அரசியல், கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

ஹிஜாப்: கேள்விகளே தவறு!

யோகேந்திர யாதவ்
15 Feb 2022, 5:00 am
2

ள்ளிக்கூடங்களில் ஹிஜாப் அணியக் கூடாது என்ற தடைக்கு எதிராக மதச்சார்பற்ற தன்னார்வலர்களும் சுதந்திரச் சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளனர். இதுதான் பிரச்சினையே!

அதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினை மதச்சார்பின்மையை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை உண்டாக்கிவிடவில்லை. மாறாக, மதச்சார்பின்மையை எதிர்க்கும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்குள்ளேயே பிளவை ஏற்படுத்திவிட்டது.

தவறான கேள்விகள்

ஓர் உதாரணத்துக்கு இது தொடர்பாக ‘தி பிரின்ட்’ நாளிதழில் வெளியான ஐம்பது வார்த்தைகளைக் கொண்ட தலையங்கத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அது என்ன சொல்கிறது?

“கர்நாடகத்தில் இப்போது எழுந்துள்ள ஹிஜாப்-காவித் துண்டு சர்ச்சையானது, மிதவாதிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள் போன்றோரின் குரல்களைக்கூட, இளம் பெண்கள் பொதுவெளியில் தங்களுடைய உடல் தெரிய போகக் கூடாது என்ற பழமையான ஒடுக்குமுறைக் கொள்கையை ஆதரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இந்துப் பெண்கள் வட இந்தியாவில் ‘கூங்கட்’ என்கிற தலைக்கு முக்காடு அணியும் பழக்கம் சரியா, சீக்கியர்கள் டர்பன்கள் அணியலாமா என்றெல்லாம் - நீங்கள் செய்தால் சரியா என்ற வகையில் - எதிர்வாதங்கள் வைக்கப்படுகின்றன.

ஷா பானு விவாகரத்து வழக்கில் முஸ்லிம்களுடைய மத உரிமைகளில் தலையிடக் கூடாது என்று விவாதிக்கப்போய் அரசியல்ரீதியாக சிராய்ப்புக் காயங்களுக்கு உள்ளான நிலை, மதச்சார்பற்றவர்களுக்கு மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது. அந்த விவகாரம் இன்னமும் நம்மை வாட்டுவதை நிறுத்தவில்லை!”

இந்தத் தலையங்கம் சரியா?

அதாவது,  "ஹிஜாபை முஸ்லிம் பெண்கள் விரும்பி அணிவதில்லை, மதப் பெரியவர்கள் கட்டாயப்படுத்துவதால்தான் அணிகின்றனர் என்ற பொருள் இதில் ஒலிக்கிறது. அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றே வருகிறது. எனவே அனைத்து இந்தியர்களும் தலையிட்டு பெண்களின் சுதந்திரத்தை மீறும் இச்செயலைத் தடுக்க வேண்டும்" என்ற வலியுறுத்தல் இந்தத் தலையங்கத்தில்  இருக்கிறது. இது சரியா?

தவறான கேள்விகள்

கேள்விகள் இப்படித்தான் எழுப்பப்படும் என்றால், பதில் எப்படி இருக்கும் என்று புரிந்துகொண்டுவிடலாம், அது சரியாக இல்லாவிட்டாலும்.

ஆண்களுடையதை அல்ல – பெண்களுடைய உடலை மூடிக்கொள்ள வேண்டும் என்று வெவ்வேறு மதங்களில், இனக் குழுக்களில் நிலவும் நடைமுறை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது உண்மையே. ஆனால், எந்த ஒரு வகை ஆடையைப் பற்றியும், 'அது இப்படிப்பட்டதுதான்' என்று நாமாக ஒரு முடிவுக்கு வர முடியாது - அதை அணிபவருக்கு அதைப் பற்றிய சிந்தனை என்ன இருக்கிறது எனும் விஷயம் முக்கியம்!

இப்படி ஆடை அணிவது அடிமைத்தனம் என்று ஒருவர் கருதலாம், இதுவே புரட்சிகர வெளிப்பாடு என்று இன்னொருவர் மகிழலாம். ஒரு நபருக்கே வெவ்வேறு காலகட்டங்களில் ஆடைகளைப் பற்றிய கருத்தும் மாறுபடலாம்.

கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் குறித்து உண்மையில் என்ன கருதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய அறியாமையையே, நெறியானது என்று கருதிக்கொண்டு, ஹிஜாபை முஸ்லிம் பெண்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள் என்று நான் விளக்கம் அளிக்கக் கூடாது. அப்படிச் சொல்வது முரட்டுத்தனமாகவும், நவீனத்தின் ஆணவக் குரலாகவுமே மாறிவிடும். அப்படிச் சொல்வதில் எந்தச் சுதந்திரமான கருத்துகளும் இல்லை.

இதை நாம் சந்திப்போம்; சீருடை என்பது இயற்கையானது அல்ல. ஆடை அணிவதற்கான நியதிகள் என்பவை, கலாச்சாரரீதியாக எதை வழக்கமானது என்கிறோமோ அதையே சீராக - எல்லோரும் ஒரே மாதிரியாக - அணிந்துவர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரக் குழுதான், எது இயல்பு என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த விவகாரத்தில் குறுக்கிட்டு கருத்து தெரிவித்த நிவேதிதா மேனன் கூறியபடி, "சீருடையைக் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என்று விதிப்பதாலேயே சமூகத்தில் சமத்துவமும் – நீதியும் ஏற்பட்டுவிடுவதில்லை."

எது இயல்பான ஆடை?

எது இயல்பான ஆடை என்பது அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். அது அப்படித்தான் அவ்வப்போது மாறிக்கொண்டும்வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரையில் மருத்துவமனை செவிலியர்கள் முழுங்கால்களுக்குக் கீழே தெரியும் வகையில் பாவாடை அணிந்து பணிக்கு வந்தார்கள். அவர்களே அதை எதிர்த்த பிறகு, சல்வார்-கம்மீஸ் பாணி ஆடை அமலுக்கு வந்தது. கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் எதை மாற்ற வேண்டுமோ அதைச் சமூகமே மாற்றிக்கொண்டு புதிதானதொரு இயல்பைக் கடைப்பிடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் சீருடை தொடர்பாக இப்போது நடந்துவரும் விவாதங்களும் இதைப் பற்றியவைதாம். குறிப்பிட்ட வகை ஆடையானது,  ஒடுக்குமுறையின் அடையாளம் என்று ஆணையிடுவதன் மூலம் இந்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது. மத அடிப்படையிலான வெளிப்பாடுகளைக் கட்டுப்பாடுகளில்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டும் இதை முடித்துவிட முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடை என்ற வழக்கத்தையே தூக்கி எறியும் வரையில், ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மத – கலாச்சார எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது என்ற சமரசத்துக்கு நாம் வந்தாக வேண்டும்.

சீருடைகளே கூடாது என்பதை ஆதரிக்கிறேன். இந்த விவகாரம் பேசித் தீர்க்கப்பட்டுவிட முடியும், நம் நாட்டில் இப்படித்தான் பல விவகாரங்கள் பேசித் தீர்க்கப்பட்டுள்ளன. இரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுநிலையான மேடையும், நேர்மையான வழிமுறைகளும் இதற்குப் போதும்.

விவாதங்கள் வேண்டும்

இப்போதைய விவாதம் ஹிஜாப் அணிவது நன்மையா, தீமையா என்பதல்ல. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை விரும்பலாமா, கூடாதா என்பதுதான் கேள்வி. அது அவரவர் குடும்பங்களுக்குள், நண்பர்கள் நிலையில், சமூகத்தில், விடுதி அறைகளில், கல்லூரி கேன்டீன்களில் நடத்தப்பட வேண்டிய விவாதம்.

என்னுடைய சிறு வயது முதல் என்னுடைய சீக்கிய சக தோழர்களிடையே அத்தகைய விவாதங்கள் நடப்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். சீக்கிய மத வழக்கப்படி சிகையை வெட்டாமலேயே வளரவிட வேண்டுமா, அல்லது வெட்டிக்கொள்ள வேண்டுமா; டர்பன் அணிய வேண்டுமா, வேண்டாமா என்று அவர்கள் தங்களுக்குள் விவாதிப்பார்கள்.

இந்த விவாதங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், அப்பா – மகன் இடையேகூட  பேச்சுவார்த்தையே முறிந்துபோகும் அளவுக்கும் நடக்கும். 1984-க்குப் பிறகு சீக்கியர்கள் தங்களுடைய தாடியை மிக நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்தப் போக்கு மறைந்துவிட்டது.

இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டும், நடைபெறுவதும் நல்லது - அவை அந்தந்தச் சமூகங்களுக்குள் நடக்க வேண்டும். ஹிஜாப் என்பது அடக்குமுறையின் சின்னம் என்று கருதும் அந்தச் சமூகத்தவர்களே மற்றவர்களுடன் விவாதித்து கருத்தொற்றுமை மூலம் முடிவு காணப்பட வேண்டும்.

கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்

இன்று உண்மையில் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் இவைதான்!

தன்னுடைய ஆடைக் கலாச்சாரத்தைப் பிற சமூகங்கள் மீது ஒரு பெரும்பான்மைச் சமூகம் திணிக்கலாமா? ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டுவரும் நியதிகளை, மாணவர்கள் - பெற்றோர்களிடம் ஆலோசனை கலக்காமல் கல்வி நிலையங்கள் தாங்களாகவே மாற்றலாமா? சிறுபான்மைச் சமூக மத வழக்கங்களை, பெரும்பான்மை மத அரசியல் கட்சிகள் மீறலாமா? எல்லாவற்றையும்விடவும் மோசம், யார் எதை அணிய வேண்டும் என்பதை வீதியில் திரியும் லும்பன்களா தீர்மானிப்பது?

இந்தக் கேள்விகளுக்குத்தான் இந்தியர்களான நாம் பதில் அளிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுடன் வேறு கேள்விகளையும் சேர்ப்பது, வீதியில் திரியும் லும்பன்கள் நமக்கு விரித்திருக்கும் வலையில் நாம் போய் விழவே வழிசெய்யும்.

இந்த விவகாரம் எங்கே, எப்போது பெரிதாகிறது என்பதைக் கவனியுங்கள். வகுப்புவாத அரசியலால் தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கர்நாடகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இது பிரச்சினையாகிவருகிறது. இந்த சர்ச்சை நெடுநாள்களாக இருந்தாலும் உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில் இது சூடு பிடித்திருக்கிறது – மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜாட்டுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் விவசாயப் போராட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் நட்புறவைப் பிரிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோற்ற நிலையில் இந்த சர்ச்சை பெரிதாகிறது. வீதியில் திரியும் லும்பன்கள் வம்புக்கு வருவார்கள், பிறகு மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் இந்த விவாதத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தே இதைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆகையால், தவறான கேள்விகளை நாம் புறந்தள்ளுவோம். சரியான கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

நான் எழுதலாம் என்ற கருத்தை கடைசி பத்தியில் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அப்புறம் என்னத்த கருத்து சொல்றது?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

Excellent

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அதிக சம்பளம் வாங்க வழிகூடாதாசெய்யது ஹுசைன் நாசிர்சீன கம்யூனிஸ்ட் கட்சிதொல்லை தரும் தோள் வலி!புலிகள்இரவு நேர அரசு மருத்துவமனைவயிற்றில் அடிக்கிறார்கள் ஒரு செய்திசமஸ் - ச.கௌதமன்ஆண்டாள்காந்திய சிந்தனைஆஸ்துமாவிவசாய அமைப்புகள்அகிலேஷ் யாதவ்பள்ளிகள்ஜி.குப்புசாமிஎதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்புபடைப்புத் திறன்ஒன்றிய நிதிநிலை அறிக்கை - 2024வசனம்வேலைத் திறன் குறைபாடுஷோயப் தன்யால் கட்டுரைபாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைஉழைப்புமக்கள் நலக் குறியீடுசாதியவாதம்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்கேள்வி நீங்கள் பதில் சமஸ்மில்மா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!