கட்டுரை, அரசியல், சட்டம் 9 நிமிட வாசிப்பு

புதிய அரசமைப்புக்கான கோரிக்கை சுயஅழிவுக்கானது

காஞ்சா ஐலய்யா
09 Mar 2022, 5:00 am
3

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து ஒரு காலத்தைப் போல – இப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்று நாட்டுக்கே தெரியும். ஆர்எஸ்எஸ் அமைப்பு ‘சனாதன பிராமணீய சமுதாய முறை’யே நாட்டில் நிலவ வேண்டும் என்று விரும்புகிறது. அந்த அமைப்பின் சித்தாந்திகளும் நிறுவனர்களும் இந்தியாவுக்கென்று தனி அரசமைப்புச் சட்டம் எழுதப்பட நியமிக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையையும், அதன் தலைவராக பீம்ராவ் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கட்டோடு எதிர்த்தவர்கள். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அசல் இந்தியத்தன்மை எதுவும் இல்லை என்று தொடர்ந்து எழுதியும்பேசியும்வந்தவர் கோல்வால்கர். ஆர்எஸ்எஸ் விரும்பிய இந்தியத்துவம் என்பது சாதி மைப்புகளை அங்கீகரிக்கும் வர்ண அடிப்படையிலானது. அரசமைப்புச் சட்டமோ வர்ணாசிரம முறையை ஓழித்து, சமத்துவமான சமூக – பொருளாதார நிலையை ஏற்படுத்துவதற்கானது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையை ஏற்படுத்துவதை இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். அது முதலாளித்துவ அரசின் முயற்சி என்று கூறினர். நல்ல வேளையாக அவர்கள் அதில் தோற்றனர், இப்போதைய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 அன்று ஏற்கப்பட்டு அமலுக்கு வந்தது.

அரசமைப்புச் சட்டத்தையே ஒட்டுமொத்தமாக மறுபரிசீலிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் தேசிய ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு 2000 பிப்ரவரி 22 அன்று நிறுவியது. அரசமைப்புச் சட்டத்தை அவ்வப்போது பகுதி பகுதியாகத் திருத்துவதற்குப் பதிலாக, புதிதாக ஒன்றைத் தயாரிப்பதற்கான முயற்சி அது. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அந்த முயற்சியை ஏற்கவில்லை. மறுபரிசீலனைக் குழுவும் காலாவதியானது.

மக்களவைக்கு 2014இல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணிக்குத் தலைமை வகித்து ஆட்சிக்கு வந்த பாஜகவோ அதை இயக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்போ அரசமைப்புச் சட்டத்தைப் புதிதாக இயற்ற வேண்டும் என்று சமீபத்தில்கூட கோரவில்லை. ஆனால், சங்கப் பரிவாரங்களுடன் தொடர்புள்ள சில அமைப்புகள் அரசமைப்புச் சட்டத்தையே நீக்கிவிட வேண்டும் என்று பேசத் தொடங்கின. பெரும்பாலானவர்கள் இந்த ஆபத்தை இன்னமும் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்தேவருகிறார்கள்.  

கேசிஆர் விரும்பும் புதிய அரசமைப்புச் சட்டம்

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவரும் தெலங்கானா மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், நிருபர்களிடம் பேசுகையில் இப்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இதை மாற்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட பிப்ரவரி முதல் தேதி, ஹைதராபாதில் நிருபர்களைச் சந்தித்தபோது இக்கருத்தைத் தெரிவித்தார்.

“காங்கிரஸ், பாஜக ஆகியவற்றை மட்டுமல்லாது இப்போதைய அரசமைப்புச் சட்டத்தையும் எதிர்க்கிறேன் என்பதைத் தவறாமல் பத்திரிகைகளில் எழுதுங்கள்” என்று நிருபர்களை அவர் கேட்டுக்கொண்டார். அதை சில நிருபர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டதால், “நான் இதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்” என்று மீண்டும் வலியுறுத்தினார். “அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து விவாதம் தொடங்கட்டும், நமக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் தேவை” என்றார். இந்தக் கருத்தை இரண்டு வழிகளில் அணுகலாம்.

இந்தியா போன்ற பெரிய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட வேண்டும் என்று ஒரு மாநிலத்தின் முதல்வர் அல்லது மாநிலக் கட்சியின் தலைவர் கோருகிறார் என்று கருதலாம்; அல்லது மோடியை எதிர்த்துக் கொண்டே ஆர்எஸ்எஸ் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக, அவர்களுடைய விருப்பத்தையே கோரிக்கையாக முன்வைக்கிறார் என்று கருதலாம். இதை எப்படிக் கருதினாலும் ஆட்சியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர் அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று கோருவது கவலையை அளிக்கிறது. காரணம் வேறு எந்த மாநில முதல்வரும் இப்படியொரு கோரிக்கையை முன்வைக்கவே இல்லை.

இந்துத்துவ குணங்கள் உள்ளவர்

கேசிஆர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் பல்வேறு இந்துத்துவ குணாம்சங்களைக் கொண்டவர்தான். ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர். யாகங்களுக்கும் வீடுகளில் பூஜைகள், ஹோமங்களுக்கும் நிறையப் பணம் செலவிடுகிறார். ஆலயங்களுக்கு அடிக்கடிச் செல்கிறார், திருப்பணிகளுக்குச் செலவிடுகிறார். வைணவ பீடாதிபதி ஸ்ரீமன் நாராயண ஜீயர் என்று அழைக்கப்படும் சின்ன ஜீயரின் அணுக்கமான சீடராக இருக்கிறார்.

நில உடைமையாளர் சமூகமான ‘வெலமா’ பிரிவைச் சேர்ந்த கேசிஆர், பிராமணர்கள் காலில் மட்டும் விழும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். பொது இடம் என்றும் பாராமல் விமான நிலையம், பொதுக்கூட்ட மேடை என்று எந்த இடத்திலும் தடாலென்று காலில் விழுந்துவிடுகிறார். குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரணாப் முகர்ஜி, தெலங்கானா ஆளுநராகப் பதவி வகித்த இஎஸ்எல் நரசிம்மன் ஆகியோர் கால்களில் இப்படி விழுந்து வணங்கியிருக்கிறார். இருவரும் பிராமணர்கள்.

இப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் (பட்டியல் இனத்தவர்), ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (ஓபிசி) ஆகியோர் கால்களில் இப்படி விழுவதில்லை. யாதாத்ரி ஆலயத் திருப்பணிக்கு மட்டும் ரூ.130 கோடியைச் செலவிடுகிறார். இப்படி ஆழ்ந்த பக்திமானாக இருப்பதால்தான் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பொது வெளியில்கூட அவர் பண்ணையாரைப் போலத்தான் மற்றவர்களிடம் பேசுவார், நடந்துகொள்வார். இத்தகைய தலைவர்களையும் தனிநபர்களையும் திருத்துவதற்குத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமே இயற்றப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையே முழுதாக மாற்ற வேண்டும் என்று கோர ‘தனி நபர்’ கேசிஆருக்குக் கருத்துரிமை இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தைக் காப்பேன், அதன்படி நடப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்ட பிறகு அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பேசவும் மாற்றக் கோரவும், இயக்கம் தொடங்கவும் ‘முதல்வர்’ கேசிஆருக்கு உரிமை இல்லை.

அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தங்களுடைய உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்தவர்களில் தேர்வுசெய்யப்பட்ட பலரால் நிரம்பியது இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை. ஒவ்வோர் அம்சத்தையும் கடந்த கால வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் பல கோணங்களிலும் விருப்பு வெறுப்பில்லாமல் விவாதித்து, இந்தியாவின் நன்மைக்காக உருவாக்கியதே இப்போதைய சட்டம்.

இப்படி ஒவ்வொரு முதல்வரும் அமைச்சரும் ஏதோ ஒரு காரணத்துக்காக அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று கோரினால் நாடு மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். நாளையே பிரதமரும் மத்திய அமைச்சர்களும் இதே போலப் பேசத் தொடங்கினால் என்ன ஆகும்? இந்திய வரலாறு இதுவரை கேள்விப்பட்டிராத வகையில் மிகச் சிறந்த ஜனநாயக அமைப்பு இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அழிந்துவிடும்.

இப்போது ஆட்சியில் இருக்கும் யாரும் முந்தைய தலைமுறைத் தலைவர்களின் அறிவு, நாணயம், தன்னலம் கருதாத சேவை, தியாகங்களுக்கு எந்த வகையிலும் ஈடாக மாட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் கூறும் ‘கண ராஜ்யம்’

பழங்கால இந்தியாவில் இப்போது இருப்பதைவிட சிறப்பான ‘கண ராஜ்யம்’ இருந்தது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்சங்கசாலக் மோகன் பாகவத் சமீபத்தில் பேசியிருக்கிறார். தேசியவாத உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இப்படியொரு தொன்மக் கதை பரப்பப்படுகிறது.

காலனி ஆதிக்கத்தின் எச்ச சொச்சமாகத் தொடரும் இப்போதைய நீதி-நிர்வாக அமைப்பு முறையை இடித்துரைக்கும் விதத்திலேயே பழைய கால ‘கண ராஜ்ய’ முறை பாராட்டப்படுகிறது. கண ராஜ்யம் என்பது சின்னஞ்சிறு கிராமப்பகுதிகளில் அனைவருக்கும் சம அளவிலான உரிமை, பொறுப்புகளுடன் அமலில் இருந்த பழங்குடிகளின் நிர்வாக முறை.

புத்தர் வாழ்ந்த காலத்திலேயே ‘வஜ்ஜி’ என்ற பழங்குடிகளிடையே அத்தகைய கண ராஜ்யம் அமலில் இருந்தது இதற்கொரு உதாரணம். வஜ்ஜிகளின் தனி நிர்வாக முறையை மகத சாம்ராஜ்யம் கைப்பற்றி அழித்துவிடாமல் காப்பாற்றினார் புத்தர். அந்த கண ராஜ்யத்தை இப்போது எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டு அமலில் இருக்கும் ஜனநாயக நடைமுறைகளுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டே பேச முடியாது. (இதை God As Political Philosopher: Buddha’s Challenge to Brahminism என்ற என்னுடைய நூலில் விவாதித்திருக்கிறேன்).

நூற்று முப்பது கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில் அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயக அமைப்புக்கு ஈடாக உலகிலேயே எந்த ஒரு நிர்வாக அமைப்பும் இல்லை. இதை மாற்றும் எந்த முயற்சியும் மிகவும் ஆபத்தான சாகசமாக மாறிவிடும். ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் இந்த அரசமைப்புச் சட்டம் தரும் பாதுகாப்பில் பெற்றுவரும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் சீர்குலைந்துவிடும்.

இந்தியாவில் நிலவிய சாதிப் பிரிவினைகளாலும், தீண்டாமைக் கொடுமைகளாலும், பழங்குடிகளின் தனிப் போக்காலும் அனைவருக்கும் கல்வி என்ற வாய்ப்பு 1950 வரையில் கிட்டாமலே போயிருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட பிறகே கோடிக்கணக்கான வறிய மக்களுக்கு முன்னேற்றம் தொடர்பாக அதுவரை கேள்விப்பட்டே இராத வாய்ப்புகள் பற்றித் தெரியலாயின.

இந்த அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் தலைமையில் உருவாக்கவும், மற்றவர்கள் அதை ஏற்கவும் நாம் மிகவும் அதிருஷ்டம் செய்தவர்கள். கேசிஆர் போன்ற அதிகாரப் பசி மிக்க சிறிய தலைவர்கள், இந்துத்துவ சக்திகள் அல்லது சித்தாந்தரீதியாக அரசமைப்புச் சட்டத்தை எதிர்ப்போர் ஆகியோர் அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் இடம் தந்துவிடக் கூடாது.

இடதுசாரிகளும்கூட…

அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகம் என்பதே கூடாது, அதை ரத்துசெய்துவிட வேண்டும் என்ற இடதுசாரி சித்தாந்தவாதிகளின் கருத்தால் ஈர்க்கப்பட்டு நானுமே ஒருகாலத்தில் அரசமைப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாளனாக இருந்தேன். அது தவறு என்பதை விரைவிலேயே உணர்ந்து அதிலிருந்து மீண்டேன், 1990-களின் தொடக்கமான அந்தக் காலத்தில்தான் ‘நான் ஏன் இந்து அல்ல?’ (Why I Am Not a Hindu) என்ற புத்தகத்தையும் எழுதினேன். கேசிஆரின் இந்த எண்ணம் நம்முடைய அரசியல், சித்தாந்த நடைமுறைகளையே நாசப்படுத்திவிடக் கூடிய சுய அழிப்புக்கே வழிவகுக்கும்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் அமெரிக்க நாட்டு அரசமைப்புச் சட்டம் போலவே, இந்திய அரசமைப்புச் சட்டமும் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும். கேசிஆரின் இந்தக் கருத்துக்கு தெலங்கானா மக்களும் எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட கோரிக்கை அவருக்கே நாசத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது.

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
காஞ்சா ஐலய்யா

காஞ்சா ஐலய்யா, தெலங்கானாவைச் சேர்ந்த பேராசிரியர். அரசியல் விமர்சகர். சாதி ஒழிப்பு, சமூகநீதி தொடர்பில் தொடர்ந்து தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் எழுதிவருபவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

A brief write-up about the author would have been beneficial to readers!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

The author could have found out from KCR as to what are all the amendments he requires to be incorporated in the Constitution!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Boopathi    2 years ago

கண ராஜ்ஜியம் பற்றியும் அதற்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி இன்னும் விவரமாக தெரிவிக்கலாம் அய்யா

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மணிரத்னம்அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்மோடி அரசாங்கம்ஷோஹாஇமையம் இப்போது உயிரோடிருக்கிறேன்மாநிலத் தலைநகரம்மானுடவியலாளர் எஸ்.ஜே. தம்பையாஇளம் வயது மாரடைப்புகி.ரா.இதயம் செயல் இழப்பது ஏன்?நான்காவது படலம்நீதிபதி கே.சந்துருபுல்புல் பறவைவெளிச் சந்தைஎதிர்மறைச் சித்திரங்கள்பனீர் டிக்காஅறம் எழுக!நிதிநிலை அறிக்கை 2024 இப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்ராஸ்டஃபரிஇன உணர்வுபத்மினிஇந்திய ரிசர்வ் வங்கிசுயமரியாதை இயக்கம்பா.சிதம்பரம் கட்டுரைஅதிபர்கட்டுப்பாடு இல்லையா?நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுப்பது அவசியம். ஏன்?dr ganesanதலையங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!