அருஞ்சொல்: நமக்கென்று ஒரு பாதை...
ஊடகங்களுக்கே உரித்தான அறங்கள் அருகிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் புதிய நம்பிக்கையைத் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது ‘அருஞ்சொல்’. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பெருங்கடமைதான் ‘அருஞ்சொல்’லைக் காக்கும் எல்லைதெய்வம்.
- வில்லியம் லின்சன் ராஜ்
மிகச் சிறப்பு வாழ்த்துகள். திரைவாசிப்பான் கொண்டு பார்வையற்றோர் அணுகும்வண்ணம் இணைய வடிவமைப்பும் அமைந்திருப்பது சிறப்பு. ஒரு கோரிக்கை: திரைவாசிப்பான்களின் உச்சரிப்பில் மயங்கொலிகளை நாம் துல்லியமாக அறிய முடியாது. இந்தக் குறைபாட்டைப் போக்கவே விசைப்பலகையில் ஒரு குறுக்குவழி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஒருங்குறி வடிவிலான உரையைத் திரைவாசிப்பான் கொண்டு வாசிக்கும் ஒருவர், ஒரு வார்த்தையிலுள்ள மயங்கொலியை அறிய விரும்பினால், அந்த வார்த்தையின் குறிப்பிட்ட எழுத்தில் சுட்டியை (cursor) வைத்துக்கொண்டு, ‘insert’ பிடித்துக்கொண்டு, முற்றுப்புள்ளி விசையை மூன்று முறை அழுத்தினால், அவர் அறிய விரும்பும் எழுத்துக்கான பிரெயில் புள்ளிகள் மற்றும் ஒரு உதாரண வார்த்தையையும் சேர்த்துத் திரைவாசிப்பான் அவருக்குச் சொல்லும். உதாரணமாக, இறை என்ற வார்த்தையில், ‘றை’ என்ற எழுத்தில் சுட்டியை வைத்துக்கொண்டு, நாம் மேற்சொன்ன குறுக்கு விசையை அழுத்தினால், திரைவாசிப்பான் அதை ‘புறா பிரெயில் புள்ளிகள் 1, 2, 4, 5, 6’ என வாசிக்கும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவியானது. இந்த வசதி ‘இந்து தமிழ்’ இணையத்தில் மிக வெற்றிகரமாகச் செயலாக்கத்தில் உள்ளது. நமது இணையத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என விழைகிறேன்.
- சரவண மணிகண்டன்
‘தன்னுணர்வை (‘தான்-உணர்வு’ அல்ல)’ அரசியல் உணர்வாக, மானுட விடுதலைக்கான உணர்வாக, சமூக நீதியின் உணர்வாக வெளிப்படுத்தும் தளமே அறம் சார்ந்த ஊடகம். ஒருவரை ஒருவர் மதிப்போம், பேசுவோம், விவாதிப்போம், ‘அனைவரு’க்குமான அற விழுமியங்களை உணர்வோம்.
- விக்னேஷ் மோகன்
அருமையான முன்னெடுப்பு. இந்தக் காலகட்டத்துக்குத் தேவையானவற்றை உணர்ந்து அதன் அடிப்படையில் அமைந்துள்ளது ‘அருஞ்சொல்’. சிறப்பான ஆரம்பம். உங்களின் எழுத்தும் அனுபவமும் சமூகப் பிரக்ஞையும் ஒன்றுசேர்ந்து சாதனை படைக்க இது ஓர் இனிய ஆரம்பம்.
- பா.ஜம்புலிங்கம்
‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் வாழ்த்துகள். நல்முயற்சி. தமிழகத்துக்குத் தற்போது இப்படியொரு தனித்துவமான ஊடகம் தேவை.
- சபரிநாதன் நாகராஜ்
இந்தத் தளம் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டியாகவும், அறிவுப் பசியைத் தீர்க்கும் தளமாகவும் களமாட வேண்டும். போட்டித் தேர்வாளர்களுக்கு, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.
- சண்முகராஜ்
‘அருஞ்சொல்’லுக்காக ஆவலுடன் காத்திருந்தது முடிவுக்கு வந்துவிட்டது. இனி கொண்டாட்டம்தான். முதல் கட்டுரையே சமஸின் முத்திரைப் பதிப்பாக அமைந்துவிட்டது என்றால் மிகையில்லை.
- நவகை ப.சரவணன்
தங்களின் முன்முயற்சி பிரமிக்க வைக்கிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. காலத்தின் கண்ணாடியாக ‘அருஞ்சொல்’ செயல்பட வாழ்த்துகள்!
- இரா.சிசுபாலன்
பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் - பா.வெங்கடேசன் பேட்டி
பாரதியாரின் காதலி பெயர் சண்முகவடிவு என்று நெல்லை கண்ணன் பேசிக் கேட்டதாக நினைவிருக்கிறது. பாரதியின் காதல் குறித்த புனைவு அருமையான எடுத்துரைப்பு.
- சுடலைமணி
தெளிவான உறுதியான கட்டுரை மீண்டும் வரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு விண்ணப்பம். முடிந்தவரை எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. காந்தியின் ஆடை போன்றே. தனித்தமிழ், புரியா மொழிநடை என்பதல்ல நான் கூற விரும்புவது. எடுத்துக்காட்டாக, சுதேசி - தற்சார்பு (தன்நிறைவு) என்பது இன்னும் எளிமையாக விளங்கும். இயல்பு, எளிமை — கூடுதலாகப் பொறுப்பும்கூட. இதுவரை அப்படிச் செய்ததால் அதே சொல்லைப் பயன்படுத்தி எழுதலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் இது நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றம் என நான் எண்ணுகிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளில் உங்களை மேலும் பொறுப்பு மிகுந்தவராகக் காண விழைகிறேன்.
- பாக்கியராஜ் கோதை
திமுக 100 நாள் ஆட்சி: பாராட்டுக்குரிய கவனம்
பாராட்டுகளைத் தக்க வைப்பதில்தான் சிக்கல் அதிகம், ‘அருஞ்சொல்’லால் பாராட்டு பெற்றதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
- எம்.ஏ.நிஜாமுதீன்
இலங்கை நெருக்கடிநிலை: என்ன காரணம்?
‘அருஞ்சொல்’லுக்கு நல்வாழ்த்துகள். இலங்கையின் நெருக்கடியைப் பெரிய அளவில் விரிவாக எந்த ஊடகமும் வெளியிடாத நிலையில் தெளிவான புரிதலை இந்தக் கட்டுரை தந்துள்ளது. ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, உலகச் சந்தையின் 85% ஏலக்காய், மிளகு தேவையை இலங்கைதான் பூர்த்திசெய்கிறது என்கிற தகவலை இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு தெரிந்துகொண்டேன். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரம், எதிர்காலம் குறித்துக் கவலைகொள்ள வைக்கிறது.
- ஆர்.சரவணன்
வெறுப்பு: நரகத்தில் செய்யும் முதலீடு
வெறுப்புக்குக் கதைசொல்லும் தன்மை உள்ளது; அன்புக்கு இல்லை என்ற கருத்து அருமையான கருத்தாக்கங்களைக் கொடுக்கிறது. அன்பு தன்னிச்சையான, நிதர்சனமான காரண காரியங்களற்று அந்தந்த நொடியில் நிகழ்கிறது. காந்தியின் வாழ்க்கை முழுதும் அவர், அன்புக்கான கோட்பாடுகளைத் தன் அன்றாடச் செயல்களின் மூலமே கண்டுகொள்கிறார். வெறுப்பு போன்ற எதிர்வினைக்குத்தான் ஒரு முதல்வினையானது வரலாற்றில் தேவைப்படுகிறது. அன்பு போன்ற முதல்வினைக்குக் கதைசொல்லல் தேவையில்லாமல் போகிறது.
- வளவன்
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள்.







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
kALIDAS 3 years ago
சுற்றி எரியும் காட்டுத்தீயாய் பதைபதைப்போடு வாசகர்களை(பார்வையாளர்களை) வைத்து போட்டியில் பல இணையவழி ஊடகங்கள் மத்தியில் சமஸ் அவர்கள் பண்பு என்ற காற்றடைக்கப்பட்ட பந்தாக அருஞ்சொல்லாக வந்துள்ளார் நெருப்பாற்றை நீந்தி நிலையான இடம் பிடிப்பார்💐💐
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.