கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு
ஃபின்லாந்து கல்வியில் ஆசிரியருக்கான முக்கியத்துவம்
ஃபின்லாந்துக் கல்வித் துறையில் அடுத்து நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அம்சம், ஆசிரியர்களுக்கான அதிகாரம்.
ஃபின்லாந்தின் புகழ்பெற்ற அரசியலர்களில் ஒருவர் பேர் ஸ்டேன்பேக். 1979-1983இல் கல்வி அமைச்சராக இருந்தவர். சர்வதேச அளவில் 2015இல் போர்டோ ரிகோவில் நடந்த கல்வியாளர் மாநாட்டில் பங்கேற்ற அவரிடம், “ஃபின்லாந்து கல்வியின் வெற்றிக்கான ரகசியத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், “கல்விக்கும் ஆசிரியர்களுக்குமான மரியாதைக்குரிய பிணைப்பு; அதை நாங்கள் உருவாக்க 150 ஆண்டுகள் ஆனது!”
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
ஃபின்லாந்து பள்ளி உணவு: எதிர்காலத்துக்கான முதலீடு
13 Nov 2022
கல்வித் துறையின் அதிகாரப்பரவலாக்கம்
ஃபின்லாந்து கல்வித் துறை அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கல்வித் துறையின் தன்னாட்சி உரிமைகள் உள்ளாட்சி வலையத்திற்குள் வருபவை. பள்ளிக்கூட நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகளே முக்கியப் பங்கு வகிக்கும். ஃபின்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகளின் அதிகாரங்கள் இன்னும் கீழே இறங்கிபோய் ஆசிரியர்கள் இடத்தில் மிகுந்து இருப்பவை.
ஃபின்லாந்தில், தேசியப் பாடத் தொகுப்பு (national curriculum framework) என்பது, 1970க்குப் பிறகு ஒரு வழிகாட்டியாக உண்டே தவிர, பள்ளிக்கூடங்களில் ஒரே மாதிரியான பாடங்கள் இருப்பதில்லை. அரசின் வழிகாட்டலை ஒரு திசைகாட்டியாக எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பகுதிகள், அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பாடங்களை ஆசிரியர்களே வகுத்துக்கொள்கிறார்கள். எந்தப் பள்ளியில் எம்மொழிகளில் பாடம் இருத்தல் வேண்டும், துணை மொழிப்பாடங்கள் எவையவை இருத்தல் வேண்டும், எந்த வயதில் எந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தொடங்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தது ஆகும். உள்ளாட்சி அமைப்புகள் ஆசிரியர்களின் வழிகாட்டல்படி இந்த முடிவுகளை எடுக்கின்றன.
குறிப்பாக, அரசியல் அதிகாரப்பரவலாக்கச் சீர்த்திருத்தங்கள் வலுவாகக் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில், கல்விக்கான அதிகாரப்பரவலாக்க நடைமுறைகளும் இங்கே வலுவாகின. இதன் காரணமாக 320 உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளை நடத்தும் முழுமையான தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன.
உள்ளூர் பண்பாடு, உள்ளூர் மொழி, உள்ளூர் பொருளாதாரம் இவையெல்லாம் கல்வியில் பிரதிபலிப்பது முக்கியம் என்பதில் உறுதிபட இருக்கிறது ஃபின்லாந்து. இன்னும் சொல்லப்போனால், அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பிற நாட்டினர், பிற மொழியினரையும் கருத்தில் கொண்டு, பள்ளியில் பயிலும் பல்வேறு நாட்டினருக்கும் ஏற்றார்போல கல்வி வழங்குகின்றனர்.
(அடுத்த ஞாயிறு மேலும் பேசுவோம்...)
4
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.