கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

சமஸ் | Samas
01 Mar 2023, 5:00 am
0

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனி நடுவே திறந்தவெளியில் மிக நிதானமாகப் பேசிய ராகுல் காந்தியைப் பார்த்தபோது, முற்றிலும் புதிய ஒருவராகத் தென்பட்டார் என்று பலரும் பேசுவதைக் கேட்க முடிந்தது. அவர்கள் இப்போதுதான் அவரைப் பார்க்கிறார்கள் என்றும்கூட சொல்லலாம்.

கன்னியாகுமரியில் 2022 செப்டம்பர் 7 அன்று ஆரம்பித்த பயணத்தை ஸ்ரீநகரில் அவர் 2023 ஜனவரி 30 அன்று முடிக்க திட்டமிட்டிருந்தார். வெறுப்பு அரசியலுக்கு எதிரான சமூக நல்லிணக்கத்தை இந்தப் பயணத்தின் மைய நோக்கமாக அவர் கூறியிருந்ததால், காந்தி நினைவு நாளில் பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். 

காஷ்மீருக்கு ராகுல் வந்தடைந்தபோதே வானிலை மிக மோசமாக இருந்தது. கண்களை மறைக்கும் கடும் பனிப்பொழிவில் இருந்தது பள்ளத்தாக்கு. தொடர் பனியையும் உடலைச் சுருட்டும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ராகுலைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. நிறைவு நிகழ்ச்சி நாளில் சூழல் மேலும் மோசமானது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உள்பட பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டிருந்தன. விமானங்கள் இயக்கம் ஸ்தம்பித்திருந்தது. ராகுல் பேசவிருந்த ஷேர்-இ-காஷ்மீர் மைதானம் முழுக்க சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளூர் அரசியல் தலைவர்களே அப்படி ஒரு சூழலில் நிகழ்ச்சியை நடத்த விரும்பியிருக்க மாட்டார்கள். ராகுல் உறுதியாக இருந்தார்.

காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தை பாஜக பறித்துவிட்ட பிறகு, அங்கு நடக்கும் பெரிய அரசியல் நிகழ்வு இது. ராகுலுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தன. மக்கள் என்னுடன் கை கோக்க அச்சுறுத்தல்கள் தடையாக இருக்க முடியாது என்றார். இந்த நடைப்பயணம் நெடுகிலும் ராகுலுடன் மக்கள் எளிதாகக் கை கோக்க முடிந்தது. காஷ்மீரிகளும் விதிவிலக்காக இல்லை. மக்கள் சூழ ராகுல் நடந்த காட்சி ஒரு விஷயத்தைத் தீர்க்கமாகச் சொன்னது, ‘இன்றைக்கு காஷ்மீரில் இப்படி இயல்பாக நடந்து செல்லும் துணிவும் மக்களுடைய அன்பும் வேறு ஒரு தேசியத் தலைவருக்கு இல்லை.’ 

யாத்திரைகளின் கதை

மூன்று செய்திகளைத் தன்னுடைய உரையில் மையம் ஆக்கினார் ராகுல். “இந்தப் பயணம் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வெறுப்பரசியலின் வலி எனக்கும் தெரியும்; அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அன்பின் துணை கொண்டு இந்தியாவின் பன்மைத்துவ அடித்தளத்தை நாம் பாதுகாப்போம்!”

இந்திய அரசியலில் உத்வேகம் மிக்க ஓர் அங்கம் நடைப்பயணம். காந்தியைக் குறிப்பிடாமல் நடைப்பயண வரலாற்றை எழுத முடியாது. 1930 மார்ச் 12 அன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை 24 நாட்கள் அவர் நடத்திய உப்பு சத்தியாகிரக யாத்திரை பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரத்தின் மீது நடத்தப்பட்ட மோதல். தகிக்கும் கோடையில் 78 தொண்டர்களுடன் தன்னுடைய 61 வயதில் காந்தி நடத்திய இந்தப் பயணம் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டியைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டிருந்தது. சொல்லப்போனால், குஜராத்தின் ஒரு ஊரில் இருந்து ஒரு ஊருக்கு காந்தி 385 கி.மீ. நடந்தார்; கூடவே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸார் தனித்தனி இலக்கிட்டு நடக்கலானார்கள். தண்டி யாத்திரையின்போது மட்டும் இந்தியா முழுவதும் கைதுசெய்யப்பட்டு 60,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தின் மையமாக வேதாரண்யம் இருந்தது.

சுதந்திர இந்தியாவின் பெரும் நடைப்பயணத்தை காந்தியரான வினோபா பாவே நடத்தினார். நிலம் இல்லாதவருக்கு நில உடைமையாளர்கள் தாமாக முன்வந்து நிலக் கொடையளிப்பதை வலியுறுத்தி நடந்த நடைப்பயணம் அது. காஷ்மீரில் ஆரம்பித்து தமிழ்நாடு வரை 8 ஆண்டுகள் நடந்தார். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கொடையாகக் கை மாறின. இன்றும் அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன் பயணிக்கிறார்.

ஆட்சி மாற்றத்தை முன்வைத்து நடத்தப்பட்ட நாடு தழுவிய பல நடைப்பயணங்களில் முக்கியமானவை மூன்றைக் குறிப்பிடலாம்.

இந்திரா காந்தி ஆட்சியை எதிர்த்து ஜனதா கட்சியின் சார்பில் 1983இல் சந்திரசேகர் நடத்திய பாரத் யாத்திரை. கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லியில் முடிந்த அந்த யாத்திரை 6 மாதங்களில் 4,260 கி.மீ தொலைவைக் கடந்திருந்தது. காங்கிரஸுக்கு எதிராக உடனடி விளைவுகளை இது உருவாக்கவில்லை என்றாலும், நீண்ட காலத் தாக்கத்தில் இதுவும் சிறு பங்கு ஆற்றியிருந்தது. பிற்பாடு சந்திரசேகர் குறுகிய நாள் பிரதமர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

அடுத்தது, 1990இல் லால் கிருஷ்ண அத்வானி நடத்திய ராம் ரத யாத்திரை. குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கி உத்தர பிரதேசத்தின் அயோத்தியை அடைவதைத் திட்டமாகக் கொண்டிந்த இந்த யாத்திரை மகாராஷ்டிரம், ஆந்திரம், மத்திய பிரதேசம், பிஹாரை வழித்தடமாகக் கொண்டிருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 300 கி.மீ. என்று பல்லாயிரம் பேர் சூழ சுமார் 10,000 கி.மீ. தொலைவுக்கு விரிந்தது இந்த யாத்திரை. பிஹாரில் நுழைந்தபோது அத்வானியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார் அன்றைய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அப்படியும் உத்தர பிரதேசத்தை நோக்கி யாத்திரையின் ஒரு பகுதி பங்கேற்பாளர்கள் முன்நகர்ந்தனர். அங்கே அவர்கள் அத்தனை பேரையும் கைதுசெய்ய உத்தரவிட்டார் உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ். யாத்திரையில் பங்கேற்றவர்களுடன் புதிதாகப் போராட்டத்தில் குதித்தவர்களும் களத்தில் இறங்க 1,50,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதைக் கடந்தும் 75,000 பேர் அயோத்தியைச் சென்றடைந்தனர். குறைந்தது 166 மதரீதியிலான கலவரங்களையும் 564 உயிர்களையும் இந்த யாத்திரை பறித்திருந்தது. சரியாக அத்வானி பயணித்த பாதையிலேயே இன்றைய பாஜக ஆட்சிக்கான அடித்தளம் அமைந்திருக்கிறது.

ராகுல் யாத்திரையைப் புரிந்துகொள்ளல்

அடுத்ததாக ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையைத்தான் சொல்ல வேண்டும். ராகுல் இந்த யாத்திரையின்போது பேசிய பேச்சுகளின் உண்மையான அர்த்தத்தையும் ஆழத்தையும் உணர வேண்டும் என்றால், முந்தைய இரு யாத்திரைகளிலும் சந்திரசேகர் – அத்வானி இருவரும் பேசிய பேச்சுகளை வாசிக்க வேண்டும். காங்கிரஸோடு அது உருவாக்கிய சித்தாந்தம் இந்த மண்ணில் எப்படிச் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டன என்பதை அந்த இரு பேச்சுகளும் நமக்குச் சொல்லும். வலதுசாரிகள் மட்டும் அல்லாது, சோஷலிஸ்ட்டுகளும் சேர்ந்தே இந்த மண்ணின் ஒற்றைமய சித்தாந்தத்தை வளர்த்தெடுத்தனர் என்பதை அந்த யாத்திரைகள் நமக்குச் சொல்லும். துல்லியமாகக் குறிப்பிட வேண்டும் என்றால், ராகுல் இந்த யாத்திரையின் மூலம் ஒரு தலைகீழாக்கத்தை முயன்றார்.

தன்னுடைய சொந்தக் கட்சியிலிருந்து இந்தத் தலைகீழாக்கத்தை ராகுல் ஆரம்பிக்க எண்ணினார். அதைத் தாண்டியும் சமூகத்தில் ஆழமான சலனங்களை அது உருவாக்க ஆரம்பித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்திய அரசியலில் காங்கிரஸின் தவிர்க்க முடியாத இடத்தையும், எதிர்க்கட்சிகள் வரிசையில் தன்னுடைய முதன்மையையும் உறுதிப்பட ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுல் நடை சாதித்தது என்ன?

யோகேந்திர யாதவ் 03 Jan 2023

கன்னியாகுமரியில் தொடங்கிய 4,080 கிமீ பாரத் ஜோடோ யாத்திரையை ஸ்ரீநகரில் ராகுல் முடித்தபோது, டெல்லியின் பிரதான ஊடகங்களில் சொல்லிவைத்தாற்போல அரசியல் விமர்சகர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்கள்: ‘ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது அடுத்துவரும் தேர்தல்களில் காங்கிரஸுக்கு வெற்றியைக் கொடுக்குமா?’ இப்படி ஒரு கேள்வியை அவர்களாகவே உருவாக்கிக்கொண்டு விலாவாரியான விளக்கங்களால் அவர்களாகவே ஒரு தீர்ப்பையும் அளித்தனர். ‘மக்கள் இடையே காங்கிரஸ் தொடர்பில் ஒரு சின்ன பேச்சை ராகுலின் நடைப்பயணம் உருவாக்கி இருக்கிறது. அதைத் தாண்டி அரசியலில் எந்த மாற்றத்தையும் இது உருவாக்கப்போவதில்லை!’

திட்டவட்டமாக தேர்தல் அரசியலுக்கான எல்லா அம்சங்களையும் இந்த யாத்திரையில் ராகுல் புறக்கணித்தார். கட்சியின் தலைவர் தேர்வு, சட்டமன்றத் தேர்தல்கள் என்று இந்த யாத்திரையின் ஊடாக வந்த எந்த ஒரு விஷயத்துக்கும் அவர் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தீர்க்கமாக காங்கிரஸ் புத்துயிர் பெற்றிருக்கிறது. அதைத் தாண்டிய விளைவுகளை உடனடியாகப் பேசுவது அபத்தம். அத்வானியின் பேரணிக்கும் வாஜ்பாயின் ஆட்சிக்கும் இடையிலேயே 8 ஆண்டுகள் இருக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!

சமஸ் | Samas 22 Sep 2021

ஊடகங்களின் அசிங்க உத்தி

இந்தியாவின் பிரதான ஊடகங்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்துக்காகத் தங்களையே தட்டிக்கொடுத்துக்கொள்ளும் மனநிலையில் இருந்தன. புறக்கணிப்பு, இருட்டடிப்பு; இரண்டும் பலிக்காதபோது திசைமாற்றல் எனும் தங்களுடைய உத்தி கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டதாக அவை நம்பின. ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு உரிய முக்கியத்துவத்தை உரியவர்கள் தர மறுக்கும்போது சூழலே அத்தகு முக்கியத்துவத்தை உருவாக்குகிறது. தற்செயலாக வெடித்த அதானி விவகாரமானது ராகுல் மீதான கவனத்தை இந்திய அரசியலின் மையம் நோக்கி நகர்த்துகிறது.

காவிய நாயக பாணியில் அநாயசமாக உரை நிகழ்த்தும் தன் திறனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வெளிப்படுத்தினாலும், ராகுலின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமான பிரதமர் மோடியின் பேச்சில் அதிர்வுகளைக் காண முடிந்தது. மோடியின் பிம்பத்தின் மீது நேரடியாக வீசப்பட்டிருக்கும் கற்கள் அதானி மீதான குற்றச்சாட்டுகள். இதன் விளைவுகள் எவ்வளவு பாதகச் சூழலுக்குக் கொண்டுசெல்லும் என்பதை எவரை விடவும் அவருக்குத் தெரியும். ஏனென்றால், இந்த அரசு மோடியின் பிம்பத்தின் மீதே கட்டப்பட்டிருக்கிறது.

வேறு எவரும் பேசத் தயங்கும் இடத்துக்கு ராகுலின் வார்த்தைகள் சென்றன. நேரடியாகவே மோடியைப் பார்த்து ராகுல் கேட்டார், “உங்களுடைய வெளிநாட்டுப் பயணங்களின்போது தன் நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களைப் பேசி முடிக்க எத்தனை முறை அங்கு அதானி பயணித்திருக்கிறார்? தேர்தல் பத்திரங்கள் உட்பட கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவுக்கு அதானி எவ்வளவு பணம் நன்கொடையாகத் தந்திருக்கிறார்? மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அதானி இத்தனை தொழில்களை லாபகரமாக எப்படி செய்ய முடிகிறது என்றும் மோடிக்கும் அதானிக்கும் இடையே என்ன தொடர்பு என்றும் இந்த நடைப்பயணத்தின்போது கேட்டார்கள். 2014 -2022 இடையே அதானியின் சொத்து மதிப்பு எப்படி இவ்வளவு உயர்ந்தது என்று கேட்டார்கள். அதானி குழுமத்துக்கு எல்ஐசியின், பொதுத் துறை வங்கிகளின் நிதி எப்படி இவ்வளவு தாராளமாகச் செல்கிறது என்று கேட்டார்கள்.”

தொடர்ந்து நான் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டிவருகிறேன். காங்கிரஸ் போன்ற ஒரு பெருங்கட்சியின் முகமாக நின்று ஒருவர் இப்படிப் பெருநிறுவனங்களைக் குறிவைத்துப் பேசுவது வரலாற்று அசாதாரணம். இதற்கு முன் 2019இல் ரஃபேல் விவகாரத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தையும் ராகுல் இப்படிக் குறிவைத்தார். அதற்கு முன் 2014இல் ஒட்டுமொத்த பெருநிறுவனங்களின் தார்மிகமும் என்ன என்று சிஐஐ கூட்டத்தில் நின்று கேள்வி எழுப்பினார்.

வெறுப்பரசியல் கோலோச்சும் இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பேராபத்துகளில் ஒன்று, அணுக்க முதலாளித்துவம்; அதாவது ஆட்சியாளர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையிலான கூட்டு; அடிப்படைவாத அரசியலோடு இழிபொருளியல் கொண்டிருக்கும் கூட்டு. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எரிசக்தியாகி முன்னகர்ந்தே சமூகத்தைச் சீரழிக்கின்றன. பத்திரிகைக் கட்டுரைகளிலும் கருத்தரங்குகளிலும் இதை விமர்சிப்பது வேறு. அரசியலின் மையத்தில் நின்று விமர்சிப்பது வேறு. ராகுலின் முக்கியத்துவம் இன்று அவர் யாரையெல்லாம் எதிர்க்கிறார் என்பதில் இருக்கிறது!

- ‘குமுதம்’, பிப்ரவரி, 2023

 

தொடர்புடைய கட்டுரைகள் 

ராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?
ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி
ராகுல் நடை சாதித்தது என்ன?
வீதி வேடிக்கையா ராகுலின் பாத யாத்திரை?
நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இந்தியர்களின் ஆங்கிலம்கலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்மெய்நிகர்க் காதல் தோசை!பழஞ்சொற்கள்பணமதிப்பு நீக்கம்நவீன இலக்கிய வாசிப்புவட்டாரவியம்இரண்டாவது அனுபவம்மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்உடல் எடைக் குறைப்புஎம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம்வ.உ.சி.ஃபெட்எக்ஸ்முதுமைஎக்கியார்குப்பம்ஹார்மோன்எடப்பாடி கே.பழனிசாமிசமூகம்பின்நவீனத்துவம்இந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்மக்களவை பொதுத் தேர்தல்சீன ராணுவம்9 நீதிபதிகளின் ராஜதந்திரம்சமஸ் உதயநிதி சனாதனம்சுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகரத்தமும் சதையும்பி.ஆர்.அம்பேத்கர்மாய குடமுருட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!