காலவெளியில் காந்தி 5 நிமிட வாசிப்பு

காலவெளியில் காந்தி

பாலசுப்ரமணியம் முத்துசாமி
08 Sep 2021, 12:00 am
5

விலங்கிலிருந்து, சிந்திக்கத் தெரிந்த விலங்காக மனிதன், பரிணாமம் கொண்டெழுந்து வந்த பாதை உலக வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல். விலங்காக இருந்த காலத்தில், அவன் பெரும்பாலும் சக விலங்குகள் அல்லது இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அபாயங்களுக்கு அவன் உடனடி எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவையும் இருந்தது. தன்னைவிட வலிமை குறைவான அபாயத்தை எதிர்த்துப் போரிடுதல் அல்லது தன்னைவிட வலிமையான அபாயத்திலிருந்து தப்பித்து ஓடிவிடுதல்.

ஆனால், சிந்திக்கத் தொடங்கியதன் பின்னால், மனிதனின் ஆற்றல் பன்மடங்கு கூடியுள்ளது. அவன் கண்டுபிடித்த கருவிகள் அவனது அடிப்படைத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள உதவின. 

உடல் சக்தியின் தேவையானது மனிதனின் கண்டுபிடிப்புகளால் மிகவும் குறைந்துவிட்டது. உணவுக்காக அலையாமல், வேட்டையாடாமல், வேளாண்மையைத் தொடங்கினான். அதைச் செய்ய இயந்திரங்களைக் கண்டுபிடித்து, உடல் உழைப்பின் அவசியத்தை மேலும் குறைத்துக்கொண்டான். இயந்திரங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்றவை இன்று மண்ணில் பெரும் ஆதிக்க சக்தியாக மனிதனை மாற்றியிருக்கின்றன. அபாயங்களை முன்னுணரும் சக்தி அதிகரித்திருக்கிறது. எனவே, ஆதி காலம்போல் அல்லாது அபாயங்களுக்கு வன்முறை அல்லது பயம் என்னும் உணர்வால் உடனடி எதிர்வினை ஆற்றும் தேவை இன்று இல்லை.

இன்று மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகளெல்லாம் சமூகம், பொருளாதாரம், உடல் நோய், ஏழ்மை போன்ற தளங்களைச் சார்ந்தவை. இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடும் நம் கண் முன்னே பெரும் சவாலாக நிற்கிறது. இவற்றை எதிர்கொள்ள பண்டைய காலம்போல உடனடி உடல்வழி வன்முறை போன்ற எதிர்வினைகள் உதவாது. நிதானத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அறிவாற்றலுடனும் பிரச்சினையின் ஆணிவேரை அறிந்துகொண்டு, அவற்றைத் தீர்க்க எடுக்கப்படும் முடிவுகள்தான் நீடித்து நிலைப்பவையாக இருக்கும். இதற்குத் தேவை உடல் சக்தி அல்ல; அன்பு மற்றும் அறிவு என்னும் மனதின் சக்திகள்.

பரிணாம வளர்ச்சியின் உயர்நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இன்று வன்முறை, பயம் போன்ற ஆதி உணர்வுகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அவை மனித வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லத் தடைகளாகவும் இருக்கின்றன என்கிறார் ‘அகிம்சையின் வலிமை’ நூலை எழுதிய ரிச்சர்ட் பார்லெட் க்ரெக். ‘தே ஹாவ் பிகம் ஹைஜீனிக்கலி பேட் ஃபார் தி இண்டிவிஜுவல் அண்ட் தி ரேஸ்’ (They have become hygienically bad for the individual and the race) என்னும் அவரது வாக்கியம் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

உடல் வேலைகளின்போது தசைகளின் சக்தி செலவழிக்கப்படுகிறது. அதனால், உடல் தளர்வடைகிறது. ஆனால் கோபம், பயம், துயரம் போன்ற உணர்வுகள் மேலெழும்போது உடலின் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் தளர்வடைந்து உடல் உழைப்பைவிட அதிகமான சக்தி விரயமாகி, மனதைத் தளரச் செய்கிறது என ஒரு பெரும் அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணரை மேற்காட்டிச் சொல்கிறார் க்ரேக்.

இது உடல் செயல்பாடுகளில் பெரும் மற்றங்களை உருவாக்குகிறது. ரத்தத்தில் அட்ரினலின் ஹார்மோனையும் சர்க்கரை அளவுகளையும் அதிகரிக்கிறது. கோபம், பயம் என்னும் ஆதி உணர்வுகள் ஒரு காலத்தில் மனிதனுக்கு, தனக்கு ஏற்படும் அபாயங்களைக் காத்துக்கொள்ளும் உடனடித் தீர்வுகளைக் காண உதவின. ஆனால், அந்தப் பேரிடர்கள் மூலம் உடனடி அபாயங்கள் இல்லாத காலத்தில் இவை தேவையற்றவை மட்டுமல்ல, மனிதனின் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் தீங்கு விளைவிப்பவை. எனவே, உயிரியல்ரீதியாக அவை செயல்திறன் மிக்க உணர்வுகளல்ல என்கிறார் க்ரெக்.

இந்த உணர்வுகள் மனித மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அதனாலேயே இவை முக்கியமானவை அல்ல. கோபம், பயம் போன்ற உணர்வுகளுக்கு மாற்றாக அன்பு என்னும் நேர்நிலை உணர்வைப் பயிற்சிகள் மூலம் வளர்த்தெடுப்பது மனித சக்தியின் செயல்திறனை அதிகரிக்க வல்லது என்பது க்ரெக்கின் கருத்து.

இது எல்லா மனிதர்களிடமும் பல்வேறு அளவுகளில் உள்ளது. சுய பயிற்சிகளின் மூலமும் ஒழுக்கத்தின் வழியாகவும் இந்தக் குணங்களைப் பெரிதளவு வளர்த்தெடுக்க முடியும் என்கிறார் க்ரெக். காந்தி தனது கூட்டு வாழ்க்கை அமைப்பின் மூலமாக, தனது லட்சக்கணக்கான தொண்டர்களுக்குள் அன்பு, அகிம்சை என்னும் நேர்நிலை உணர்வுகளை வளர்த்தெடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் வன்முறை என்னும் எதிர்மறைச் சக்திக்கு மாற்றாக, அகிம்சை என்னும் அன்புவழியை முன்னிறுத்தி, தங்கள் எதிரிகளின் அறமற்ற மேலாதிக்கத்தை உலகுக்கு உணர்த்தி, இந்திய விடுதலைக்கு வழிவகுத்தார். வெறும் அரசியல் விடுதலையுடன் நிறுத்திக்கொள்ளாமல், பல சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த அடிப்படைகள் வழியே உருவாக்கினார்.

கோபம், அன்பு – இவ்விரண்டு குணங்களுமே மனித சக்தியின் வெளிப்பாடுகள். இரண்டுமே படைப்பூக்கச் சக்திகள்தான். ஆனால், அன்பின் சக்தி பெரிது. அது நீடித்து நிலைக்க வல்லது. அன்பு என்பது உயிர் தொடர்ச்சியின் அடிப்படை. கோபம் அந்தத் தொடர்ச்சியை மறுக்கும் உணர்வு. அன்பு என்பது அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்னும் நேர்நிலை உணர்வு. கோபம் என்பது எதிர்த்தரப்பு வாழக் கூடாது என்னும் எதிர்மறை உணர்வு. அன்பு என்னும் உணர்வு ஆயுதமாகக் கையாளப்படுகையில், கோபம் என்னும் ஆயுதத்தைவிட மிகுந்த நிதானத்துடனும் செயல் திறனுடனும் துல்லியத்துடனும் தன் இலக்கை எய்துகிறது. அது மனித சமூகத்தின் அங்கீகாரத்தை என்றென்றைக்குமாகப் பெறுகிறது. நீண்ட கால நோக்கில அன்பே கோபத்தை வென்று அழிவில்லாப் பெருங்குணமாக மனித சமூகத்தின் முன் நிற்கிறது. அதுவே காந்தியத்தின் அடிப்படை.

காந்தியின் காலத்துக்குப் பின்பும் உலகின் பெரும்பாலான உரிமைப் போர்கள் அவர் காட்டிய அகிம்சை வழியேதான் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கின்றன் அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் சம உரிமைப் போர் தொடங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கெதிரான போராட்டம் வரை. ஆனாலும், கால ஓட்டத்தில் சமூக அகவெளியில், வரலாற்றுச் சாதனைகள், புகை படிந்து மங்கிவிடுகின்றன. காந்தி என்பவர் ஒரு புராண காலக் கதாபாத்திரம்போலவும், அவரது வழிகள் இன்றைய காலகட்டத்துக்குப் பொருந்தாதவை என்பனபோலவும் கருத்துகள் உருவாகி இன்று மேலாதிக்கம் செலுத்துகின்றன. அவை அறிவியல் அடிப்படையற்ற கருத்துகள். முழுமையான அறிவு என்னும் ஆயுதம் கொண்டு சீர்தூக்கிப் பார்க்கையில், காந்தி என்னும் காந்தியமே இன்றைய உலகத்தின் பிரச்சினைகளுக்குச் செயல்திறன் மிக்க, நீடித்து நிலைக்கவல்ல தீர்வுகளை உருவாக்க வல்லவை என்பதை நாம் காண முடியும்.

நம் கண் முன்னே வெண்மைப் புரட்சியை முன்னெடுத்த வர்கீஸ் குரியன் தொடங்கி, கூட்டுறவு முயற்சிகளை முன்னெடுத்த எல்.சி.ஜெயின், தகவல் உரிமைச் சட்டம் உருவாக்கிய அருணா ராய், வெறும்பாதக் கல்லூரியின் பங்கர் ராய், வறண்ட ஆறுகளை உயிர்ப்பித்த ராஜேந்தர் சிங், கட்சிரோலி ஆதிவாசிகளுக்கான சுகாதார அமைப்பை உருவாக்கிய மருத்துவத் தம்பதி அபய்-ராணி பங், அர்விந்த் கண் மருத்துவக் குழும நிறுவனர் வெங்கிடசாமி, சுயசார்புத் தொழில்நுட்பம் மூலம் லடாக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ள சோனம் வாங்க்சுக், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிய ழீன் தெரெசே, குப்பைகளிலிருந்து கல்வி உபகரணங்களை உருவாக்கி அறிவியிலின் எளிமையைப் பள்ளிச் சிறுவர்களுக்குப் போதிக்கும் அர்விந்த் குப்தா, கூலித் தொழில் செய்யும் பெண்களுக்கான சுயசார்பு வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்த சேவா நிறுவனத்தின் இலா பட் வரையிலானோர், காந்திய அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நீடித்து நிலைக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளார்கள். இவர்கள் அனைவரின் அணுகுமுறையிலும் இருப்பது அன்பு மற்றும் சமத்துவம் வழியே உருவான நீடித்து நிலைக்கும் தீர்வுகள்தான். இதை ஒரு தொடராக எழுதி, பின்னாளில் ‘இன்றைய காந்திகள்’ நூலாகக் கொண்டுவந்தபோது தமிழ் வாசகர்கள் இடையே நல்ல வரவேற்பை அது பெற்றது. இதை மேலும் கொஞ்சம் விரித்து, காந்தி முன்னிறுத்திய மதிப்பீடுகளுக்கும், விழுமியங்களுக்கும் உலகளாவிய அளவில் இன்றைக்கும் உள்ள செல்வாக்கைப் பேசும் தொடராக எழுதுங்களேன் என்று நண்பர்கள் சிலர் சொன்னதன் விளைவே இந்தத் தொடர். இதில் நாம் சந்திக்கவிருக்கும் ஆளுமைகள் பலர் நேரடியாக காந்தியைப் பேசுபவர்கள் அல்ல. ஆனால், அவர்களுடைய செயல்பாடுகளின் வழி காந்தியை நாம் காண முடிகிறது. சுயநலப் பொருளாதாரப் போட்டிப் பாதையில், கடிவாளம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, அவர்கள் மாற்று வழிகளைக் காட்டுகிறார்கள். போட்டி, பொறாமை, பயம், கோபம், வன்முறை என்னும் செயல்திறன் குறைந்த, காலாவதியான உணர்வுகள் அங்கே உடைந்து சிதறுகின்றன. மாறாக, அன்பு, சமத்துவம் என்னும் நவீன அறங்கள் வழியே, நீடித்து நிலைக்கும் தீர்வுகள் என்னும் காந்தியமே மானுட வாழ்வின், எதிர்காலத்தின் நம்பிக்கையாகச் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. காலவெளி எங்கும் நீடித்திருக்கும் காந்திகளை மாதம் ஒருவர் என்று இனி பார்ப்போம்!

 

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது).

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

S.Sivaprakasam   3 years ago

அன்பு எனும் சக்தியுடன் அறிவு எனும் ஆயுதம் கொண்டு புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

KumaranNB   3 years ago

Amazing sir.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

N.Sivasankar   3 years ago

நல்ல தொடக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

N.Sivasankar   3 years ago

நல்ல தொடக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

sudhakar Sampath   3 years ago

சிறப்பான தொடக்கம்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உணவுத் தன்னிறைசட்டப் பிரிவு 370அரசியல் கட்சிகள்பேக் பிளேநடவடிக்கைஉணவுப் பதப்படுத்துதல் விரக்திபெரியார்திருநெல்வேலி அரசு மருத்துவமனைடு டூ லிஸ்ட்பகத்சிங்தமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்மேல் இந்தியாசாவர்க்கர் வாழ்வும் நூல்களும்தேர்தல்கள்அருணாசலக் கவிராயர்உச்ச நீதிமன்றம்மொம்பாஸாமுதல்வர் மு.க.ஸ்டாலின்தத்துவ சிந்தனைபூனா ஒப்பந்தம்: சில உண்மைகள்ஸரமாகோ: நாவல்களின் பயணம்பாலின விகிதம்கிறிஸ்துவம்மேலாண்மைவேலையின் தரம்கூத்தாடிஇந்திய வேளாண்மைவிளையாட்டுமனிதர்கள் மீது மரணம் இடும் முத்திரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!