கட்டுரை, கலாச்சாரம், கல்வி 10 நிமிட வாசிப்பு

எப்படி இருக்க வேண்டும் இந்தியக் கல்விமுறை?

யோகேந்திர யாதவ்
13 Apr 2022, 5:00 am
2

ல்வியை இந்தியமயப்படுத்துவது எப்படி?

இன்றைய காலகட்டத்தின் பெரிய கேள்வி இது. மெக்காலே கல்விமுறையை இந்தியத் தேவைக்கு ஏற்ப மாற்றுவதா அல்லது இந்தியாவின் பாரம்பரிய கல்வி மரபுகளை அப்படியே பின்பற்றி, அதே கல்வியைக் கற்றுத்தருவதா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது இல்லை இப்போதைய பிரச்சினை, எப்படி நம்முடைய கல்விமுறையை மாற்றியமைப்பது  என்பதே அது!

மெக்காலே விட்டுச்சென்ற - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கேற்ற கல்வித் திட்டத்தில் இந்திய உள்ளீடுகளைப் புகுத்தித் தாளிப்பதா, அல்லது மேற்கத்தியக் கல்விமுறையோ - உள்நாட்டுக் கல்விமுறையோ அதை இந்தியப் பின்னணிக்கேற்ப ஊறவைத்து இந்தியத் தேவைக்கேற்ப, இந்திய பாரம்பரிய கல்வியைக் கற்றுத்தருவதா? 

வெங்கய்ய நாயுடுவின் அறைகூவல்

ஹரித்வார் நகரில் தேவ சன்ஸ்கிருதி விஸ்வ வித்யாலயத்தில் நடந்த அமைதி – சமாதானத்துக்கான தெற்காசியக் கழகத்தில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கல்வியை இந்தியமயப்படுத்துவது தொடர்பான விவாதத்தைத் தொடங்கிவைத்தார். தாமஸ் பாபிங்டன் மெக்காலே விட்டுச் சென்ற கல்விமுறையின் மோகத்திலிருந்து மீண்டு வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

“நம்முடைய பாரிய கலாச்சாரம், மரபுகளைத் தழுவி நமக்கான கல்வியின் வேர்களைத் தேடிச் செல்லுங்கள். இந்தியக் கல்விமுறையில் ஏதுமில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள், நம்முடைய தாய்மொழியை அரவணையுங்கள்” என்றார். “இப்படிச் சொல்வதால் கல்வியைக் காவிமயப்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டக்கூடும், இருக்கட்டுமே கல்வி காவி வர்ணம் பூசிக்கொள்வதால் என்ன கேடு!” என்றும்கூட அவர் கேட்டார்.

வெங்கய்ய நாயுடு பேசிய இந்த வாக்கியம்தான் பத்திரிகைச் செய்திகளுக்குத் தலைப்பானதே தவிர, கல்வி இந்தியமயமாக வேண்டும் என்ற அவருடைய கருத்து பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

காது கேளாதவரின் உரையாடல்

இதே பொருள் தொடர்பாக சமீபத்தில் இரண்டு நிகழ்வுகள் அரங்கேறின. பகவத் கீதையை கற்றுத்தருவது பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என குஜராத் மாநில அரசு ஆணையிட்டது. கீதையின் விளக்கத்தைப் படிப்பதுடன் அதிலிருந்து பல சுலோகங்களை மனப்பாடம் செய்வது கட்டாயமாக்கப்படும். பாடத்திட்டத்தில் வேறு மதங்களிலிருந்து இதைப் போல வேறு ஏதேனும் சமய நூல்களைப் படிப்பதும் கட்டாயமாக்கப்படுமா என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்படவில்லை.

மற்றொரு நிகழ்வு, மாநிலங்களவையில் பாஜகவின் உறுப்பினரும் சித்தாந்தவாதியுமான ராகேஷ் சின்ஹா, ‘பாரம்பரிய இந்திய கல்வியைப் புதுப்பிக்க மாநில, மாவட்ட அளவில் ஆராய்ச்சி அறக்கட்டளைகளை ஏற்படுத்த வேண்டும்!’ என்று  தனிநபர் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தியர்களைத் தங்களுடைய பாரம்பரியக் கல்விமுறையிலிருந்து விலக்கிவைத்தது மெக்காலேவின் கல்வித் திட்டம்தான் என அவரும் குற்றஞ்சாட்டினார்.

இவ்விரண்டு தொடர்பாகவும் அதிக எதிர்வினைகள் ஏற்படவில்லை, குறைந்தபட்சம் சர்ச்சைகள்கூட பொதுவெளியில் ஏற்படவில்லை. ஆனால், இவற்றுக்கான பதில்கள் எதிர்பார்க்கும்படியான வகையில்தான் இருந்தன.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 28(1), 28(3) ஆகியவை அளிக்கும் மதச் சுதந்திர உரிமைக்கு முரணானது குஜராத் அரசின் பகவத் கீதை பாடத்திட்டம் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியமயமாவதையும் காவிமயமாவதையும் ஒன்று எனக் கருதி கருத்துகள் தெரிவிப்பதாகவும் கண்டிக்கப்பட்டது. பாரம்பரிய இந்திய ஞானத்தைப் புதுப்பிப்பது என்பது பிராமணர்களின் வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்கான முயற்சியே என்றும் விமர்சிக்கப்பட்டது. கல்வியை இந்தியமயமாக்குவது தொடர்பான விவாதங்கள் இப்படித்தான் தொடங்கி பிறகு முடிவடைகின்றன.

இந்தியமய தாளித்தல் அணுகுமுறை

கல்வியை இந்தியமயமாக்குவது தொடர்பாக பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டமைப்புகள் ஆதிக்க மனோபாவத்தோடு கையாளும் அணுகுமுறைதான் பிரச்சினையாக இருக்கிறது. இதை இந்தியமயமாக்கும் – தாளிக்கும் - அணுகுமுறை என்றே அழைக்க வேண்டும். காலனியாதிக்கத்தின்போது அறிமுகமான பெரும்பகுதி கல்வித் திட்டத்தில் நாம் கை வைக்க வேண்டாம், அதில் இந்தியமயத்தைத் தாளித்து இந்திய வாசனையையும் நறுமணத்தையும் சேர்ப்பது ஒரு அணுகுமுறை. நம்முடைய பாரம்பரியக் கற்றல்முறை தொடர்பாக மேலோட்டமான குறிப்புகளே இடம்பெறுகின்றன.

குரு – சிஷ்ய பரம்பரை முறையில் கற்றலைக் கொண்டுசெல்ல வேண்டும், உலகுக்கே இந்தியா ஜகத்குருவாக விளங்கிய காலத்துக்குத் திரும்ப வேண்டும் என்றெல்லாம் மிகையான சொல்லாடல்களும் போலிப் பெருமைகளுமே எஞ்சுகின்றன. இதுதான் 2020இல் வெளியான தேசிய கல்விக் கொள்கையின் பரந்துபட்ட அணுகுமுறையாகவும் இருந்தது.

பாடத்திட்டங்களில் ஏதாவதொரு இந்து வேதத்தை – ஒழுக்கக் கல்வி என்கிற பெயரில் திணிப்பதே அடிக்கடி நிகழ்கிறது. பிற மத, கலாச்சார மரபுகளை வேண்டும் என்றே இதில் புறக்கணிப்பதால் மதச்சார்பின்மை – மத உரிமைகள் தொடர்பான விவாதமாக இதை மாற்றிவிடுகிறது. இதைத்தான் குஜராத் மாநில அரசு இப்போது செய்திருக்கிறது.

பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்த அதேவேளையில் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் படிப்பதைக் கட்டாயமாக்கியும், ஆறாவது வகுப்பு முதல் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கில வழியில் படிப்பதற்கு அனுமதி வழங்கியும் குஜராத் அரசு உத்தரவிட்டிருப்பது வெறும் தற்செயலான நடவடிக்கை அல்ல. ஆங்கில வழிக் கற்றல் கட்டாயம் என்பது குறித்து விவாதித்துவிடக் கூடாது என்பதற்கான தாளிப்புதான் பகவத் கீதை கட்டாயப் பாடம் என்கிற திணிப்பா என வியப்பு மேலிடுகிறது.

தில்லி அரசு அறிமுகப்படுத்திய தேசபக்தி பாடத்திட்டமானது, கற்பிக்கும் முறை குறித்து கவலைப்படாமல் அந்த முயற்சியையே கேலிக்கூத்தாக்கியது.

இத்தகைய அணுகுமுறை கல்வியை இந்தியமயப்படுத்துவது தொடர்பான எந்தவித விவாதங்களையும் அற்பமாக்கி, நஞ்சேற்றிவிடுகிறது. இதை முழுதாக நிராகரிப்பதற்கான காரணம் புரிந்துகொள்ளக்கூடியதே.

அதிர்ச்சி வைத்தியர்கள்

இந்திய மரபியலாளர்கள் பெருமையுடன் பேசும் வானியல் இயற்பியலும் பண்டைய முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை முறைகளும் கோமாளித்தனமானவை அல்ல என்றாலும் முழுக்க முழுக்கப் புரட்டானவை என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து கூறிவிட்டார்கள். பண்டைய இந்திய வரலாற்றை எழுதிய அறிஞர்கள், புராணங்களை வாசித்தவர்கள், ஏடுகளை ஆராய்ந்தவர்கள் இப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமற்ற சாதனைகள் குறித்து வேதனை கலந்த அதிர்ச்சியடைகிறார்கள்.  கல்வியாளர்கள் இத்தகைய குறளிவித்தைகளைக் கண்டு ஏளனப் புன்னகை புரிகிறார்கள். நாட்டு மக்கள் அனைவர் மீதும் இந்து மத வேதக் கருத்துகளை அப்பட்டமாகத் திணிப்பதைக் கண்டு மதச்சார்பற்றவர்கள் கொதித்தெழுகிறார்கள்.

சமூகநீதிக்காகப் பாடுபடுகிறவர்கள் பிராமணீய வேதக் கருத்துகளை முன்னிலைப்படுத்துவதையும் இதர வகை அறிவு நூல்களை இருப்பிலிருந்தே அழிக்க முற்படும் முயற்சிகளையும் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். கல்வியைத் தொழிலாகவே நடத்தும் கல்வித் தொழில் முனைவோர்களோ இந்தியப் பாரம்பரிய அறிவு வளம் என்று சிலவற்றை ஆங்காங்கே தூவுவதற்கு ஒப்புதல் வழங்கி, நவீன மேற்கத்திய கல்விமுறை எனும் பெயரில் அதன் கேலிக்குரிய நகலைத் தீவிரமாக அறிமுகப்படுத்தி அதை பணமாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய போக்கானது கற்பிக்கும் கலைக்கு நேர்ந்த பேரவலம், கலாச்சார சோகம், தேசிய அவமானம். காந்தியின் புகழ்வாய்ந்த சொற்கள் நமக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. “அனைத்து நாடுகளின் கலாச்சாரங்களும் என்னுடைய வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் இடம்பெற வேண்டும் என்றே விரும்புகிறேன், அதற்காக என்னுடைய வேரைக் கெல்லி எறிய நான் சம்மதிக்க மாட்டேன்!”

அதற்குப் பிறகு காந்தி கூறிய வேறு சிலவற்றை மிக அரிதாகத்தான் பொதுவெளியில் மேற்கோள் காட்டுகிறார்கள். “அடுத்தவர்களுடைய வீடுகளில் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறவனாகவோ, பிச்சைக்காரனாகவோ, அடிமையாகவோ வாழ மறுக்கிறேன்” என்றார். இன்றைய இந்தியக் கல்விமுறைக்கான கல்லறை வாசகமாக பொறிக்க இது மிகவும் உகந்தது. மேற்கத்திய ஞானம் நிரம்பிய வீட்டில் தலையாட்டிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழவுமே இந்தக் கல்விமுறை நம்மைப் பயிற்றுவிக்கிறது.

ஊறுகாய், முரப்பா அணுகுமுறை

கல்வியை இந்தியமயமாக்குவது தொடர்பாக புதிய அணுகுமுறை நமக்கு அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது. சமையலறைக் கலைச்சொற்கள் மூலமாகவே இதை நாம் அணுகுவோம். ஊறுகாயைப் போலவோ முரப்பா போலவோ இது அமைய வேண்டும். சட்னியோ – சாம்பாரோ தயாரானதும் கடைசியாக வாசனை – சுவைக்காக தாளிப்பதைப் போல அல்லாமல் தேனிலோ – ஜீராவிலோ ஊற வைப்பது பாரம்பரிய முறை. ரோஜாவையும் நெல்லிக்காயையும் இப்படித்தான் பக்குவம்செய்து அருமருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

கல்வித் திட்ட தயாரிப்பிலும் இதையே நாம் கைக்கொள்ள வேண்டும்.

கல்வித் திட்டத்துக்கான மூலம் மேற்கிலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தோ வரட்டும். இந்தியமயப்படுத்துவது என்றால் தேசிய எல்லைகள் அடிப்படையில் அறிவு மூலங்களை நிராகரிப்பதல்ல. அவற்றை நம்முடைய பின்னணிக்கேற்ப, நம்முடைய தேவைகளுக்கேற்ப, பாரம்பரிய அறிவார்ந்த தன்மைக்கேற்ப தகவமைத்து உள்வாங்க வேண்டும். இந்த நடைமுறை மிகவும் நேரம் எடுக்கக் கூடியது, ஆழமானது, சாரம் மிகுந்தது.

ஐந்து வழிகள்

கல்வித் திட்டத்தை இந்தியமயமாக்கும் இந்த மாற்று அணுகுமுறை பின்வரும் கொள்கை நடவடிக்கைகளுடன் கூடியதாக இருக்க வேண்டும். முதலாவதாக, மொழி ஒதுக்கலைத் தடுக்கும் அரசியல் துணிவு வேண்டும். ஆங்கிலவழிக் கல்விமுறை என்ற காட்டுமிராண்டித்தனமான கற்பித்தல் முறை நிறுத்தப்பட வேண்டும்.  கல்வியாளர்கள், மொழி வல்லுநர்கள், கற்றல் தொடர்பாக ஆய்வுகளைச் செய்த உளவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று, அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஆங்கிலம் உள்பட விரும்பும் எந்த மொழியையும் கற்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இரண்டாவதாக, இந்தியமயமாக்குதல் என்பது கல்வியைச் செய்முறைகள் மூலம் கற்பதாக இருக்க வேண்டும், குறிப்பாக கைத்தொழில்களைக் கற்றுத்தர வேண்டும். உழைப்பின் மேன்மையை மாணவர்கள் உணரும் விதத்தில் உடலுழைப்புத் தொழில்களையும், கைவினைக் கலைகளையும் கற்றுத்தர வேண்டும். பிராமணீய முறையிலான உருப்போடும் கல்விமுறையிலிருந்து விலக புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி அவசியம் சேர்க்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, அறிவியல் – தொழில்நுட்பம் உள்பட அனைத்துத் துறைகளிலும் கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் இந்தியப் பின்னணிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளின் பின்னணிக்கேற்ற கல்விமுறையில் இந்தியாவுக்கான தேவைகள் ஏதோ பிற்சேர்க்கைபோல இருந்துவிடக் கூடாது. எந்தக் கல்விமுறையிலும் அது இந்தியத் தேவைக்கு - பின்னணிக்கு எந்த வகையில் பொருத்தானது அல்லது மாற்றப்பட வேண்டியது என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.

நாலாவதாக, உலகின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த கல்விச் செல்வத்தை மாணவர்கள் கற்கும் அதேவேளையில் நம்முடைய அறிவார்ந்த மரபுகளையும் காவியங்களையும் செயல்வழி ஞானங்களையும் அறிந்துகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது.

ஐந்தாவதாக, இந்திய தேசிய இயக்கத்தின் சித்தாந்த கருத்தொற்றுமையின் விளைவாக உருவான இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை இந்திய மாணவர்கள் உணர்வதாக கல்வியை இந்தியமயப்படுத்த வேண்டும்.

விஷ்ணு புராணம் என்ன சொல்கிறது?

கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த விளக்கத்தை விஷ்ணு புராணம் கூறுகிறது. ‘ச வித்யா - ய விமுக்தி’ என்கிறது. எது நமக்கு விடுதலையைத் தருகிறதோ அதுவே கல்வி என்பது இதன் பொருள்.

கல்வியை இந்தியமயப்படுத்த வேண்டும் எனக் கோருவோரைக் கேள்வி கேட்க இது நமக்கு உதவியாக இருக்கிறது. நம்முடைய எதிர்காலத்தை அறியாமை, தாழ்வு மனப்பான்மை, மதவெறி ஆகியவற்றோடு பிணைத்துக் கொள்ளவா இந்தியமயம் என்கிற ஆயுதம்? அல்லது சுதந்திரமாக கற்கவும் யாருக்கும் தலையாட்டியாகவோ, பிச்சைக்காரனாகவோ, அடிமையாகவோ வாழாமல் இருக்கவா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   2 years ago

கல்வித்தறையை இந்தியமயமாக்குவதை பெரும்பாலான அரசியலர்கள் கூட்டாட்சிக்கு எதிரான செயல் என கருதக் கூடும். காரணம், அது மையவாதக் கொள்கை அணுகுமுறை கொண்டது. மெக்காலே கல்விமுறையில் பிராந்திய வாரியான கொள்கை மாறுதல்களே கல்வியை இந்தியமயமாக்கும் பெரும்பணியில் முக்கிய படிக்கல்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

Once Writer Charu said despite he has written filthier books than 'Madhorubaagan', he wasn't criticised for that because it wasn't read by people enough. Similarly if this article got posted in Twitter or FaceBook... might be read by people & would get some criticisms at least. It's quite shocking that there's 0 comments/feedbacks for this wonderful article so far.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஃபேட்டி லிவர்காலவெளியில் காந்திராமஜன்ம பூமிஇந்தியப் பெண்கள்காங்கிரஸ் தலைவர்; கட்சியின் தலைவர்1984 நாவல்c.p.krishnanதமிழ்நாடா - தமிழகமா?கருத்துரிமைதி டான்மாபெரும் ராஜினாமாஅகமணமுறைபார்ப்பனர்கள் பெரியார்மத்திய பிரதேச தேர்தல்கடினமான காலங்கள்மராத்தியர்கள்மென் இந்துத்துவம்மணிப்பூர் முதல்வர்கட்டுக்கதைகள்தமிழ் முஸ்லிம்கள்அணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?இந்து ராஜ்ஜியம்நட்சத்திரம் நகர்கிறது: பா.இரஞ்சித்தின் அழகியல்முல்லை நில மக்கள்கையால் மனிதக் கழிவகற்றுவோர்உணவுப் பதப்படுத்துதல்மதமும் கல்வியும்பாஜகபுபேஷ் பெகல்மீனாட்சி தேவராஜ் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!