கட்டுரை, அரசியல், ஆரோக்கியம், சமஸ் கட்டுரை, கல்வி 5 நிமிட வாசிப்பு

அவரவர் அரசியல், அவரவர் முன்னுரிமை

சமஸ்
29 Sep 2022, 5:00 am
3

ம் மக்கள் ஒருமுறையேனும் வாழ்வில் பார்த்திட வேண்டிய ஊர்களில் ஒன்று, கொங்காடை. என்ன விசேஷம் கொங்காடையில் என்று கேட்பவர்களுக்கு அந்த ஊரைச் சுற்றி வளைத்திருக்கும் மலைகள், பசும்புல் படுகைகள், தனித்த ருசியுடைய பழங்களைத் தரும் மரங்கள். இப்படி ஒரு பயணியின் மனதை ஈர்க்கும் நிறைய விஷயங்களைச் சொல்லலாம். எல்லாவற்றினும் கொங்காடை மக்கள் பிரதானமானவர்கள். 

கொங்காடைக்குக் காலையிலும் மாலையிலும் என்று அரசாங்க பஸ் ஒன்று சென்று வந்தது. ஏனைய அவசர நேரங்களில், ஊர் மளிகைக்கடைக்காரர் கீழிருந்து சரக்குகளைக் கொண்டுவர வைத்திருக்கும் ஜீப்பில் மக்கள் பயணிக்கிறார்கள். முன்புறத்தில் ஓட்டுநர் உட்கார்ந்துகொள்ள, பின்புறத்தில் திறந்தவெளியைப் பார்த்தவாறு மக்கள் ஒருவரையொருவர் முட்டி ஒட்டியபடி உட்கார்ந்தவாறும் நின்றவாறும் பயணம் நடக்கிறது. இதுவும் அமையாத நேரத்தில் நடந்தோ, சைக்கிளிலோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தனியே பயணப்படுபவர்களும் உண்டு.

யானைகள் மிகுந்த வனத்தினூடாகத்தான் கொங்காடைக்குச் செல்ல வேண்டும். புலிகள் நடமாட்டமும் உண்டு. இரு புறங்களும் நின்ற அடர்த்தியான மரங்கள் பாதையின் வெளிச்சத்தைப் பெரும் அளவில் விழுங்கியிருந்தன. அன்றைய தினம் மழையும் பெய்திருந்தது. சகதியில் புதைவதும், எழுவதுமாக எங்கள் வண்டியின் சக்கரங்கள் பெரும் பிரயத்தனத்தில் இருந்தன. ஒரு யானைக் கூட்டம் அந்தப் பாதையை அப்போதுதான் எங்களுக்கு முன் கடந்து சென்றிருந்ததை உடன் வந்த நண்பர்கள் சொன்னார்கள். தடயம்போல வழியெல்லாம் மூங்கில் மரங்கள் முறிபட்டு கிடந்தன. ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி ஏறுவதான மனவோட்டத்துடன் கொங்காடையை அடைந்தோம்.

முழுப் பழங்குடி கிராமம். சின்னச் சின்ன வீடுகள். சின்னச் சின்ன மனிதர்கள். எளிமையான வாழ்க்கை. கேழ்வரகு களி உருண்டையும், பன்னேரக்கீரி கீரைத் துவட்டலும் கொங்காடையின் உணவு என்று சொல்லலாம். மெச்சிக்கொள்ள ஏதும் இல்லை. இந்த உணவும் ஒரு வேளைக்குத்தான். இன்னொரு வேளையில் களி மட்டும் இருக்கும். காலை உணவு கிடையாது. எனில், வறுமை முழுமையாக ஊரைக் கவ்வியிருந்தது.

 ¶

தமிழ்நாட்டில் எந்தப் பழங்குடி ஊருக்குச் செல்லும்போதும் இது பழக்கமான காட்சி. நல்ல சுற்றுச்சூழல் உடல் ஆரோக்கியத்தைத் தரும் என்றால், பழங்குடிகள்தான் ஆஜானபாகுவான உடலுடன் இருக்க வேண்டும். ஏன் உருவத்தில் அவ்வளவு சுருங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டால் நமக்கு விடை கிடைத்துவிடும். கொங்காடையில் நான் பார்த்த பத்தாம் வகுப்பு பிள்ளைகள் சென்னையின் ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகளின் வடிவில் இருந்தார்கள்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு எதாவது வயிற்றுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் இடையே இருக்கிறது. சரி, எதைக் கொடுத்தனுப்புவது? டீதான் அந்தக் காலை உணவு. பால் அவர்களுக்கு விலை மிகுந்தது. டீயும் குடித்த அடைவாக, பசி தாங்குவதாக இருக்க வேண்டும். என்ன செய்வது? பெயருக்குப் பாலும், டீத்தூளும் சேர்க்கப்பட்ட அந்த மொட்டைத்தண்ணீரை டீ என்று நியாயப்படுத்த அவர்களுக்குக் கிடைத்த எளிய வழி தண்ணீருக்குத் தக்க சர்க்கரையைப் போட்டு காய்ச்சி இறக்குவதுதான். கையில் கொஞ்சம் காசு இருக்கும் நாட்களில் எதாவது ரொட்டி, பன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த உடம்பில் என்ன இருக்கும்? பெரிய புத்தகமூட்டையைத் தூக்கிச் சுமந்தபடி குன்றுகள் ஊடாக மூச்சிரைக்க ஏறி இறங்கிப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எதைக் கேட்டாலும் மிகுந்த மௌனத்தையும், லேசான புன்னகையையும் கொண்டு எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள். சிரிக்கிறார்கள். பரிதாபத்தின் சிரிப்பு.

பெரும்பான்மை இந்தியக் குழந்தைகள் இன்று இரு கூறாகச் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஒரு தரப்பினர் அளவுக்கு அதிகமாக திணிக்கப்படும் உணவால் உடல் பருமனை எதிர்கொள்ளும் ஊளைக் குழந்தைகள். ஒரு தரப்பினர் போதிய உணவுக்கே வழியில்லாமல் வளர்ச்சி குன்றி சுருங்கி நிற்கும் சவளைக் குழந்தைகள். இரு தரப்பிலும் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட குழந்தைகளின் வரிசையில் இந்தியா இருக்கிறது. 

ஊளைக் குழந்தைகள் முயன்றால் தங்கள் வீட்டு அளவிலேயே சுதாரித்திட முடியும். சவளைக் குழந்தைகளைச் சமூகம் கை தூக்கிவிடவில்லை என்றால், அவர்களால் எழுந்து நிற்கவே முடியாது. ஊட்டச்சத்துக் குறைவானது, குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டையுமே சுருக்குவதால், ஏற்கெனவே சமூகத்தில் அழுத்தப்பட்டு பின்வரிசையில் நிற்கும் அவர்கள் எல்லாச் சுமைகளையும் உடைத்துக்கொண்டு மேல் எழுந்து வருவதற்கான ஒரே வாய்ப்பான கல்வியிலும் முடங்கிவிடுகிறார்கள். விளைவாக இது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் தடையாகிவிடுகிறது. அதனால்தான் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை உலகின் ஜனநாயக சமூகங்கள் தங்கள் பொறுப்பில் ஏற்றுச் செயல்படுகின்றன. 

இந்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள அரிதான நல்ல அம்சங்களில் ஒன்று, இத்தகைய பொறுப்பேற்பை அது சுட்டிக்காட்டியது. மோடி அரசு குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைப் பரிசீலித்தது. நிறைவேற்றவும் அமைச்சரவை முடிவு எடுத்தது. பின்னர் நிதி இல்லை என்று பொறுப்பிலிருந்து கழன்றுகொண்டது. இவ்வளவுக்கும் அது வெறும் ரூ.4,000 கோடி கோரும் திட்டம். இப்போது நாட்டிலேயே முன்னோடியாக தமிழக அரசு  காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்கிறது.

பிரதமர் மோடி “இலவசத் திட்டங்களால் நாடு நாசமாகிறது; அவற்றுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்” என்று பேசி அது தேசிய அளவில் பெரும் விவாதம் ஆகியிருக்கும் இதே காலகட்டத்தில், காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “இது செலவு இல்லை; முதலீடு” என்று பேசியிருப்பது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்டு ஒரு விஷயத்தைப் பார்க்கும் வாய்ப்பை நமக்குத் தருகிறது. 

பிரச்சினை நிதியா?  இல்லை. பார்வை, முன்னுரிமை! கோயிலை முன்னுரிமையாகப் பார்ப்பவர்களின் அரசியல் பல நூறு கோடிகளில் புதிய கோயில் ஒன்றைக் கற்பனை செய்கிறது. பள்ளிக்கூடத்தை முன்னுரிமையாகப் பார்ப்பவர்களின் முன்னுரிமை குழந்தைகளுக்கான காலை உணவைச் சில நூறு கோடிகளில் திட்டமிடுகிறது. அவரவர் அரசியல், அவரவர் முன்னுரிமை!

-குமுதம், செப்டம்பர், 2022 

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

5

1
பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

kalaichezhiyan T   7 months ago

last wordings jayakandhan touch, I love it

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kalaichezhiyan T   7 months ago

last wordings jayakandhan touch, I love it

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ILANDJEZIAN R   1 year ago

மண் திணி ஞாலத்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணிமேகலை )

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுப்பது அவசியம். ஏன்?ஆளுநரின் இழுத்தடிப்பு தந்திரம்ஆல்கஹால்எம்ஜிஆரும் ரஜினிபிஎஃப்ஐதமிழ்க் கல்விஅமரர் கல்கிகீழத் தஞ்சைசிஈஓகோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்உலக சினிமாவாக்காளர் பட்டியல்மிகைல் கொர்பசெவ்தாய்லாந்துமஹாராஷ்டிரம்அம்ருத் மகோத்சவ்காந்தி சமஸ்தமிழகக் காவல் துறைஅநாகரீக நடவடிக்கைநீதிபதி துலியாநிர்மலா சீதாராமன் கெட்டதுகிங் மேக்கர் காமராஜர்தொடரும் சித்திரவதைஜவாஹர்லால் நேருஆட்சிப் பணியும் மொழி ஆளுமையும்உடல் எடை ஏன் ஏறுகிறது?மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள்இந்திய ஜனநாயகம்!சமத்துவபுரங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!