பேட்டி, சிறுகதை, கலை, பாரதி நினைவு நூற்றாண்டு 10 நிமிட வாசிப்பு

பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் - பா.வெங்கடேசன் பேட்டி

த.ராஜன்
03 Oct 2021, 5:01 am
6

தமிழின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவரான பாரதியாரின் நினைவு நூற்றாண்டு இது. இந்த வருடம் முழுக்கவும் பாரதியை நாம் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் முதல் அடியில் இணைந்துகொள்கிறார்,  பா.வெங்கடேசன். பாரதியோடு தான் கொண்டிருக்கும் உறவு குறித்து இந்தப் பேட்டியில் சுவாரஸ்யமாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பாரதியை வைத்து அவர் எழுதிய சிறுகதையொன்றும் இங்கே மீள்பிரசுரம் காண்கிறது.

பாரதி உங்களுக்கு எப்போது அறிமுகமாகிறார்?

என்னுடைய எட்டாவது வயதில். மதுரை தானப்ப முதலி தெரு அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் பாரதியைப் பற்றி ஒரு வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு முன்பாகவே ‘பாப்பா பாட்டு’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாரதி அறிமுகமாகியிருந்தாலும், பாரதி என்ற பிரக்ஞை உள்ளே வந்தது அந்த வில்லுப்பாட்டிலிருந்துதான். முதலில், வில்லுப்பாட்டில் ஒரு சுள்ளானாக அமர்ந்திருந்தேன். வேறொரு பையன் வில்லுப்பாட்டு பாடுபவனாக இருந்தான். அவன் அதைச் சரியாகச் செய்யவில்லை என்று என்னை வில்லுப்பாடகனாக உட்கார வைத்தார்கள். ‘வணக்கம் செய்வோம் வணக்கம் செய்வோம், இருகரம் குவித்து வணக்கம் செய்வோம், நம்மைப் பெற்ற தாய்தந்தைக்கும், கல்வி தந்த ஆசிரியருக்கும்’ என்று ஆரம்பித்து, பாரதியின் வாழ்க்கையை ஒரு பத்து நிமிடத்தில் சொல்வதாக வில்லுப்பாட்டு அமைந்திருந்தது. வில்லுப்பாட்டின் உயிரோட்டத்துக்காக, பாரதியைப் பற்றி அமரர் தி.ஜ.ர. எழுதிய ‘பாப்பாவுக்கு பாரதி’ என்றொரு சின்னப் புத்தகம், ‘பழனியப்பா பிரதர்ஸ்’ வெளியிட்டிருந்தது, இப்போதும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அதைப் படிக்கச் சொன்னார்கள். அதன் வழியேதான் பாரதி என்கிற ஆளுமையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

உங்களுடைய குடும்பத்தில் பாரதியின் இருப்பு என்னவாக இருந்தது? யாராவது பாரதி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களா?

இல்லை. யாரும் சொன்னதில்லை. காந்தி, பாரதி என எல்லா ஆளுமைகளும் எனக்குப் புத்தகங்கள் வழியாகத்தான் அறிமுகம். அப்பா எனக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் பாரதியை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘கப்பலோட்டிய தமிழன்’ படமெல்லாம் அப்போதே வந்திருந்தது. என்றாலும், அதையெல்லாம் சிவாஜி கணேசன் – சுப்பையா என்று பார்த்தோமே தவிர, பாரதி – கப்பலோட்டிய தமிழன் என்று பார்த்ததில்லை.

சிறு வயதுக்குப் பிறகு பாரதியை நீங்கள் மறுகண்டுபிடிப்பு செய்தது எப்போது?

மறுகண்டுபிடிப்பு என்று பாரதியைச் சொல்லவே முடியாது. பாரதி எப்படியென்றால், சாப்பாட்டுக்கும் இனிப்புப் பண்டத்துக்குமான வித்தியாசம்தான். இனிப்புப் பண்டத்தைத்தான் நீங்கள் மறுகண்டுபிடிப்பு செய்ய முடியும். சாப்பாடு எப்போதும் உங்கள் கூடவே இருக்கும். சாப்பாடு மாதிரிதான் பாரதி. எப்போது நீங்கள் இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டீர்களோ, எப்போது புத்தகத்தின் வாசனை உங்கள் மூக்கில் பட்டுவிட்டதோ அப்போது நீங்கள் பாரதியை சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையற்றோ பாரதி உங்களுக்குள் இறங்கிவிடுகிறார். நேரடியாக அல்லது பாரதியைப் பற்றி மற்றவர்கள் சொல்வதன் வழியாக அல்லது பாரதியின் வரிகள் எடுத்தாளப்படுவதன் வழியாக என எப்படியோ அவர் உங்களைத் தீண்டிவிடுகிறார். பாரதியாரைப் படித்தவர்களின் எழுத்துகளில் இருக்கக்கூடிய பாரதியின் தாக்கமே நீங்கள் பாரதியின் வாசனையை நுகர்வதற்குச் சமம்தான். 

புத்தக வாசனை தீண்டாதவர்களிடமும் பாரதி சென்றடைந்திருக்கிறார், அல்லவா? அதற்கு என்ன காரணம்?

என் மனதுக்கு என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் மனதுக்கு நெருக்கமாக பாரதி இருக்கிறார் என்றால் இலக்கியத்தைவிட அதிகமாக சினிமாதான் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது என்பதே என் எண்ணம். பாரதியின் சிறந்த வரிகளெல்லாம் திரைப்படப் பாடல்களாக வந்ததுதான் அவர் பெரிய அளவு தெரிந்ததற்குக் காரணம். இல்லையென்றால், அவர் தீவிர வாசகப் பரப்புக்குள்ளேயேதான் இருந்திருக்கக்கூடும். திராவிட இயக்கம் பெரிய அளவில் முன்னெடுத்தும் பாரதி அளவுக்கு பாரதிதாசன் பிரபலமடையாமல் இருப்பதற்கும் காரணம் அதுதானே? கர்நாடக இசையைவிடத் திரைப்பாடல்கள்தான் பாரதியை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கின்றன. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடலாகட்டும், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘தீர்த்தக் கரையினிலே’ பாடலாகட்டும், ‘ஏழாம் மனிதன்’, ‘நாம் இருவர்’ படங்களிலுள்ள பாடல்களாகட்டும்… இவையெல்லாம் தமிழ் மக்களுக்கு நெருக்கமாக பாரதியைக் கொண்டுவந்தன. இந்தப் பாடல்களெல்லாம் அப்படியே பாரதி வரிகளின் ஆன்மாவைக் கொடுத்துவிடுகின்றன என்றுதான் நான் நம்புகிறேன். அதற்காக ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு முன்னால் இருந்தவர்கள் எல்லோருக்குமே நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

பாரதியை மையமாக வைத்து சிறுகதையொன்று எழுதியிருக்கிறீர்கள். அவருடைய தாக்கம் உங்களுடைய படைப்புகளில் வெளிப்பட்டிருப்பதாகவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பாரதியின் கதையை நாவலாக எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

பாரதியின் கதையை மாய யதார்த்தமாக எழுதும் ஆசை இருக்கிறது. உண்மையில், பாரதியின் கதையை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவுகளுள் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது. இதற்காக ஓசூரில் ஒரு பழைய வீட்டைக்கூட குறித்து வைத்திருந்தேன். பெரிய கனவுதான். முக்கியமாக, அவருடைய பாண்டிச்சேரி அத்தியாயம். பாண்டிச்சேரி சென்று முதலில் ஒரு வீட்டில் தங்கியிருப்பார். பிறகு, போலீஸ் தொந்தரவு காரணமாக வீட்டைக் காலிசெய்ய வேண்டிய சூழல் வரும். அது கற்பனையைத் தூண்டக்கூடிய ஒரு சம்பவமாக இருந்தது. பாரதியார் அந்த வீட்டில் இருக்கும்போது வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் போலீஸ் வந்து, அவர் பெரிய புரட்சிக்காரர் என்றும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் சொல்லும். வீட்டுக்காரர் இல்லை என்று சொல்வார். போலீஸ் வந்து சாவித்துளை வழியாகப் பார்க்கும்போது பாரதியின் கவிதைகளெல்லாம் காட்சி ரூபமாக அந்தச் சாவித்துளை வழியாகத் தெரிவதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன்.

திரைப்படக் கனவெல்லாம் ஓய்ந்துபோன பின் இதை ‘தாண்டவராயன் கதை’ நாவலில் பயன்படுத்திக்கொண்டேன். நாவலில் நீலகண்டப் பண்டிதர் ஒரு வீட்டில் தங்குவார். அன்றிரவு சாமான்கள் போட்டுவைக்கும் பழைய அறையொன்றில் படுத்திருப்பார். நள்ளிரவில் அந்த அறையில் ஏதோ சத்தம் கேட்கவும், வீட்டுக்காரம்மா எழுந்துவந்து சாவித்துளை வழியாகப் பார்ப்பார். அப்போது அந்த அறை பெரிய நந்தவனமாகவும், அந்த நந்தவனத்தில் எண்ணற்ற பறவைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதாகவும், அங்கே நீலகண்டப் பண்டிதர் நிர்வாணமாக ஆனந்தப் பெருநடனம் ஆடிக்கொண்டிருப்பதாகவும் எழுதியிருப்பேன். பாரதியாரின் கதையைப் படமாக எடுத்தால் இப்படியொரு காட்சியை வைக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்த காட்சிதான் இது. அந்த அறையில் நடப்பது, பாரதியாரின் ‘கண்ணன் பாட்’டின் தாக்கம் பெற்ற காட்சி.

பாரதியின் தாக்கம் என்னுடைய வெவ்வேறு கதைகளிலும் இருக்கிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் சிறையிலிருந்து உறங்காப்புலி தப்பித்து லாரியில் கல்கத்தாவுக்குப் போகிறான் இல்லையா, அவன் பாகீரதியின் வீட்டை இரவு நேரத்தில் கடந்துபோகும் தருணத்தின் உணர்வெழுச்சியைச் சொல்ல பாரதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். ‘வாராணசி’யிலும் பாரதியை நினைவுபடுத்தும் தருணங்கள் உண்டு. ஒரு ஏகாந்தமான பொழுது அல்லது ஒரு மாயத்தன்மை கொண்ட தருணம் அல்லது ஒரு அதீதமான உணர்வெழுச்சி… அந்த மாதிரியான தருணங்களில் நான் நிற்கும்போதெல்லாம் பாரதி கூடவந்து நின்றுகொள்கிறார்.

பாரதியிடமிருந்து நீங்கள் பெற்ற தாக்கம் என்ன?

சொற்களை ஒரு படைப்பில் பொருத்துவது மட்டும் படைப்பாளியின் ஆளுமை அல்ல; முக்கியமான இடத்தில் சொற்களைக் கைவிடுவதும்கூட படைப்புக்கு உக்கிரம் கொடுக்கும் என்பது பாரதியின் படைப்பிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம். இசையிலிருந்து நான் சில அம்சங்களைக் கற்றிருக்கிறேன். உதாரணமாக, ஜாஸ் (Jazz) இசையில் இலக்கற்ற அலைச்சல் உண்டு. ஜாஸ் கேட்பதற்கே ஒரு தனி மனநிலை வேண்டும். ‘ஹவ் டு லிஸன் ஜாஸ்’ என்று புத்தகமே இருக்கிறது. ஜாஸ் இசை ஒரு கோவையாகவே வராது. அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அலைபாய்வது என்று சொல்வதைவிட, தடுக்கித்தடுக்கி விழும் எனலாம். கேட்பதற்கு வறட்சியாக இருக்கும். தாளகதி சீராக இருக்காது. இந்த அம்சங்களை என்னுடைய கதைகளில் கொடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு தாளத்தில் இல்லாமல், பலப்பல இடத்திலிருந்து போட்டுத் தடுக்கித்தடுக்கிக் கதையை நகர்த்துவது. இந்த அம்சத்தை, காலத்தைப் பிய்த்துப்போட்டு நான் எழுதுவதாகச் சொல்வார்கள். ஆனால், ஜாஸ் இசையை மனதில் கொண்டே நான் அதைச் செய்கிறேன். ஜாஸ் இசையின் இன்னொரு முக்கியமான அம்சம், அது திடுதிப்பென முடியும். அதையும் என்னுடைய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ‘தாண்டவராயன் கதை’ நாவலை எடுத்துக்கொண்டால், அடுத்தது என்னவோ இருக்கிற மாதிரியான உணர்வுநிலையோடே நாவல் முடியும் இடம் இருக்கும். ‘ஒரு மொந்தைக் கள்ளைக் குடித்து வந்துவிட்டுப் படுத்துக்கொண்டுவிட்டான்’ என்று முடியும்போது இன்னும் வரி இருப்பதாகத் தோன்றும். ‘மழையின் குரல் தனிமை’ குறும்புதினத்தில் ‘என்று அவள் அவனை வர்ணித்தாள்’ என்பதாக முடியும். ‘அவர் முகத்தில் நீலம் பாய்ந்தது’ என்பதாக ‘நீலவிதி’ முடியும். அந்த இடங்களில் கதை முடியும் உணர்வே கிடைக்காது. இப்படி, சொற்களைக் கைவிடும் பாணியை பாரதியிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

உதாரணம் சொல்லுங்களேன்?

ஒரு எளிமையான உதாரணம் என்றால் ‘நல்ல உயிரே’. பெரிய பிம்பத்தைப் பற்றி வர்ணிக்கும்போது அதனுடைய உச்சபட்சமான வார்த்தைகளைச் சொல்வது என்பது ஒன்றுமே சொல்லாமல் இருப்பதற்கு நிகரானது. அது பாரதியிடம் உள்ள முக்கியமான அம்சம். ‘வீணையடி நீ எனக்கு’ பாடலில் கண்ணம்மாவை வர்ணிப்பார். ‘நாதவடிவானவளே’ என்றெல்லாம் எல்லாவற்றையும் வர்ணித்து உச்சம் வந்து, அதற்கு மேல் போக வழியில்லை என்றதும் ‘நல்ல உயிரே’ என்று முடிப்பார். ‘நல்ல’ என்ற வார்த்தை பொதுவாக ஆரம்பிக்கும்போது சொல்லக்கூடியது. நல்லவள் என்று சொல்லி ஆரம்பிக்கிறோம் என்றால் அது சாதாரணமான வார்த்தை. பிறகு, எவ்வளவு நல்லவள் என்று கேட்டால்தான் அதில் உச்சத்துக்குப் போகலாம். ஆனால், இவர் எதிர்த்திசையில் இவ்வளவையும் சொல்லிய பிறகு அதற்கு மேல் சொல்ல முடியாமல் ‘நல்ல உயிரே’ என்று சாதாரணமாக இறங்கிவிடுவார். இந்தச் சாதாரணம் என்பது அவருடைய உச்சத்துக்கு நிகரானது. ‘நல்ல உயிரே கண்ணம்மா’ என்பது அவ்வளவு பிரமாதமாக வெளிப்பட்டுவிடும்.

அது எப்படி இப்படியொரு சாதாரணம் அவரிடம் உச்சமாக வெளிப்படுகிறது?

எப்படியென்றால் சரணாகதி அடைவதால்தான். இதற்கு மேல் எனக்கு ஒன்றும் தெரியாது, நீதான் கதி என்று சரணடைவதுதான். ‘நல்ல உயிரே’ என்ற வார்த்தையின் தாத்பரியம் என்னவென்றால் சரணாகதி. சரணாகதி என்பதே கவிதையின் ஆதாரமான விஷயம். சரணாகதி என்றால் என்னவென்றால் உன்னை நான் சரணடைவதற்குக் காரணம் என்ன என்று எனக்கும் தெரியாது என்பது. அதுதான் விஷயம். அதுதான் கவிதையின் ஆதாரம். காலத்தை நிறுத்துவது என்பது இதுவே. நீ யார், உன்னை எதற்காகக் கும்பிட வேண்டும், நீ எதனுடைய குறியீடு, உன்னை வைத்துப் பின்னால் என்னவாவது பேசிவிடுவார்களா, இல்லை முன்னால் ஏதேனும் பேசியிருக்கிறார்களா… இப்படி எந்தச் சிந்தனையும் இல்லாமல், இன்று நான் உன் காலில் விழுந்துவிட்டேன் என்ற உணர்வின் குறியீடு ‘நல்ல’ என்பது. இது கவிதைசொல்லியின் சரணாகதி. இதுதான் மொழியைக் கைவிடுவது. எப்போது மொழியைக் கைவிடுகிறோமோ அப்போது சரணடைந்துவிட்டோம் என்று அர்த்தம். இது பாரதியின் ஒரு பரிசோதனை என்றால், இன்னொரு பரிசோதனையில் கதாபாத்திரங்களே மொழியைக் கைவிட்டுவிடும். உதாரணமாக, ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்’ என்று தொடங்கும் ‘அழகுத் தெய்வம்’ கவிதை. அதில் இரண்டு கதாபாத்திரம். ஒன்று, கனவுகாண்பவன். இன்னொன்று, கனவுகாண்பவனுடைய கனவில் வரக்கூடிய ஒரு தெய்வம். தெய்வம் என்றால் எல்லாமே தெரிந்தது, இல்லையா? அதனிடம் இவன் என்னென்னவோ கேள்விகள் கேட்பான். தெய்வம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வரும். கடைசியில் ஒரு கேள்வி கேட்பான்: ‘மூலத்தைச் சொல்லிடவோ வேண்டாமோ என்றேன்’. மூலம் என்றால் துவக்கம். எல்லாவற்றுக்கும் துவக்கம் என்னவென்று நான் சொல்லிவிடட்டுமா, அந்த ரகசியத்தை உடைத்துவிடட்டுமா என்று கேட்கிறான். தெய்வம் அதற்குப் பதில் சொல்ல வேண்டுமில்லையா? பதிலாக, அது அங்கே மொழியைக் கைவிட்டுவிடும்: ‘முகத்தில் அருள் காட்டினாள், மோகமது தீர்ந்தேன்’ என்று முடியும். இதுதான் மொழியைக் கைவிடுவது. இதெல்லாம் பாரதியின் உத்திகள். ‘தீம்தரிகிட’ என்றெல்லாம் சொல்வதுகூட மொழியைக் கைவிடுவதுதான். ரொம்பவும் உச்சமான இடத்தில் மொழியைக் கைவிட்டுவிடுவார். இந்த மாதிரியான உத்திகளையெல்லாம் என்னுடைய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். இவை பாரதியிடமிருந்து நான் பெற்றுக்கொண்டவை.

பாரதியை வைத்து நீங்கள் எழுதிய ‘முளை’ கதை பற்றி?

அப்பாவுக்கும் பையனுக்குமான உரையாடலாக ‘முளை’ கதை அமைந்திருக்கும். அந்தக் கதையில், சுப்பையா என்கிற பாத்திரம் சின்ன வயதிலிருந்தே ஒரு பெண் உருவத்தைப் பார்ப்பதாக எழுதியிருப்பேன். ‘நிற்பதுவே நடப்பதுவே’வில் அது வரும். ‘நிற்பதுவே நடப்பதுவே’வில் ஒரு பெண்தான் பாரதியைக் கூட்டிக்கொண்டு செல்வாள். அப்படியா இல்லையா என்று தெரியவில்லை. நான் இதே கற்பனையில் இருப்பதால் அப்படி நினைத்துக்கொள்கிறேனோ என்னவோ. ஒரு சின்னப் பெண் பின்னாலேயேதான் பாரதி அலைவார். உண்மையில், அந்தச் சின்னப் பெண் அவருடைய கற்பனை உருவம். அவருடைய அம்மாவை அப்படிக் கற்பனையாகச் செய்துகொள்கிறார். அந்தப் பெண் மேல் விழுகிற காதல்தான் அவருடைய பிற்காலத்திலும் தொடர்கிறது. அது அவருடைய கஞ்சாவாக, போதை வஸ்துவாக உருமாறுகிறது. இந்த விஷயங்களைத் திரட்டி மாயத்தன்மையோடு கதை எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கும் பாரதியின் கதையை எழுத வேண்டுமென்றால் மாய யதார்த்தமாகத்தான் எழுதுவேன்.

பாரதியின் அடிப்படைக் கூறுகளான பட்டியிலினத்தவர்களோடு அவர் வைத்திருந்த நட்பு, தெருக்கூத்து போன்ற கலைகளோடு அவர் கொண்டிருந்த உறவு, அவர் தனது ஐந்தாவது வயதிலேயே அம்மாவை இழந்தது, மிகக் குறுகிய காலத்திலேயே பீறிட்ட ஞானம், அவருடைய கஞ்சாப் பழக்கம்... இவை எல்லாமே மாய யதார்த்தத்துக்கான கூறுகள். அவருடைய வாழ்க்கை யதார்த்தமானது அல்ல. எனவே, பாரதியின் வாழ்க்கையை யார் எழுதுவதாக இருந்தாலும் அதை மாய யதார்த்தமாக எழுதினால்தான் அது யதார்த்த எடுத்துரைப்பாக அமையும். அப்படியானதொரு முயற்சிதான் ‘முளை’ கதை.

 

 

நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.

தொடர்புடைய பதிவுகள்

 

பா.வெங்கடேசன் ‘அருஞ்சொல்’ இதழுக்கு அளித்த வாழ்த்துச் செய்தி

 

த.ராஜன்

த.ராஜன், தமிழ் எழுத்தாளர். பொறியாளர். பத்திரிகையாளர். பதிப்புத் துறையில் பணியாற்றுகிறார். ‘கதையும் புனைவும்’ நூலின் ஆசிரியர்.
பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Sivakumar   10 months ago

அருமையான பதிவு சார்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Araathu   12 months ago

சிறப்பான நேர்காணல்... திரைப்படங்களின் மூலமே பாரதி வெகுஜன மக்களை சென்றடைந்தார் என்பதைத்தவிர... வெகுஜன மக்களுக்கு பாரதி வரிகள் பிடித்திருந்த காரணத்தினால் மட்டுமே... அவருடைய வரிகள் திரைப்படத்தில் இடம்பெற்றன. திரைப்படங்கள் ஒன்றும் தீவிர இலக்கிய வரிகளை தூக்கிப் பிடிப்பன அல்ல.... வெங்கடேசன் சொல்லியது போல் இது ஒரு மாய எதார்த்தமான நிகழ்வுதான்... ஒரு கவிஞர் பெயர் மறந்து விட்டது... பழங்குடி மீனவர்கள் புழங்கும் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது.... மீனவர்கள் ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கிறார்கள்... இந்தப் பாடல் உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர் கேட்கிறார்... இந்தப்பாடல் நாங்கள் பரம்பரை பரம்பரையாக ஆயிரக்கணக்கான வருடங்களாக பாடிக் கொண்டிருப்பது என்கிறார்கள் அவர்கள்... அவர்கள் பாடிக் கொண்டிருக்கும் அந்த பாடல் வரிகள் பாப்லோ நெருதா எழுதிய கவிதை வரிகள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kathiravan Rathinavel   1 year ago

வழமை போல் பா.வெங்கடேசனின் இந்த பேட்டியும் அருமை. இந்த சிறுகதையை அறிமுகப்படுத்தியதற்கு த.ராஜனுக்கு நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   1 year ago

மிக சிறப்பான பேட்டி தேனீயின் ரீங்காரமாய் உண்மை வெளிப்படுத்துகிறவிதம் இனிமை!! முளை கதையை படித்தேன் கண்ணம்மா என் கைபற்றி நடந்தபடியே வருகிறாள்!! பெரிதிலும் அரிது. நீலனூர் கே கே தாஸ்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V B Ganesan   1 year ago

மிக அருமையான பேட்டி. பாரதி என்ற ஞானக் கிறுக்கனின் வலையில் கிறங்கி நிற்கும் பா. வெங்கடேசனின் வார்த்தைகள் உள்ளுறை உண்மையை வெளிக் கொண்டு வருகின்றன. மிக்க நன்றி. பாரதியின் கண்ணம்மாவையும் முளை கதையின் மூலம் தரிசித்து விட்டேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sudalaimani P   1 year ago

பாரதியாரின் காதலி பெயர் சண்முகவடிவு என்று நெல்லை கண்ணன் ஐயா பேசிக் கேட்டதாக நினைவிருக்கிறது... பாரதியின் காதல் குறித்த புனைவு அருமையான எடுத்துரைப்பு...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நாவல்இந்துத்துவமா?இந்தியர்களின் ஆங்கிலம்சமூக நீதிசெரிமானமின்மைஅருஞ்சொல் சமஸ் பேட்டிமுரண்பாடுசல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி தாக்குதல்english languageஅஞ்சலி: ஆயிரம் படம் கண்ட ஆரூர்தாஸ்சாத் மொஹ்சேனிAFSPAசமாஜ்வாதி ஜன பரிஷத்இந்து தேசம்அகாலி தளம்ஆத்ம நிர்பார் பாரத்ஜொமெட்டோஒரியன்டலிஸம்ஆளுநர்ஓம் பிர்லாஉருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்கலைஞரின் முதல் பிள்ளைமணிரத்னம்விசிலூதிகள்இந்திய வேளாண்மைசித்த மருத்துவம்கருப்பை கவனம்!பிரேம் ஆனந்த்வேலு கட்டுரைவார்ஷாமருத்துவர் ஜீவானந்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!