கட்டுரை, சினிமா, வரலாறு, கல்வி 5 நிமிட வாசிப்பு

காந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?

ரோஹித் குமார்
30 Jan 2023, 5:00 am
0

ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத்தை நான் பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் போட்டுக்காட்டிவருகிறேன். ‘வாழ்க்கைக்கான திறன்கள்’ தொடர்பான பயிலரங்குகளில் பதின்பருவத்தினருக்கு இந்தப் படத்தைக் காட்டியிருக்கிறேன். துணிவு, தன்னடக்கம், மன்னிக்கும் குணம், அகிம்சை போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்தப் படத்தை நான் பயன்படுத்துவது உண்டு.

காந்தியைப் பற்றி மிகக் குறைவாக அறிந்திருக்கும் மாணவர்கள் அல்லது அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாத மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காந்தி என்பவர் சுவரில் தொங்கும் ஒரு உருவப் படமோ பாடப் புத்தகத்தின் ஒரு அத்தியாயமோ மட்டுமல்ல; தனது முடிவுகளாலும் தெரிவுகளாலும் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த நிஜமான மனிதர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக நான் இப்படிச் செய்கிறேன். 

வியப்பில் ஆழ்த்தும் திரைப்படம்

புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்களுக்கு காந்தி என்ற மனிதரையோ அவரது வாழ்க்கையைப் பற்றியோ மிகக் குறைவாகவே தெரிந்திருக்கிறது. அல்லது ஒன்றுமே தெரியவில்லை. அவர்களெல்லாம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் உண்மைக் கதையைப் புரிந்துகொள்ள இந்தப் படம் உதவுகிறது. சத்தியம், அகிம்சை போன்றவற்றின் நம்பிக்கை குறைந்துகொண்டே வரும் ஒரு சமூகத்தில் அவற்றைப் பற்றி ஒரு நீண்ட உரையாடல் நிகழ்த்துவதற்கு இந்தப் படம் ஒரு நல்ல தொடக்கமாகவும் அமைகிறது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் பெரும்பாலான மாணவர்கள் வியப்பில் ஆழ்ந்து போகிறார்கள். அவர்களில் பலரும் இதற்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை, அவர்களில் பெரும்பாலானோர் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு உண்மையிலேயே நெகிழ்ந்துபோகிறார்கள். 

குறிப்பாக, காந்தியின் துணிவை சித்தரிக்கும் காட்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன. தென்னாப்பிரிக்கத் தெருவொன்றில் சார்லி ஆண்ட்ரூஸுடன் நடந்துசெல்லும்போது அங்குள்ள இளவயது வம்பர்களை காந்தி அமைதியாக எதிர்கொள்வது போன்ற காட்சிகள். ஆங்கிலேய போலீஸ்காரர்கள், நீதிபதிகள் முன்னால் காந்தி நிற்கும்போதும் அல்லது பிரிவினைக்குப் பிந்தைய கல்கத்தாவில் ரத்தவெறி பிடித்த கும்பலுக்கு முன்பு அவர் நிற்கும்போதும் நிதானமிக்க அவருடைய துணிவை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள். 

ஏன் இந்தச் சிரிப்பு?

திரையிடும்போதெல்லாம் பல்வேறு இடங்களில் நான் படத்தை நிறுத்திவிட்டு மாணவர்களிடம் கேள்விகள் கேட்பேன். “உங்கள் தோலின் நிறத்தைக் காரணம் காட்டி ரயிலின் முதல் வகுப்பிலிருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டால் அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? அதன் விளைவாக நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?” அல்லது “சௌரி சௌரா வன்முறைச் சம்பவத்தில் இந்தியர்களான போலீஸ்காரர்களின் உயிரிழந்தார்கள். அதனால் விடுதலைப் போராட்டத்தை காந்தி நிறுத்தியது சரியா?” இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பேன்.

ஆனால், 2022இல் சங்கடமான ஒரு புதிய போக்கை நான் உணர்ந்தேன். அந்தத் திரைப்படத்தில் காந்தி சுட்டுக்கொல்லப்படும் காட்சி வரும்போது 13 வயதுகொண்ட இளம் மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்! ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போது படத்தை நிறுத்திவிட்டு, ‘ஏன் சிரித்தீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்பேன். அத்தனை பேரும் கொஞ்சம் திருதிருவென்று விழித்தார்கள், யாராலும் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. 

1983இல் அந்தப் படத்தைப் பார்ப்பதற்காக என்னுடைய சக மாணவர்களும் நானும் ஒரு திரையரங்குக்கு அழைத்துச்செல்லப்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு 14 வயது. திரைப்படத்தின் தொடக்கத்திலேயே காந்தி படுகொலைக் காட்சியைப் பார்த்த அனுபவத்தை என்னால் மறக்க முடியவில்லை. காந்திக்கு மிக அருகில் இருந்துகொண்டு அவர் உடலை நோக்கி மூன்று தோட்டாக்களை கோட்சே அனுப்பியபோது அந்தத் திரையரங்கில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூச்சடைத்துப் போனோம். யாருமே சிரிக்கவில்லை. அதற்கு அடுத்துவரும் இறுதி ஊர்வலக் காட்சியைத் துளி ஓசைகூட எழுப்பாமல் பார்த்தோம். தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பதின்பருவத்தினர் பலரும் அப்படி இல்லை. 

சில கருதுகோள்கள்

மாணவர்களின் இப்படிப்பட்ட குரூரமான எதிர்வினைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியல் நிபுணர்களுடனும் பதின்பருவத்தினருடனும்கூட உரையாடல் நிகழ்த்தினேன். அதன் அடிப்படையில் இவைதான் காரணங்களாக இருக்கும் என்று சில கருதுகோள்கள் எனக்குத் தோன்றின. அவை:

  1. சங்கடமான தருணங்களில் பதின்பருவத்தினர் சிரிக்க முற்படுகின்றனர்; குறிப்பாக, ஒரு குழுவாக இருக்கும்போது எதிர்பாராத உணர்ச்சி ஒன்றை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டால் இப்படிச் செய்கிறார்கள்.
  2. வகுப்பில் ஒரு மாணவர் சிரித்தால் மற்றவர்களும் அதைப் பின்பற்றி சிரிக்க முற்படுகிறார்கள்.
  3. இரண்டு ஆண்டு கரோனா பொது முடக்கத்தின்போது முன்பதின்பருவத்தினர் (pre-teens) அளவுக்கு அதிகமாக கணினி விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தார்கள், அவற்றில் பலவும் மிகவும் வன்முறை நிறைந்தவை. அதிக அளவில் தொலைக்காட்சியும் பார்த்தார்கள். அதன் விளைவாக, மெய்நிகர் கொலையையும் (virtual murder) உண்மையான கொலையையும் அவர்களால் பெரிதும் பிரித்துப் பார்க்க முடியாமல் போயிருக்கலாம். ஆகவே, ஒருவர் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு அது ஒரு வேடிக்கையாகத் தோன்றியிருக்கலாம், அதன் விளைவுகள் பற்றித் தெரியாமலேயே. (வீடியோ விளையாட்டுகளில் ரத்தம் என்பது என்ன, கணினி அல்லது கைபேசித் திரையில் அள்ளித் தெறிக்கப்படும் சிவப்பு நிறம்தானே).
  4. அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் ஒன்றின்போது கணினித் திரை, கைபேசித் திரை போன்றவற்றில் அதிக நேரம் செலவிட்டதால் ஆசிரியர்கள், சக மாணவர்கள் போன்றோருடனான அன்றாட உறவு என்பது இல்லாமல் போய்விட்டது. இது அவர்களின் சமூகரீதியிலான புலனுணர்வு வளர்ச்சியை பாதித்துவிட்டது; அவர்களுக்கு இயற்கையாக இருக்கும் பரிவுணர்வை மழுங்கடித்துவிட்டது; வலி, துன்பம், மரணம் போன்ற மனிதச் சூழல்களின்போது வெளிப்பட வேண்டிய அவர்களது உணர்வுகளைத் திருகலாக்கிவிட்டது.
  5. பதின்பருவத்தினர் இயற்கையான காற்றுமானிகளைப் (barometer) போல. சமூகத்தில் தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறதோ அதைத்தான் உள்வாங்கிக்கொள்வார்கள்; அதைத்தான் பிரதிபலிப்பார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்

சமஸ் 22 Sep 2021

கொலைக்கு பின் ஆரவாரம்

சமீபத்தில் பெருநகரம் ஒன்றின் பள்ளியிலிருந்து ‘காந்தி’ திரைப்படத்தை தங்கள் மாணவர்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. 9ஆம் வகுப்பு படிக்கும் சில நூறு மாணவர்களுக்கு அந்தப் படத்தைப் போட்டுக்காட்டினேன்.

சமூகத்தின் மதச்சார்பின்மை மதிப்பீடுகள் செல்லரித்துக்கொண்டே வருவது குறித்து மிகவும் கவலை கொள்ளும் பள்ளி அது. ஆகவே, சமூகத்தில் ஒடுக்கப்படும் பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அந்தப் பள்ளி நிர்வாகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.  

ஆனால், காந்தி படுகொலைக் காட்சிக்கு அந்த மாணவர்களின் எதிர்வினையைக் கண்டு நான் உறைந்துபோய்விட்டேன்! அவர்கள் சிரிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை, கைதட்டவும் ஆரவாரம் செய்யவும் சீட்டியடிக்கவும் செய்தார்கள். அடுத்து வந்த இறுதி ஊர்வலக் காட்சிவரை அந்தச் சிரிப்பொலி தொடர்ந்தது. 

என்னை மேலும் துயரத்துக்குள்ளாக்கும் வகையில், படத்தின் முடிவில் மறுபடியும் வரும் படுகொலைக் காட்சியில் சிறுவர்கள் கைதட்ட ஆரம்பித்தார்கள். நல்லவேளை, இப்போது கைதட்டியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களை மற்றவர்கள் ‘உஷ்’ என்று எச்சரிக்கை செய்து அமைதியாக்கிவிட்டார்கள். அன்று மாலை எனக்கு அந்த மாணவர்களுள் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அந்தப் படத்தைக் காட்டியதற்காக நன்றி கூறியிருந்தார். தனது வகுப்புத் தோழர்களின் நடத்தைக்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அவர்களுடன் சேர்ந்து தான் கைதட்டவில்லை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

சில கேள்விகள்

அந்தப் படத்தைப் பார்த்த எல்லா மாணவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புவது என்ற முடிவுக்கு வந்தேன். அவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டேன்:

படத்தின் முதல் காட்சியில் காந்தி படுகொலை செய்யப்படும்போது உங்களில் பலரும் ஏன் கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? இந்தப் படம் கற்பனைக் கதையல்ல, உண்மையில் நடந்தவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு கிழவருக்கு மிக அருகில் துப்பாக்கியை வைத்து அவரைச் சுட்டுக்கொல்லும் காட்சியில் அப்படி என்னதான் வேடிக்கையைக் கண்டீர்கள்?

நாம் என்ன செய்கிறோம், ஏன் அதைச் செய்கிறோம் என்பதன் பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன். ஆகவே, காந்தி கொல்லப்பட்ட காட்சியில் நீங்கள் ஏன் கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.  

நான் கோபத்தில் கேட்பதாக நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம், குழப்பத்தாலும் வருத்தத்தாலும் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். ஏனென்றால், உங்கள் கண் முன்னே யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் நீங்கள் கைதட்டிச் சிரிக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இல்லை, சிரிப்பீர்களா?

அடுத்த நாள் எனக்கு நூற்றுக்கணக்கான பதில் மின்னஞ்சல்கள் வந்தன. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சக மாணவர்களின் நடத்தைக்காக மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்தனர். நடந்ததற்காக அவர்கள் உண்மையிலேயே வருந்தினார்கள். காந்தி படுகொலைக் காட்சியின்போது தாங்கள் ஆரவாரம் செய்யவில்லை என்று பலரும் கூறினார்கள். அந்தப் படத்தின் மூலம் நிறைய விஷயங்களைத் தாங்கள் கற்றுக்கொண்டோம் என்றுகூட அவர்களில் பலரும் கூறினார்கள். எல்லோரும் ஆரவாரம் செய்தபோது அதனால் உந்தப்பட்டுத் தாங்களும் ஆரவாரம் செய்துவிட்டோம் என்றும் அதற்குத் தற்போது வருந்துகிறோம் என்றும் ஓரிரு மாணவர்கள் கூறினார்கள்.     

ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் காந்தியின் படுகொலைக் காட்சிக்கு ஆரவாரம் செய்தது பற்றித் தங்களுக்குத் துளியும் வருத்தம் இல்லை என்றும் அவர் கொல்லப்பட வேண்டியவர்தான் என்றும் கூறினார்கள்! காந்தியைப் பற்றி அவிழ்த்துவிடப்படும் கட்டுக்கதைகளை அவர்கள் நம்பியதால் வந்த விளைவு இது. காந்திய அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் அந்தக் கட்டுக்கதைகள் யாவும் பொய் என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் இன்னமும் அவை நம்பப்படுகின்றன.

இது எப்படிப்பட்ட இந்தியா?

காந்தி மீது அவர்களுக்கு என்ன புகார் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அந்த இளம் உள்ளங்கள் தங்கள் குதூகலத்துக்கு இடையில் காணத் தவறிய விஷயம் ஒன்று உண்டு. அவர்கள் உண்மையில் வன்முறையையும் கொலையையும் கண்டு ஆரவாரம் செய்திருக்கிறார்கள்! 

இந்த ஆரவாரம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்காத மாணவர்களுள் ஒருவர் வருத்தத்தோடு இப்படிக் கேட்டார்: “காந்தியின் கருத்துகளோடு நாம் முரண்படலாம், ஆனால் அதற்காக அவரது படுகொலைக் காட்சியில் ஆரவாரம் செய்வதா? அப்படிச் செய்தால் அவரைக் கொன்றவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?” 

குழந்தைகளும் பதின்பருவத்தினரும்தான் பெரும்பாலும் அபாயச் சங்காக இருக்கிறார்கள். எளிதில் பாதிப்புக்கும் தாக்கத்துக்கும் உள்ளாகக்கூடியவர்கள் அவர்கள்தான். சமூகத்தில் ஏற்படும் ஆழமான மாற்றத்தை முதலில் பிரதிபலிப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள்தான். ஒரு படுகொலைக் காட்சியைப் பார்த்து 14 வயது சிறுவர்கள் வெளிப்படையாகவே ஆரவாரம் செய்கிறார்கள் என்றால் ‘நம் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் இப்படிப்பட்ட இந்தியாவில்தான் வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறோமா?’ என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.   

இந்தச் சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் மற்ற மாணவர்களின் எதிர்வினை எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நம்மைச் சுற்றிலும் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுப்பு நிறைந்த சூழலால் கறைபடாத உள்ளங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன என்பதையே இது காட்டுகிறது. நம் அரசமைப்பின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதற்குப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் பள்ளிகளும் கல்வியாளர்களும் நிறையவே இருக்கிறார்கள் என்பதையும் அது உணர்த்துகிறது. 

சிறுவர்கள் வளர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக ஆவதில் பள்ளிகள் - அதாவது அக்கறையுள்ள பள்ளிகள் – பெரும் பங்காற்ற முடியும், பெரும் பங்காற்றுகின்றன. எனினும், பெற்றோர்களுக்குத்தான் இதில் அதிகப் பொறுப்பு இருக்க முடியும். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும், அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்; அவர்கள் வளர்ந்து அறிவுபூர்வமான, பரிவுணர்வுகொண்ட மனிதர்களாக ஆவதற்கு உதவும் வகையில் மதிப்பீடுகளையும் குண இயல்புகளையும் அவர்களுக்குப் பெற்றோர்கள்தான் வடிவமைத்துத் தர வேண்டும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?
குஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களா?
சுயராஜ்ஜியத்தின் பிரகடனம்
சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றாண்டுகள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: ஆசை

2


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!ஆய்வுக் கூட்டம்கதைபனிப்பொழிவுஆப்பிரிக்கன் ஐரோப்பாமூளைபாரசீக மொழிகொழுப்பு உணவு வேண்டாம்காலனி ஆட்சிநாத்திகர் நேருதேசிய ஊடகம்மூன்று தீர்க்கதரிசன விஷயங்கள்தேசியத் தேர்தல்கொலைவெறி தாக்குதல்ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி தேசியப் பூங்காக்களும்மார்ட்டென் மெல்டால்ஒரே வேலையில் நீடிக்கிறீர்களா... ஆபத்து!உலகளாவிய வளர்ச்சிமஞ்சள்இல்லம் தேடிபறிப்பு அல்லஸ்மார்ட்போன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள்மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுமலையாளப் படம்பிராமணரல்லாதோர்அமித் ஷா காஷ்மீர் பயணம்கலைஞரின் முதல் பிள்ளை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!