.
உறுதிபடச் சொல்கிறேன், பாஜக வீழ்த்த முடியாத சக்தி இல்லை; ஆனால், ஒவ்வொரு தேர்தலையும் போராக அணுகும் ஒரு கட்சியை வீழ்த்த ஒரு தேர்தலைத் தேர்தலுக்குரிய தீவிரத்துடனேனும் அணுகும் தன்மை எதிர்க்கட்சிகளுக்கு வேண்டும்!
6
5
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
"கட்சிக்குள் மூவரையும் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நிலையும், அவர்களுடைய தன்னகங்காரத்தையும் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குப் பிடிபடவில்லை". Awesome observation. It's not problem of Rahul Gandhi, It's the problem of whole humankind. Thanks a lot Editor Samas for this wonderful observation.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
சூ.ம.ஜெயசீலன் 2 years ago
அருமை! If possible kindly translate and send to Rahul and congress leaders
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
Congress need a dynamic leader. I guess ragul won't fit for it..mrs Priyanka may be second choice. But a senior will be good. Mrs Sonia gandhi must come forward to sacrifice her post
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.