கட்டுரை, கலாச்சாரம், விவசாயம், சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?

தங்க.ஜெயராமன்
24 Mar 2023, 5:00 am
0

ருகாலம் இருந்தது. “அம்மா காவிரிக்குப் போயிருக்கிறார்” என்று யாராவது சொன்னால், ‘அம்மா குளிக்கப் போயிருக்கிறார்’ என்று அர்த்தம் இருந்த காலம் அது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரைகூட அப்படி ஒரு சூழல் இருந்தது.

அப்போதெல்லாம் அம்மா காவிரியில் குளித்துவிட்டுச் சமைப்பதற்கு ஒரு குடம் தண்ணீரும் வீட்டிற்கு எடுத்து வருவார். இப்படியும் ஒரு காலம் இருந்ததா என்று ஆச்சரியப்படுவோம். இப்போது காவிரித் தண்ணீரைக் குடிக்க முடியாது. தோல் நோய் வருமோ என்று கடைமடைக்காரர்கள் காவிரியில் குளிக்க அஞ்சுவார்கள். நதிக் கரையில் வளரும் நாகரிகம் அந்த நதியைத் தன் முதிர்ச்சியாலேயே அழித்துவிடும் முரணுக்குக் காவிரி ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு ஆகியிருக்கிறது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியும் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியுமான நூறு ஆண்டுகள் காவிரிப் படுகை நீர்ப்பாசனத்தின் பொற்காலம். 1840 வாக்கில் ஸ்ரீரங்கத்துக்கு மேற்கே முக்கொம்பில் அடைத்துத் திறக்கும் வசதியோடு காவிரியிலும் கொள்ளிடத்திலும் மதகுகள் வந்தன. கிழக்கே கல்லணையிலும் காவிரியின் நீரோட்டத்தைத் தேவைக்கு ஏற்ப கூட்டியோ, குறைத்தோ அல்லது முற்றிலும் நிறுத்தி கொள்ளிடத்தில் திருப்பிவிடவோ பலகைக் கதவுகள் வந்தன. 1934இல் மேட்டூர் அணை. மேட்டூர் அணைக்கும் முன்பே, டெல்டாவில் காவிரி கிளைக்கும் கவர் எல்லாவற்றிலும் ஏற்றி இறக்கும் பலகைகளோடு மதகுகள் வந்துவிட்டன. காவிரிப் படுகையின் வெள்ள அபாயம் வெகுவாகத் தணிந்தது. வடிகால்களின் திறன் கூடியது. விவசாயத்துக்குச் சீரான நீர் வரத்து உறுதிப்பட்டது. இவையெல்லாம் பிரிட்டிஷார் காலத்தில் ஏற்பட்ட பாசன, வடிகால் மேம்பாடுகள்.

மதகுகள் மாற்றிய பண்பாடு

இவை ஒவ்வொன்றையும் காவிரிப் படுகை கலாச்சாரம் ஏந்திக்கொண்ட விதம் சுவாரஸ்யமானது. வெள்ளத்துக்குப் பயந்து ஒன்றைரை ஆள் உயரத்தில் திண்ணையும் தரையும் வைத்து வீடுகள் கட்டப்பட்ட காலம் மாறி 1950களிலிருந்தே இரண்டடி உயரத்தில் தரை மட்டம் போதும் என்று புதிய வீடுகள் தணிந்துகொண்டன. அதாவது, கல்லணையில் பலகை பொருத்தப்படுவதற்கு முந்தைய வீடுகள், அதற்குப் பிந்தைய வீடுகள் என்று இரண்டு கட்டட மோஸ்தர்கள் உண்டு. கல்லணையில் பலகை பொருத்தப்பட்டால், அங்கிருந்து 122 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் வீடுகளின் தரைமட்டம் எப்படி தணிகிறதே என்று ஆச்சர்யம் வரலாம்; காவிரிப் படுகை என்ற புனல் நாட்டில் அது இயல்பு.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஆடிப்பெருக்கின் கதை

தங்க.ஜெயராமன் 22 Jul 2022

காவிரிப் பாசன பகுதி கிராமங்களின் முதல் மடை பாசனத்தில் இருந்த நிலம் குறுவை, தாளடி என்று இரு போக நிலம் ஆனது. இது வெண்ணாறு பாசனப் பகுதியில் குறைவு. குறுவை நெல்லுக்கு மயிலாடுதுறை பகுதியில் பெரிய சந்தை உருவானது. கேரள மக்களின் தேவை அதிகரித்தால் இந்தச் சந்தையில் குறுவை நெல்லின் விலை கூடும். வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் அஞ்சி, சீண்டுவார் இல்லாமல் கிடந்த சொற்ப விலை நிலங்களை அந்தந்தக் கிராமத்தில் நலிந்தவர்களால் துணிந்து விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முடிந்தது. இப்படிச் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து சிறிய நில உடைமையாளர்கள் அப்போது புதிதாக உருவானார்கள். பரம்பரை நில உடைமையாளர் அல்லாத இவர்கள் பெரும்பாலும் அந்தந்தக் கிராமங்களின் கடைமடையில் நிலம் வைத்திருப்பதைக் கவனிக்கலாம்.

பிறகு 1970 முதல் 2000 வரை காவிரியில் நீர் வருமா வராதா என்ற நிச்சயமற்ற சூழலால் வந்த நெருக்கடி. இந்த நெருக்கடிக்கும் காவிரிக் கலாச்சாரம் ஒருவாறு ஈடு கொடுத்தது. வெண்ணாற்றுப் பகுதி பெரும்பாலும் நடவு என்ற பழமையான சாகுபடி முறையிலிருந்து விதைப்பு என்ற படுகைக்கு அனுபவமில்லாத ஒரு புது முறைக்கு மாறிக்கொண்டது. தண்ணீர்த் தட்டுப்பாட்டில் பிறந்த இந்த விதைப்பு முறை இப்போது நல்ல ஆற்றுப் பாசனம் உள்ள பகுதிகளுக்கும் பரவுவது காவிரிப் படுகை விவசாய கலாச்சாரத்தில் எதிர்பாராத மாற்றம்.

காவிரி செலவழியும் கட்டம்

இன்று காவிரிப் படுகையின் நெல் விளைச்சல் வீதம் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் கிட்டத்தட்ட இரண்டு பங்கு என்று சொல்லலாம். இதை ஒட்டி மொத்த விளைச்சலும் இரண்டு பங்காக இருக்கலாம். மேலும் சென்று, சாகுபடி பரப்பு இருபது சதம் குறைந்தாலும் காவிரிப் படுகை அப்போதுபோல் இருமடங்கு விளைகிறது என்றுகூட பெருமைப்படலாம். “பிறகு எதற்காகக் குறைபட்டுக்கொள்கிறீர்கள்?” என்றுதானே கேட்பீர்கள்? இந்த அளவுக்கான உணவு உற்பத்தியானது நம் வழிமுறைகளை, நீர் மேலாண்மையை, நில மேலாண்மையை நியாயப்படுத்துகிறது — விளைவு வழிமுறையை நியாயப்படுத்துகிறது — என்று ஒரு தத்துவக் கோட்பாட்டையும்கூட துணைக்கு வைத்துக்கொள்வீர்கள்.   

என்னால், “வாய்க்காலில் தண்ணீர் வரும், வெங்கார் பாய வயலில் மடை திறக்க வேண்டும்” என்று அப்போதுபோல் இக்காலத்தில் சொல்ல முடியவில்லையே? தரிசுக்கு நாளை தண்ணீர் பாய்ந்தால் அடுத்த மூன்று நாட்களில் உழலாம். மின் வாரிய ஊழியரை அழைத்து ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு வரும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என்றுதான் இப்போது தோன்றுகிறது.

உழவு நினைப்பு வரும்போது அதனோடு இயற்கையாக வர வேண்டிய காவிரி தொடர்பான நினைப்பு இப்போது வருவதில்லை. இவ்வாண்டு எங்கள் ஊர் வாய்க்காலில் வழக்கம்போலவே இரண்டு முறை தண்ணீர் வந்தது.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரிக்குக் கிழக்கே வெட்டாற்றிலிருந்து பிரியும் பதினெட்டு வாய்க்கால் மதகு என்று ஒரு மதகு. இவ்வாண்டும் அதில் சரியாகத் தண்ணீர் ஏறவில்லை என்பது ஆயக்கட்டுதாரர்கள் அனுபவம். மேட்டூர் அணையில் நிர்வாகம் சரியாக இருக்கிறது என்பது ஊரறிந்த சங்கதி. ஆனால், அந்தந்தக் கிராமங்களில் வாய்க்கால் தலைப்புக்கும் வயல் மடைக்கும் காவிரி எட்டுகிறதா என்பது யாரும் அக்கறைகொள்ளாத செய்தி. காவிரி செலவழியவேண்டிய கடைசி கட்டங்களில்தான் அது செலவழிகிறதா என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மேல்மடையான மேட்டூரிலும், கல்லணையிலும் அதீத தலையீடு. அதேநேரம் கிராம மட்டத்தில் முன்னர் இருந்த ‘நீராணிக்கம்’ என்ற ஊர் ஏற்பாடுகூட எந்த வடிவத்திலும் இல்லாமல் மறைந்துவிட்டது.

உபரி என்ற கருத்தாக்கம்

இன்றைய தேதியில் 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் நீர் இருப்பு 103 அடி. இவ்வாண்டு சம்பா நெல் பருவம் முடிந்து ஜனவரி 28 இல் அணை மூடிய பிறகும் இந்த அளவுக்குக் குறையாமல் நீர் மட்டத்தைப் பராமரித்தார்கள். பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் அமைப்பு ஒன்று சென்ற 2022இல் மேட்டூர் அணையின் கொள்ளளவைப் போல் 4.7 மடங்கு உபரியாக நீர் வெளியேறியது என்று சொல்கிறது (The Hindu, 13/3/2023). உபரி நீர் முக்கொம்பு, கல்லணைவரை வந்து கொள்ளிடம் என்ற வடிகாலில் வெளியேறும். டெல்டாவின் குளம் குட்டை, வாய்க்கால், வடிகால், ஆறுகள் எல்லாம் கரை பொழியும்வரை ஓடி அதற்குமேல் வந்த உபரி இப்படி வெளியேறியது என்று நீங்கள் நினைத்தால் அது சரியல்ல. ‘உபரி’ என்பது மேட்டூர் அணையின் கொள்ளளவுக்கு மேல் வரும் காவிரி நீர்; டெல்டாவின் இயற்கையான தேவைக்கு மேல் வருவது என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அது கல்லணைக்கும் கீழே காவிரிப் படுகையை எட்டிப் பார்க்காமல் படுகைக்கு வடக்கு ஓரமாகவே கடலுக்குச் சென்றுவிடும்.

மேட்டூர் அணை வந்ததிலிருந்து 2022 வரை பதினோறு முறை 100 டி.எம்.சி. அளவுக்கு மேல் உபரி நீர் வெளியேறியது என்று அந்தப் பொறியாளர் அமைப்புச் சொல்கிறது. 1943, 1956, 1959, 1961 ஆகிய நான்கு ஆண்டுகளில் வெகுவாக உபரி வெளியேற்றம் நடந்தபோது டெல்டாவின் குளம் குட்டை, வாய்க்கால், வடிகால், ஆறுகள் அவற்றின் கிளைகள் எவ்வளவு காவிரி நீரைச் சுமந்தது, இப்போது 2022இல் இவற்றின் நிலைமை எவ்வாறு இருந்தது என்ற ஒப்பீடு செய்துபார்க்கவேண்டும். காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம் என்பதை அது நமக்குப் புரியும்படிச் சொல்லும்!

அச்சம் வடிவமைக்கும் மேலாண்மை

மழைப் பொழிவை நம்ப முடியாது. பாசன நீருக்கு, குடிநீருக்கு ஆடையானாலும் கோடையானாலும் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது. மேட்டூரில் நீர்மட்டம் எப்போதும் 90 அடிக்குக் குறையாமலிருந்தால் நிம்மதி. நீரை மிகவும் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். இந்த அடைப்படைகள் எதிலிருந்தாவது விலகிவிடுவோமோ என்ற அதீத முன்னெச்சரிக்கையிலும், அச்சத்திலும் நம் நீர் மேலாண்மை நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏரிப் பாசன ஆயக்கட்டுக்கும் ஏரிக்கும் இருக்கும் தொடர்பை நிர்வகிப்பதுபோல் காவிரிக்கும் அதன் படுகைக்குமான தொடர்பை நிர்வகிக்க முனைகிறோம். காவிரி படுகைப் பாசன அமைப்புக்கு ஏரிப் பாசனம் முன்மாதிரியாக முடியுமா?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

கல்லணையில் கரிகாலனோடு கொண்டாட்டம்

16 Jan 2022

காவிரி நீர் மேலாண்மையின் போதாமைக்கு இது ஆரம்பப் புள்ளி. அந்த மேலாண்மையில் படுகையின் சூழலியல், புவியியல் புரிதலும் சிறிது பங்காற்ற வேண்டும்.  

வழக்கமாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறந்து அந்த ஆண்டு சாகுபடி முடிந்ததாக ஜனவரி 28 அன்று மூடுவார்கள். அதாவது, ஓர் ஆண்டில் பொதுவாக 230 நாட்கள் மேட்டூரிலிருந்து காவிரி நீரை விடுவிப்பார்கள். திறந்த தேதியிலிருந்து இருப்பு நிலவரத்தை ஒட்டி பதினைந்து இருபது நாட்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மூன்றிலுமே தண்ணீர் செல்லும். பிறகு கல்லணைக் கால்வாயில் தொடர்ந்தும் காவிரி, வெண்ணாற்றில் முறை வைத்து இதற்கு ஐந்து நாட்களும் அதற்கு ஐந்து நாட்களுமாக தண்ணீர் ஓடும்.

துல்லியமாக இல்லாவிட்டாலும் ஒரு கணக்கில் புது நஞ்சையான கல்லணைக் கால்வாயில் 230 நாட்களும், பழைய நஞ்சையான காவிரியிலும் வெண்ணாற்றிலும் தலா 115 - 130 நாட்களும் தண்ணீர் ஓடும். மற்ற நாட்களில் படுகையின் பழைய நஞ்சை ஆறுகள் இரண்டும் வறண்டு கிடக்கும். அக்காலத்துக் குத்துமதிப்பான கணக்கில் பழைய நஞ்சைக்கு பன்னிரண்டு லட்சம் ஏக்கரும், புது நஞ்சைக்கு ஒன்றேகால் லட்சம் ஏக்கரும் ஆயக்கட்டு. இப்போது கல்லணைக் கால்வாய் புது நஞ்சையின் ஆயக்கட்டு வெகுவாகக் கூடியிருக்கும், பழைய நஞ்சையின் ஆயக்கட்டு குறைந்திருக்கும்.

தண்ணீர் விடுவிக்கும் ஐந்து நாட்களிலும் அது ஆற்றின் முழுக் கொள்ளளவுக்கு வரும் என்று சொல்ல முடியாது. அநேகமாகக் கரைகளின் பலம், பலவீனத்தைப் பொறுத்து ஆறுகளின் முக்கால் கொள்ளளவுக்கு வரலாம். வாய்க்காலில் தண்ணீர் வந்து வயலுக்கு பாயுமா என்றால் ஒவ்வொரு கிராமத்தின் வாய்க்கால் தலைப்பிலும் ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமையும்போது அது நடக்கலாம் என்றுதான் சொல்ல இயலும். ஆற்றின் நீர் மட்டத்துக்கும் வாய்க்கால் தலைப்பு மட்டத்துக்கும் பெரும்பாலும் ஒட்டு உறவு இல்லாமல் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். காவிரி செலவாகும்; ஆனால் வயலில் செலவாகாது. இந்தச் சிக்கன ஏற்பாட்டோடு வெள்ளக் காலங்களில் உபரி நீர் கொள்ளிடத்தில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவதை இணைத்துப் பாருங்கள்.

துவக்கத்திலிருந்தே தட்டுப்பாடு வருமோ என்ற அச்சமில்லாமல் இருந்திருந்தால் இந்த நெருக்கடி கால விரயங்களைக் கொஞ்சமாவது தவிர்த்திருக்கலாம். அதனால் பெரிய நன்மை ஒன்றும் வந்திருக்காது என்று நினைக்கக் கூடாது.

காவிரிக் கலாச்சாரத்தின் உயிர்ப்பு

நீர்ச் சிக்கனத்தை விவசாயிகள் நன்றாகவே அறிவார்கள். வயலில் நின்ற காவிரி மார்கழி கடைசியில் இஞ்சும். சேற்றின் நைப்பு அங்கு சுவறுவதற்குள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் வயலில் பயறு, உளுந்து தெளித்து அவை நெல் தாளின் மூட்டத்திலேயே முளைத்து இலைவிடும். பிறகு பங்குனி கடைசியில் நெற்றுக்களோடு பயறு, உளுந்து செடிகளை அறித்துக்கொள்வார்கள்.

இப்படியே காலம் காலமாக வெண்ணாறு, காவிரி பகுதிகளில் சம்பா நெல் சாகுபடியின் வாலைப் பிடித்துக்கொண்டே நான்கு லட்சம் ஏக்கருக்கு மேல் பயறும் உளுந்தும் விளைந்தது. இது ஆற்றுப் பாசனத்தில், காவிரி நீரைச் செலவுசெய்து நடந்தது அல்ல. காவிரி நின்ற இடத்தில் அது விட்டுச் செல்லும் நைப்பைக்கொண்டும் முன்பனிக்காலத்தின் பனிப் பதத்தைக்கொண்டும் நடந்தது. இவ்வாண்டு நான் சென்ற இடங்கள் எங்கேயும் பயறு, உளுந்தைக் காணவில்லை.

வெள்ள அபாயம் தணிந்த காலத்தில் வீட்டின் தரை மட்டம் தணிந்தது. காவிரி நீருக்குத் தட்டுப்பாடு வந்த்போது நடவு முறையிலிருந்து தெளிப்பு முறைக்கு மாறிக்கொண்டார்கள். காவிரி நீரின் நைப்பிலேயே உளுந்தும் பயறும் விளைவித்தார்கள். இவை எதுவும் யாரும் மேலிருந்து கீழே சொல்லி நடந்தது இல்லை. கால மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து மாறும் காவிரிக் கலாச்சாரம் இது. கலாச்சாரத்தின் இந்த உயிர்ப்பு காவிரிக்கு வந்த இன்றைய கேடுகளுக்கும் ஈடு கொடுக்கிறதா அல்லது சளைத்துச் சுணங்கிவிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். அரசின் அணுகுமுறை கொஞ்ச நஞ்சம் உள்ள கலாச்சார முனைப்பையும் முடக்கிவிடக் கூடாது. 

கோலம் கலையும் காவிரி

தான் ஓடும் வரை ஓடிய அன்றைய காவிரிக்கும் ஆண்டில் ஐந்து நாட்கள் விட்டு ஐந்து நாட்களாக மொத்தம் 115 நாட்களே நனைந்து பிறகு வறண்டுவிடும் இன்றைய காவிரிக்கும் உள்ள சூழலியல் வேறுபாடுகளை நாம் இனிமேல்தான் அறிய வேண்டும். மணல் அற்றுப்போன ஆறுகள், நனைந்து நனைந்து காயும் ஆறுகள் விழலும், நாணலும், சீமைக்காட்டாமணக்கும், வெங்காயத் தாமரையும் வளர்ந்து ஓடுகாலை நெருக்கத் தோதுவானவை. பிறகு தூர் வாரும் நெருக்கடி உருவாவதற்குக் கேட்க வேண்டாம். ஆறுகளில், வாய்க்கால்களில் நான் அப்போது பார்த்த கிளிஞ்சல், நத்தாங்கூடு, மீன் எல்லாம் காணவில்லை.

காவிரிச் சூழலின் பல்லுயிர் பெருக்கம் தவங்கிவிட்டது என்று சொல்லலாம். இதன் முழுப் பரிமாணத்தை நாம் இன்னும் அறியவில்லை. ஆறுகளின் ஓட்டம் ஓரளவிற்காவது தடையில்லாமல் இருக்க வேண்டும். புனலால், அதனோடு வரும் வண்டலால் உருவான படுகையின் தன்மை அப்போதுதான் மாறாமல் இருக்கும்.

அப்போதெல்லாம் ஒருமுறை காவிரி பெருகி, படுகையில் ஏறி இறங்கினால் அது எவ்வளவு வண்டலைப் படியவிட்டுப் பார் அடங்கும்! காவிரியின் போக்கில் பெரிய படுகைகளே அப்படி உருவானவைதான். தான் ஓடவும், பெருகிப் பரந்துகிடக்கவும், பொன் வண்டலாகப் படியவும், அரித்து விரையவும், அரித்ததை இன்னொரு இடத்தில் எக்கலிடவும், தான் தானேயாகத் தன் கோலம் கலையாமல் இருக்கவும், தன் ஓர்மைக்கும் முழுமைக்கும் காவிரிக்கு உள்ள உரிமையை நாம் எந்த நியாயத்தில் மறுக்க முடியும்? 

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆடிப்பெருக்கின் கதை
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
கல்லணையில் கரிகாலனோடு கொண்டாட்டம்
முதல்வரே... காவிரிப் படுகையைக் கொஞ்சம் கவனியுங்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தங்க.ஜெயராமன்

தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com


4

1





கட்டுரைமனித குலம்திரைப்படக் கல்வியாளர்மதச்சார்பற்றகாந்திய சோஸலிஷம்தலித் சபாநாயகர்தாங்கினிக்கா ஏரிஉடல் வலிஆன்மிகம்டாக்டர் வெ.ஜீவானந்தம்ஜொமெட்டோஉயர்கல்விArvind Eye care – A Gandhian Business Modelமத நல்லிணக்கம்வரலாற்றாய்வாளர்தொழிலாளர்கள்பசு குண்டர்கள்கிழக்கு பதிப்பகம்வெஸ்ட்மின்ஸ்டர் ஆபிசாஸ்திரங்கள்எடிட்டிங்பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்புபுரோட்டா – சால்னாதவில் வித்வான்ஆன்மீகம்சோனம் வாங்சுக் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்?மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன? கவலை தரும் நிதி நிர்வாகம்!நேரு வெறுப்புஊடகர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!