கட்டுரை, தலையங்கம், அரசியல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு
பிராந்திய சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிமை
ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைக்கு அரசுகள் தயாராகும்போது, இரு விதமான பார்வைகளுக்கு அதில் இடம் இருக்கும்; பல்வேறு தரப்புகளும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கான கவனம்; நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தொலைநோக்குடன் அளிக்கப்படும் கவனம்! தமிழ்நாடு அரசு அப்படி இன்றைய காலகட்டத்தில் தொலைநோக்குடன் அளிக்க வேண்டிய கவனத்தைக் கோரும் பிரச்சினைகளில் தலையாயது, பிராந்திய சமநிலையின்மை.
நாம் ‘அருஞ்சொல்’ தலையங்கம், கட்டுரைகளில் பல முறை சுட்டிக்காட்டியுள்ள விவகாரம்தான் இது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகள் இடையே மக்களுடைய வாழ்நிலையில் பாரதூரமான பாகுபாடும், சமச்சீரற்ற வளர்ச்சியும் நிலவுகிறது.
இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு
தமிழகத்தின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?
17 Mar 2022
மனிதவள மேம்பாட்டுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியைப் பேசுகையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலைமையில் இருக்கின்றன; சில மாவட்டங்கள் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலைமையில் இருக்கின்றன.
கோவைக்கும் தருமபுரிக்கும் இடையே உள்ள வளர்ச்சி வேறுபாடானது நம்முடைய கவனத்தின் மையத்துக்கு வரவே இல்லை. ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் என்று பல மாவட்டங்களில் மக்கள் உள்ளுக்குள் புழுங்கியபடி இருக்கின்றனர். சோழர் காலம் தொடங்கி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் ஆதாரமாக இருந்த காவிரிப் படுகை இன்று சீர்குலைந்து நிற்கிறது.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
17 Nov 2022
நேரடியான பிரத்யேக திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இன்றி இந்த பிராந்தியங்களைத் தூக்கி நிறுத்துவது சாத்தியம் இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் வட கிழக்கு மாநிலங்களைத் தூக்கி நிறுத்த வெளியிடப்பட்ட கொள்கையைப் போன்று ஒன்று இன்றைக்குத் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட பிராந்தியங்களுக்குத் தேவைப்படுகிறது.
நம்முடைய தொழில் கொள்கையை இந்த பிராந்தியங்களை மையம் கொண்டதாக உருமாற்ற வேண்டி இருக்கிறது. நீடித்த வளர்ச்சிக்கு ஏற்ற சூழலுடன் இயைந்த புதிய தொழில்களையும் கற்பனை செய்ய வேண்டி இருக்கிறது. இப்படியான ஒரு கொள்கைக்கான திட்டமிடலுக்கு, அங்குள்ள வேளாண் சூழல் சார்ந்து சிந்திக்க காவிரிப் படுகை ஒரு முன்மாதிரிக் களமாக அமையலாம். இப்படி ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் அந்தந்த பிராந்தியத்தின் பொருந்தத்தக்க திட்டத்தோடு தொழில் கொள்கையை வடிவமைக்கலாம். இந்த பிராந்தியங்களில் எல்லாம் உயர் தரமிக்க கல்வி நிலையங்களில் ஆரம்பித்து, மேம்பட்ட போக்குவரத்துக் கட்டமைப்புகள் வரை சிந்திப்பதும் முக்கியம்.
தமிழ்நாடு இன்று பேசிக்கொண்டிருக்கும் ‘வளர்ச்சி மாதிரி’யில் உள்ள முக்கியமான ஓட்டை பிராந்திய சமநிலையின்மை. தமிழ்நாட்டில் வளர்ச்சி மிகுந்த பிராந்தியங்களின் எழுச்சிக்கு, சென்ற அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சி பங்களித்திருக்கிறது என்றால், வளர்ச்சி குன்றிய பிராந்தியங்களின் வீழ்ச்சிக்கும் திராவிடக் கட்சிகள் ஆட்சி பங்களித்திருக்கிறது என்ற பொறுப்புணர்வோடு அணுகப்பட வேண்டிய விவகாரம் இது. தமிழ்நாடு அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கையின் பிரதான அறிவிப்புகளில் ஒன்றாக இந்த விவகாரத்துக்கான தீர்வுக் கொள்கை அறிவிப்பு இருக்க வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழகத்தின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?
திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்
4
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.