கட்டுரை, அரசியல், விவசாயம், பொருளாதாரம் 10 நிமிட வாசிப்பு

சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
17 Nov 2022, 5:00 am
2

ரூரில் சமீபத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 50 ஆயிரம் உழவர்களுக்குக் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு ஏற்கனவே 1 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை அவர் மக்களுக்கு நினைவூட்டினார். விழாவில் பேசுகையில் ஸ்டாலின், “இந்தியாவில் உழவர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1989இல் நாட்டிலேயே முதன்முதலாகத் தொடங்கிவைத்தவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

உண்மைதான். 1989இல் விவசாயிகளுக்கு மின்சாரம் விலையில்லாமல் கிடைக்கும் என்ற வாக்குறுதியைத் திமுக கொடுத்தபோது, அதன் உண்மையான தாக்கத்தை அன்றைய சமூகம் உணரவில்லை.

இந்தியாவின் பொருளியல் அறிஞர்கள், “தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம்” எனக் கேலியில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. ஆனால், தொடர்ந்து விவசாயம் நலிந்து வர, இந்தியாவின் பல மாநிலங்கள், பின்னர் விவசாயத்துக்கு மின்சாரத்தை விலையில்லாமல் அளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. வழக்கம்போல, இந்தப் பொதுநலத் திட்டத்துக்கும், தமிழகம்தான் இந்தியாவுக்கு முன்னோடி.

விவசாயத்தின் வீழ்ச்சி

விவசாயம் ஏன் நலிந்தது?

இதற்கான காரணத்தை, ஓர் ஒப்பீட்டுடன் விளக்குகிறார் வேளாண் பொருளியல் நிபுணர் தேவேந்தர் ஷர்மா. 1970 தொடங்கி, அடுத்த 45 ஆண்டுகளில், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் எவ்வளவு உயர்ந்தது என்னும் ஒரு தரவை அவர் முன்வைக்கிறார். இந்தக் காலகட்டத்தில், பள்ளி ஆசிரியரின் வருமானம் 320 மடங்கு (32,000%), கல்லூரி ஆசிரியரின் வருமானம் 170 மடங்கு (17,000%), அரசு ஊழியர்களின் வருமானம் 120 மடங்கு (12,000%) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், நெல்லுக்கான அரசுக் கொள்முதல் விலை 19 மடங்கு (1,900%) மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தின் பணவீக்கம் கிட்டத்தட்ட 30 மடங்கு (3,000%) ஆகும்.

இதுதான் பிரச்சினையின் ஆதாரச் சிக்கல்.

மழையோ, வெள்ளமோ, வறட்சியோ, அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஊதியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவிடுகிறது. ஆனால், உழவரின் வருமானம், பணவீக்கத்தைவிடக் குறைவாகவே அதிகரிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், 45 ஆண்டு காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, ஒரு உழவர், முந்தய ஆண்டைவிடக் குறைவாகச் சம்பாதித்திருக்கிறார்! 

ஈடு கட்டும் மானிய உத்தி

வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி மலர்ந்தது. நாட்டின் தலைவர்கள் 4-5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றும் மீண்டும் பதவிக்கு வர வேண்டிய சூழல் உருவானது. எனில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான உணவு, உறைவிடம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஒவ்வோர் ஆட்சியர்களின் மீதிருக்கும் அழுத்தம்.

எனவே, பெரும்பாலான அரசுகள் ஏதாவது ஒரு வழியில் ஏழைகளுக்கான உணவு தானியங்களைக் குறைந்த வழியில் கொடுக்க மானியங்கள் வழங்குகின்றன. இதனால், சந்தையில் தேவை குறைய வேளாண் விளைபொருளின் விற்பனை விலை செயற்கையாகக் குறைகிறது. எடுத்துக்காட்டாக, திமுக ஆட்சிக்கு வந்ததும், பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்ததைச் சொல்லலாம்.

2009க்குப் பின்னர் இந்தியா எங்கும் ஏழைகளுக்கு விலையில்லாமாலோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அறுவடைக் காலத்தில், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தானியங்கள் சந்தைக்கு வருவதால் ஏற்படும் அதீத வரத்தானது, வேளாண் பொருட்கள் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.  இதை ஓரளவுக்கேனும் ஈடுகட்டும் வகையிலேயே அரசு, முக்கியமான வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை அறிவித்து, அவ்விலையில், உணவு தானியங்களைக் கொள்முதல் செய்கிறது.

அரசுக் கொள்முதல் என்பது வேளாண் பொருளாதாரத்தில், மிகவும் செயல்திறன் மிக்க இடையீடு ஆகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்ல வேண்டும் எனில், பஞ்சாப் மாநிலத்தில், அரசு நெல்லை கிலோ ரூபாய் 21க்குக் கொள்முதல் செய்கிறது. அரசுக் கொள்முதல் இல்லாத பிஹார் மாநிலத்தில் அதே நெல் கிலோ ரூபாய் 10க்கும் கீழே விற்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஏழ்மை மிகக் குறைவாகவும் (5.6%), பிஹாரில் ஏழ்மை சதவீதம் மிக அதிகமாகவும் (51.9%) இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இது.

மக்கள்தொகை குறைவான, செல்வ வளம் மிகுந்த மேற்கத்திய நாடுகளின் பிரச்சினை வேறு. அமெரிக்க / ஐரோப்பிய நாடுகளில், வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சதவீதம் மிகக் குறைவு  (2% முதல் 5%). அந்த நாடுகளிலும் வேளாண்மை லாபம் நிறைந்த ஒன்றாக இல்லை. ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் அந்த நாடுகள் தங்கள் உணவு இறையாண்மையைவிட்டுக் கொடுப்பதில்லை. எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும், அந்நாடுகள் தங்கள் உழவர்களுக்குப் பல மடங்கு அதிகமான மானியங்களை அளிக்கின்றன.

விலையில்லா மின்சாரம் அன்றும் இன்றும்

இந்த அடிப்படையில் பார்த்தால், 1989இல் கருணாநிதி கொண்டுவந்த உழவர்களுக்கான விலையில்லா மின்சாரத் திட்டம், வேளாண்மையின் லாபமின்மையைச் சரி செய்யும் ஒரு முன்னோடி முயற்சி என்பதை நாம் உணர முடியும்.

கடந்த ஓர் ஆண்டில், திமுக அரசு 1989இல் கலைஞர் கொண்டுவந்த விலையில்லா மின்சாரத் திட்டத்தை 1.5 லட்சம் உழவர்களுக்குக் கூடுதலாக வழங்கியிருக்கிறது. நல்ல திட்டம். ஆனால், இது 32 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெரும் புரட்சிகரமான அடுத்த கட்டத் திட்டம் (Tranasformative Program) என இன்றைய சூழலில் இதைச் சொல்ல முடியாது.

ஆங்கில வழக்கில் சொல்வதென்றால், வேளாண்மையின் லாபமின்மை என்பது, நம் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் யானை. நாம் அந்தப் பிரச்சினையை ஒதுக்கிவிட முடியாது. அதன் நீண்டகால விளைவுகள் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருந்தீங்காக முடியும்.

தமிழ்நாட்டின் சராசரி நில அலகு என்பது 2 ஏக்கர்.  தஞ்சை மண்டலத்தில், இந்த அலகில் இரண்டு போகம் சாகுபடி செய்யும் உழவர் 8 டன்கள் நெல் உற்பத்தி செய்கிறார். அவரது வருட பண வரவு ரூ.1.6 லட்சம். செலவுகள் போக, அவர் கையில் அதிகபட்சமாக ரூ.50,000-ரூ.60,000 மட்டுமே நிற்கும்.

கடந்த 30-40 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் தொழில் மற்றும் சேவைப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, பெருமளவு மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இன்று தமிழகத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் 5%கூட இல்லை.

இந்தச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், முற்றிலும் புதிய அணுகுமுறை நமக்குத் தேவை. வேளாண் உற்பத்திப் பெருக்கம் என்னும் இலக்கிலிருந்து, வேளாண்மை லாப அதிகரிப்பு என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

ஹாலிவுட் உதாரணத்திலிருந்து சிந்திப்போம்

ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் 1960களில் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகின. கேளிக்கைத் துறையில் புதிதாக உருவாகிவந்த தொலைக்காட்சி எனும் ஊடகத்தை எதிர்கொள்ளும் உத்திகளை வகுக்க அவை தவறின. விளைவாக, நஷ்டத்தில் மூழ்கின.

இதை, மேலாண் பேராசிரியர் தியோடர் லெவி ‘வணிகத்தில் குறுகிய பார்வை’ (Marketing Myopia) என அழைக்கிறார். அதேபோல, விவசாயி என்பவர் பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் குறுகிய பார்வையை விடுத்து, கொஞ்சம் விசாலமாக யோசித்தால், குறுகிய, நீண்ட கால நோக்கில், வேளாண்மையை லாபகரமாக ஆக்க முடியும்.

ஆகையால், சராசரி உழவர், தனது 2 ஏக்கர் நிலப்பரப்பைப் பயன்படுத்தி, எப்படித் தன் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதுதான் இனி அரசுத் திட்டங்களின் இலக்காக இருக்க வேண்டும்.

குறுகிய காலத் திட்டம்

குஜராத் மாநிலம், டுண்டி கிராமத்தில், பன்னாட்டு நீர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா ஒரு புதிய வழியில், உழவர்களின் வருமானம் உயரும் ஒரு பரிசோதனையை கடந்த 5 ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.

டுண்டி கிராமத்தில் உள்ள 6 உழவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் நிலங்களில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மாநில மின் கட்டமைப்புக்கு வழங்கும் திட்டம் அது. அதன் மூலம், ஒவ்வொரு விவசாயியும், ஒரு மின் தொடர்புக்கு வருடம் ரூ.50,000-ரூ.60,000 வரை கூடுதல் வருமானம் பெரும் ஒரு புத்தாக்கப் பொதுத்திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

உழவர் எழுக!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 22 Sep 2021

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

  1. உழவர் தன் பாசனத்துக்கான மின்சாரத்தை விலையில்லாமாகப் பெறுகிறார். 
  2. அதற்கு மேலாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மாநில மின் கட்டமைப்புக்கு அளித்து, ஒரு தொடர்புக்கு வருடம் ரூ.50,000-ரூ.60,000 கூடுதல் வருமானம் பெறுகிறார். 
  3. இதற்காகத் தேவைப்படும் இடம் அதிகபட்சம் 2,000 சதுர அடி.
  4. சூரிய மின் உற்பத்தித் தகடுகளை நிறுவிய பின்னர், அவற்றின் கீழ் நிழலில் வளரும் பயிர்களை உழவர்கள் பயிர் செய்துகொள்ள முடியும். எனவே, சூரிய மின் உற்பத்திக்காக நிலம் வீணாவது இல்லை.
  5. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு சந்தை விலை கிடைப்பதால், உழவர்கள் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே நீரிறைக்கப் பயன்படுத்துகிறார்கள். இதனால், நிலத்தடிநீர் அதீதமாக உறிஞ்சப்படுவது குறைகிறது. 
  6. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பயன்படுத்திக்கொள்ளப்படுவதால், அந்த அளவிற்கு மின்சார விநியோகத்தில் நிகழும் நஷ்டம் குறைகிறது. 
  7. வேளாண்மைக்காக அரசு வழங்கும் மானியம் நின்று, அரசின் நிதிநிலை மேம்படுகிறது. இந்த மானியத்தைச் சரிக்கட்ட, மின் வாரியம் வணிக இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முறை நின்று, வணிக மின் கட்டணமும் குறைய வாய்ப்பு இருக்கிறது. 
  8. சூரிய ஒளி மின்சாரம் என்பதால், சுற்றுச்சூழல் மாசு குறைகிறது.

தமிழ்நாடு ஏன் இதைச் சிந்திக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை தற்போது கிட்டத்தட்ட 16,000 மெகா வாட்டாக உள்ளது. இத்தேவை இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரண்டு மடங்காக மாறக் கூடும். இந்தக் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்வதில், மரபுசாரா சக்தி உற்பத்தி வழிகளை – சூரிய ஒளி, நிலம் மற்றும் கடலுக்குள் நிறுவப்படும் காற்றாலைகள் எனத் தமிழக அரசு திட்டமிடுகிறது.

இந்தத் திட்டங்களில் 5%-10% வரை, நம் ஊரின் சிறு உழவர்கள் மூலம் ஒரு கட்டுபடியாகும் விலையில் உற்பத்தி செய்துகொள்ளும் பொதுநலத் திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அது உழவர் வருமானத்தை உடனடியாக உயர்த்தும்.

தமிழகத்தில் 22.5 லட்சம் உழவர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, வருடம் ரூ.4,500 கோடியை அரசு மின் வாரியத்துக்கு வழங்குகிறது. ஆனால், அது போதாததால், மின் வாரியம் வர்த்தக இணைப்புகளுக்கு அதிகக் கட்டணம் விதித்து, தன் நஷ்டத்தை ஈடுகட்டுகிறது.

இன்னும் 4 லட்சம் உழவர்கள் மின் தேவைக்காக விண்ணப்பித்து ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறார்கள்.

இத்தகு சூழலில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்தால், மேற்கண்ட எல்லாப் பிரச்சினைகளுக்குமே அது தீர்வு தரும்.

இத்திட்டத்தை, தமிழ்நாடு மின் வாரியம் போன்ற மிகப் பெரும் நிறுவனம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவன’த்தின் (Tansim) மூலம் இதைச் செயல்படுத்த முனையலாம்.

பொதுப் புத்தியில் ‘ஸ்டார்ட் அப்’ என்ற உடன் நினைவுக்கு  வருவதெல்லாம், சிலிக்கான் வேலி, பில்லியன் டாலர் சந்தை மதிப்பு, தலையில் கொம்பு முளைத்த யூனிகார்ன் நிறுவனங்கள் என்பவைதாம்.  தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற அவை முக்கியமான தேவை. ஆனால், அவற்றைத் தாண்டியும் நாம் யோசிக்க வேண்டும்.

சிறு உழவர்கள் போன்ற நுண் பொருளாதார நிறுவனங்களை (Nano Economic Enterprises) லாபகரமாக்கும் தொழில் திட்டங்களும் ஸ்டார்ட் அப்தான். டான்சிம் நிறுவனம் சமீபத்தில் வேளாண்மையில் புத்தாக்கத் தொழில் திட்டங்களை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பாகும். அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் அமையலாம்.

காவிரிப் படுகையை மீட்டெடுக்க ஒரு வழி

காவிரிப் படுகைப் பகுதியை ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்து சில ஆண்டுகள் ஆகின்றன. அதன் முதல்படியாக, காவிரி படுகை விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த இந்த சூரிய ஒளி மின் திட்டத்தை யோசிக்கலாம்.

காவிரிப் படுகையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியை ‘டான்சிம்’ மேற்கொள்ளலாம். 1-2 ஆண்டுகளில், இத்திட்ட நிறைவேற்றலில் உள்ள சவால்களை, சிக்கல்களைக் களைந்த பின்னர், இதை காவிரிப் படுகை முழுவதும் முன்னெடுக்கலாம். பின்னர் இதைத் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அடுத்த 5-10 ஆண்டுகளில் விரிவுபடுத்தலாம்.

காவிரிப் படுகையில் 10 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், வருடம் ரூ.6,000 கோடி உபரியாக அங்கே செல்வம் உருவாக இத்திட்டம் வழிவகுக்கும்.

கரிகால் சோழன் கட்டிய கல்லணை தொடங்கி, காவிரிப் படுகையின் விவசாய உற்பத்தி உபரிதான், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நின்ற சோழப் பேரரசை உருவாக்கியது. அதன் பின்னர், 1930இல் கட்டப்பட்ட மேட்டூர் அணை, காவிரியின் நீரை மிகச் செயல்திறன் மேம்பட்ட வகையில் காவிரிப் பாசனப் பகுதியை அதிகரித்தது. 1960களில் தொடங்கப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக, மேம்பட்ட பண்ணை இடுபொருட்கள், விதைகள் மூலமாக நெல் சாகுபடி மேம்பட்டது.

ஆனால், தொழில் புரட்சிக்குப் பின்னர், உலக அளவில் வேளாண்மையின் முக்கியத்துவம் குறைந்தது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 1980களில் தமிழகத் தொழில் துறை எழுந்த பின்னர் வேளாண்மை பின்தள்ளப்பட்டது. இன்று காவிரிப் படுகை மாவட்டங்கள் பொருளாதார அலகில், தொழில் துறை இயங்கும் மாவட்டங்களைவிடப் பின்தங்கியுள்ளன.

மீண்டும் காவிரிப் படுகையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

உழவர் எழுக!
விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி
மின்சாரம் எந்த அளவுக்கு மாநில வளர்ச்சிக்கு முக்கியம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

Outstanding article! Kudos 💯

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

உணவு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து, குறைந்த பட்ச விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்வதில் உள்ள பாரபட்சத்தைப் பற்றி இதில் எதுவும் சொல்லப்படவில்லை. போகிற போக்கில், பஞ்சாபில் அதிக அளவு கொள்முதல், பீகாரில் மிகக் குறைந்த அளவு என்று ஒற்றை வரி. மாநில உரிமைகளுக்காக 'பொங்கும்' இவர், அனைத்து மாநிலங்களிலும், சம அளவில் (in proportion to their annul yield of paddy, wheat) மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று சொல்ல மறுக்கிறார். ஆனால் அது எப்பேர்பட்ட அநீதி. மூன்று விவசாய சட்டங்களை பஞ்சாப், ஹரியான விவசாயிகள் மட்டும் (repeat : மட்டும்) தீவிரமாக எதிர்த்து போராட இது தான் அடிப்படை காரணம்.பீகார், தமிழகம் உள்ளிட்ட வேறு எந்த மாநிலத்திலும் அத்தகைய தீவிர போராட்டங்கள் நடக்கவில்லை. ஏனெனில் இங்கு அரசு கொள்முதல் மிக மிக சொற்பம். இதை முதலில் பேச வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ஆகார் படேல்மனோஜ் ஜோஷிபோஸ்ட்-இட்சிறுநீர்ப்பாதை4 கோடி வழக்குகள்மாமாதேசிய நிறுவனங்கள்கேஸ்ட்ரொனொம்அண்ணா பொங்கல் கடிதம்ரோவான் ஃபிலிப் பேட்டிபாபா சித்திக்முத்துசாமி பேட்டிஉண்மைகள்தேசிய பாதுகாப்புகோபால்ட்உலகம் சுற்றும் வாலிபன்மாநகராட்சிதுப்புரவுத் தொழிலாளர் சங்கம்தேவேந்திர பட்நவீஸ்காதல் எனும் சாறு பிழிந்துமுடி உதிர்வுசூத்திரங்கள்அட்லாண்டிக் பெருங்கடல்பேரிசிடினிப்வருவாய் ஏய்ப்புகடுமையான வார்த்தைகள்அருஞ்சொல் அருந்ததி ராய்ச.கௌதமன்சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புபேரறிவாளன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!