கட்டுரை, அரசியல், கல்வி, அறிவியல் 5 நிமிட வாசிப்பு
இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!
அறிவியல் துறையின் மிகச் சிறந்த இரு இந்தியக் கல்வியாளர்களுடன் பெங்களூரு நகரில் (2009இல்) ஒரு விருந்தில் கலந்துகொண்டேன்; இருவரும் அறிவியல் ஆய்வில் முன்னணியில் இருந்தவர்கள். வெளிநாடுகளில் வாழும் சிறந்த இந்திய அறிவியலாளர்கள் தாய்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி விண்ணப்பங்களை அனுப்பிவருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதற்கும் முன்னால் இப்படி நடந்ததே இல்லை.
இந்தியாவில் அறிவியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் மேல் படிப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் வேலைக்காகவும் அயல் நாடுகளை நாடுவதே அதற்கு முன்னர் வழக்கம். அந்தப் போக்கு அப்படியே தொடர்ந்தாலும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இந்தியர்கள், தாய்நாடு நோக்கித் திரும்புவதும் அப்போது தொடங்கியது.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலக அளவில் அப்போது ஏற்பட்ட நிதித் துறை நெருக்கடியால் மேற்குலக நாடுகளின் பல்கலைக்கழகங்களும் கல்வி – ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாகக் குறைக்க வேண்டியதாயிற்று. எனவே, புதிதாக அறிஞர்களை வேலைக்கு அமர்த்துவதை அவை நிறுத்தின அல்லது குறைத்துக்கொண்டன. அதே காலத்தில் இந்தியா ஆராய்ச்சிகளுக்கும் மேல் படிப்புகளுக்கும் அதிக நிதியை ஒதுக்கியது.
‘அறிவியல் கல்வி, ஆராய்ச்சிக்கான இந்தியக் கழகங்கள்’ (ஐஐஎஸ்இஆர்) என்ற உயர்கல்வி நிறுவனங்களை, சங்கிலித் தொடர்போல பல நகரங்களில் நிறுவிவருகிறது ஒன்றிய அரசு. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) என்ற உயர்கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துவருகிறது. இவற்றில் பணிபுரிய ஏராளமானோர் இப்போது தாயகம் நோக்கித் திரும்புகின்றனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அறிவியலாளர்களின் நாட்டுப் பற்று
இதில் 1940களிலும் 1950களிலும் வெளிநாடுகளில் பி.எச்டி. பட்டம் பெற்ற பலர், தாய்நாட்டுக்குத் திரும்பினர். மேற்கத்திய நாடுகளிலேயே தங்கி அதிக ஊதியத்துடன் பல்வேறு வசதிகளையும் அனுபவித்திருக்கலாம் என்றாலும் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். (இ.கே.ஜானகி அம்மாள், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன், சதீஷ் தவான், உபைத் சித்திகி போன்றோர் அவர்களில் அடங்குவர்).
அவர்கள் அப்படித் திரும்ப முக்கியக் காரணம், தாய்நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த பற்று. சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்த, வளர்ந்த அவர்கள் மிகச் சிறந்த லட்சியங்களுடனும் அறநெறிகளுடனும் வாழ்ந்தனர். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதால் தாய்நாடு திரும்பி அதன் எதிர்காலம் சிறக்க, தங்களால் இயன்ற சேவையை நாட்டுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இருந்தது.
சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, அயல்நாடுகளில் பி.எச்டி. முடித்தவர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிட்டனர். அதற்கு முக்கியக் காரணம், தாய்நாட்டுப் பற்று மட்டுமே அவர்களை நாடு திரும்பச் செய்யப் போதுமானதாக இல்லை. தங்களுடைய துறையில் கட்டுப்பாடுகளற்ற வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், சற்றே வசதியான வாழ்க்கையை வாழவும், குடும்ப நிலையை மேம்படுத்தவும் விரும்பினர். வெளிநாடுகளில் நிலவிய சூழல் தாய்நாட்டிலும் இருந்திருந்தால் அவர்களிலும் பலர் நாடு திரும்பியிருப்பார்கள்.
இன்றைய நிலை என்ன?
பெங்களூரு நகரில் மூத்த 2 அறிவியல் அறிஞர்களுடன் 2009 விருந்தில் உரையாடியபோது, அறிவியல் ஆராய்ச்சிக்கான சூழல் நம் நாட்டில் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது, இப்போதைய நிலைமை கிடையாது. அப்போது பொருளாதாரம் நன்கு வளர்ந்ததால் அறிவியல் துறையில் பணிபுரிகிறவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. சமூகச் சூழலில் சகிப்புத்தன்மை மிகுந்திருந்தது. மற்றவர்களையும் அரவணைக்கும் போக்கும் நிலவியது. 1990களிலும் 2000த்தில் தொடக்க காலத்திலும் நிலவிய, மதவாரியான அணித் திரள்கள் குறைந்திருந்தது.
எனவே வருமானத்துக்கு உத்தரவாதம், சமூகத்தில் சுமுக நிலை ஆகியவை காரணமாக, சுதந்திரமாக ஆய்வுகளைச் செய்ய விரும்பிய இளம் விஞ்ஞானிகளுக்கு 2009ஆம் ஆண்டு - 1999, 1989, 1979களைவிட சிறப்பாக இருந்தது. வெளிநாடுகளில் பயின்ற இந்திய அறிவியலாளர்கள் மேலை நாடுகளிலிருந்து இந்தியா திரும்பினர்.
15 ஆண்டுகள் ஓடிவிட்டன, இளம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி முடித்த பிறகு வரும் போக்கில், இந்தியச் சூழல் இப்போது இருக்கிறதா? என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசைவிட, நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு அதிக ஆதரவு தருவதாக இல்லை. மன்மோகன் சிங்கே மெத்த படித்தவர் என்பதாலும் உலகின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழங்களில் உயர்கல்வி பெற்றவர் என்பதாலும் நவீன அறிவியலின் நன்மைகளை நன்கு அறிந்தவராக இருந்தார்.
நேருவின் அறியவிலும் மோடியின் அறிவியலும்
நரேந்திர மோடி சுயமாக கல்வி கற்றவர், அறிவுஜீவிகள் மீது அவருக்கு வெறுப்புணர்வு இருக்கிறது, ‘ஹார்வர்டில் படித்தவர்களைவிட கடின உழைப்பாளிகளை மதிக்கிறேன்’ என்ற அவருடைய ஆங்கிலக் கூற்று இதற்கு நல்ல உதாரணம்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களிடம் மேதா கர்வம் இருப்பதும், தங்களுடைய சமூக அந்தஸ்து, உயர்குடிப் பிறப்பு தொடர்பான மேட்டிமை மனப்பான்மை ஆதிக்கம் செய்வதும் உண்மைதான்; அவர்கள் சாமானிய பெண்களுடைய பிரச்சினைகள் குறித்து அதிகம் அறியாதவர்களாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. வலிமையான அறிவியல் ஆய்வுக் கட்டமைப்பும் ஆய்வுகளும் இல்லாமல் ஒரு நாடோ, பொருளாதாரமோ வளர்ச்சி அடைய முடியாது.
ஜவஹர்லால் நேரு இதில் தெளிவான சிந்தனை கொண்டிருந்தார், நாட்டில் ஐஐடிக்களை நிறுவினார், டாடா அறக்கட்டளை மூலம் அடிப்படை ஆய்வுகளுக்கான நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சிக் கழகங்களை ஏற்படுத்தினார் மன்மோகன் சிங். நேருவைப் போலவே மன்மோகனும் அடிப்படை அறிவியல் ஆய்வுகளை அதிலும் குறிப்பாக, உயிரியல் துறையில் ஊக்குவித்தார்.
இப்போது இயற்பியலைவிட உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது. 1980கள் முதல், அதற்கும் முன்னால் இருந்ததைவிட அதிக ஆய்வாளர்களை இந்திய அறிவியல் மையங்கள் உருவாக்கிவருகின்றன. இந்திய அறிவியல் துறைக்குத் தேவைப்படும் அறிவியல் நிபுணர்களை வெளிநாடுகளிலிருந்து மட்டுமல்ல, உள்நாட்டிலிருந்தும் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
மோடி பிரதமரான 2014க்குப் பிறகு இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு அரசியல்ரீதியாக சாதகம் அளிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைவதில் அவர் அக்கறை காட்டுகிறார். எனவேதான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) பெரும் புரவலராக இருக்கிறார். அறிவியல் – தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் அவருக்குப் பெரிய ஆர்வமெல்லாம் கிடையாது. இந்திய அறிவியல் கழகங்களின் (ஐஐடி) செயல்பாடுகளில் இந்துத்துவம் அதிகம் குறுக்கிட, வேண்டுமென்றே வழிவகுத்திருக்கிறார்.
முன்பெல்லாம் அறிவியல் துறையில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே இவற்றுக்கு இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள். இப்போதோ கட்சியின் நீண்ட கால வலதுசாரி விசுவாசிகளுக்கு இப்பதவிகள் தரப்படுகின்றன. இந்தப் பதவிக்கு வரும் இயக்குநர்கள், தங்களுடைய சங்கத்தின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், இறைச்சி உண்பவர்களை இழிவாகப் பேசுகின்றனர், வளாகத்தில் பசு காப்பகத்தைத் திறக்கின்றனர், சுதந்திர சிந்தனையுள்ள அறிஞர்கள் மாணவர்களிடம் பேச முடியாமல் தடுக்கின்றனர்.
9 சுட்டுரைகள்
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளராக இருப்பவர் கடந்த மாதம் அடுத்தடுத்து வெளியிட்ட 9 சுட்டுரைகள், இந்திய அறிவியல் துறையில் இந்துத்துவ சிந்தனைகளின் செல்வாக்கு எப்படி அதிகரித்துவருகிறது என்பதைக் காட்டுகிறது. அயோத்தியில் ராம நவமி அன்று ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி (சூரிய திலகம்) படுவதற்கு பெங்களூரில் உள்ள வானியியற்பியலுக்கான இந்தியக் கழகம் எப்படிப் பங்களிப்பைச் செய்தது என்று அந்தச் சுட்டுரைகளில் பாராட்டுகள் இடம்பெற்றிருந்தன.
அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பதவியேற்பதற்கு முன்னால் அவர், கான்பூர் ஐஐடியில் இயக்குநராக இருந்திருக்கிறார். அவருடைய சுட்டுரைகளை விமர்சித்தும் கேலிசெய்தும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டனர். புத்திசாலியான உயர்நிலைப் பள்ளி மாணவன் செய்துவிடக்கூடிய வேலையைத்தான், செயலாளர் புளகாங்கிதம் அடைந்து பாராட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஒருவர் எரிச்சலுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியில் துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற என்னுடைய நண்பரிடம் இதைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டேன். ஆலயத்துக்கு உள்ளேயேயும் மேலேயையும் கண்ணாடி லென்ஸ்களையும், பிரதிபலிக்கும் கண்ணாடிகளையும் உரிய கோணங்களில் பொருத்தினாலே, குறிப்பிட்ட நாளில் சிலையின் நெற்றியில் அந்த ஒளி படுமாறு செய்துவிட முடியும் என்றார்.
அதற்கு முன்னால் சூரியன் – சந்திரன் ஆகியவற்றின் பயணப் பாதைகளைக் கவனித்து, குறிப்பிட்ட நாளில் ஒளி எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் விழும் என்பதைக் கணித்தாலே இது சாத்தியம்தான் என்றார். இதிலிருந்து இது சாதாரண விஷயம், இப்படிப் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டியதில்லை என்பது புலனாகிறது. அதிலும் உயர் அறிவியல் - ஆய்வுத் துறையின் தலைவர் இதைச் செய்திருக்க வேண்டியதில்லை.
அறிவியல்-தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பக்தி மிகுந்த இந்து; நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் – ஆன்மிக நோக்கில் அல்ல – பிரதமர் அந்த ஆலய அர்ப்பணிப்பு விழாவை நடத்தினார் என்பது அந்தச் செயலாளருக்கும் நிச்சயம் தெரியும். பிரதமர் அந்த நிகழ்ச்சியில் சம்பிரதாயமான சடங்குகளைத் தொடங்குகிறவராகவும், அதற்குக் காரணராகவும், தலைமைப் பூசாரியாகவும் பல்வேறு நிலைகளில் பங்களிப்பு செய்தார்.
ஒரு சிலையின் நெற்றியில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி பிரதிபலிக்கச் செய்வதைவிட முக்கியமான பல பணிகள் தனக்கிருப்பதை அறிவியல், தொழில்நுட்பத் துறை இயக்குநர் உணர வேண்டும். ஆனால், அவரே சாதாரணமான நிகழ்வை, கௌரவமிக்க நிறுவனத்தின் பெரிய சாதனை போல பாராட்டி பரவசப்பட்டார். தேர்தல் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்னால் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை திட்டமிட்டு பிரதமர் நடத்தியது தற்செயலான நிகழ்வு அல்ல.
இந்தியாவில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களை மகிழ்வித்து தங்களுடைய நன்றியுணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே வந்துவிடுகிறது. செயலாளரும் அப்படித்தான் நடந்துகொண்டார் என்றாலும் ஆழ்ந்த கவலையையே இது அளிக்கிறது.
மோடி அரசின் தாக்குதல்கள்
மோடி அரசு பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது, அரசு இயந்திரச் செயல்பாட்டில் அரசியலைப் புகுத்துகிறது, அரசு அதிகாரிகளும் அயலுறவுத்துறை நிர்வாகிகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுகின்றனர், ராணுவத்தின் மதச்சார்பின்மையை நீர்த்துப்போக வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, சுயமாகச் செயல்பட வேண்டிய அரசு நிறுவனங்களை அது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது என்பதெல்லாம் ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பது மட்டும் எவர் கண்ணிலும் அதிகம் படாமல் இருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பத் துறையின் சுட்டுரை பதிவுகளுக்குப் பிறகு ஒருவேளை அனைவர் கவனமும் இதன் மீது திரும்பக்கூடும்.
‘ஆரிய இனம்தான் உயர்ந்தது – உலகை ஆளப் பிறந்தது’ என்ற நாஜிகளின் சிந்தனை ஜெர்மனியின் அறிவியல் ஆற்றலை அழித்தது. மார்க்ஸியத்தின் வறட்டு அரசியல் சித்தாந்தம், ரஷ்யாவில் அறிவியல் ஆய்வுகளைப் பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கி நகர்த்தியது. இப்போது இந்தியாவின் உயர் அமைப்புகளில் இருப்பவர்கள் ‘இந்து – இந்துத்துவா - நரேந்திர மோடி’ புகழைத் தங்களுடைய பணிகளில் சேர்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் செயல்கள் நம்முடைய அறிவியலாளர்களுடைய நடவடிக்கைகளிலும் மனோ தைரியத்திலும் எந்தவித மாற்றங்களை ஏற்படுத்தும்?
இவ்வாறு அரசியலுக்கும் மதத்துக்கும் உட்பட்டுத்தான் அரசியல் ஆய்வுகளும் முடிவுகளும் இருக்க வேண்டும் என்ற நிலை உருவானால் அறிவாற்றல் மிக்க எந்த ஆராய்ச்சியாளர் வெளிநாடுகளிலிருந்து நல்ல வாய்ப்பு வரும்போது போக வேண்டாம் என்று நினைப்பார் – அல்லது வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற எந்த இந்திய விஞ்ஞானிதான் தாய்நாட்டுக்கு வர விரும்புவார்?
தொடர்புடைய கட்டுரைகள்
நாசிர்: பேசப்பட வேண்டிய ஒரு முன்னோடி
சூழலியல் முன்னோடி ராதாகமல் முகர்ஜி
மாதவ் காட்கில்: மக்களுக்கான சூழலியலாளர்
முதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்
குலசேகரபட்டின முக்கியத்துவம் என்ன?
நிலவில் ‘தங்க’ வேட்டை
அறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்
தமிழில்: வ.ரங்காசாரி
4
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.