கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

விளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவு

யோகேந்திர யாதவ்
13 Feb 2024, 5:00 am
0

போருக்கான வியூகம் வகுப்பதை ஒரு மூதாட்டியிடம் வீர சிவாஜி கற்றுக்கொண்டதாக ஒரு கதை உண்டு; அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டும் எதிரியை வீழ்த்த முடியாததால் காடுகளில் மறைந்து வாழ்ந்த சிவாஜி, ஒரு நாள் ஒரு மூதாட்டி வீட்டுக்குச் சென்று, சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். அவர் யார் என்று தெரியாத மூதாட்டி, ஒரு தட்டில் சுடச்சுட கிச்சடி பரிமாறினார்.

தட்டின் நடுவிலிருந்து எடுத்து உண்ண சிவாஜி முயன்றபோது சூடு காரணமாக கைவிரல்கள் பொசுங்கி கையை வேகமாக எடுத்துவிட்டு வாயால் ஊதினார். அதைப் பார்த்த மூதாட்டி, “இளைஞனே, நீயும் நம்முடைய மன்னர் எதிரியை அவருடைய நாட்டின் மையப் பகுதி மீது தாக்கி வெற்றிபெற முயல்வதைப் போலவே செய்கிறாயே, ஓரப்பகுதியிலிருந்து எடுத்து சாப்பிடு அதற்குள் ஆறிவிடும் பிறகு நடுப்பகுதியிலிருந்து எடுக்கலாம்” என்றாளாம். கிச்சடியை சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல, அடுத்தடுத்த ராணுவ வெற்றிகளுக்கும் அந்த யோசனை அவருக்கு மிகவும் பயன்பட்டது.

பிறகு நடந்தவை வரலாறாகிவிட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மூதாட்டியின் யோசனை

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய்’ யாத்திரை மூதாட்டியின் யோசனைப்படி, முதலில் விளிம்புகளை வெற்றிகொள்ளும் முயற்சியா? மணிப்பூரில் யாத்திரையில் சேர்ந்துகொண்டபோது அதைத்தான் உணர்ந்தேன். ‘அரசியல்ரீதியாக அதிக முக்கியத்துவம் இல்லாத வட கிழக்கு மாநிலங்களிலிருந்து யாத்திரையைத் தொடங்குவானேன்?’ என்று அரசியல் விமர்சகர்கள் பலர் கேட்டனர். ஆனால், ராகுல் காந்தி தனது யாத்திரை வட கிழக்கிலிருந்து - அதுவும் மணிப்பூரிலிருந்து-தான் தொடங்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அரசியல்ரீதியாக மட்டுமல்ல, சொந்த பாதுகாப்புக்கும் அது ஆபத்தான சாகச முயற்சியே. மணிப்பூர் இன்னமும் கொதிநிலையிலேயே இருக்கிறது, களத்தில் இருக்கும் தீவிரவாதிகளும் சரி, தலைமறைவு தீவிரவாதிகளும் சரி எவர் வேண்டுமானாலும் யாத்திரையாளர்களைத் தாக்குவதற்கு வாய்ப்புகள் நிறைய. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல காங்கிரஸ் இப்போது அங்கு வலிமையாக இல்லை.

யாத்திரைக்கு மக்களைத் திரட்ட கட்சியை நம்பியிருக்க முடியாது. ராகுலோ அதைத் தார்மிக – சித்தாந்த அடிப்படையில் அணுகினார். அரசியல் அநீதி காரணமாக தொடர்ந்து இயல்புநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் ஒரு மாநிலத்தை விட்டுவிட்டு, நாட்டை இணைக்கும் நியாய யாத்திரையை மேற்கொள்ள முடியாது என்று உறுதியாக நம்பினார்.

அங்கு மக்களில் இரு பிரிவினர் ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்கிக்கொள்கின்றனர், அதை ஒன்றிய – மாநில அரசுகளால் இதுவரை தணிக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

ஆசிரியர் 29 Jan 2024

ராகுலின் முடிவு சரியா?

ராகுல் எடுத்த முடிவு சரிதான் என்பதை யாத்திரைக்கு மக்கள் திரண்டுவந்து தந்த ஆதரவே சாட்சியாக இருந்தது. இந்த யாத்திரைச் செய்தியை தேசிய ஊடகம் என்று அழைக்கப்படும் நொய்டா தலைமையக மின்னணு ஊடகங்கள் முழுதாகப் புறக்கணித்தாலும் யூட்யூப்கள் உண்மையைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. சேனாபதி மாவட்டத்தின் குகி பகுதிக்கு யாத்திரை சென்றபோது கண்ட காட்சிகளை என்னால் மறக்கவே முடியாது. கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல்கள் நடந்த பகுதி அது. அதற்கும் முதல் நாள் மாலை மெய்திக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றபோதும் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

இரு பிரிவு மக்களுமே கிராமங்களில் தங்களுடைய வீடுகளிலிருந்து ஒட்டுமொத்தமாகத் திரண்டுவந்து கண்களில் கண்ணீரும் நம்பிக்கையுமாக வரவேற்றனர். இந்திய அரசுடன் தொடர்பு அறுந்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் அவர்களுடைய கண்களில் தெரிந்தன. ராகுல் பயணித்த பேருந்து அருகில் வந்த பெண்கள், தங்களுடைய மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். குழந்தைகள் வரவேற்பு பதாகைகளுடன் வரிசையாக அணிவகுத்தனர்.

தொடர்ந்து பல மாதங்களாக நடைபெறும் வன்செயல்களின் தன்மை, விளைவுகள் குறித்து சமூக சேவகர்கள் விவரித்தனர். சமூகத் தலைவர்கள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை ராகுலிடம் முன்வைத்தனர். அவர்களிடையே துக்கம், கசப்புணர்வு, கோபம் இருந்தன. அதேசமயம், தங்களுடைய காயங்களை ராகுல் ஆற்றிவிடுவார் என்ற நம்பிக்கையும் தெரிந்தது. அது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்திய கணம். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

சமஸ் | Samas 12 Apr 2023

இது ஏதோ ஒரு மாநில நிகழ்வு மட்டுமல்ல என்று நாகாலாந்தும் உணர்த்தியது. யாத்திரைக்குச் சற்று முன்னதாகச் சென்று, வோக்கா என்ற சிற்றூரை அடைந்தோம். அங்கு காத்திருந்த மக்களிடம் பேசினோம். அங்கிருந்த தேநீர்க் கடைக்காரர் ஆலு பூரியையும் தேநீரையும் வழங்கிவிட்டு காசு வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். சோளே பட்டூரா – பூரி இரண்டும் சேர்ந்த கலப்பினமாக அந்த ஆலு பூரி இருந்தது.

ராகுலைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அந்தச் சாலையின் ஓரத்திலோ, வீட்டுக் கூரை மீதோ அனைவரும் திரண்டு நின்றனர். இது நாகாலாந்துதானா, இந்தியாவின் வேறு ஏதாவது மாநிலமா என்று வியக்கும் அளவுக்கு அவர்கள் நடந்துகொண்டனர். ஒரு காலத்தில் நம்மைப் போன்றவர்கள் போனால், “என்ன, இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?” என்று சிடுசிடுப்புடன் கேட்பார்கள். தலைமறைவு நாகர்கள் இப்போதும் அங்கு செல்வாக்குடன்தான் இருக்கிறார்கள். 40 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு இப்போது ஒரு உறுப்பினர்கூட இல்லை.

அருணாசலத்திலும் மேகாலயத்திலும் காங்கிரஸ் இப்போதும் செல்வாக்கான கட்சியாக இருக்கிறது. ஆனால், யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பானது கட்சிக்கு இருக்கும் படை பலத்துக்கும் அப்பாற்பட்ட செல்வாக்கையே காட்டியது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது கன்னியாகுமரியிலும் காஷ்மீரத்திலும் அலையலையாக மக்கள் வந்து ஆதரித்த காட்சி என் கண் முன்னே தோன்றி மறைந்தது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

சமஸ் | Samas 01 Mar 2023

ஈர்ப்பவை எவை?

பாரத் ஜோடோ யாத்திரையும் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையும் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்துதான் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இன்னமும் எஞ்சியிருக்கும் அன்பும், ராகுலுக்கே உள்ள ஈர்ப்பும்தான் விளிம்புநிலை மக்களை உணர்ச்சிப் பெருக்கோடு யாத்திரைக்கு வர உதவிக்கொண்டிருக்கிறது.

யாத்திரை அசாம் எல்லையை அடைந்து, ‘சிக்கன் நெக்’ என்ற பகுதியைக் கடந்தபோது ‘விளிம்பு’ அல்லது ‘ஓரம்’ என்ற உருவகத்தின் பொருள் பொருத்தமாக இருப்பது தெரிந்தது. முதல் யாத்திரையைப் போலவே இதற்கும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அடிநிலையில் இருக்கும் மக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. மதச் சிறுபான்மையினர் மட்டுமல்ல, பெரும்பான்மைச் சமூக மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். முஸ்லிம்களிடையே ராகுலுக்கு இயல்பாகவே ஆதரவு அதிகம் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் இதைக் காட்சிப்படுத்துவதுபோல எதையும் செய்வதில்லை.

பாஜக குற்றஞ்சாட்டுவதைப் போல இந்த யாத்திரை சிறுபான்மைச் சமூகத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து செல்லவில்லை. மேற்கு வங்கத்தில் கிஷண்கஞ்ச், மால்டா இரண்டுமே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடைய தொகுதிகளுமாகும். எல்லா தர்காக்களிலும் ராகுல் ஏறி இறங்கவில்லை, தாடி வைத்த முஸ்லிம்கள் கூடவே வருவதில்லை, ‘இந்துஸ்தானத்தின் சிங்கமே வா’ என்று உருது மொழிக் கவிதைகளில் வரவேற்பதில்லை, ‘நமஸ்தே’ என்ற ஒற்றை வாக்கிய வரவேற்பைத் தவிர ஏதுமில்லை.

இந்தியக் குடிமகனாக சம உரிமைகளுடன் வாழவும், ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டை முறியடிக்கவும், மதச்சார்பற்ற பிற கட்சிகளைவிட காங்கிரஸே நம்பகமான இயக்கம் என்ற புரிதல் முஸ்லிம்களிடையே இருக்கிறது. எனவே, அவர்கள் அதிக எண்ணிக்கையில் யாத்திரைக்கு வருகிறார்கள், ராகுல் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்கிறார்கள், அவர் பேசுவதில் நேரடியாகத் தெரிவதைவிட உள்ளடக்கமான பொருள் என்ன என்பதையும் புரிந்துகொள்கின்றனர், காங்கிரஸ் வேட்பாளர் வலிமையானவர் என்றால் முழு மூச்சாக ஆதரிக்கவும் செய்கின்றனர்.

யாத்திரையின் நோக்கம்

இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமே சமூக – பொருளாதார அடுக்கில் அடிநிலையில் இருக்கும் மக்களுடைய நலனைக் கருத்தில்கொண்டதுதான். ஆதிவாசிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் போன்று உழைப்பால் மட்டுமே வருமானம் ஈட்டும் மக்களிடையே ராகுலால் இயல்பாகப் பழகவும் பேசவும் முடிகிறது. பாஜக ‘வனவாசி’ என்று அழைக்கும் ‘ஆதிவாசி’ மக்களுடைய உரிமைகள், நன்மைகள் குறித்து ராகுல் பேசும்போது அவர்களிடையே மலர்ச்சி தெரிகிறது.

உரிமைபெற்ற ‘மேல்தட்டு வர்க்கத்தால்’ உருவாக்கப்பட்ட சாதியப் படிநிலை அடுக்கு குறித்து அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் ஒடுக்கப்பட்ட சாதாரண (தலித்) மக்களிடமும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரிடமும் முழுமையாகப் போய்ச் சேராமல் இருக்கலாம், ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், ஆதிவாசிப் பிரிவுகளில் விழிப்புணர்வு உள்ளவர்களிடம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அசாமின் படகோட்டிகள், மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஈடுபடும் உழைக்கும் மக்கள், பிஹாரின் விவசாயத் தொழிலாளர்கள், ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், நிலக்கரி சில்லறை வியாபாரிகள் ஆகியோருடன் அவர் நிகழ்த்தும் சந்திப்புகளுக்கும், எதிர் முகாமில் அதிகாரச் செருக்கும் சுய மிடுக்கும் கொண்ட தலைவர்கள் அரசின் நலத் திட்டங்களால் பலன்பெறும் பயனாளிகளுடன் நிகழ்த்தும் சந்திப்புகளுக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.

இவையெல்லாம் அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குகளாக மாறிவிடும் என்று கூறுவது கடினம். நாட்டின் இப்போதைய நிலையில், ஆதிக்கவாதிகளின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எதிராக ஆதரவைத் திரட்ட இது உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. அரசியலில் தோய்ந்தவர்களுக்கு இந்த யாத்திரையும் அதன் போக்கும் திருப்தி தராது. “இதெல்லாம் இருக்கட்டும் பிரதான அரசியல் களத்துக்கு இந்த யாத்திரையால் என்ன பயன்?” என்றே கேட்பார்கள்.

பாஜகவிடம் உள்ள அரசு இயந்திர பலம், தொண்டர்கள் பலம், பண பலம், ஊடக பலம், அரசியல் உத்திகள், கட்சி அமைப்பின் பலம் ஆகியவற்றை எதிர்த்து நிற்க இது எப்படிப் போதும் என்பார்கள்.

பிரதான பங்கேற்பாளர்கள்

இங்கேதான் ‘விளிம்பு’ அல்லது ‘ஓரம்’ பற்றிய உருவகம் தலைகீழாக மாறுகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களும் வெள்ளையர் அல்லாத பிற நிறத்தவரும் எண்ணிக்கையில் சிறுபான்மையோர்; அவர்களுக்கு தேர்தலில் முடிவை மாற்றும் செல்வாக்கு கிடையாது.

இந்தியாவில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், மதச் சிறுபான்மையோர் கை கோர்த்தால் மிகப் பெரிய பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள். இந்துக்களில், ‘முற்பட்ட சாதியினர்’ உண்மையில் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த சிறுபான்மையினர்தான்.

ஐரோப்பிய அரசியலில் முக்கிய இடம் வகிக்கும் உழைக்கும் வர்க்க உதாரணம் இந்தியாவுக்குப் பொருந்தாது. இங்கே பொருளாதாரரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு!

நடுத்தர வர்க்கம் என்று அழைக்கப்படும் ஆளும் வர்க்கம் உண்மையில், எண்ணிக்கையாலும் கொழுத்த நடுத்தர வர்க்கம் அல்ல, மிக மிக மெல்லிய அடுக்குதான். சாப்பாட்டுத் தட்டாக இந்திய சமூகத்தைக் கற்பனைசெய்துகொண்டால் அதன் ஓரங்களைப் பெரிதும் ஆக்கிரமிப்பது மற்றவர்கள்தான். இங்கே விளிம்புநிலை மக்கள்தான் பிரதான அரசியல் பங்கேற்பாளர்கள். மைய அரசியலே, விளிம்பின் மூலமாகத்தான் நடக்கிறது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி?
காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
ராகுலின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்
2024 தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது?
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை
சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





ராஜன் குறைஆளும் கட்சிகுஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களகுலாப் சிங்நவீன உலகம்ஜொமெட்டோவெறுப்பு மண்டிய நீதியின் முகம்லவ் ஜிகாத்வேத மரபுநடிகர்வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவகுஜராத்தி வணிகர்கள்இடர்கள்வெறுப்புஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வி.டி.சாவர்க்கர்நாஞ்சில் சம்பத்சிந்தன்வீட்டுச் சிறைஜெயமோகன் பேச்சு: எது விவாதப் பொருள்?சாதிக் கட்டுரைதிமுகவிடம்தி டான்கதைராஜஸ்தான் முன்னேறுகிறதுமணவை முஸ்தபாபீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்போராட்டம் என்றாலே வன்முறை?அரசியல் கட்சிகள்சமஸ் - ஜக்கி வாசுதேவ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!