கட்டுரை, அரசியல், வரலாறு 7 நிமிட வாசிப்பு

காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்

ராமச்சந்திர குஹா
02 Feb 2023, 5:00 am
1

காந்தி மறைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன; இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் காந்தி இந்நாட்டுக்கு முக்கியமானவரா? அவருடைய நினைவைப் போற்றாமல் இருக்க முடியாதா? இதோ இந்தக் கட்டுரையில், 21வது நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிலும் காந்தி, அவருடைய வாழ்க்கை நெறி, அவரது சிந்தனைகள் ஆகியவை இந்த நாட்டுக்கு இன்னமும் எந்தெந்த வகையில் அவசியப்படுகின்றன என்பதற்கு வலுவான பத்து காரணங்களை முன்வைக்கிறேன். 

அமைதிப் போராட்டங்களின் தொடக்கம்

முதலாவது காரணம்: அநீதியான ஆட்சியாளர்களை வன்செயல்களால் எதிர்க்காமல், அகிம்சை மூலம் எதிர்க்கும் சத்யாகிரகப் போராட்ட வழிமுறையை இந்தியாவுக்கும் இந்த உலகுக்கும் அவர் அளித்தார். நிற அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தும் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் சட்டங்களை எதிர்க்க, காவல் துறையினர் தாக்கினாலும் திருப்பித் தாக்காமல் அமைதியாக கோஷமிட்டு கைதாவது என்ற முடிவை ஜோகன்னஸ்பர்க் நகரின் எம்பயர் தியேட்டர் என்ற அரங்கில் 1906 செப்டம்பர் 9இல் காந்தியின் தலைமையில் அனைவரும் கூடி எடுத்ததன் மூலம் சாத்வீகமான போராட்ட வழிமுறை பிறந்தது.

இந்த நிகழ்வுக்கு 95 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டைக் கோபுரங்களை அல்காய்தா அமைப்பைச் சேர்ந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் 2001 செப்டம்பர் 11இல் விமானங்கள் மூலம் மோதி தகர்த்து ஏராளமான உயிரிழப்புகளையும் பலத்த சேதங்களையும் ஏற்படுத்தினர். காந்தி வகுத்த வழிமுறை - தன்னையே தியாகம் செய்துகொண்டு வன்முறையற்ற முறையில் கோரிக்கைகளுக்காகப் போராடுவது; பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - எதிரிகளை அச்சுறுத்த கடுமையான தாக்குதலையும் வன்முறையையும் பயன்படுத்துவது.

அநீதிக்கு எதிராக சாத்வீக முறையில் போராடுவது தார்மிக வெற்றியைத் தருவதுடன், நெறி மிக்கதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது, மாற்று வழிமுறைகளால் கோரிக்கைகளும் நிறைவேறுவதில்லை, யாருடைய ஆதரவும் அனுதாபமும் கிடைப்பதில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவில் முதலிலும், பிறகு இந்தியாவிலும் காந்தி கையாண்ட சாத்வீகப் போராட்டங்கள் உலகின் பல பகுதிகளிலும் பலரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாளப்படுகின்றன, குறிப்பாக அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் இந்த முறையையே கையாண்டு வெற்றி பெற்றனர்.

இந்தியாவைப் புரிந்துகொள்ளுதல்

இரண்டாவது காரணம்: காந்தி இந்த நாட்டையும் கலாச்சாரத்தையும் நேசித்தார். நாட்டைச் சிதைக்கும் குணங்களை அடையாளம் கண்டு அவற்றைச் சீர்படுத்த முனைந்தார். வரலாற்று அறிஞர் சுநீல் கில்னானி ஒருமுறை கூறியதைப் போல, காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக மட்டுமல்ல இந்தியர்களுக்கு எதிராகவும் போராடினார். இந்தச் சமூகத்தில் பிளவு மனப்பான்மையும் அசமத்துவமும் ஆழ வேரோடிக் கிடந்ததை நன்கு உணர்ந்திருந்தார். சாதி அடிப்படையில் இங்கு கடைப்பிடிக்கப்பட்டுவந்த தீண்டாமைக் கொடுமையை ஒழித்தால்தான் இந்தியர்கள் உண்மையான சுதந்திரம் பெறத் தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று அதை எதிர்க்கும் போராட்டங்களில் ஈடுபட்டார். அவரை முழுக்க முழுக்கப் பெண்ணியர் என்று கூறிவிட முடியாது என்றாலும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் பெண்களைப் பொதுவாழ்வுக்கு பெரும் எண்ணிக்கையில் ஈர்த்தவர் அவர்.

மூன்றாவது காரணம்: காந்தி ஏன் முக்கியம் என்பதற்கு, இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த அவர் மக்களுடைய குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக வைக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறியதில்லை. இந்துக்களை சாதிகள் கிடைமட்டமாகப் பிரித்தது என்றால், மதம் செங்குத்தாகப் பிளந்தது. இப்படி செங்குத்தாகப் பிளந்தவர்களுக்கும் வரலாற்றுரீதியாக எதிரெதிராக நின்றவர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் காந்தி. இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக அவர் எடுத்த முயற்சிகள் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட்ட அக்கறையில் பிறந்தவை. அதற்காகவே வாழ்ந்தார், அதற்காகவே தன்னுடைய இன்னுயிரையும் ஈந்தார்.

நாலாவது காரணம்: காந்தி குஜராத் மாநிலக் கலாச்சாரத்தில் பெரிதும் ஊறியவர், குஜராத்திய மொழியில் நல்ல உரைநடையில் எழுதக் கூடியவர் என்று பெயரெடுத்தவர், அப்படியிருந்தும் குறுகிய பிராந்தியவாதியாக அவர் இருந்ததே இல்லை. தன்னுடைய மதம் தவிர பிற மதங்கள் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்ததைப் போலவே, குஜராத்தியைப் போல பிற மொழிகள் மீதும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியாவின் மத – மொழி பன்மைத்துவத்தின் பலத்தை வெளிநாடுகளில் இருந்தபோது அவர் நேரடியாக அனுபவத்தில் உணர்ந்திருந்தார். பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவருக்குத் தோழர்களாக இருந்தவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல முஸ்லிம்கள், பார்சிக்களும்தான்; குஜராத்திகளைப் போலவே தமிழர்களும் அவரை ஆதரித்துப் பின்பற்றி நடந்தார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

காந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?

ரோஹித் குமார் 30 Jan 2023

உலக ஆளுமைகளை வரித்துக்கொள்ளுதல்

ஐந்தாவது காரணம்: அவர் சிறந்த தேசபக்தர் மட்டுமல்ல சர்வதேசப் பிரஜையும்கூட. இந்திய நாகரிகத்தின் தொன்மையையும் வளமையையும் நன்கு அறிந்திருந்தார், ஆனாலும் இருபதாவது நூற்றாண்டில் எந்த நாடும் கிணற்றுத் தவளைப் போல தன் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அது இன்னொருவர் கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்க்கும் செயலுக்கு ஒப்பானது. இந்திய விழுமியங்கள் மட்டுமல்ல மேற்கத்திய விழுமியங்களும் அவர் மீது செல்வாக்கு செலுத்தின. அவருடைய மெய்யியல், அரசியல் தோற்றங்களுக்கு லியோ டால்ஸ்டாயும் ரஸ்கினும் காரணமாக இருந்தார்கள், எப்படி கோபாலகிருஷ்ண கோகலேயும் ராய்சந்த்பஹியும் அவரை ஈர்த்தார்களோ அப்படியே. நிறவேற்றுமை கடந்து அனைத்துப் பிரிவினரிலும் அவர் நண்பர்களைப் பெற்றிருந்தார். ஹென்றி, மில்லி போலக், ஹெர்மான் கல்லன்பாக், சி.எஃப்.ஆண்ட்ரூஸ் என்று ஒவ்வொருவருமே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொதுவாழ்க்கைக்கும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

காந்தி தன்னுடைய பாரம்பரியமாக இந்த ஐந்து அம்சங்களை நமக்கு விட்டுச் செல்லாமல் இருந்தால் நாம் எப்படி மாற்றுப் பாதையில் சென்று தடுமாறியிருப்போம் என்று விளக்க, இங்கே சற்று இடைவெளி விடுகிறேன். கோரிக்கைகளுக்காக வன்முறை வேண்டாம் – பேசுவோம் என்று காந்தி சாத்வீக வழிமுறையைக் கையாண்டதால்தான் இன்று இந்தியாவில் பல கட்சி ஜனநாயக அரசியல் அமைப்புமுறை வலுவாக இருக்கிறது. (இந்தியாவுடன் சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற பல ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில், ஒரே கட்சியின் சர்வாதிகார ஒற்றை ஆட்சிமுறை ஏற்பட்டு சீரழிவையே ஏற்படுத்திவிட்டன).

காந்தியும் அம்பேத்கரும் பாலின – சாதிய சமத்துவம் அவசியம் என்று வலியுறுத்தியதால், சமத்துவ லட்சியங்கள் அரசமைப்புச் சட்டத்திலேயே இடம்பெற்றுவிட்டன. காந்தியும் நேருஜியும் மத – மொழி சுதந்திரங்களை வலியுறுத்தியதால் – பெரும்பாலான நாடுகளைப் போல அல்லாமல் – பெரும்பாலான மக்களைக் கொண்ட மேலான மதம் அல்லது அதிகம் பேர் பேசும் ஒற்றை மொழி அடிப்படையில் நாட்டு மக்களின் குடியுரிமை வரையறுக்கப்படவில்லை.

அம்பேத்கரையும் நேருவையும் இங்கே குறிப்பிட்டிருப்பது எதற்கு என்றால், சுந்திர இந்தியாவையும் ஜனநாயகப் பண்புகளையும் அனைவரையும் அரவணைக்கும் தேசியப் பண்புகளையும் காந்தி மட்டுமே உருவாக்கினார் என்று கூற நான் வரவில்லை. அவருடைய தலைமையாலும் வழிகாட்டலாலும் ஜனநாயகம், பன்மைத்துவக் கலாச்சாரம், சமூக சமத்துவம் ஆகியவை உருவாக, முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்பதையே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சூழலியர் காந்தி

ஆறாவது காரணம்: காந்தி நம் அனைவருக்கும் முன்னதாகவே சுற்றுச்சூழலைக் காக்கும் இயற்கை ஆர்வலராக இருந்திருக்கிறார். கடிவாளமில்லாத பொருள் உற்பத்தி வழிமுறைகளும் மிதமிஞ்சிய நுகர்வியமும் நாட்டை மட்டுமல்ல, இந்தப் புவியையே நாசப்படுத்திவிடும் என்று எச்சரித்தார். “மேற்கத்திய நாடுகளைப் போல பேராசையுடன் பொருள் உற்பத்தியில் இந்தியா வேகம் காட்டக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

ஒற்றைத் தீவு நாட்டின் ஏகாதிபத்தியம் (இங்கிலாந்து) இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை அடிமைச் சங்கிலியில் பிணைத்திருக்கிறது; முப்பது கோடி மக்களைக் கொண்ட (இந்திய) நாடும் இதேபோல பொருளாதாரச் சுரண்டலை மேற்கொண்டால் உலகம் முழுவதையுமே வெட்டுக்கிளிகள் மேய்ந்த பாழ்பட்ட நிலம்போல கட்டாந்தரையாக்கிவிடும்” என்று 1928 டிசம்பரிலேயே எச்சரித்திருக்கிறார். பெரும் முதலீடு தேவைப்படும், மூலாதாரங்களை வரம்பின்றிப் பயன்படுத்தும், பேரளவில் மின்னாற்றல் தேவைப்படும் மேலை நாட்டு பெருந்தொழில் உற்பத்தி முறைகள் மேற்கத்திய நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு இப்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளால் பின்பற்றப்படுகிறது.

இந்த உற்பத்தி முறையால் ஏற்படும் பருவநிலை மாறுதல்களும் நிலம் – நீர் - காற்று மாசுபடல்களும் வெட்டுக்கிளிகள் மேய்ந்த கட்டாந்தரையாகத்தான் புவிக்கோளத்தை மாற்றப்போகின்றன. நம்முடைய பூமிப்பந்து நீடித்து வாழவும் அதில் உள்ளவர்கள் பாதிப்பின்றி இருக்கவும் நெறிசார்ந்த வழியில் உற்பத்தியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, பொறுப்புடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள குடிசைத் தொழில்களும் கைத்தொழில்களுமே போதும் என்றார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்

சமஸ் 22 Sep 2021

பிடிவாதத்தைத் துறத்தல்

ஏழாவது காரணம்: பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் அவருக்கு ஏற்பட்ட சோதனைகளாலும் அனுபவங்களாலும் வளர்ச்சி பெற்று, புதிய உருவமெடுத்து தன்னுடைய எண்ணங்களையும்கூட அவர் புதுப்பித்துக்கொண்டார். “உண்மைகள் மாறும்போது நானும் என் மனதை மாற்றிக்கொள்கிறேன் - நீங்கள்?” என்று பொருளியல் மேதை ஜான் மேனார்டு கீன்ஸ் கூறியதாக ஒரு மேற்கோளைத் தவறாகவே இன்றளவும் குறிப்பிடுகின்றனர். “எப்போதும் ஒரே கருத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்க மாட்டேன், நான் கணத்துக்குக் கணம் என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்வது அவசியம் என்ற உண்மை நிலை நேரிட்டால் மாற்றிக்கொள்ளத் தயங்கமாட்டேன், முந்தைய நிலைக்கு இது முரணாக இருக்கிறதே என்று முரண்டுபிடிக்க மாட்டேன்” என்றே 1934இல் காந்தி தெளிவுபடக் கூறியிருக்கிறார். 

தன்னுடைய வாழ்நாளில் மூன்று முக்கிய பிரச்சினைகளில் காந்தி தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவை நிறம், சாதி, பாலினம் தொடர்பானவை. இளவயதில் இருந்த பிடிவாதமான போக்கை, காலம் செல்லச் செல்ல தெளிவடைந்து முற்போக்காளர்களைப் போல மாற்றிக்கொண்டிருக்கிறார். ஏனென்று சிந்திக்காமலே நிறத்தைப் போற்றிக்கொண்டிருந்த அவர், நிறவெறிக்கு எதிரான கொள்கையுள்ளவராகச் செயல்பட்டார்.

சாதியப் படிநிலைகளை எதிர்ப்பதிலும் கண்டிப்பதிலும் தயக்கமும் கூச்சமும் கொண்டிருந்த அவர், பிற்காலத்தில் நேரடியாகவும் வலுவாகவும் எதிர்த்தார். அரசியல் சார்பற்ற வேலைகளைப் பெண்களுக்கு முதலில் ஒதுக்கிய அவர் காலப்போக்கில், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு முக்கியப் பங்களித்தார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

காலவெளியில் காந்தி

பாலசுப்ரமணியம் முத்துசாமி 08 Sep 2021

திறமைகளைக் கண்டெடுத்தல்

எட்டாவது காரணம்: தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பெரிய தலைவர்களாக உருவாக்கும் அரிய கலையை அவர் கையாண்டார். திறமையுள்ளவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு, அருகில் வைத்துக்கொண்டு பயிற்சி தந்து, பிறகு அவர்களே அதை மேலும் வளர்த்துக்கொள்ளச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். அவருடைய சீடர்களாகச் சேர்ந்து தலைவர்களாக உருவானவர்கள் ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், கமலாதேவி சட்டோபாத்யாய், சி.ராஜகோபாலாச்சாரி, ஜாகீர் உசைன், ஜே.பி.கிருபளானி, ஜே.சி.குமரப்பா, சரளா தேவி (காதரீன் மேரி ஹெய்ல்மான்) இன்னும் ஏராளமானோர்.

எதிர்காலத் தலைவர்களை உருவாக்கியதில் காந்திக்கு இருந்த ஆற்றலுக்கு நேர்மாறானது, இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரதமர்கள் என்று போற்றப்படும் மூவருடைய பொதுவாழ்க்கை. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகிய மூவருமே வெவ்வேறு வகையில் தலைமைத்துவம் மிக்கவர்கள், ஆளுமையும் அரசியல் சிந்தனையும் கொண்டவர்கள். கட்சி, ஆட்சி, நாடு என்று அனைத்தையுமே மூவரும் தங்களோடு மட்டுமே அடையாளப்படுத்துகிறவர்கள். இந்த விஷயத்தில் நேருவை மிஞ்சினார் இந்திரா காந்தி. நரேந்திர மோடியோ இதை மேலும் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.

இந்த மூவருமே தங்களைவிட்டால் நாட்டைக் காப்பாற்ற யாருமே இல்லை என்ற சிந்தனை உள்ளவர்கள், தங்களுடைய இடத்தை நிரப்பும் ஆற்றல் உள்ளவர்கள் யாரும் இல்லை என்று நினைப்பவர்கள். அரசியலில் தங்களுக்குப் பிறகு தலைமையேற்க வாரிசுகளைத் தயார் செய்யாதவர்கள். (அரசியலைத் தவிர இப்படிப்பட்ட மனோபாவம் இந்தியப் பெருந்தொழில் நிறுவனத் தலைவர்களிடமும், மக்கள் இயக்க அமைப்புகளின் தலைவர்களிடமும் காணப்படுகிறது).

எதிலும் சமரசம் காண்பவர்

ஒன்பதாவது காரணம்: எதிராளியின் கருத்தையும் கேட்பது, நியாயம் இருக்கிறது என்றால் அதையும் இணைத்து சமரசம் காண்பது, எந்தப் பிரச்சினைக்கும் கண்ணியமான தீர்வு காண்பது என்ற குணம். அரசியலில் கொள்கைரீதியாக தன்னை எதிர்த்த முகம்மது அலி ஜின்னா, அம்பேத்கர் ஆகியோருடனும்கூட பல முறை சந்தித்து உரையாடியவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துத்தான் போராடினார் என்றாலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் எண்ணற்ற முறை அவர்களுடன் பேசத் தயங்காதவர். அறிவார்ந்தும் அரசியல் சார்ந்தும்தான் அவர் மற்றவர்களுடன் கருத்துகளில் வேறுபட்டாரே தவிர, யாருடனும் தனிப்பட்ட முறையில் விருப்பு – வெறுப்பு கொண்டவரல்ல. இதனால்தான் அவரால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தது. எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் தாங்கும் மனவலிமை அவருக்கு இருந்தது.

பத்தாவது காரணம்: அவருடைய பொதுவாழ்க்கை ஒளிவுமறைவு இல்லாதது. அவருடைய ஆசிரமத்துக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். யார் வேண்டுமானாலும் அவருடன் விவாதிக்கலாம். பிற்காலத்தில் நிரூபணமானதைப் போல, யார் வேண்டுமானாலும் அவர் இருக்கும் இடத்துக்குப் போய் கொலைகூட செய்துவிடலாம் என்ற அளவுக்கு அவர் அனைவரும் அணுகக்கூடியவராகவே இருந்தார். ஆயுதம் தாங்கிய காவலர்கள் புடைசூழ எப்போதும் காவல்காக்கப்பட்ட தலைவர்கள் அவர் காலத்திலும் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.

காந்தியின் வாழ்க்கையிலிருந்து பெறப்படும் இந்தப் பாடங்கள் இந்த நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதில்லை. ஆவேசமான மதப் பேரினவாதம், வசைமாரிகளும் - குற்றச்சாட்டுகளும் சரம் சரமாய் பாயும் அரசியல் கலாச்சாரம், பொய்களையும் – உண்மையற்றவைகளையும் கையாளும் தலைவர்கள் – அரசுகள், இயற்கைச் சூழலை பணத்தாசையால் நாசப்படுத்தும் போக்கு, தனிநபர் துதியை வளர்க்கும் கலாச்சாரம் ஆகியவை மிகுந்து வருவதால் இவையனைத்தும் இந்தியாவுக்கு இப்போது அதிகம் பொருந்துகின்றன.

 

தொடர்புடைய கட்டுரைகள்

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது?
இரண்டில் ஒன்று... காந்தியமா, இந்துத்துவமா?
சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்
காலவெளியில் காந்தி
காந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1

3

அதிகம் வாசிக்கப்பட்டவை

லாலு பிரசாத் யாதவ்சிறுநீரகக் கற்கள்ரயில் விபத்துஒரே அரசுஒற்றைத்துவம்prerna singhஅன்னி எர்னோ: சின்ன அறிமுகம்பி.ஆர்.அம்பேத்கர் கட்டுரைதமிழ் எழுத்தாளர்கள்பஞ்சாப்அச்சமூட்டும் களவா?கைம்பெண்கள்பெண் ஏன் அடிமையானாள்?: பெரியாரின் அடி தொட்டு மற்றமைவர்ண ஒழுங்குஸரமாகோவின் உலகம்பாலசுப்ரமணியம் முத்துசாமி கட்டுரைகுடியரசு கட்சிகோர்பசேவ்: கலைந்த கனவாபூனா ஒப்பந்தம்நந்தினி கிருஷ்ணன்ஏஞ்சலா மெர்க்கல்செரிமானமின்மையோகிபட்டினிசமஸ் ஓர் அரிய குரல்: ஜெயமோகன்முலாயம் சிங் யாதவ்சுயமரியாதை இயக்கம்முத்தலாக் முதல் ஹிஜாப் வரைசட்டத் திருத்தம் அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!