கட்டுரை, அரசியல், விளையாட்டு 4 நிமிட வாசிப்பு

மோடி வரலாற்றில் மோடி

ராமச்சந்திர குஹா
16 Mar 2023, 5:00 am
6

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் விளையாட்டரங்கில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2009 நவம்பரில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருபதாண்டுகளை நிறைவு செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். 

இந்த டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் குஜராத் முதல்வரான நரேந்திர மோடி, குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே டெண்டுல்கரை கௌரவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டபோது மோடி அவருக்கு சிறப்பு செய்தார். தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த நினைவு இருக்கிறது; டெஸ்ட் தொடங்குவதற்கு முன் டெண்டுல்கருக்கு நினைவுப் பரிசை வழங்கிய மோடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 2009இல் மோடியைவிட சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிரபலம், எல்லோர் வீடுகளிலும் உச்சரிக்கப்பட்ட பெயர். சச்சினுக்கு நினைவுப் பரிசு வழங்கியது மோடிக்கு அப்போது அவர் விரும்பிய நல்ல விளம்பரங்களில் ஒன்றாக அமைந்தது. 

அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 அக்டோபரில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தி பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி. இப்போது மிகப் பெரிய கிரிக்கெட் வீரரை அல்ல, மிகப் பெரிய தேசத் தலைவரை – ராஜதந்திரியைத் தன்னுடைய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதன்படி சர்தார் வல்லபபாய் படேலுக்கு மிகப் பெரிய இரும்புச் சிலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். “நேருவுக்குப் பதிலாக வல்லபபாய் படேல் பிரதமராகியிருந்தால் நன்றாகச் செயல்பட்டிருப்பார், பாதுகாப்பான, வலிமையான, அதிக சுயச்சார்புள்ள நாடாக இந்தியா உருவாகியிருக்கும்” என்று பிரச்சாரம் செய்தார்.

2009இல் மோடிக்கு தன்னை விளப்மரப்படுத்திக்கொள்ள டெண்டுல்கர் தேவைப்பட்டார்; 2013-14இல் படேல் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் - பிரச்சாரத்துக்குத் தேவைப்பட்டவர்களில் ஒருவராக இருந்தார். 

மேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 மார்ச்சுக்கு வருவோம். அடுத்தடுத்து இரண்டு மக்களவைப் பொதுத் தேர்தல்களில் பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டார் மோடி. இப்போது அவர் முழுக்க முழுக்க சுயமான தலைவர், அவரை விளம்பரப்படுத்திக்கொள்ள இனி யாருடைய பெயரும் தேவையில்லை. கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஏன் அவருடைய  ஆதர்ச புருஷர் படேல்கூட இனி தேவை இல்லை.

சச்சின் டெண்டுல்கருக்கு நினைவுப் பரிசை மோடி வழங்கிய பதினொன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லட்சக்கணக்கான இந்தியர்களுடன் நானும் தொலைக்காட்சிப் பெட்டி முன் சில நாள்களுக்கு முன் அமர்ந்திருந்தேன்; படேல் விளையாட்டரங்கில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதற்காக! 

இந்த டெஸ்ட் போட்டிக்கும் முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருக்க - ஒரு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார், அதில் விளையாட்டரங்கின் பெயர் நரேந்திர மோடிக்கு மாற்றப்பட்டிருந்தது, ஒருகாலத்தில் மோடியால் புகழப்பட்ட, பின்பற்றப்பட்ட படேலுக்குப் பதிலாக - மோடியின் பெயரே சூட்டப்பட்டுவிட்டது.

தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய பெயரை விளையாட்டரங்குக்கு சூட்டிய வகையில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இத்தாலியின் முசோலினி, இராக்கின் சதாம் உசைன், லிபியாவின் மும்மர் கடாஃபி வரிசையில் மோடியும் சேர்ந்துவிட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஒருவர் இடம் பெறக்கூடிய பட்டியல் நிச்சயமாக இதுவாக இருக்க முடியாது; இருப்பினும் மோடி இதனால் எல்லாம் தருமசங்கடம் அடையவே இல்லை! 

தன்னுடைய பெயர் சூட்டப்பட்ட விளையாட்டரங்கில் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸுடன் அமர்ந்து பார்த்து ரசித்து, புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.

டுரின் நகரில் தன் பெயரிடப்பட்ட விளையாட்டரங்கில் அமர்ந்து முசோலினி கால்பந்துப் போட்டியைக் கண்டு ரசித்தாரா என்று எனக்குத் தெரியாது அல்லது மாஸ்கோவில் தன்னுடைய பெயர் தாங்கிய விளையாட்டரங்கில் ரஷ்ய அதலட்டுகள் பங்கேற்ற உடல் சீர் போட்டிகளை ஜோசப் ஸ்டாலின் பார்த்தாரா என்றும் தெரியாது. ஆமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு மிக ஒய்யாரமாக வந்தபோது மோடி தனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே புதியதொரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்திவிட்டார்.

இந்திய ஜனநாயகர் என்ற வகையில் மோடியின் வளர்ச்சியைத் திகைப்பூட்டும் அச்சத்துடன்தான் கவனிக்கிறேன். இந்தக் கடைசி முன்னுதாரணம் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்ற வகையிலும் என் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியிருக்கிறது. 

மோடியின் அரசியல் சீட கோடிகள் அதிக எண்ணிக்கையில் அவரை வரவேற்க வர வேண்டும் என்பதற்காக, முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை குஜராத் கிரிக்கெட் சங்கம் வழக்கம்போல பொதுவெளியில் விற்காமல் பெரும்பாலான டிக்கெட்டுகளை மடக்கிவிட்டது. அவை அரசியல் வட்டாரங்கள் மூலம் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த டெஸ்ட் போட்டியைக் காண ஆமதாபாத் வரவிரும்பிய என்னுடைய நண்பர், முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்குக் கிடையாதாமே என்று கேட்டு என்னை எச்சரித்தார். டிக்கெட் வழங்கும் இணைய தளங்களும் முதல் நாள் ஆட்டத்துக்கு டிக்கெட்டுகள் இல்லை என்றே தெரிவித்தன. ஆனால் என்னுடைய நண்பர், மோடி பக்தர்களுக்கான கோட்டாவிலிருந்து ஒரு டிக்கெட்டை எப்படியோ வாங்கிவிட்டார். 

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த டெஸ்ட் மேட்சைப் பார்க்க வந்திருந்த ஆஸ்திரேலிய நாட்டு ரசிகர்களுக்கும் முதல் நாளில் டிக்கெட் விற்கப்படவில்லை. இதை அறிந்துகொண்ட பீட்டர் லலோர் என்ற நிருபர் ‘தி ஆஸ்திரேலியன்’ என்ற நாளிதழில் இதைச் சுட்டிக்காட்டினார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாள்களுக்குள் விரைவாக முடிந்துவிட்டதால், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்த டெஸ்டின் முதல் நாள் டிக்கெட் தங்களுக்குக் கிடைக்காமல் போனதால், ஆட்டத்தின் பெரும் பகுதியை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மனம் வெதும்பியிருப்பதாகக் கண்டித்தார். 

ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் அதே மனக் கசப்புதான். ஆஸ்திரேலியப் பிரதமருடன் மோடி தோன்றும்போது அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப ஆயிரக்கணக்கானவர்கள் திரள வேண்டும் என்பதற்காக இந்தக் கீழ்மையான உத்தி கடைப்பிடிக்கப்பட்டதாகக்  காட்டமாகவே அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எவ்வளவு மட்டமான உத்தியாக இருந்தாலும் அதைக் கையாண்டு தனக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மோடிக்கு அபார மோகம் என்றும் அவர் சாடியிருந்தார்.

லலோரின் செய்திக்குப் பிறகு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் குஜராத் கிரிக்கெட் சங்கத்துடன் பேசி, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த சில ஆயிரம் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கச் செய்தனர். அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த ரசிகர்களுக்காகக் குரல் கொடுக்க யாருமில்லை. 

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் நிருபர்கள் பெரும்பாலும் ‘கோடி இதழியல் குழும’த்தைச் சேர்ந்தவர்கள் (மோடி அடிமைகள்), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர்த்து எதுவும் எழுத மாட்டார்கள், அந்த அமைப்போ ஆளுங்கட்சியின் அங்கமாகவே மாறிவிட்டது.

அடிமைகளான இந்திய விளையாட்டு ஊடகங்கள் மௌனமாக இருந்தாலும், ட்விட்டரில் எதிர்ப்புகள் கண்டனங்களாகக் குவிந்தன. அதற்குப் பிறகு மேலும் பல ஆயிரம் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு அவசர அவசரமாக விற்கப்பட்டன. இருந்தாலும் பெரும்பான்மையான டிக்கெட்டுகள் ‘பெயர் குறிப்பிடப்படாத விருந்தினர்’களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஆமதாபாத்வாசிகளில் டிக்கெட் கிடைக்காத பலர், ஏன் டிக்கெட் தரவில்லை என்று கேட்டபோது, ‘மோடி வருகிறார்’ என்று மட்டும் பதில் சொல்லப்பட்டதாம்.

குஜராத் கிரிக்கெட் சங்கமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தங்களுடைய செயல்கள் அனைத்தையுமே மூடு மந்திரமாக மறைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இதுவும் ‘பிஎம்-கேர்ஸ்’ விவகாரம்போலவே வெளியுலகுக்குத் தெரியாமல் திரையிடப்பட்டுவிட்டது. மோடி வரும்போது அவரைப் புகழ்ந்து வரவேற்க எத்தனை பேருக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன, எத்தனை டிக்கெட்டுகள் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டன என்ற தகவல்கள் எல்லாம் ரகசியமாகவே கடைசி வரை வைக்கப்படும்.

ஆமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு சமயத்தில் 1.30 லட்சம் பேர் வரை அமர்ந்து பார்க்கலாம். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை நேரில் காண முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் வருவதில்லை. மோடிக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப ஆட்களைத் திரட்ட வேண்டும் என்பதோடு, மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கத்துக்கு வருவதைவிட அதிக எண்ணிக்கையில் ஆமதாபாத் டெஸ்டுக்கு ரசிகர்கள் வந்தனர் என்று போலியாக சாதனை படைக்கவும் இப்படி டிக்கெட்டுகள் பதுக்கப்பட்டதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆட்சியி்ல், பல உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக செயற்கையாகக் கூறிக்கொள்வதைப்போல, கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைப் பார்க்கவும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதாகக் காட்ட முறையற்ற வழிமுறை கையாளப்பட்டதுபோலத் தெரிகிறது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்படுவதில்லை. மெல்போர்னில் கிரிக்கெட் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் உண்மையான ரசிகர்தான், அரசியல் நோக்கத்துடன் அங்கு யாரும் வருவதில்லை. அரங்கத்தைவிட்டு மோடி வெளியேறிய ஒரு மணி நேரத்துக்கெல்லாம், அரங்கிலிருந்த பெரும்பாலான ‘ரசிகர்’களும் வெளியேறிவிட்டனர்!

டெஸ்ட் தொடங்குவதற்குப் பல நாட்கள் முன்னதாகவே மோடியின் உருவப்படம் பொறித்த சுவரொட்டிகள் அரங்கில் இடம்பெற்றுவிட்டன. விளையாட்டு வீரர்கள் பயிற்சியை, மோடி சுவரொட்டிகளின் மேற்பார்வையில்தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது! டெஸ்ட் தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னால் மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமரும் தனி வாகனத்தில் அரங்கத்தைச் சுற்றி வந்து கையசைத்தனர். பிரதமர் மோடிக்கு அமித் ஷாவின் மகன், அவர் பெயரிலான அரங்கில் அவருடைய உருவம் பொறித்த பெரிய புகைப்படத்தை, அவருக்கே நினைவுப் பரிசாக அளித்ததை கேமராக்கள் உருப்பெருக்கிக் காட்டின.

போட்டி நடந்தபோதே இரு பிரதமர்களும் இருக்கும் புகைப்படமொன்று பெரிதாக காட்டப்பட்டது. அதிலும் மோடி பெரிதாகத் தெரியுமாறு அண்மைப்படுத்திக் காட்டப்பட்டார், உண்மையில் ஆஸ்திரேலியப் பிரதமர் அவரைவிட சில அங்குலங்கள் அதிக உயரம். இப்படித் தற்புகழ்ச்சியில் திகழும் ஒருவருடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நேர்ந்த ஆஸ்திரேலியப் பிரதமரின் உண்மையான மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

உண்மையில் ஆமதாபாதில் இந்தப் போட்டியே நிகழ்ந்திருக்க வேண்டியது இல்லை. கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் ஆமதாபாதில் கிரிக்கெட் ஆட்ட ரசனைகள் குறைவு. கொல்கத்தாவில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஒரு டெஸ்ட் போட்டிகூட நடக்கவில்லை. மிகவும் முக்கியமான இந்த டெஸ்ட் தொடருக்கு ஏற்ற நகரங்கள் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பைதான். திரிணமூல் ஆளும் கொல்கத்தாவிலோ திமுக ஆளும் சென்னையிலோ போட்டி நடந்திருந்தால் பாஜக ஆளும் ஆமதாபாதில் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு நிச்சயம் கிடைத்திருக்காது. பெங்களூரு, மும்பையில்கூட உண்மையான கிரிக்கெட் ரசிகர்களைப் புறக்கணித்துவிட்டு பாஜக ஆதரவாளர்களுக்கு டிக்கெட் வழங்கியிருக்க முடியாது. 

குஜராத்தில் மோடியின் தனிநபர் துதி எல்லா வகைகளிலும் செல்லுபடியாகும். ஒருகாலத்தில் ரசிகர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த கிரிக்கெட் – இப்போது ஊழல்களால் மலிந்திருப்பது – தனிநபர் புகழ்பாட ஒரு கருவியாக இந்த முறை பயன்பட்டிருக்கிறது!

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.


5

4
1

பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Ranjith Chinnusamy   6 months ago

Befitting reply to Modi's Advertising Agency

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ramamoorthy S   6 months ago

உலக சர்வாதிகாரிகளின் வரலாற்றில் இந்தியா் இடம் பெற்று வரும் விதத்தைப் பற்றி மிகவும் நாசூக்காகவும் ஆணித்தரமாகவும் குஹா எழுதியிருக்கிறார்.இந்திய ஊடகங்கள் செய்ய வேண்டிய கட்டாயமான ஜனநாயகப்பணிகளை 'அருஞ்சொல்' அசாதாரணமான துணிவுடன் செய்து வருகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

k. vasanth Mithran   6 months ago

சிந்திக்க தூண்டும் விடயம். ஒவ்வொரு அசைவிலும் அரசியல் இருக்கிறது என்பதற்கு ஒரு நற்சான்று . விளையாட்டு மைதானத்தில் அரசியல் விளையாட்டு .வெற்றி சுய விளம்பரம் தேடா நமது பிரதமருக்கு தோல்வி இந்திய இரசிகர்களுக்கு .........

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   6 months ago

Brilliant!

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

அ.பி   6 months ago

கட்டுரையாளரின் அணுக்க பார்வை வியப்பளிக்கிறது..

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

Anand   6 months ago

Indha katturayil veruppu matumae rombi vazhigiradhu !

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கமல் ஹாசன்புதுப்பாளையம்விஸ்வ ஹிந்து பரிஷத்குஹா கட்டுரை அருஞ்சொல்ராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்மொழிச் சிக்கல்கோணங்கி விவகாரம்உணவுத் தன்னிறைவுமதச்சார்பற்ற அரசாங்கம்hindu samasசொற்பிறப்புஇயங்குதளம்தங்க.ஜெயராமன்ஆங்கிலப் புத்தாண்டுலாலு சமஸ்மின் வாகனங்கள்மென்பொருள்இந்தியத்தன்மைலடாக்தன்னாட்சிமாய-யதார்த்தம்சத்ரபதி சிவாஜிமுல்லை நில மக்கள்பண்டைய இந்திய வரலாறுநெல்இனிப்புச் சுவைரிஷி சுனக்விலங்குகள் மீதான கரிசனம்பெப்டிக் அல்சர்பிரிண்ட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!