திமுக ஆட்சி 100 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், ‘எந்த வகையிலும் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செலுத்தும் தொடர் கவனம் அதன் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளிலும் கவனிக்கத்தக்கதாகத் தோன்றுகிறது. முதல்வராகப் பொறுப்பேற்ற விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் உரிய இடம் அளித்து வரவேற்றதில் தொடங்கி, அதிமுக தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை மாணவர்களுக்கு வழங்குவது எனும் சமீபத்திய முடிவு வரை மாச்சரியங்களை ஒதுக்கிவைக்கும் அணுகுமுறையானது தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாகும்.
புதிதாகப் பொறுப்பேற்கும் ஓர் அரசானது, பிரதான எதிர்க்கட்சியின் தலைவர்கள் உள்பட எல்லோரையும் விழாவுக்கு அழைப்பதில், பாராட்ட என்ன விசேஷம் இருக்கிறது? நதிநீர் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் அரசு ஒரு கொள்கை நிலைப்பாடு எடுக்கும்போது அனைத்துத் தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கலப்பதில் பாராட்ட என்ன விசேஷம் இருக்கிறது? முந்தைய அரசின் ஆட்சிக் காலகட்டத்தில், அன்றைய ஆளுங்கட்சியின் தலைவர்களின் படங்களோடு தயாரிக்கப்பட்ட பைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்க முடிவெடுப்பதில் பாராட்ட என்ன விசேஷம் இருக்கிறது?
ஜனநாயக நாடுகளின் அரசியல் கலாச்சாரத்தில் இவை எல்லாமே கட்டாயம் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் அம்சம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும்கூட, டெல்லியில் பெரும்பாலான காலகட்டங்களில் இத்தகு கலாச்சாரம் இருந்திருக்கிறது; தமிழ்நாட்டில் மிகச் செழிப்பான மரபாகவே இது இருந்திருக்கிறது. ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என்று தமிழ்நாட்டு அரசியலின் பெரும் தூண்களாக ஒரு நூற்றாண்டு இருந்தவர்கள் பலரும் தத்தமது இயக்கங்களின் அளவிலும், ஆட்சியுடனான இணக்கத்தைப் பேணுவதிலும் இதற்கு உதாரணர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா ஒரு மோசமான விதிவிலக்காக அமைந்தார்.
அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து அவருடைய மறைவு வரையிலான மூன்று தசாப்தங்களில், தன்னுடைய தனிப்பட்ட குணத்தை அதிமுக எனும் பேரியக்கத்துக்கும் அவர் அளித்ததன் விளைவாக, கட்சி மாச்சரியம் என்பது தமிழ்நாட்டின் அசிங்கமான அரசியல் கலாச்சாரங்களில் ஒன்றானது. உள்ளூர் அளவில், திருமணம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளுக்குத் திமுகவினரை அழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில்கூட அவரால் தண்டிக்கப்பட்ட அதிமுக தலைவர்கள் இருந்தார்கள். எவ்வளவு முக்கியமான விஷயங்களுக்கும் எதிர்த்தரப்புடன் ஆலோசனை கலக்கப்படுவதில்லை; ஒருவேளை திமுக ஆளுங்கட்சியாக இருந்து, அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டாலும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை; சட்டமன்றங்களில் எதிர்க்கட்சியினருக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இந்த வெறுப்பு நோயானது திமுகவிடமும் படர்ந்தது. கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் கடைசிக் காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தால், சட்டமன்றத்துக்குச் செல்வதே அரிதான நிகழ்வு என்று சொல்லத்தக்க அளவுக்கு மாச்சரியங்களை இங்கே வளர்த்துவிட்டிருந்தார்கள். சென்னைப் பெருவெள்ளத்தின்போது, மக்களுக்கு வழங்க எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் கொண்டுவந்த நிவாரணப் பொருட்கள் பறிக்கப்பட்டு, அவற்றின் மீது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விநியோகிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. 2016-ல் முதல்வராக ஜெயலலிதா பங்கேற்கும் விழாவுக்குச் சென்றிருந்த பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்குப் பத்தோடு பதினொன்றாக, ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட பின்னணியில்தான் ஸ்டாலினின் நடவடிக்கைகள் விசேஷம் பெறுகின்றன; பாராட்டுக்குரியவை ஆகின்றன.
அடையாள அரசியல் என்பதைத் தாண்டி முதல்வர் ஸ்டாலின் இதற்குத் தரும் அர்த்தப்பாடு கூடுதல் கவனம் ஈர்க்கிறது. “அரசு சார்பில் அளிக்கப்படும் பொருட்களில் இப்படி ஆட்சியாளர்கள் தம்முடைய படங்களை இணைத்து, இலவச விளம்பரம் பெற முற்படுவதே அசிங்கம். ஸ்டாலின் இப்போது அதற்கும் முடிவு கட்டியிருக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காகச் சென்ற ஆட்சிக் காலகட்டத்தில் அன்றைய முதல்வர் பழனிசாமியின் படங்களுடன் 65 லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்தப் படங்களை நீக்க அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும் என்ற நிலையில், இது தொடர்பில் என்ன முடிவெடுப்பது என்கிற விஷயம் ஸ்டாலினின் கவனத்துக்குச் செல்கிறது. துளியும் தயங்காமல், “அப்படியே விநியோகியுங்கள்; அந்தத் தொகையை வேறு ஆக்கபூர்வமான பணிகளுக்குச் செலவிடலாம். மக்கள் பணம் மாச்சரியங்களால் வீணடிக்கப்படக் கூடாது” என்று கூறியிருக்கிறார். இத்தகு பார்வை ஒரு நல்லாட்சிக்கான அடிப்படைப் பண்புகளில் ஒன்று.
முந்தைய ஆட்சியாளர்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களிலிருந்தே தற்போதைய ஆட்சியாளர் நல்ல பாடங்களை சுயமாகக் கற்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய அரசை சரியான பாதையில் முன்னெடுக்கலாகிறார் ஸ்டாலின். பாராட்டுக்குரிய இந்த நற்பண்பை அவருடைய அரசு தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)







பின்னூட்டம் (10)
Login / Create an account to add a comment / reply.
V B Ganesan 4 years ago
தொடக்கமே ஆர்ப்பாட்டமாக உள்ளது. நெஞ்சில் ஆழமும், மக்களின் மீது நேசமும் கொண்டு செயல்பட்டால் தமிழக வரலாற்றில் ஒரு தனி முத்திரையை பதிக்கலாம். சமஸ் கூறியிருப்பது போல சுயமாக கற்க வேண்டும். நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நினைப்போம். வாழ்த்துக்கள் சமஸ்! நாளும் வெற்றி உமக்கே!
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Stanislas 4 years ago
காலம் தந்த கொடை ஸ்டாலின் தேர்வு.இருப்பையும்,இயக்கத்தையும்,நடப்பையும்,நல வாழ்வையும்,தோழமையையும் முறையாக உணர்ந்து பயணிக்கிறார்.இலவசங்கள் என்ற அறிவிப்பின் சீர்கேட்டை கூட்டுறவையும் சிதைக்கும் நகைக்கடன் நகை முரண்.இளையோர்க்கு வேலை வாய்ப்பை நல்கும் பாணியில் அவர் ஆட்சி நடந்தால் இன்னும் மகிழ்வேன்.ஊழலை முற்றாக ஒழிக்கும் அதிரடிகள் ஆழமாக வேண்டும்.ஊரை அடித்து உலையில் போடும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. "சமஸ்"நயமான நாகரிகர்.அவர் நடுநிலை விமர்சனங்கள் துள்ளலுடன் தொடர வாழ்த்துகிறேன் ; வரவேற்கிறேன்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
R.Sisubalan 4 years ago
திமுக-வின் 100 நாள் ஆட்சியை மிகச் சிறப்பாகக் கணித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Ilango Ramasamy 4 years ago
எதிர்கட்சிகளுடனான உறவு மற்றும் அரசு உதவித் திட்டங்களில் முதல்வரின் படம் என்பதைத் தாண்டி மற்ற முக்கிய முடிவுகளைனைத்தையும் வரிசைப் படுத்தி இருக்கலாம் (2-ம்) பெண் காவலர்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Gopi Selvam 4 years ago
சிறப்பான விமர்சனம். 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், பாடப்புத்தகங்களில் இருந்த கருணாநிதி பெயரை மறைக்க பள்ளி மாணவர்களை வைத்தே இரு வாரகாலத்திற்கு புத்தகங்களில் 'பச்சைநிற ஸ்டிக்கர்' ஒட்டவைத்த கொடுமையை நினைத்துப் பார்த்தால், தற்போது முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கும் செயலின் முதிர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம். பி.கு. : ஸ்டிக்கர் ஒட்டிய மாணவர்களில் நானும் ஒருவன்
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.
Karthik 4 years ago
வாழ்த்துக்கள் அருஞ்சொல் டீம் 👍🏻
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
M A Nijamudeen 4 years ago
பாராட்டுகளை தக்க வைப்பதில்தான் சிக்கல் அதிகம், ‘அருஞ்சொல்’லால் பாராட்டு பெற்றதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Anandan 4 years ago
100 நாள் ஆட்சி குறித்து என்பதால் உங்கள் கட்டுரை புரிந்து கொள்ளகூடியதும், ஏற்கதக்கதும் ஆகும். ஆனால் அவர்களின் கட்சி ஆட்சியின் வரலாறும், அவர் ஏற்கனவே பல பதவிகளில் அவருடைய செயல்பாடுகள் மக்களின் நம்பிக்கையை பெற அவரும், சக அமைச்சர்களும், கட்சியினரும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களை போலவே மக்களாகிய நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தங்களின் #அருஞ்சொல் மேன்மேலும் வளர #வாழ்த்துக்கள். ஆனந்தன் பிருந்தா.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
T. Sivaprakasam 4 years ago
அருஞ்சொல். மின்னிதழுக்கு வாழ்த்துக்கள். From. T. Sivaprakasam. Superintendent.Retd Mannargudi. 614001
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Gopalswamy Ramesh 4 years ago
அருமயான பதிவு வாழ்துக்கள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.