கட்டுரை, அரசியல், கல்வி 5 நிமிட வாசிப்பு

பாடப் புத்தகங்கள் யாருக்காக?

யோகேந்திர யாதவ்
18 Apr 2023, 5:00 am
0

பாடப் புத்தகங்கள்தான் சத்தியத்தின் ஊற்றுக்கண், மாணவர்கள் காலி பாத்திரம்போல இருந்து அதை நிரப்பிக்கொள்வார்கள் என்ற மூட நம்பிக்கையை முதலில் கைவிட்டால்தான், பாடப் புத்தகங்களால் எதைச் செய்ய முடியும் - முடியாது என்பதில் நமக்குத் தெளிவு ஏற்படும்.

ஒரு கதை நினைவுக்கு வருகிறது: ரயிலில் பயணம் செய்த இரண்டு பயணிகளுக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஜன்னலில் உள்ள கண்ணாடியை மேலே தூக்குவதா, இறக்குவதா என்பதுதான் வாதம். ‘ஜன்னலைத் திறந்தால் குளிர் காற்றால் விரைத்துப்போவோம்’ என்றாராம் ஒருவர். ‘ஜன்னலை மூடி வைத்தால் காற்றில்லாமல் புழுங்கிச் சாவோம்’ என்றாராம் இன்னொருவர். இதை வேடிக்கை பார்த்த குழந்தை இருவரையும் பார்த்துச் சொன்னதாம், ‘ஜன்னல் இருக்கிறது ஆனால் அதில் கண்ணாடியே இல்லை, திறந்துதான் கிடக்கிறது’ என்று.

பாடப் புத்தகங்கள் குறித்து நாம் ஆவேசமமாக நடத்தும் வாதப் பிரதிவாதங்கள் இந்த ரயில் சண்டை விவகாரம்போலத்தான் என்று சில வேளைகளில் நினைத்துக்கொள்வேன். ஜன்னலில் கண்ணாடி இருப்பதாக நினைத்துக்கொண்ட இருவரையும்போல, பாடப் புத்தகங்களில் இவையெல்லாம் இருக்க வேண்டும் அல்லது கூடாது என்று நாமாக சண்டை போட்டுக்கொள்கிறோம்.

நாம் நினைக்கிறோம் பாடப் புத்தகங்களில் இவையெல்லாம் இருந்தால் அல்லது இல்லாவிட்டால், எதிர்கால மாணவர்கள் இப்படியெல்லாம் உருவாவார்கள் என்று! ‘தி பிரின்ட்’ ஊடகத்தைச் சேர்ந்த வாசகர் ஆசிரியர் ராமலட்சுமி ரத்தினச் சுருக்கமாக இதைப் பற்றிக் கூறுகிறார்: “பாடப் புத்தகங்கள் காலம் கடந்தவை. குழந்தைகளுக்குப் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேறு மூலங்களே கிடையாது, இவற்றிலிருந்துதான் தெரிந்துகொள்வார்கள் என்று விவாதகர்கள் கருதுகின்றனர்.”

சமீப காலங்களில் சமூக ஊடகங்கள் இத்தகைய விஷயங்களைப் பெரிதாக்கிவிடுகின்றன. ஆனால், அவை வருவதற்கு முன்னாலும் இப்படித்தான் இருந்தது. சிறுவர்களுடைய புத்தகங்களைக் குறித்த சண்டைகள் எல்லாம் பெரியவர்களுடையவை - பெரியவர்களுக்கானவை; பாடப் புத்தகங்கள் தொடர்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை அவ்வளவுதானா?

எழுத்தாளரின் கண்ணோட்டம்

இரங்கல் செய்தியைப் போலவே கடந்த வாரம் எனக்கு வந்த பேராசிரியர் கிருஷ்ண குமாரின் சுருக்கமான மின்னஞ்சலைப் படித்தபோது, இதே கேள்வியை நான் கேட்டுக்கொண்டேன்: “பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பற்றியதுதான் இன்றைய முதல் பக்கச் செய்தி; ‘அவர்கள்’ கடைசியாக அதன் மீதும் பாய்ந்துவிட்டார்கள். அது மிகச் சிறந்த படைப்பு, என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய கல்விக் கொடை.” பேராசிரியர் சுபாஷ் பல்சிகருக்கு அனுப்பிய மின்னஞ்சலின் நகல்தான் எனக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

என்சிஇஆர்டி புத்தகங்கள் தொடர்பான விவகாரத்தை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல்’ என்ற பாடம்தான் பேசுபொருள். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அரசியல் அறிவியல் பாடங்களை நானும் பல்சிகரும் ‘முதன்மை ஆசிரியர்’களாக இருந்து தயாரித்திருந்தோம் – ‘முதன்மைக் குற்றவாளிகள்’ என்றுகூட அழைக்க சிலர் விரும்பலாம்!

பேராசிரியர் கிருஷ்ண குமாரிடமிருந்து பாராட்டுரைகளை வாங்க வேண்டும் என்று யார்தான் விரும்பமாட்டார்கள்? கல்வி தொடர்பாக எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் எங்களுக்கு அவர்தான் நினைவுக்கு வருவார், அதிலும் கல்வி தொடர்பான உள்ளடக்கங்களுக்கு அவர்தான் அறிஞர். இந்தி மொழியில் ‘தின்மான்’ என்ற வாரப் பத்திரிகையில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அவர் எழுதிய அற்புதமான கட்டுரைகள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டன.

கல்விக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கியிருக்கிறார்கள், பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு எவ்வளவு, ஆசிரியர் – மாணவர் விகிதங்கள் என்ன என்ற வழக்கமான கட்டுரைகளாக அல்லாமல் - கல்வியின் முக்கியமான அம்சங்கள் குறித்து எழுதியவர் அவர். பள்ளிக்கல்வியில் பாடங்கள் எப்படி இருக்க வேண்டும், எதைக் கற்றுத்தர வேண்டும், வெவ்வேறு நாடுகளில் உள்ள கல்விமுறைகளிலும் பாடத்திட்டங்களிலும் உள்ள அம்சங்கள் என்ன என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்வார்.

என்சிஇஆர்டி அமைப்பின் இயக்குநர் பொறுப்பில் 2004 - 2010 வரையில் இருந்தவர் என்ற வகையிலும், தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு என்ற புதிய – முற்போக்கான கல்விக் கொள்கை 2005இல் ஏற்கப்பட்டதாலும் என்சிஇஆர்டியின் பாடப் புத்தகங்கள் அனைத்துமே முற்றாக திருத்தி எழுதப்பட்டன. அவர் என்னைப் பாராட்டினார் என்றால் உலகமே பாராட்டிய மாதிரி. இந்தப் புத்தகம் குறித்து விருப்பு-வெறுப்பு இன்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியாது, காரணம் நாங்கள் கூட்டாக எழுதிய ஆறு புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புத்தகங்கள் பற்றிய விவாதம் என்றால், அதை எழுதிய அந்த நாள்கள் எனக்கு நினைவில் வந்துவிடும்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை இவ்வளவு விரிவாக எப்படி ஒரு பாடப் புத்தகத்தில் எழுத முடிந்தது என்று எதிர்கால வரலாற்றாசிரியர்கள் நிச்சயம் வியப்பு தெரிவிப்பார்கள்; 1975 நெருக்கடி நிலை, காஷ்மீரில் நடந்த மோதல்கள், மிசோரம் – நாகாலாந்தின் தீவிரவாதிகள் பிரச்சினை, 1984 சீக்கியர்கள் படுகொலை, 2002 குஜராத் முஸ்லிம்கள் படுகொலை ஆகியவை குறித்து விரிவாக எழுதியிருக்கிறோம். இந்தக் கதை குறித்து நான் ஏற்கெனவே என்னுடைய கட்டுரை ஒன்றில் சிறிதளவு எழுதியிருக்கிறேன்.

இந்தப் பாடப் புத்தகங்களை உருவாக்க நாங்கள் செலவிட்ட இரண்டு ஆண்டு உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம்தான் கிருஷ்ணகுமாரின் பாராட்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த பாடப் புத்தகங்களை ஆட்சியாளர்கள் அங்கும் இங்குமாக தொடர்ந்து சிதைத்துக்கொண்டிருந்தாலும், அவருடைய பாராட்டு மட்டுமே எனக்கு ஒரே ஆறுதல்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சுவீடன்: பள்ளிக்கல்வியில் அரசியல் பாடம்

விஜய் அசோகன் 27 Nov 2022

படிப்பவர்களின் கண்ணோட்டம்

எவ்வளவு சொன்னாலும் நான் கேட்ட கேள்வி அப்படியே நீடிக்கிறது: நாம் கற்பித்துக்கொள்கிறபடி, பாடப் புத்தகங்கள் அவ்வளவு முக்கியமானவையா? என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை ஹரியாணா அரசு ஏற்ற பிறகு 2008இல் என்னுடைய கிராமத்துக்குச் சென்றேன். ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியரிடம், “புதிய அரசியல் அறிவியல் புத்தகம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். அவர் தெளிவில்லாமல் ஏதோ பதிலை முணுமுணுத்தார். பிறகுதான் தெரிந்தது அவர் கற்றுத்தந்திருக்க வேண்டிய புதிய பாடப் புத்தகத்தின் அட்டைப்படம் என்ன என்றுகூட அவர் பார்த்ததில்லை; அதுதான் என்றில்லை, அதற்கும் முன்னால் இருந்த பாடப் புத்தகங்களைக்கூட அவர் பார்த்ததே இல்லை!

கடந்த காலத்திலும் சரி, நான் அவரைப் பார்த்தபோதும் சரி ‘கைடுகள்’ என்று அழைக்கப்படும் ‘நோட்ஸ்’களை வைத்துத்தான் வகுப்பில் பாடம் நடத்தியிருக்கிறார். பாடப் புத்தகம் என்பது நல்ல ஆசிரியர் கிடைத்தால்தான் முழுப் பயனையும் தர முடியும் என்பதை அப்போது உணர்ந்தேன்.

இந்த பாடப் புத்தகங்களிலிருந்து பாடங்கள் எப்படி சொல்லித்தரப்படுகின்றன, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அவற்றை உண்மையில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகவே இருந்தது. எந்த அரசாலும் செய்ய முடியாத செயலை – பாடப் புத்தகங்களை முடமாக்குவது – ஆண்டுத் தேர்வுகள் செய்துவிடுகின்றன.

இருந்தாலும் விதிவிலக்கான பள்ளிக்கூடங்களும் உண்டு (அவற்றில் ஒன்றில்தான் என்னுடைய குழந்தைகள் படித்தார்கள்) – பாடப் புத்தகங்களை அவை உண்மையிலேயே பயன்படுத்துகின்றன; பாடங்களில் இருக்கும் தகவல்கள், கருத்துப்படங்கள், பாடம் ஏற்படுத்தும் உணர்வு ஆகியவற்றை அப்படியே மாணவர்களுக்குக் கடத்துகிறார்கள். 

பாடப் புத்தகங்கள் நன்றாக இருந்ததால் பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகு, பட்ட வகுப்பிலும் அரசியல் அறிவியலையே தேர்வுசெய்ததாகப் பலர் பாராட்டியது உண்டு. ஆழ்ந்த நன்றிக்கு உரியவை என்றாலும் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைப் பார்த்தால் மிக மிகக் குறைவு; பாடப் புத்தகங்கள் தீங்கற்றவை என்ற கருத்தைப் பொய்யாக்கவும் - மெய்ப்பிக்கவும் இவை போதுமானவை அல்ல.

இப்படி நினைவோடையில் இருந்து எழுதப்படும் தகவல்கள் எத்தனையாக இருந்தாலும், புதிய இந்தியா தொடர்பாக மலைபோல எதிர்ப்படும் மாற்று ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. மதச்சார்பற்ற கருத்துகளைக் கொண்ட பாடப் புத்தகங்கள்தான் மாணவர்களைச் செதுக்குகின்றன என்றால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது.

இன்னொரு கண்ணோட்டம்

இவ்வளவுக்குப் பிறகும், பாடப் புத்தகங்கள் எதிர்கால சந்ததிக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள், நம் காலத்துக்கான வரலாற்றுப் பதிவுகள் என்பதே உண்மை. குழந்தைகள் படிப்பதற்கு வாங்கித்தரும் பாடப் புத்தகங்கள் மட்டும்தான், ‘புத்தகங்கள்’ என்று பெரும்பாலான வீடுகளில் காட்டுவதற்கு இருக்கின்றன என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

புத்தகங்கள் தான் மாணவர்களின் நடத்தையையும் விழுமியங்களையும் உருவாக்குகின்றன என்றும் கூறிவிட முடியாது. நல்ல விழுமியங்களை போதிக்க எடுக்கும் எந்த முயற்சியும் - பல சமயங்களில் - எதிர் விளைவையே ஏற்படுத்துகின்றன. பாடப் புத்தகங்களைவிட பெற்றோர்களுடைய கண்ணோட்டம், ஆசிரியர்களின் முன்மாதிரி நடத்தை, சமூக இயல்புகள் ஆகியவையே இளம் மாணவர்களிடையே பண்புகளை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. பொதுவான விழுமியங்களை வளர்க்க, பாடப் புத்தகங்கள் புதுமையான முறையில் உருவாக்கப்பட வேண்டும். ஒரு விஷயத்தை - வார்த்தைகளை விளக்குவதுடன் புகைப்படம், கருத்துப்படம் போன்றவற்றையும் இணைக்க வேண்டும். அது மாணவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதுடன் கற்பனையைத் தூண்டும், அவர்களுடைய ஆழமான உணர்வாற்றல்களை வளர்க்கும், இலக்கியம் எப்படி படிப்பவர்களுடைய கற்பனைகளை ஊற்றெடுக்க வைக்குமோ அதைப் போல.

இதைத்தான் எங்களுடைய ‘அரசியல் அறிவியல்’ புத்தகமும் முயற்சித்தது. ‘குடியியல்’ (சிவிக்ஸ்) என்று அழைக்கப்பட்ட பாடப் புத்தகம், படிப்பவர்களுக்கு சோர்வூட்டும் வகையிலும் வெறும் தகவல்களாக அடுக்கிக் கணமான நடையிலும் போதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுவது வழக்கம். அதை நாங்கள் வரைபடங்கள், விளக்கப் படங்களுடன் கவர்ந்திழுக்கும் வகையில் எளிமையான நடையில் தயாரித்திருந்தோம். அதில் வரும் உண்னி – முன்னி என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள், பாடம் தொடர்பாக கடினமான கேள்விகளைக் கேட்பதாகவும் அமைத்திருந்தோம்.

இந்திய அரசியல் தொடர்பான ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அதைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய திரைப்படம் இருந்தால், அதைப் பற்றிய குறிப்புகளைத் தந்து பார்க்குமாறும் ஆலோசனை கூறியிருந்தோம். பாடப் புத்தகத்தை எழுதும் பொறுப்பை பேராசிரியர் பல்சிகரிடமும் என்னிடமும் ஒப்படைத்தபோது, நாங்கள் தயாரிக்கும் மாதிரியை எதிர்காலத்தில் எந்த அரசாலும் கைவிட்டுவிட்டு பழைய பாணிக்கு மாறவே முடியாத அளவுக்குத் தயாரிப்பது என்று தீர்மானித்துச் செயல்பட்டோம்.

இந்தப் பாடப் புத்தகங்களில் இது கூடாது, அது கூடாது என்று பல பத்திகளை வெட்டியவர்களால்கூட புத்தகத்தின் வடிவத்தை மாற்ற முடியவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். பேராசிரியர் கிருஷ்ண குமாருக்கு எழுதிய பதிலில், “புதிய பாடப் புத்தகங்களை எழுத (இந்த) அரசால் இன்னமும் முடியவில்லை என்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் பல்சிகர். இப்போதைய சூழலில் இது சாதாரணமான சாதனையே அல்ல.

பாடப் புத்தகங்கள் தாங்களாகவே அறிவாற்றலையும் தார்மிக செல்வாக்கையும் உருவாக்கிவிடுவதில்லை என்பதைக் கடந்த 15 ஆண்டுக்கால அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டுள்ளேன். பிற புத்தகங்களைப் போலவே பாடப் புத்தகங்களும் அதை வாசிக்கக்கூடியவர்களின் ஆர்வத்தையும் மரியாதையையும் ஈர்க்க வேண்டும். இந்த உண்மை, ‘எழுத்தாளன்’ என்ற வகையில் என்னுடைய அகம்பாவத்துக்கு ஓர் அடிதான்.

சமீபகாலமாக எனக்குள் ஒரு நம்பிக்கை கீற்றும் உதயமாகி இருக்கிறது. இப்போதைய அரசு கொண்டுவர விரும்பும் பாடப் புத்தகங்களுக்கு (வரவேற்பு இல்லாமல்) புறக்கணிப்பே அதிகம் இருக்கும்; அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்துக்கு மட்டும் அது நேராது. பாடப் புத்தகங்களைத் தங்கள் ஆணைப்படி எழுதவைக்கும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களால் அடுத்த தலைமுறை மக்களுடைய அரசியல் கருத்துகளைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிவிட முடியாது, இது நம்பிக்கைக்குரிய அம்சம் – விரக்திக்கு உரியதல்ல!

 

தொடர்புடைய கட்டுரைகள்

எப்படி இருக்க வேண்டும் இந்தியக் கல்விமுறை?
சுவீடன்: பள்ளிக்கல்வியில் அரசியல் பாடம்
ஃபின்லாந்து கல்வியில் ஆசிரியருக்கான முக்கியத்துவம்
ஃபின்லாந்து கல்வி: போட்டியிலிருந்து விடுதலை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.


2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எழுத்தாளர் பேட்டிகட்டுரைகள்அண்ணன் பெயர்சுய சுகாதாரம்கர்ப்பப்பை வாய் புற்றுநோய்முஸ்லிம்களுக்கு கிடைக்குமா அரசியல் அங்கீகாரம்?ராஜாசண்முகநாதன் பேட்டிநீட் தேர்வுநதி நீர்ப் பகிர்வுநீராணிக்கம்பொது பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ)காந்தி ஆசிரமம்பார்டர் அண்ட் பௌண்டரீஸ்கண்காட்சிதமிழகக் காவல் துறைபுதிய உடை தரித்த பழைய இந்தியின் கதைமனிதச் சமூகம்சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!தமிழர்கள்பிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிசம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றஇதயச் செயல் இழப்புவர்ணாசிரமம்வெரியர் எல்வின்காட்சி ஊடகமும்ஸ்ரீசங்கராச்சாரியார்இந்துவாக இறக்க மாட்டேன்அகமணமுறைஇழிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!