கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ஃபின்லாந்து கல்வி: போட்டியிலிருந்து விடுதலை

விஜய் அசோகன்
06 Nov 2022, 5:00 am
4

லகின் மதிப்புக்குரிய கல்வி ஆய்வுகளில், ஃபின்லாந்து கல்வித் துறை தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையை வந்தடைய வரலாற்றில் எத்தகைய பாதையை ஃபின்லாந்து சமூகம் கட்டமைத்துவந்தது என்பதை முந்தைய மூன்று அத்தியாயங்களில் வாசித்தோம். இந்த முதல் நிலையில் ஃபின்லாந்து தொடர்ந்து நீடிக்க அந்நாட்டின் கல்வித் துறை எத்தகு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் வாசிப்போம்.

கல்வித் துறையின் அணுகுமுறை

  1. அரசு எந்த ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளும் முன்னரும் பல்வேறு கல்வியியல், உளவியல், சமூகவியல் ஆய்வுகளைச் செய்து, எல்லோருடனும் முடிவுகளை விவாதித்து அதன் பின்பே நடைமுறைக்குக் கொண்டுவருவர்.
  2. ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வியானது முனைவர் பட்ட ஆய்விற்கு இணையான கள ஆய்வுகளையும் ஆய்வறிக்கைகளையும் உள்ளடக்கி இருக்கும்.
  3. பல்வேறு கல்வித் துறைச் செயற்பாடுகளை, பல்கலைக்கழக, பயனுறுப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களோடு இணைந்தே ஆய்வுசெய்து நடைமுறைக்குக் கொண்டுவருகின்றனர். 

முறைசார் பாடத்திட்டங்கள் அற்ற வகுப்புத் திட்டங்கள்

ஃபின்லாந்தின் இன்றைய கல்விமுறைக்கான அடிப்படை 1945இல், மேட்டி கோஸ்கென்னிமியின் தலைமையில் அமைக்கப்பட்ட தொடக்கநிலைக் கல்விக் குழுவால் உருவாக்கப்பட்டது. கோஸ்கென்னிமி, அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கக் கல்வி, பயிற்சிகள், ஆசிரியர்களுக்கான கல்வி ஆகியவற்றினை உள்ளடக்கிய வழிகாட்டி நூலை எழுதியிருந்தார். இந்தக் குழு பரிந்துரைத்த விஷயங்களில் மிக முக்கியமானவை:

  1. எல்லோருக்கும் தரமான, சமமான, பாரபட்சமற்ற கல்வி.
  2. பாடத்திட்டங்கள் தனித்து வகுக்கப்படாமல், ஒவ்வொரு தனிமனிதருடைய உள்ளார்ந்த செயற்பாடுகளை ஊக்குவித்தும், அந்தத் தனிமனிதர்களைச் சமூகத்தின் அங்கமாக மாற்றவும் ஏதுவாகக் கல்வித்திட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.
  3. ஒவ்வொரு காலகட்டத்தின் மாணவ, மாணவியரின் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் செயல்திட்டங்களும் பாடத்திட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.
  4. ஃபின்லாந்தின் வருங்காலத்தின் வளர்ச்சியினை மையப்படுத்தி மாணவ, மாணவிகளின் அறிவு, திறன் வளர்க்கும் விதமாக வகுப்பறைக் கல்வித் திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

 

ஃபின்லாந்துக் கல்வி – மாபெரும் கனவு

பல நாடுகளில் கல்வியாளர்களும், குழந்தை நேயச் செயற்பாட்டாளர்களும் கனவாகப் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களை எப்போதோ நிறைவேற்றிவிட்ட இடம் ஃபின்லாந்து. ஆம், குழந்தைநேய அணுகுமுறைதான் அங்குள்ள கல்வியின் அடித்தளம்!

குழந்தையின் 7 வயதிற்கு மேலேதான் பள்ளிக்கல்வி தொடங்குகிறது.

மிகக் குறைந்த நேரம், குறைந்த நாட்களே இயங்கும் வகுப்பறைச் செயல்பாடுகள். வீட்டுப்பாடங்கள் இல்லை, பெற்றோர்களின் அழுத்தமோ, ஆசிரியர் /ஆசிரியைகள் வழியே உருவாக்கப்படும் மன அழுத்தமோ இல்லை. தேர்வுகளோ, மதிப்பெண்களோ ஒவ்வோர் ஆண்டின் வகுப்பையும் நிறைவுசெய்யவில்லை. மாறாக, அவ்வாண்டு குழந்தைகள் புதிதாகக் கற்றவை என்ன, கிடைத்த அனுபவங்கள், பட்டறிவு என்ன?  ஏனைய குழந்தைகளுடனும் சமூகத்துடனும் எத்தகைய சமூக இணைவைக் குழந்தைகள் பெற்றிருக்கின்றனர்? விளையாட்டுகளில் எத்தகைய ஆர்வத்தையும், பங்களிப்பையும் அவர்கள் தந்திருக்கின்றனர்? கலை மற்றும் அறிவியல் செயல்பாடுகளில் காட்டிய ஆர்வம் என்ன?

இந்த விஷயங்களையெல்லாம் ஆசிரியர்கள் கணக்கிடுகிறார்கள்.

இப்படித்தான் மாணவர்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் மதிப்பிடுகிறார்கள். மிக முக்கியமாக, பாலின, மொழி, இன, பொருளாதார வேறுபாடுகள் அற்ற சிந்தனையைப் பெருக்கி, சமத்துவமான மனநிலையை உருவாக்குதலை வகுப்பறைச் செயல்பாடுகளில் ஒன்றாக வகுத்து வைத்திருக்கிறார்கள்.

 

போட்டிகளும் தேர்வுகளும் மதிப்பீடுகளும் இல்லை

அடுத்து, ஃபின்லாந்து கல்வித் துறையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், போட்டியைத் தவிர்த்தல்!

வகுப்பறையிலோ பள்ளியிலோ கல்வி சார்ந்த போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குள் புகுந்துவிடாதபடி, எவர் ஒருவரின் மதிப்பீடுகளும் எவர் ஒருவருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். மாணவ, மாணவிகளில் அறிவானவர், நன்றாக படிக்கக்கூடியவர், உயர்வானவர் என்று யாரையும் தரம் பிரித்துக் காட்ட மாட்டார்கள். 

ஆண்டு நிறைவில் மாணவ, மாணவியரின் அவ்வாண்டுச் செயற்பாடுகளை அவரவர் பெற்றோருடனான தனிப்பட்ட சந்திப்பில் விளக்கும்போதும்கூட, அந்த ஆண்டு குழந்தை என்ன கற்றுக்கொண்டது என விளக்குகிறார்களே தவிர, குழந்தை கற்றுக்கொள்ளாத அம்சங்களை முன்வைத்துப் பெற்றோரைக்  குற்றஞ்சாட்ட மாட்டார்கள். அதனினும் முக்கியம், குழந்தைக்கு எவ்விதத் தர மதிப்பீட்டையும் வழங்க மாட்டார்கள். 

ஃபின்லாந்துக் கல்வியியல் அறிஞரான பாசி சாஹ்ல்பர்க் அடிக்கடி சுட்டிக்காட்டும் சமுலி பரோனெனின் வரி இது: “உண்மையான வெற்றியாளர்கள் போட்டிகளில் மூழ்குவதில்லை!”

ஆசிரியர்களின் பொறுப்புடைமை தொடர்பாக பாசி கூறுவது இது: “தங்கள் சுயப்பொறுப்புகளை (responsibility) உணராதவர்களிடம் மட்டுமே பொறுப்புடைமை (accountability) கணக்கிடப்பட வேண்டும். எங்கள் ஃபின்லாந்து ஆசிரிய, ஆசிரியைகளைக் கண்காணித்துக் கணக்கிட வேண்டியதில்லை!”  

பள்ளிகள் தொடர்பான பார்வைகளிலும் ஃபின்லாந்து முற்றிலும் ஏனைய பன்னாட்டுக் கல்வியமைப்பில் இருந்து மாறுபடுகிறது. பள்ளிகளின் செயல்பாடுகள் கூட்டுறவால் நிகழ்பவை என்பதால், ஆசிரியர்களுக்கும் தனித்த அங்கீகாரமோ, தனித்த முத்திரைகளோ வழங்கப்படுவது இல்லை; பள்ளிகளுக்கும் அப்படியே!

அனைத்துப் பள்ளிகளும் சமூகத்தின் அங்கமாக நின்று சமூக மேம்பாட்டிற்கான கருவியாக இயங்க வேண்டும் என்பதால், பள்ளிகள் இடையே போட்டி மனப்பான்மையை உருவாக்குவதில்லை என்கிறார்கள் ஃபின்லாந்துக் கல்வித் துறையினர். 

ஃபின்லாந்துக் கல்வித் துறையின் கூர்நோக்கு

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமத்துவச் சமூகம் படைப்பதைப் பள்ளிக்கல்வி மையப்படுத்தி நிற்பதால், பின்வரும் விஷயங்கள் கடமைகளாகக் கருதப்படுகின்றன.

  1. அனைவருக்குமான கட்டணமில்லா உணவு.
  2. அனைத்துக் குழந்தைகளுக்குமான உடல்நிலையைக் கண்காணிக்க மருத்துவக் கட்டமைப்பு.
  3. உளவியல் மேம்பாடு மற்றும் ஆலோசனை வகுப்புகள்.
  4. மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான  வழிகாட்டுதல்.
  5. கட்டாயக் கல்வி 7 வயது முதல் 16 வரை என்பதால் முற்றிலும் கட்டணமில்லா கல்வி.

எல்லாப் பெற்றோர்களுமே அருகமைப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், குழந்தைகள் பஸ்ஸில் ஏறி பயணப்படும் அவஸ்தை இங்கே இல்லை. மதியம் 2:00 - 2:45 மணிக்கெல்லாம் பள்ளிகளின் செயற்பாடுகள் நிறைவடைந்துவிடுவதால், மாலை நேரத்தை உற்சாகமாக விளையாட்டுக்குக் குழந்தைகள் செலவிடுகிறார்கள். குழந்தைகளின் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரையிலான தொடர் கற்றலுக்கு ஒரே ஆசிரியர் இருப்பதால், குழந்தைகளின் தொடர் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவரவருக்கு ஏற்ற உளவியல், தனித்திறன், கல்விக் கற்றல் பயிற்சிகளைப் பெறுகிறார்கள். 7 முதல் 13 வயது வரை ஒன்றாகப் பயணிக்கும் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தைகளுக்கு குடும்ப உறுப்பினர்போல மாறிவிடுகிறார்.

இப்படியாக ஆசிரியர் என்பவர் குழந்தைகளுக்கான முழுமையான வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.

(அடுத்த ஞாயிறு மேலும் பேசுவோம்...)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
விஜய் அசோகன்

விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


6

3





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

ஒரு படிக்காத சாமானியனுக்கு, கல்வி என்பது " படிச்சா நல்ல வேலை கிடைக்கும். AC room ல யே நாள் முழுக்க உட்கார்ந்து வேலை. பை நிறைய சம்பளம் " இது மட்டும் தான் தெரியும். எனவே தன் குழந்தைகளை "படி படி " என்று torture செய்கின்றனர்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

எனக்கு மிகவும் பிடித்த points இந்தக் கட்டுரையில் // வகுப்பறையிலோ பள்ளியிலோ கல்வி சார்ந்த போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குள் புகுந்துவிடாதபடி, எவர் ஒருவரின் மதிப்பீடுகளும் எவர் ஒருவருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். மாணவ, மாணவிகளில் அறிவானவர், நன்றாக படிக்கக்கூடியவர், உயர்வானவர் என்று யாரையும் தரம் பிரித்துக் காட்ட மாட்டார்கள். ஆண்டு நிறைவில் மாணவ, மாணவியரின் அவ்வாண்டுச் செயற்பாடுகளை அவரவர் பெற்றோருடனான தனிப்பட்ட சந்திப்பில் விளக்கும்போதும்கூட, அந்த ஆண்டு குழந்தை என்ன கற்றுக்கொண்டது என விளக்குகிறார்களே தவிர, குழந்தை கற்றுக்கொள்ளாத அம்சங்களை முன்வைத்துப் பெற்றோரைக் குற்றஞ்சாட்ட மாட்டார்கள். அதனினும் முக்கியம், குழந்தைக்கு எவ்விதத் தர மதிப்பீட்டையும் வழங்க மாட்டார்கள். //

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள் செய்யும் சாதனைகளை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடுகள் சாதிப்பது கடினம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

இதே பூமியின் ஒரு பகுதியில் சமகாலத்தில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது! என் குழந்தை இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை என்ற புரிதல் இருந்தும் வாழ்நாளை எப்படி அனுபவிக்க வேண்டும், எப்படி எவற்றைக் கற்க வேண்டும் என்கிற அறிவு இருந்தும் இந்த அழுத்தங்களுக்கு ஆட்பட வேண்டி இருப்பது கையறு நிலை. ஹாஸ்டலுக்கு அனுப்புவது என்கிற விஷயமே அங்கு இருக்காதில்லையா? குழந்தைகளைப் பிரிந்து வாழ்வதெல்லாம் வாழ்க்கையா? இங்கு பள்ளிக்கல்வியில் நிலவும் இத்தனை அநியாயங்களுக்கும் காரணம் பெற்றோரின் பேராசை என்கின்றனர்,அதுவும் நடுத்தர வர்க்கத்து பெற்றோரின் பேராசை என்கிறார்கள். இது தவறு. பெற்றோரின் கோரிக்கைகளால் போராட்டத்தாலா இத்தனை விதம் விதமான கல்விமுறைகளும் தனியார் பள்ளிகளும் முளைத்தன? முளைத்த பின் விட்டில் பூச்சி போல் பெற்றோர் மொய்க்கின்றனர் தான், காரணம் கல்வி என்பது பிழைப்புக்கான, சமூக அந்தஸ்துக்கான கருவி என்று தான் அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் மூளை சிந்திக்கும். இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளை அரசாங்க முடிவாக அனுமதித்தவர்களுக்கு அறிவு எங்கே போயிற்று? கல்வியாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்களை கலந்து ஆலோசித்திருந்து முடிவுகளைப் பொறுப்புடன் எடுத்திருந்தால் பள்ளி நேரம், மேல்நிலைப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமையில் வகுப்புகள், டியூஷன்,தடுக்கி விழுந்தால் தேர்வு என்று எல்லாம் அந்தந்தப் பள்ளி நிர்வாகத்தினரின், ஆசிரியர்களின் இஷ்டத்துக்கு இருக்குமா? 9th to 12th standard பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் என்ன பாடு படுகிறார்கள்? யார்தான் பொறுப்பு இதற்கெல்லாம்? தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துவது யார்?இவர்களுக்கு எல்லை இல்லா அதிகாரத்தை வழங்கியது யார்? இந்த கட்டுரை மென்மையாகப் புரிய வைக்க முயற்சிக்கிறது, அறிவுக் கண்ணைத் திறக்கப் பார்க்கிறது. மென்மையான சக்திகளுக்கே வலிமை அதிகம். அனைத்து பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும், ஆட்சியாளர்களும் இந்த கட்டுரைத் தொடரை வாசித்து சிந்திக்க வேண்டும். இவ்வளவு ஏற்றத்தாழ்வு நிலவும் கல்வி அமைப்பில் ஜெயிக்கிறவர்களும் மோசமான பின்விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

வறுமை - பட்டினிஜனநாயகம்மூ.அப்பணசாமிபிஹாரில் புதிய கட்சிகள்மாவட்டம்இறையாண்மைட்வீட்உத்தர்ஏறு தழுவுதல்பெட்ரோல்எஸ்.அப்துல் மஜீத் பேட்டிசனாதனம்மருத்துவத்துறை அமைச்சர்ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்உபநிஷத்இறப்புசாதிரீதியிலான அவமதிப்புவி.பி.சிங் சமஸ்பொருளாதாரப் பங்களிப்புபிலிப் எச். டிப்விக்இந்திய வணிகம்விடுதலைச் சிறுத்தைகள்கோடை மழைதிருநம்பிகள்மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை!Psychological Offensiveஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்வாசிப்பு அனுபவம்வசனகர்த்தாமொழியியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!