கட்டுரை, ஆளுமைகள் 12 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை சுவாமிநாதனின் அரும்பெரும் பணி

ராமச்சந்திர குஹா
15 Dec 2021, 5:00 am
1

காந்தி அவருடைய வாழ்நாளில் பேசியது, எழுதியது, பேட்டியளித்தது, உரையாடியது என்று அனைத்தையும் அற்புதமாக திரட்டி, சுருக்கி, தேவைப்பட்ட இடங்களில் விரித்து, விளக்கி தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளாக அவற்றை  வெளிக்கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியவர் ஆங்கில இலக்கியத் துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர்  கே.சுவாமிநாதன். 

புதுக்கோட்டை நகரில் 1896 டிசம்பர் 3இல் பிறந்தார். 1996இல் சுவாமிநாதனின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதினேன். (அதையே ‘மார்க்ஸிஸ்ட்டுகளுக்கு இடையில் ஒரு மானுடவியலாளர் - இதர கட்டுரைகள்’ என்ற என்னுடைய நூலிலும் விவரித்து எழுதிப் பிரசுரித்தேன்). இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய பிறந்த நாளையொட்டி, அவர் கொண்டு வந்த தொகுப்புகளைப் பற்றியல்லாமல், அதைப் பயனுள்ள வகையில் கொண்டுவந்த பாங்கினைப் பற்றியும் இப்போது எழுதுகிறேன்.

காங்கிரஸின் முனைப்பு

காந்தி படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் காரிய கமிட்டி அவருடைய பெயரில் தேசிய நினைவு நிதி அமைப்பை ஏற்படுத்தியது. அனைத்துச் சமூகங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தைப் பேணுவதுடன் காந்திக்கு மிகவும் பிடித்த சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடுவதை அது லட்சியமாகக் கொண்டது. வெவ்வேறு மொழிகளில் வெளியான அவருடைய உரைகள், போதனைகள், ஆக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து, தொகுத்துப் பதிப்பிக்கவும், காந்தியுடன் தொடர்புள்ள அனைத்து கட்டுரைகள், நூல்கள், வெளியீடுகளையும் தொகுத்து அருங்காட்சியகமாகப் பராமரிக்கவும் அந்த அமைப்பு தீர்மானித்தது.

1949இல் ‘காந்தி ஸ்மராக் நிதி’ என்ற நினைவு நிதி ஏற்படுத்தப்பட்டது. சாபர்மதி ஆசிரமத்தின் உதவியோடு, பல்வேறு இடங்களிலிருந்தும், காந்தி எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், பேட்டிகள், உரைகள் என்று அவருடைய எழுத்துகள் எல்லாவிதங்களிலும் திரட்டப்பட்டன. வியப்பூட்டும் வகையில் பல்வேறு பொருள்கள் பற்றி அவர் பேசியது, எழுதியது, சிந்தித்தது எல்லாம் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் கிடைத்தன. காந்தி மூன்று நூல்களையும், ஏராளமான கைத்தாள் பிரதிகளையும் (பேம்ப்லெட்ஸ்), ஏராளமான மனுக்களையும், நூற்றுக்கணக்கான பத்திரிகைக் கட்டுரைகளையும், ஆயிரக்கணக்கான கடிதங்களையும் எழுதியிருக்கிறார். ஏராளமாக பேட்டி தந்திருக்கிறார், பொதுக் கூட்டங்களிலும் மக்களிடையேயும் ஏராளமாகப் பேசியிருக்கிறார்.

காந்தி வெவ்வேறு வகைமைகளில் எழுதுவதற்கும் அவர் வழி கண்டுபிடித்திருக்கிறார். வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் அவர் மௌன விரதம் கடைப்பிடிப்பார். அன்றைய தினம் எழுதுவதற்கு நிறைய நேரத்தை ஒதுக்கிக்கொண்டார்.

1956இல், புத்தக வடிவில் கொண்டுவருவதற்குப் போதுமான அளவுக்கு தகவல்கள் திரண்டுவிட்டன என்று சமாரக் நிதி முடிவு செய்தது. காந்தியைப் பற்றிய நூல் தொகுப்பைக் கொண்டுவருவதற்கு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டது. வல்லபபாய் படேலின் மறைவுக்குப் பிறகு குஜராத் மொழி பேசும் முக்கிய காங்கிரஸ் தலைவர் இடத்தை மொரார்ஜி பிடித்திருந்தார். அந்த ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்களாக நவஜீவன் பிரசுராலயத்தின் பிரதிநிதிகள், காந்தியுடன் இணைந்து செயல்பட்ட பல சமூக சேவகர்கள், காந்தியின் இளைய மகனும் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியருமான தேவதாஸ் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர்.

காந்தி பற்றிய ஆவணப்படம் எடுக்க தேவதாஸ் காந்தி காரணமாக இருந்தார். அதேபோல, இனிவரும் காலங்களில் நிலைத்திருக்கக் கூடிய இந்த தொகுப்பைக் கொண்டுவருவதிலும் தேவதாஸ் காந்தி முக்கியப் பங்கேற்றார்.

ஆசிரியர் நியமனம்

காந்தியின் நூல் தொகுப்புக்கு முதன்மை ஆசிரியராக பரதன் குமரப்பா நியமிக்கப்பட்டார். மெய்யியல்-மதம் ஆகியவை குறித்து நன்கு படித்த அறிஞரான குமரப்பா எடின்பரோ, லண்டன் பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். கிராமப்புறக் கட்டமைப்புக்காக காந்தியுடன் சேர்ந்து பல ஆண்டுகள் உழைத்தவர் அவர். காந்தியின் மரணத்துக்குப் பிறகு அவருடைய எழுத்துகள் கொண்ட தொகுப்பை அவர் திருத்தி வெளியிட்டார்.

காந்தி தொடர்பான அனைத்து எழுத்துகளையும் படித்துப் பார்த்து, ஒப்பிட்டு தொகுக்க மிகவும் தகுதியான அறிஞராக குமரப்பா திகழ்ந்தார். முதல் தொகுப்பை அச்சிட அச்சு நிறுவனத்துக்கு அனுப்பிய பிறகு, 1957இல் மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார். அவருக்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அந்த வேலையில் அவருடைய மனம் ஈடுபடவே இல்லை. இரண்டு ஆண்டுகளை இப்படியே கழித்துவிட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். இத்தகு சூழலில்தான் தௌலத் ராமுக்குப் பதிலாக அடுத்து அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பேராசிரியர் கே.சுவாமிநாதன். அவரைப் பரிந்துரைத்தவர் பூதான இயக்கத் தலைவர் ஆச்சார்ய வினோபா பாவே.

வினோபா பாவே நிகழ்த்திய கீதைப் பேருரைகளை ஆங்கிலத்தில் பதிப்பித்தவர் சுவாமிநாதன்.

சுவாமிநாதன் எனும் ஆளுமை

காந்தி எழுத்துகளைத் தொகுப்பதற்காக தில்லி நகருக்குக் குடிபெயர்ந்தபோது சுவாமிநாதனுக்கு வயது 63. இலக்கியப் பேராசிரியராக சிறப்பாகப் பணிபுரிந்த வரலாறு அவருக்கு இருந்தது. இந்தத் தொகுப்புக்கு முதல் முதன்மை ஆசிரியராக வாய்த்த பரதன் குமரப்பாவுக்கிருந்த பயிற்சியும் ஈடுபாடும் பல வகைகளிலும் சுவாமிநாதனுக்கும் இருந்தது. இருவருமே தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இருவருக்குமே அவர்களுடைய தாய்மொழியிலும் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் நல்ல புலமை இருந்தது. இருவருமே உலக மதங்கள் அனைத்தையுமே சமமாக நோக்கும் உயர்ந்த பண்பு வாய்ந்தவர்கள். கிறிஸ்தவரான குமரப்பா, ராமானுஜாச்சார்யர் குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார். இந்துவான சுவாமிநாதன் பைபிளை மிகவும் விருப்பத்தோடு வாசிப்பார்.

இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட, சுவாமிநாதனிடம் மிகச் சிறப்பான தகுதியொன்று இருந்திருக்கிறது என்பது இத்தனை காலம் சென்ற பிறகு தெரிகிறது. அதாவது தன்னுடன் பணி செய்ய வந்தவர்களுடன் இணைந்து செயலாற்றும் பண்பும், ஒரு குழுவாக அனைவரையும் சேர்த்துச் செயல்பட வைக்கும் தலைமையும் சுவாமிநாதனிடம் இருந்திருக்கிறது. சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவராக நீண்ட காலமும், அரசு கலைக்கல்லூரியின் முதல்வராக ஐந்து ஆண்டுகளும் பணிபுரிந்திருக்கிறார் அவர்.

பல்கலைக்கழக வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ‘சண்டே ஸ்டாண்டர்ட்’ செய்தித்தாளில் வேலை பார்த்திருக்கிறார். அங்கே ஏராளமான நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், அச்சுக் கோப்பவர்கள், பிழை திருத்துநர்கள் ஆகியோரிடம் வேலை வாங்கும் இடத்தில் இருந்திருக்கிறார்.

சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அவர் தன்னுடன் சேர்த்துக்கொண்ட முதல் சகா, ஆங்கிலப் பேராசிரியரான சிமன்லால் நாராயண் தாஸ் படேல். குஜராத்தியரான படேல் பெரும்பாலான நாள்கள் ஆமதாபாத் நகரிலேயே தங்கியிருக்க நேர்ந்தாலும் சுவாமிநாதனுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். காந்தி குஜராத்தி மொழியில் எழுதியிருந்தவற்றை ஆங்கிலத்தில் பெயர்க்க அவர் பெரிதும் உதவியிருக்கிறார். காந்தி எழுத்துகளின் தொகுப்புத்  திட்டத்தில் துணை முதன்மை ஆசிரியராக இருந்தார் படேல்.

சுவாமிநாதனுடன் சேர்ந்து பணியாற்றிய இதர குழுவினரும் நன்கு படித்தவர்கள், தாங்கள் எடுத்துக்கொண்ட வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். காந்தியின் சீடரான மீராபென்னுடன் இமாலயத்தில் சேர்ந்து தொண்டில் ஈடுபட்ட ஜே.பி.உனியால் அவர்களில் ஒருவர். மீராபென் வாயிலாக காந்திஜியின் வாழ்க்கையையும் மரபையும் ஆர்வத்துடன் கவனித்தவர் உனியால். எழுத்துத் தொகுப்புகளை இந்தியில் மொழிபெயர்க்கும் குழுவின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் அன்றைக்கு மிகவும் அறியப்பட்டவராக இருந்த கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ரா.

1964இல் காந்தியின் எழுத்துகளைக் கொண்டு ஒன்பது தொகுப்புகள் வெளிவந்தன. அந்தத் தொகுப்பு நூல்களைப் படித்துவிட்டு, ‘மாடர்ன் ஹிஸ்டரி’ பத்திரிகையில் புத்தக விமர்சனம் எழுதினார் அமெரிக்காவைச் சேர்ந்த காந்தியவியல் நிபுணர் ஜோன் போண்டுரான். “இந்தத் தொகுப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதைத் திருத்திய ஆசிரியர்கள் எந்த இடத்திலும், தேவையின்றி குறுக்கிடவில்லை. அதேசமயம் இதைப் படிப்பவர்களின் நெஞ்சங்களில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வகையில் மிகச் சிறப்பாக இதைத் திருத்தி பதிப்பித்துள்ளனர். தாங்கள் சொல்லும் தகவல்களுக்கான மூலங்களை சரிபார்த்த பிறகே சேர்த்துள்ளனர். யார் எந்தக் கருத்துகளைச் சொன்னாலும் அது அவர் சொன்னதுதானா என்பதைத் தெளிவுபடுத்திய பிறகே எடுத்தாண்டுள்ளனர். மற்றவர்களுக்கு அதிகம் தெரியாத தனி நபர்களைக்கூட யாரென்று கண்டுபிடித்து அச்சிலும் அவர்களைப் பற்றி சொல்லியுள்ளனர். ஒரு தகவல் அல்லது பதிலுக்கு பின்னணி என்ன என்பதையும் தெரிவித்துள்ளனர். தாங்கள் பதிப்பிக்கும் தகவல்களுக்கு அற்புதமாக பின் சேர்க்கைகளைக் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல; நன்கு படித்த, ஆர்வம் கொண்ட, தகுதியானவர்கள் மூலம்தான் நூல் திரட்டப்பட்டிருக்கிறது என்ற உணர்வை ஊட்டும் வகையில் தொகுப்பு வந்திருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார் ஜோன்.

தொடர்ந்து பேணப்பட்ட தரம்

இதே தரம் அடுத்து வந்த ஆண்டுகளிலும் இம்மி பிசகாமல் அப்படியே பின்பற்றப்பட்டது. இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த 1975-77 காலத்தில் மட்டும் இப்பணியில் சிறு தடங்கல் ஏற்பட்டது. அதற்குள் 50 புத்தக தொகுப்புகள் வெளிவந்திருந்தன. இந்தப் பொறுப்பிலிருந்து சுவாமிநாதனை வெளியேற்றிவிட வேண்டும் என்று இந்திரா காந்தியின் நெருங்கிய வட்டாரத்திலிருந்த சிலர் வலியுறுத்தினர். அதற்குக் காரணம் ஒவ்வொரு தொகுப்பையும் படித்துப் பார்த்து, கருத்து தெரிவிக்குமாறு ஆலோசனைக் குழுத் தலைவரான மொரார்ஜி தேசாய்க்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார் சுவாமிநாதன்.

இந்தப் பணி தொடங்கியதிலிருந்து அதைச் செய்துவந்தார் மொரார்ஜி தேசாய். நெருக்கடிநிலையை எதிர்த்ததால் கைதுசெய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மொரார்ஜி. நல்ல வேளை, இந்திரா காந்தி அந்த யோசனையை ஏற்கவில்லை. அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு அதே பொறுப்பில் சுவாமிநாதன் நீடித்தார். 90 தொகுப்புகள் வெளியான பிறகே சுவாமிநாதன் இந்தப் பணியிலிருந்து 1985இல் ஓய்வுபெற்றார். 90 தொகுப்புகளிலும் தகவல்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருந்தன என்பது கவனிக்கத்தக்கது. அதற்குப் பிறகு ஏழு துணைத் தொகுப்புகளும் வெளியாகின.

இந்தப் பணியில் சுவாமிநாதனுடன் இணைந்து செயல்பட்டவர்கள் அவருக்குப் பெரும் புகழாரம் சூட்டினர். காந்தியின் எழுத்துகளைத் தொகுக்கும் இந்த மகத்தான பணியில் ஆராய்ச்சியையும், கட்டுரைகளைச் சுருக்கி எழுதும் கலையையும் கையாளும் சிறந்த நடைமுறையைக் கொண்டுவந்தார் சுவாமிநாதன் என்று குஜராத்தி எழுத்தாளரான ஹஸ்முக் ஷா பதிவுசெய்திருக்கிறார். “தன்னுடன் பணிபுரிய வந்தவர்களின் நிறைகளையும் குறைகளையும் வெகு விரைவிலேயே கண்டுபிடித்து அதற்கேற்ப பொறுப்புகளை ஒப்படைத்தார். அவர் குரலை உயர்த்திப் பேசியோ, உடன் பணிபுரிந்தவர்களைக் கடிந்துகொண்டோ யாரும் பார்த்ததே இல்லை. அவருடைய வாழ்க்கை முறையும், எடுத்துக்கொண்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிரமும் வேறொரு சகாப்தத்தைச் சேர்ந்தவை, அவரைப் போல புராதனக் கால துறவிகளும் ரிஷிகளும்தான் இருந்திருக்க முடியும்” என்கிறார் ஹஸ்முக் ஷா.

இந்த எழுத்துத் திரட்டுப் பணியில் ஆறு ஆண்டுகள் ஈடுபட்ட பிறகு மொரார்ஜி தேசாயிடம் அவருடைய தனி உதவியாளராகச் சேர்ந்தார் ஹஸ்முக் ஷா. அவர் விலகியபோதே லலிதா ஜக்கரியா இந்தப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அரும்பெரும் பணி

லலிதா அப்போதுதான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் கழித்து, சுவாமிநாதன் பணிபுரிந்த விதத்தையும் மற்றவர்களுக்குக் கற்றுத்தந்த பாங்கினையும் புகழ்ந்து எழுதியிருக்கிறார். “காந்தியின் எழுத்துத் தொகுப்பு என்ற மாபெரும் வேலையைச் செய்த அந்த ஜாம்பவான், அறையின் மூலையில் அமைதியாக உட்கார்ந்து தலைகுனிந்து படித்துக்கொண்டிருப்பார் அல்லது எதையாவது திருத்திக்கொண்டிருப்பார். ஒரு வாக்கியத்தைத் திருத்தியோ அல்லது வெறும் கமா சேர்த்தோ, அடிக்குறிப்பு எழுதியோ அந்தத் தகவலை மிக விரிவாகப் புரிந்துகொள்ளச் செய்துவிடுவார். மிக உறுதியாக, விரைவாக, எழுத்துகளை ரகம் பிரிப்பார். காந்தியின் உணர்வுகளை அவருடைய தோலுக்கு அடியிலிருந்து வெளிப்படுத்துவதைப்போல இருக்கும் சுவாமிநாதனின் கைவண்ணம்” என்று பதிவுசெய்திருக்கிறார் லலிதா ஜக்கரியா.

பத்தாண்டுகளுக்கு முன் காந்தியின் எழுத்துத் திரட்டுகளை பக்கம் பக்கமாக, தொகுப்புக்குப் பின் தொகுப்பாக வாசித்திருக்கிறேன். இப்போது அவற்றை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். ஒவ்வொரு தொகுப்பிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெட்டு-ஒட்டு வேலையின் நேர்த்தியைக் கூர்ந்து கவனித்தபடி படிக்கிறேன். காந்தியின் கருத்துகளில் போற்றிப் பாராட்டப்பட வேண்டியவை நிறைய இருக்கின்றன என்று மகிழ்ச்சியடைகிறேன். எப்போதாவது சில கருத்துகள் சீண்டுகின்றன, சில எரிச்சலூட்டுகின்றன. இந்த இரண்டாவது வாசிப்பில்தான் சுவாமிநாதனும் அவருடைய குழுவினரும் காந்தியின் எழுத்துகளையும் பேச்சுகளையும் எப்படி அற்புதமாக வார்த்தைகளில் பொருத்தமாக வடித்திருக்கிறார்கள் என்று சிலாகிக்க முடிகிறது.

ஒவ்வொரு தொகுப்புக்கு ஆரம்பத்திலும் உள்ளடக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் வகையில் முன்னுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆதாரமாகவும் மேற்கொண்டு படிக்கவும் பல ஆவணங்கள் பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ளன. காலவரிசைப்படி, அட்டவணைப்படுத்தப்பட்ட குறிப்புகளோடு அவை முடிகின்றன. எல்லாவற்றையும்விட அடிக்குறிப்புகள் பல தகவல்களை அற்புதமாக தெரிவிப்பதுடன் பேச்சின் – எழுத்தின் பின்னணியைப் புலப்படுத்திவிடுகின்றன. இவை அனைத்துமே சேர்ந்து இந்த வேலைகளைச் செய்த அனைவர் மீதும் நமக்கு மரியாதையையும் பாராட்டுணர்வையும் ஏற்படுத்திவிடுகின்றன.

காந்தியின் எழுத்துத் தொகுப்புகள் அனைத்தையும் நான் சொந்தமாக வைத்திருக்கிறேன். இவை இப்போது ஆன்-லைனிலும் கிடைக்கின்றன. காந்தி பற்றிய அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பெற்று படிப்பது நல்லது. சாபர்மதி ஆசிரமம் உருவாக்கியுள்ள காந்தி பாரம்பரிய இணைய தளம் அத்தகையது. இந்தத் தொடர்களின் அடிப்படையில ஆயிரக் கணக்கான புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னமும்கூட அதியற்புதமான, இதுவரை யாராலும் மேற்கொண்டு மிஞ்சிவிட முடியாதபடியான தொகுப்பு நூல்களாக இவை திகழ்கின்றன.

இந்தியாவில் இப்படியொரு ஆக்கம் வருவது அபூர்வமே. அதுவும், இந்திய அரசின் மேற்பார்வையில் வந்திருப்பது அதைவிட அபூர்வமே. இதுவரை பிறந்திருக்காத அறிஞர்கள் – அதிலும் இந்தியாவைச் சேராத பிற நாட்டு நல்லறிஞர்கள் - காந்திஜி பற்றி அறிந்துகொள்ளவும் புதிதாக எழுதவும் ஆராய்ச்சிகளைச் செய்யவும் உதவிய கே.சுவாமிநாதனுக்கும் அவருடைய திறமைமிக்க ஆசிரியக் குழுவினருக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மிகுந்த நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி


1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

kollu Nadeem   3 years ago

பிரதமர் நேரு அன்றைய மாகாண முதல்வர்களுக்கு எழுதிய பல நூற்றுக்கணக்கான கடிதங்கள் (நான்கு தொகுதிகளாக, ஆங்கிலத்தில் மொத்தமாக) தொகுக்கப்பட்டுள்ளன; வெவ்வேறு தனியார் பதிப்பகங்களும் அதன் தேர்ந்தெடுத்த சுருக்க ஒற்றை பதிப்புகளாகவும் வந்துள்ளன. எனினும் முதல், முழுமையான தொகுப்பைச் செய்தவர் G.Parthasarathy, பிற்காலங்களில் பிரதமராக வந்த ராஜிவ் காந்தியின் அணிந்துரையுடன் வந்துள்ளது. ஈழப் போராட்டம் தீவிரமாக இருந்த அந்த காலகட்டங்களில் இந்திய வெளியுறவுத் துறையின் சார்பாக (அதிகாரப்பூர்வ தகவல்களை) பேசக்கூடிய பொறுப்பில் இருந்தவரும் இதே பெயரைக் கொண்டவர். அப்பொழுது நான் பட்டப் படிப்பில் இருந்த காலம், நூலகத்தில் இந்த கடித தொகுப்புகளை படித்த நினைவுள்ளது. அருப்புக்கோட்டை சாமிநாதன் அவர்களைப் பற்றி எழுதியதைப் போல நேருவின் கடிதங்களை தொகுத்தவரும் அனேகமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராக இருக்கக் கூடும். G.Parthasarathy யார், அவர் எப்படி நேருவின் கடிதங்களை தொகுத்தார் என்பன (ஒருவேளை தொகுப்பாளர் இன்னும் இருக்கும்பட்சத்தில் அவரையும் நேர்காணல் செய்து) கட்டுரையாக எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

நம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்ககனிமொழிரஃபியா ஜக்கரியா கட்டுரைஅருஞ்சொல் கூட்டுறவு நிறுவனங்கள்சந்துரு சமஸ் பேட்டிகழிவு மேலாண்மைதாய்மையைத் தள்ளிப்போடும் இத்தாலிய மகளிர்!விளக்கமாறுலக்‌ஷ்மி ராமச்சந்திரன்காதில் இரைச்சல்பிஎன்ஸ்வள்ளலார்தர்மம்பாசிசைவம் - அசைவம்ஓ.சி என்ற சி.எம்சட்டப் பரிமாணம்பொருளாதார அமைப்புபொதுச் சுகாதாரம்பெண்கள் கவனம்!குற்றத்தன்மைமதச்சார்பற்ற ஜனதா தளம்சோம்பேறித்தம்மாணிக்கம் தாகூர்யோகா ஒரு பயணம்வேதங்கள்பிரிட்டிஷ்காரர்கள்பூம்புகார் ஆனால் கவனித்தாரா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!