கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

இரண்டில் ஒன்று... காந்தியமா, இந்துத்துவமா?

ராமச்சந்திர குஹா
02 Feb 2022, 5:00 am
2

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு 1915இல் தில்லி வந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அங்குள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

சில வாரங்களுக்கு முன் புணே நகரில் மரணம் அடைந்த தன்னுடைய வழிகாட்டி கோபால கிருஷ்ண கோகலே குறித்து, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அக்கல்லூரி மாணவர்களிடையே காந்தி பேசினார். “கோகலே இந்து, ஆனால் சரியான சிந்தனைகள் உள்ளவர். அவரை அணுகிய இந்து சன்னியாசி ஒருவர், முகம்மதியர்களை அடக்கி வைக்கும் வகையில் இந்துக்களுக்கு ஆதரவாக அரசியல்ரீதியாகக் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்காக போலியான மதக் காரணங்களையும் அவர் முன்வைத்தார். கோகலே என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் விரும்புகிறபடி செயல்படுவதாக இருந்தால்தான் நான் இந்து என்று கருதினால், நான் இந்துவே அல்ல என்று வெளிநாடுகளுக்கெல்லாம் தெரிகிற வகையில் பிரசுரித்துவிடுங்கள்!’ என்று சொன்னார் கோகலே” என்றார் காந்தி. (புனித ஸ்டீபன் கல்லூரி இதழில் காந்தியின் பயணம் குறித்து 1915 ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரையிலிருந்து).

இருபதாவது நூற்றாண்டின் முதல் சில பதிற்றாண்டுகளில் சில இந்து அரசியலர்களும், மதத் தலைவர்களும் எண்ணிக்கையில் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்திய அரசியலையும் நிர்வாகத்தையும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று உரிமை பாராட்டினர். இந்த எண்ணத்தை காந்தி திட்டவட்டமாக நிராகரித்தார். தன்னுடைய அரசியல் வழிகாட்டியான கோகலேவைப் போலவே, இந்தியாவை இந்துக்களின் நாடாக வரையறுக்க வேண்டும் என்ற தூண்டுதலுக்கு காந்தி இரையானதே இல்லை. கோகலேவைப் போலவே, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக இடைவிடாமல் பாடுபட்டார் காந்தி. 

இப்படிப்பட்ட வெளிப்படையான அணுகுமுறையும், ஆழ்ந்த மனிதாபிமானமும்தான் அவருடைய மத்தையே சேர்ந்த மத வெறியர்களுக்கு சினத்தை அதிகப்படுத்தியது. எனவே காந்தியின் பொது வாழ்க்கை முழுவதிலும் அவரை அவர்கள் தொடர்ந்து எதிர்த்தனர், இறுதியில் அவரைக் கொல்வதிலும் வெற்றி கண்டனர். 74 ஆண்டுகளுக்கு முன் இதே வாரத்தில் அப்படுகொலை நடந்தது.

காந்தியைப் படுகொலைசெய்த நாதுராம் கோட்சே, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் 1940கள் முழுக்க - காந்தி கொல்லப்பட்ட 1948 ஜனவரி 30 வரையில் - நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று, ‘காந்தி கொலையாளி’ (Gandhi’s Assassin) என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் தீரேந்திர கே.ஜா, பல ஆதாரங்களைக் காட்டியிருக்கிறார். ஆனால், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களோ அவருக்கும் அந்த அமைப்புக்கும் படுகொலைக்கு வெகுகாலத்துக்கு முன்னதாகவே தொடர்புகள் அறுந்துவிட்டன என்று இன்றுவரை மறுத்துவருகின்றன. தனிப்பட்ட முறையில் தொடர்பு என்பதைவிட – சித்தாந்த அடிப்படையில் ஆழ்ந்த தொடர்பு தொடர்ந்தேவந்திருக்கிறது.

கோட்சேவைப் போலவே, ஆர்எஸ்எஸ் அமைப்பும் நம்பியது - இப்போதும் நம்புகிறது – இந்த நாட்டின் அரசியல், கலாச்சார வாழ்க்கைக்கு இந்துக்களுக்கு முன்னுரிமையும் மேலாதிக்க உரிமையும் இருக்கிறது என்று. முஸ்லிம்களைவிட, கிறிஸ்தவர்களைவிட – இந்துக்கள் தான் இயல்பாகவும், அத்தியாவசியமாகவும் இந்தியர்கள் என்று அது கருதுகிறது. இந்த இந்து மேலாதிக்க உணர்வுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அதன் தோழமை அமைப்புகளையும் காந்திக்கு எதிர்நிலையில் கொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதைப் பின்வரும் பாராக்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியா மீது இந்துக்களுக்கு சிறப்பு உரிமை இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் கூறிக்கொள்வதைப் போல அல்லாமல், நாட்டின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நாட்டின் மீது சம உரிமை இருக்கிறது என்று காந்தி நம்பினார். காந்தியின் தார்மிக நோக்கும், அரசியல் செயல்பாடுகளும் அனைவருக்குமான இந்தியா என்ற கருத்தையே கொண்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியின் ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள் என்ற தலைப்பில் 1945-ல் காந்தி தயாரித்த சிறு கையடக்கப் பிரதியை ஆழ்ந்து வாசித்தால் இது புரியும். இந்த ஆக்கப்பூர்வத் திட்டத்தில் முதலில் இடம்பெறுவது, வகுப்பு ஒற்றுமை! தீண்டாமை ஒழிப்பு, கதர் ஊக்குவிப்பு, மகளிர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம் ஆகியவை – இவையெல்லாமும் அவருக்குப் பிடித்த லட்சியங்கள் – அதற்குப் பின்னால்தான். 

இந்தக் கையடக்கப் பிரதியின் முக்கியமான முன்னுரையிலேயே காந்தி எழுதியிருக்கிறார், “வகுப்பு ஒற்றுமையை எட்ட முதலாவதான அத்தியாவசியக் கடமை – ஒவ்வொரு காங்கிரஸ்காரரும், அவருடைய மதம் எதுவாக இருந்தாலும் – தானே தனக்குள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், யூதர்கள், ஜோராஸ்டிரியர்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும், சுருக்கமாகச் சொல்வதென்றால் அவரே இந்துவாகவும் இந்துவல்லாத பிற மதத்தவராகவும் செயல்பட வேண்டும். இந்துஸ்தானத்தில் வாழும் ஒவ்வொருவருடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் தான் பிறந்த மதம் அல்லாது பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் தனிப்பட்ட நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய மதத்தின் மீது தனக்குள்ள மரியாதையைப் பிற மதங்கள் மீதும் செலுத்த வேண்டும்.’

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மத அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியா இரண்டாகப் பிளவுபடுவதை காங்கிரஸாலும் காந்தியாலும் தடுக்க முடியவில்லை. இருந்தும் தலைவிதியை நொந்துகொண்டு முடங்கிவிடாமலும், ஆழ்ந்த மனச் சோர்வில் ஆழ்ந்துவிடாமலும் - பழிவாங்க வேண்டும் – வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கிடையே வளர்ந்துவிடாமலும் இருக்க, இந்தியாவிலேயே தங்கியிருப்பது என்று முடிவு செய்துவிட்ட முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம், இந்தியாவில் உங்களுக்கு அனைத்திலும் சம உரிமைகள் தரப்படும் என்று உறுதியளிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் காந்தி. 

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி கல்கத்தாவில் 1947 செப்டம்பரிலும் தில்லியில் 1948 ஜனவரியிலும் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் குறித்து விரிவாகப் பலரும் பலமுறை எழுதியிருக்கின்றனர். அதிகம் வெளியே அறியப்படாததும், முக்கியத்துவத்தில் எந்த விதத்திலும் குறைவில்லாததும் எதுவென்றால், 1947 நவம்பர் 15இல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவர் நிகழ்த்திய உரைதான். 

அங்கே காந்தி பேசுகிறார்: ‘காங்கிரஸ் கட்சியின் உண்மையான தன்மைக்கு விசுவாசமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரே என்ற உணர்வை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும், இந்த லட்சியத்துக்காகத்தான் காங்கிரஸ் கடந்த அறுபது ஆண்டுகளாகப் பாடுபட்டுவருகிறது. இந்த லட்சியம் இன்றும் தொடர்கிறது.

இந்துக்களின் நலனுக்காக மட்டும் காங்கிரஸ் எப்போதுமே போராடவில்லை. காங்கிரஸ் தோன்றிய காலத்திலிருந்து நாம் கொண்டிருந்த லட்சியத்தை இப்போது கைவிட்டுவிட்டு வேறு குரலில் பேச வேண்டுமா? காங்கிரஸ் என்பது இந்தியர்களுடையது, இந்த நிலத்தில் வாழும் அனைவருக்குமானது, அவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் என்று யாராக இருந்தாலும்!’ (காந்தி நூல்களின் தொகுப்பு, 90-வது புத்தகம், பக்கம் 38).

இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் சொந்தமானது இந்தியா - அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் - என்ற நம்பிக்கைக்காகவே, வேறு எதற்காகவும் அல்ல, காந்தி படுகொலைசெய்யப்பட்டார். காந்தி இறந்த சில வாரங்களுக்குப் பிறகு அவருடைய தொண்டர்கள் பலர் சேவாகிராமத்தில் கூடி அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினர். அவர்களுடைய பேச்சின்போது ஆர்எஸ்எஸ்ஸைப் பற்றிக் குறிப்பிட்டனர். காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் அல்ல, காந்தியின் படுகொலைக்கு முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் வகுப்புவாத வெறியைத் தூண்டும் வகையில் பல கூட்டங்களில் பேசிவந்தார். 

சேவா கிராமத்தில் 1948 மார்ச்சில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஷ்டிர பிராமணரான வினோபா பாவே, தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் அமைப்புகளின் மீது தனக்கேற்பட்டுவிட்ட அவநம்பிக்கை குறித்து மிகவும் மன வேதனையுடன் பேசினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த நாட்டின் குறுக்கிலும் நெடுக்கிலும் மிகுந்த திறமையுடன் பரவியதல்லாமல் நன்கு ஆழமாக வேரூன்றிவிட்டது. அது முழுக்க முழுக்க பாசிஸ அமைப்பாகிவிட்டது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றவர்களை நம்புவதே கிடையாது. காந்தி சத்தியத்தையே கடைப்பிடித்தார். அதற்கு நேரெதிரான அசத்தியம்தான் இவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. இந்த அசத்தியமே அவர்களுடைய வழிமுறையிலும் கொள்கையிலும் அங்கமாகிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கத்துக்கும் இந்துத்துவ ஆதரவாளர்களுக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடுகளை அந்தக் கூட்டத்தில் விவரித்திருக்கிறார் வினோபா. “ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறையானது நம்முடையவற்றுக்கு நேர் எதிரானது. பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடி நாம் சிறைக்குப் போகும் வேளையில் அவர்கள் அதே பிரிட்டிஷாரின் ராணுவத்திலும் காவல் துறையிலும் வேலையில் சேர்கின்றனர். இந்து – முஸ்லிம்களுக்கிடையே கலவரம் மூளும் என்கிற அறிகுறி தெரிந்தால்போதும்; அவர்கள் உடனே அந்த இடத்துக்கு அதிக எண்ணிக்கையில் வந்து குவிந்துவிடுகிறார்கள். ஆட்சியாளர்கள் (பிரிட்டிஷ்காரர்கள்) இதில் தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்து, அவர்களை ஊக்குவித்தனர். அதன் விளைவுகளுக்கு நாம்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இப்போது இருக்கிறோம்!” (Gopalakrishna Gandhi, editor, Gandhi is Gone, Who Will Guide Us Now? Permanent Black, pp 88-90.)

காந்தியின் பிற சீடர்கள், அதேபோல சங்கப் பரிவாரங்கள் குறித்து ஆழ்ந்து வாசித்து, அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று வினோபா கூறினாரோ அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர். காந்திக்கு நெருக்கமான தொண்டரான கே.ஜி.மஷ்ரூவாலா 1948 டிச. 19ஆம் தேதியிட்ட ஹரிஜன் இதழில் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். “ஆர்எஸ்எஸ் குறித்து எனக்குப் பல ஆண்டுகளாக சந்தேகம் நிலவியது. அவர்கள் மீதான என்னுடைய அவநம்பிக்கைகள் சரியானவைதான் என்பது இப்போது புரிந்துவிட்டது.” வினோபாவைப் போலவே காந்தியின் நீண்ட கால சகாவான மஷ்ரூவாலா நன்கு படித்த அறிஞர். 

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மராட்டிய மொழியில் எழுதியவற்றை அவர் தொடர்ந்து படித்துவந்தார். “இந்து மதத்துக்கு அன்பு செய்வோம் – மற்ற மதங்களை வெறுக்க மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறிவந்தது உண்மையல்ல, இந்து மதத்துக்கு அன்பு செய்வோம், முஸ்லிம்களிடம் வம்பு செய்வோம் என்பதாகத்தான் அவர்களுடைய கொள்கை இருந்திருக்கிறது" என்று மஷ்ரூவாலா அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு எதிரான விரோதம், பகையுணர்வு என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது எம்.எஸ்.கோல்வால்கரின் எழுத்துகளில் அபரிமிதமாக வெளிப்படுகிறது. அவர்தான் அந்த அமைப்பின் நீண்ட காலத் தலைவர்.

இப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கும் மோகன் பாகவத், அவருடைய முன்னோடிகளைப் போல அப்பட்டமாக குரூரமானவர் அல்ல, ஆனால் அவர்களுடைய அதே இந்து மேலாதிக்க சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடிப்பவர்தான் (முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று ஹரித்துவாரில் சமீபத்தில் சிலர் நிகழ்த்திய வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக அவர் இருப்பதே இதை வெளிப்படுத்துகிறது). 

ஆண்டு 2022லும் 1948ஐப் போலவே சிறுபான்மைச் சமூகத்தினரை எரிச்சலூட்டும் இந்துத்துவச் சிந்தனைக்கும் காந்தி வலியுறுத்திய பன்முகத்தன்மை கொண்ட அனைவரையும் அரவணைக்கும் ஒன்றுபடுத்தும் சித்தாந்தத்துக்கும், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தொடர்கிறது. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இந்தியர்கள் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். நாம் எவ்வளவு துணிச்சல் உள்ளவர்களாகவும் விவேகிகளாகவும் இருக்கிறோம் அல்லது இருக்க வேண்டும் என்பதைப் பொருத்தே இந்தக் குடியரசின் எதிர்காலம் அமையும்!

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.


8


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

இந்தக் கட்டுரையை வாசிக்கும் நாளில், கட்டுரையாளர் வசிக்கும் மாநிலத்தில், இரண்டாவது நாளாக பர்தா அணிந்த மாணவியர் கல்வி நிலைய வளாகத்தில் நுழைவதை ஒரு அரசு அதிகாரியே - ஆசிரியராகவும் இருக்கக் கூடும் - தடுக்கும் காணொளியைக் கண்டேன். எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டோம்?! வெட்கக்கேடு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பது என்பதே ஒருவிதமான மதப்பற்றுதான். அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் இருப்பதே உண்மையான மதச்சார்பின்மை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இரு உலகம் தொடர்அரசுப் பணிஅசோக்வர்த்தன் ஷெட்டி கட்டுரைபிற்போக்காளர்ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள் சமூக மாற்றமும்!முலாயம் சிங் யாதவ்: ஒரு சகாப்தம்இந்தியப் புரட்சிவ.சேதுராமன் கட்டுரைதமிழக நிதிநிலை அறிக்கை கடினமான காலங்கள்பீட்டர் அல்ஃபோன்ஸ் பேட்டிபானைசேதம்கரும்பு சாகுபடிசூரத் நகர்ஜி.குப்புசாமி கட்டுரைஆண்-பெண் உறவுவாட்ஸப்பிறகுதிராவிட இயக்கங்கள்ஆண்களைக் காக்க வைப்பதில் அப்படியென்ன அல்ப சுகம்?பணவீக்க விகிதம்ராமசந்திர குஹாஎப்படி இருக்க வேண்டும் இந்தியக் கல்விமுறை?தாழ்வுணர்ச்சி கொண்டதா தமிழ்ச் சமூகம்?கடவுள் மறுப்புஒரே தலைநகரம்பிரதிக்ஞா யாத்ராமாமத ராஜா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!