கட்டுரை, சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்

சமஸ்
22 Sep 2021, 12:00 am
14

ளிமையான முறையில் நீங்கள் இந்த உலகத்தை அசைத்துவிட முடியும் என்று காந்தி சொன்னதுதான் அவருடைய ஆடை தொடர்பில் யோசிக்கும் ஒவ்வொரு முறையும் தோன்றும். 1921, செப்டம்பர் 22 நிகழ்வானது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இன்று நிகழ்ந்தாலும், சுற்றியிருப்பவர்களைத் திகைப்பிலேயே தள்ளும்.  

தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த காந்தி அன்றைக்கு மதுரையில் இருந்தார். முந்தைய நாளில் நாவிதரை அழைத்து மொட்டை போட்டுக்கொண்டார். மறுநாள் அதிகாலையில் எழுந்தவர், குளித்துவிட்டு வந்தபோது அவரது உடை முற்றிலும் மாறியிருந்தது. கத்தியவாரி அடையாளமான குல்லாவும் சட்டையும் அதோடு முடிவுக்கு வந்துவிட்டன. ஒரு வேட்டியும் துண்டும் மட்டுமே அவருடைய ஆடையாக இருந்தன. தோளில் ஒரு கதர் பை தொங்கியது. திடீர் பரதேசத்துக்குச் செல்லும் சந்நியாச மனநிலைக்கு அவர் ஆட்பட்டுவிட்டோரே என்றே பலரும் திகைத்தனர். அடுத்து அவர் காரைக்குடிக்குச் செல்ல வேண்டும். தான் சந்நியாசியாகவில்லை என்று சொன்னார் காந்தி.

முன்னதாக, திருச்சி கூட்டத்தில் சொன்னதுபோல, ‘அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலேனும் இந்த எளிய உடையைத் தொடரப்போகிறேன்’ என்று அவர்களை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு என்றைக்குமான அவருடைய அடையாளமாகவே அந்த எளிய ஆடை ஆயிற்று.

ஒரு மனிதர் அகச்சூழலில் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், புறச்சூழலிலும் சுதந்திரத்தை அவர் உணர வேண்டும். சுதந்திரம் என்பது உங்களை உங்களோடு அடைத்துவைத்துக்கொள்வது இல்லை; இந்தப் பிரபஞ்சத்தோடு சேர்ந்து நீங்கள் பறப்பது. இந்தச் சுதந்திரவுணர்வுக்கு எதிராக ஒருவரை ஒடுக்கி வைத்திருப்பது அச்சம். நவீன வாழ்வில் பொருளாதாரத்துக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.

உணவும் உடையும் மனிதருக்கான எளிய தேவைகள் என்றாலும், அத்தியாவசியத் தேவைகளுக்கான அலைக்கழிப்புதான் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் கண்ணிகள் என்பதை காந்தி சரியாகவே அடையாளம் கண்டிருந்தார். ஒருவருடைய அத்தியாவசியத் தேவைகள் எவ்வளவு எளிமையாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அடுத்தவரை அவர் அண்டியிருத்தல் குறைவு;  ஆக, காந்தியின் உணவு – உடைப் பரிசோதனைகளின் அடிப்படை அகவிடுதலையை மையம் கொண்டிருந்தன.

அரசியல் களம் நோக்கி காந்தி நகர்ந்தபோது உடையும் அரசியலுக்கான கருவி ஆனது. மேற்கத்திய கோட், பேன்ட், தொப்பி அணிந்து ஆப்பிரிக்கா சென்ற பாரிஸ்டர் காந்தியிடம் முதல் மாற்றத்தை உண்டாக்கியது, அங்கு நடந்த சத்தியாகிரகப் போராட்டம். போராட்டத்தில் காந்தியுடன் கை கோத்தவர்களில் பெரும்பான்மையினர் இந்தியத் தொழிலாளர்கள் – எளியவர்கள். மேற்கத்திய உடை அவர்களைத் தன்னிடமிருந்து பாகுபடுத்துவதாக அவர் எண்ணினார். வேட்டி, நீண்ட கோட், தலைப்பாகைக்கு அவர் மாறினார். பின்னர் அவருடைய உடைகள் காதி துணியிலானவை ஆயின. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி அணிந்திருந்த ஆடையானது குஜராத்தில் அவர் சார்ந்த கத்தியவாரி பிராந்தியத்தைப் பிரதிபலித்தது; சட்டை, வேட்டி, குல்லா. மதுரை அந்த ஆடைகளையும் களைந்திற்று.

காந்தி பல ஆண்டுகளாகவே ஆடை தொடர்பில் பேசிக்கொண்டிருந்தார்; ஆடை – காதி – ராட்டைக்கு இடையிலான பந்தம் 1908-ல் அவருக்கு வசப்பட்டது. “நான் ராட்டையை முதன்முதலில் 1908இல் லண்டனில்தான் கண்டுகொண்டேன்… இந்தியாவின் நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் விவாதித்தோம். நூற்கும் ராட்டை இல்லை என்றால், சுயராஜ்ஜியம் இல்லை என்ற எண்ணம் மின்னல்போல திடீரென்று அப்போது எனக்கு உண்டாயிற்று!”

இதற்குப் பின் தொடர்ந்து ராட்டைக்குப் பிரச்சாரகர் ஆனார் காந்தி. பிரிட்டிஷாரின் ஜவுளி வர்த்தகம் அவர்களுடைய ஏகாதிபத்திய அரசுக்குப் பெரும் வருமானத்தைத் தந்துகொண்டிருந்ததுடன் இந்தியர்களைச் சுரண்டிக்கொண்டும் இருந்தது. ராட்டையை அவர் ஓர் ஆயுதமாகக் கண்டார். பொருளியல் ஆயுதம், அரசியல் ஆயுதம் என்பதையெல்லாம் காட்டிலும், ஆன்ம விடுதலைக்கான ஆயுதம் என்பதே அதற்கான முழுப் பரிமாணத்தையும் தரும்.

சென்னைக்கு 1916இல் பாதிரிகள் மாநாட்டுக்கு காந்தி வந்திருந்தார். இந்த மாநாட்டில் “சுதேசி என்பது நம்முள் இருக்கும் ஓர் உணர்வு” என்று வரையறுக்கும் காந்தி, “தூரமாக இருப்பதை விலக்கிவிட்டு, நம்மை ஒட்டிச் சுற்றிலும் இருப்பதை உபயோகித்துக்கொள்பவர்களாகவும், அவற்றுக்கு சேவையாற்றுபவர்களாகவும் நம்மை அந்த உணர்வு கட்டுப்படுத்துகிறது” என்றார். 1917இல் கோத்ராவில் நடந்த அரசியல் மாநாட்டில், “சுதேசியத்தின் மூலம்தான் சுயராஜ்ஜியத்தை அடைந்திட முடியும்” என்றார். தன்னுடைய சுதேசி இயக்கத்துக்கான முன்னோடியாக ஸ்காட்லாந்தை இந்த மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். “தங்கள் உயிருக்கு நேரக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது ஸ்காட்லாந்தின் ஹைலண்டர்கள், ‘கில்ட்ஸ்’ எனும் தேசிய உடையை உடுத்துவதை நாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

1921இல் ஆடை அரசியல் உச்சம் நோக்கி நகர்ந்தது. அந்த ஆண்டில் காங்கிரஸின் பணித் திட்டத்தில் கதரும், அந்நியத் துணி பகிஷ்காரமும் முக்கியமான இடம்பெற்றன.

பம்பாயின் உமார் சோபானி திடலில் ஜூலை 31 அன்று அந்நியத் துணிகளுக்கு அவர் தீ வைத்தபோது ஆயிரக்கணக்கான மக்களை அந்தப் போராட்டம் ஈர்த்திழுந்திருந்தது. விலை உயர்ந்த ஆடைகளையும் மக்கள் தீயிலிடத் தயங்கவில்லை. அழிக்கப்பட்ட ஜவுளியின் மதிப்பு ரூ.1.5 லட்சத்தைத் தாண்டும் என்றார்கள். “அழகான பம்பாய் ஒரு தீயை ஏற்றியது. பார்ஸிகளின் கோயில்களில் உள்ளதைப் போன்று இத்தீ என்றும் நீடித்திருக்க வேண்டும்” என்றார் காந்தி.  

தன்னுடைய ஒவ்வொரு போராட்டத்துக்கும் முன்னதாக, எதிர்த் தரப்பாருக்குப் போராட்ட நியாயத்தை விளக்கிக் கடிதம் எழுதும் காந்தி, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வோர் ஆங்கிலேயருக்கும்…’ என்று இந்தப் போராட்டத்தை ஒட்டியும் ஜூலை 13 அன்று ‘யங் இந்தியா’வில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். “வேண்டும் என்றே திட்டமிட்டு, உலகப் புகழ் பெற்ற இந்தியத் துணி உற்பத்தி நாசப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை ஆங்கில ஆசிரியர்களே எடுத்துக்காட்டுகிறார்கள். ஆகையால், லங்காஷயரின் தயவில் மாத்திரமின்றி ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தயவிலும் இந்தியா வாழ வேண்டியது ஆகிவிட்டது. இதனால் இந்தியாவுக்கு நேர்ந்திருப்பது என்ன என்று கவனியுங்கள். ஆண்டுதோறும் அறுபது கோடி ரூபாய் துணிக்குப் போதுமான பருத்தியை நாங்கள் சாகுபடி செய்துவருகிறோம். இந்தப் பருத்தியை இந்தியாவுக்கு வெளியே அனுப்பி, அங்கே அதைக் கொண்டு துணி தயாரித்து, அந்த ஜவுளிகளைக் கப்பலேற்றி இந்தியாவுக்குக் கொண்டுவருவது பைத்தியக்காரத்தனமானது இல்லையா? இத்தகைய திக்கற்ற நிலைக்கு இந்தியாவைக் கொண்டுபோய்விட்டது நியாயமா?”

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 19 அன்று திருச்சி கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்திலேயே தன்னுடைய சட்டை – குல்லாவுக்கு விடை கொடுத்திடத் தயாராகிவிட்டத்தை அவர் தெரிவித்தார். “வெறுந்தலையுடனும் வெற்றுடம்புடனும் இருப்பது இந்த நாட்டில் துக்கத்திற்குச் சின்னம். இன்னும் சுயராஜ்ஜியத்தை அடைந்திடாத துக்கத்திற்கு அறிகுறியாகவும் இத்துறவு அவசியம் ஆகிறது” என்று அங்கு பேசினார்.

தொன்மை மிக்க மதுரை இந்த எண்ணங்களின் கூட்டு வெளிப்பாட்டுப் புள்ளி ஆனது; எளிய மக்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் காந்தியின் நெடுநாள் விருப்பத்தை நிறைவேற்றியது; காந்தியின் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், மதுரை அவர் முடிவெடுத்துச் செயலாற்றுவதற்கான வலிமையை அவருக்குக் கொடுத்தது.

இந்த நாட்டில் துறவுக்குப் பெரிய அதிகாரம் உண்டு. உண்மையில் அதை காந்தி மதுரையில்தான் முழுவதுமாகக் கையில் எடுத்தார்.

தன்னுடைய ஆடையைத் தன் தொண்டர்களுக்கு காந்தி பரிந்துரைக்கவில்லை. தன்னுடைய ஆடை ஒரு குறியீடு என்பதை அவர் தெளிவாகவே வெளிப்படுத்தினார். தொண்டர்கள் அப்படி அணிவதைத் தான் விரும்பவில்லை என்றவர் “சுதேசியை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடார். இந்த இடம் இந்த ஒட்டுமொத்த கதையிலும் முக்கியமானது; சுதேசி என்றால் என்ன என்பதற்கு அவர் கொடுத்த வரையறைக்கு நாம் திரும்பச் செல்ல வலியுறுத்துவதாகும். அதேபோல, காந்தியின் எளிமையை சிக்கன வாழ்வின் வழிமுறையாகப் புரிந்துகொள்வதும் அபத்தமாகிவிடும். “எளிமை என்பது இதயபூர்வமான ஒன்று. ஆனால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம், இந்தப் புவியில்  மிகவும் வறியவர்களாக இருப்பவர்கள் கொண்டிராத எதையும் நாமும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே லட்சியம்!” என்றார் அவர். அதாவது, “ஏனையவர்களுக்கும் இந்த வாழ்க்கை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீங்கள் எளிமையாக வாழுங்கள்!”   

இந்தியக் குடியானவர்களின் உடை என்று காந்தி வரித்துக்கொண்ட தோற்றமானது, குடியானவர்களிலிருந்து மேலெழுந்துவந்த துறவியாக அவரை மக்களிடம் கொண்டுசென்றது. இந்தியாவுக்கு வெளியில் இருந்த மக்களிடம் இந்தத் தோற்றம் பராரி நிலையிலுள்ள குடியானவராக அவரைக் கொண்டுசென்றது. மறைமுகமாக இந்தியாவின் ஏழ்மைக்கும், பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலுக்குமான குறியீடாக காந்தி வெளிப்பட்டார்.

தன்னுடைய உடையைப் பற்றி இதன் பின் பொருட்படுத்தாத காந்தி, எவ்வளவு பெரிய ஆட்சித் தலைவர்கள், ஆளுமைகளையும் இந்தத் தோற்றத்திலேயே சந்தித்தார். 1931-ல் வட்ட மேஜை மாநாட்டுக்காக பிரிட்டன் செல்ல வேண்டியிருந்தபோதும், பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜைச் சந்திக்க வேண்டியிருந்தபோதும் தன் உடையை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இல்லை. அன்றைக்கு உலகம் தழுவிய செய்தியானது இது. பிரிட்டிஷ் அரசு இதைப் பெரும் சங்கடமாக உணர்ந்தது. பிரதமர் சர்ச்சில் காந்தியை ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்றும், ‘குமட்டலை இது தருகிறது’ என்றும்கூட பேசினார். பிரிட்டிஷ் அரசு பணியதான் வேண்டியிருந்தது. மன்னரைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது காந்தியின் உடையைப் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “எனக்கும் சேர்த்து மன்னரே ஆடையை அணிந்திருந்தாரே!” என்று கிண்டலடித்தார் காந்தி.

யாரும் என் அனுமதியின்றி என்னை அவமானப்படுத்திவிட முடியாது; யாருக்கும் நான் மேலோ கீழோ இல்லை எனும் இந்தச் சமநிலைதான் காந்தியின் ஆடை இந்நாட்டு மக்களுக்குக் கொடுத்த பெரும் சக்தி. ‘மேற்கத்தியர்கள் மேலானவர்கள்; அதனால் மேற்கத்திய உடைகள் மேலானவை; நம்முடைய உடைகள் தாழ்வானவை; நாமும் தாழ்வானவர்கள்’ எனும் உளவியல் மீது அவருடைய உடை தாக்குதல் நடத்தியது.  காந்தி தங்கள் உடையில் எல்லோருக்கும் முன் சரிசமமாக நின்றபோது, தாங்களே காந்தியின் இடத்தில் சரிசமமாக நிற்பதாக சாமானியர்கள் உணர்ந்தார்கள். ஓர் எளிய உடை உண்மையில் எளிய மக்களின்  சுயமரியாதையின் சின்னம் ஆனது.

நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். செப். 22 நாளும், காந்தி உடை மாற்றிய நிகழ்வும் இன்றும் வெளிப்படுத்தும் மூல எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ‘அச்சத்திலிருந்து விடுபடுவதே பூரண விடுதலைக்கான திறவுகோல்; சுதேசி இல்லையேல் சுயராஜ்ஜியம் இல்லை; சுதேசி என்பது உங்களைச் சுற்றியிருப்பதைப் பற்றியிருப்பதே ஆகும்!’

காந்திக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக நெருக்கமான இந்த நிகழ்வு நடந்த 1921, 22 செப்டம்பர் நாளை மனதில் கொண்டே 2021, செப்டம்பர் 22 அன்று ‘அருஞ்சொல்’ ஊடகத்தின் தொடக்க நாளாக நிர்ணயிக்கப்பட்டது. காந்தி குறிப்பிட்ட ஒவ்வொருவருக்குமான சுயராஜ்ஜியமே அதன் நோக்கம் ஆகும்; காந்திக்கு ஆற்றலைக் கொடுத்த அதே தமிழ்நாட்டையே தன் ஆற்றலுக்கும் ‘அருஞ்சொல்’ பற்றியிருக்கிறது! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

1





பின்னூட்டம் (14)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

காந்தியைப் பற்றி, எளிமையைப் பற்றி , அரசியலைப் பற்றி இந்த கட்டுரை புரிதலைத் தருவதால் என் மகளுக்கு வாசித்துக் காட்டினேன். காந்தியம் எவ்வளவு வலிமையானது என்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது. துறவுக்கு பெரிய அதிகாரம் இருக்கிறது என்ற வரி சிந்தனையைத் தூண்டுகிறது. துறவு-அதிகாரம்.. முரண்சொற்கள் இல்லை போல!

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

KumaranNB   3 years ago

Sometimes our weakness can be delivered as our powerful weapon. Gandhi chose the right weapon. Great article sir.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Nazrul   3 years ago

தங்களின் எழுத்து நடை வாசிப்பதற்கு எளிமையாக உள்ளது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vinothraj   3 years ago

தங்களது மொழிநடையும் சிந்தையும் மிகவும் அருமை. அருஞ்சொல் செழுமை பெற வாழ்த்துக்கள்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

அருஞ்சொல்லுக்காக ஆவலுடன் காத்திருந்தது முடிவுக்கு வந்துவிட்டது. இனி கொண்டாட்டம்தான். முதல் கட்டுரையே திரு சமஸின் முத்திரைப்பதிப்பாக அமைந்துவிட்டது என்றால் மிகையில்லை. அன்புடன், நவகை ப. சரவணன்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

V.Thiagarajan   3 years ago

அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Subramanian Murugesan   3 years ago

தெளிவான அருஞ்சொற்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

S.Amarnath   3 years ago

காந்தி நாகரிக ஆடையை துறந்தார் அதே நாளில் தாங்கள் பத்திரிக்கை துறையில் காகிதத்தை துறந்துள்ளீர்கள். நவீன கால எளிய முயற்சி. தொடர்ந்து நடந்திட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகின்றேன்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

pakkiyaraj kothai   3 years ago

தெளிவான உறுதியான கட்டுரை மீண்டும் வரத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது சமஸ் ஐயா. நன்றி. சிறு விண்ணப்பம். என்னவெனில் முடிந்தவரை கூடுதலாக எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. காந்தியின் ஆடை போன்றே. தனித்தமிழ் புரியா மொழி நடை என்பதல்ல நான் கூற விரும்புவது. எடுத்துக்காட்டாக.. ஒன்று.. சுதேசி - தற்சார்பு (தன்நிறைவு) என்பது இன்னும் பொருள் எளிமை விளங்கும். இது மொழி வெறி அல்லது பற்று அல்லது இன்னொரு மொழியைத் தாழ்வு செய்வது இல்லை, இல்லவே இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இயல்பு & எளிமை - கூடுதலாகப் பொறுப்பும் கூட. இது வரை அப்படிச் செய்தததனால் அதே சொல்லைப் பயன்படுத்தி எழுதலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் இது நிகழ்த்தப்பட மாற்றப்பட வேண்டிய மாற்றம் என நான் எண்ணுகிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளில் உங்களை மேலும் பொறுப்பு மிகுந்தவராகக் காண விழைகிறேன். நன்றி.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Ajeezha    3 years ago

"யாரும் என் அனுமதியின்றி என்னை அவமானப்படுத்திவிட முடியாது; யாருக்கும் நான் மேலோ கீழோ இல்லை எனும் இந்தச் சமநிலைதான் காந்தியின் ஆடை இந்நாட்டு மக்களுக்குக் கொடுத்த பெரும் சக்தி. ‘மேற்கத்தியர்கள் மேலானவர்கள்; அதனால் மேற்கத்திய உடைகள் மேலானவை; நம்முடைய உடைகள் தாழ்வானவை; நாமும் தாழ்வானவர்கள்’ எனும் உளவியல் மீது அவருடைய உடை தாக்குதல் நடத்தியது. காந்தி தங்கள் உடையில் எல்லோருக்கும் முன் சரிசமமாக நின்றபோது, தாங்களே காந்தியின் இடத்தில் சரிசமமாக நிற்பதாக சாமானியர்கள் உணர்ந்தார்கள். ஓர் எளிய உடை உண்மையில் எளிய மக்களின் சுயமரியாதையின் சின்னம் ஆனது" - அருமை...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Shanmugasundaram Muthuvel   3 years ago

எளிமையான சொற்கள், ஆழமான கருத்துகள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   3 years ago

உங்களின் காந்தியப் பற்று 22/09/ அன்று இந்தக் கட்டுரை மூலம் அருஞ்சொல் வெளியாவதில் வெளிப்படையாக புரிப்படுகிறது அண்ணா. கட்டுரை சிறப்பு. வாழ்த்துகள் ❤️

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

சரவணமணிகண்டன்   3 years ago

நீங்கள் ஓர் இடத்திலிருந்து விடைபெற்றபோது பெரும் ஏமாற்றத்தை உணர்ந்தவர்களுள் நானும் ஒருவன். இப்போது மகிழ்ச்சி. இரவு 12 மணிக்கெல்லாம் தள முகவரியை இட்டுக் காத்திருந்தேன். இத்தளத்தின் வழியாக நீங்கள் எழுதும் மற்றும் தெரிந்துகொள்ளும் கட்டுரைகள் மிக எளிமையானவையா, சாமானியனும் பின்தொடரும் வகையிலும் அமையும் என்பதை காந்தியின் ஆடை சிர்திருத்த நூற்றாண்டை இதழின் துவக்க நாளாகக் கொண்டதைவைத்தே புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துகள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Saravana   3 years ago

When I come to know about your new initiative, i was wondering why 22/09. This article clarified. Thanks to you now we have a forum to discuss

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நீலகிரிபுற்றுநோய்நாராயண மூர்த்திஅர்த்தம்ஆழி செந்தில்நாதன் கட்டுரைமுதியவர்கள்சிறப்பு அந்தஸ்துரவிக்குமார் கட்டுரைபரந்தூர்மதுப் பழக்கம்உக்கிரமான அரசியல் போர்க்களத்தில் மஹ்வா மொய்த்ராகம்யூனிஸ்ட் கட்சிகொப்பரைஆண் பெண் உறவுச் சிக்கல்காந்தி எழுத்துகள் தொகுப்புபொதுவெளிகள்சென்னை உணவுத் திருவிழாபருக்கைக் கண்வடிவமைப்புக் கொள்கைஅறுவடை நாள்தஞ்சைவெடிப்புகள்பத்திரிகைத் துறைமறைமுக வரி சாதி அழிந்துவிடுமா?கோடை காலம்யூட்யூப் சேனல்கள் ஹேக்கிங் ஏன் நிகழ்கிறது?வழிகாட்டி2024: ஆட்டம் முடிந்துவிடவில்லைஒரேவா நிறுவனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!