இன்னொரு குரல் 8 நிமிட வாசிப்பு

தேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிரதிநிதி!

வாசகர்கள்
11 Jan 2022, 4:59 am
1

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். இந்தக் கருத்துகள் 'அருஞ்சொல்'லைப் பிரதிபலிப்பவை அல்ல. உங்கள் கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditorial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

அடுத்து தமிழ்நாட்டின் கொடியை அறிவியுங்கள் முதல்வர்

பல வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் கூட்டாட்சியத்தை ஒன்றிய அரசு புரிந்துணர வேண்டும். அத்தகைய அறிஞர்களில் நடுநிலையானவர்களை அனைத்து மாநில அரசுகளும் முன்மொழிந்து, அவர்கள் அனைவரும்  இணைந்து தங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிரதிநிதியைத் தேர்வுசெய்து அனுப்ப வேண்டும். ஆளுநர் என்னும் பதவியில் இருப்பவர் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் உறுதி சேர்க்கும்.

- அரவிந்தன் ராஜேந்திரன்

@ இந்தியக் கல்வி அமைப்பில் பைஜுஸ் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?

முதலில் இந்த கட்டுரையில் சொல்லவருவது என்ன என்று புரியவில்லை. பைஜுஸின் தொழில்முறை சரி அல்லது தவறு அல்லது பயனற்றது என்று சொன்னால் சரி. பைஜுஸ் அளிக்கும் சேவைக்கு அது கேட்கும் கட்டணம் மிக அதிகப்படியானது அல்லது நியாயமானது என்று விவாதித்தால் சரி. பொதுவாக எந்தச் சந்தையும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைக்கும் சேவையையே ஆதரிக்கும். பைஜுஸ் என்னளவில் செலவேறிய தேவையற்ற ஒன்று. ஆனால் பைஜுஸ் கல்வித் துறையை சந்தைப்பண்டமாக்குகிறது, சமநிலையின்மையை அதிகப்படுத்துகிறது என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன கல்விச் சேவையா செய்துகொண்டிருக்கிறார்கள்? தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட அன்றே இந்தச் சமநிலையின்மை தொடங்கிவிட்டது. உண்மையில் பைஜுஸ் குறித்து சொன்ன அனைத்தும் இங்கு தனியார் மற்றும் பெருநிறுவனப் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகள் எந்தக் கேள்வியும் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல தனியார் பள்ளிகளின் விளம்பரங்களைப் பார்த்தால் நாமே சிரித்துவிடுவோம். மழலையர் வகுப்பில் சேர்ப்பதற்கே, நன்கொடையாக மட்டும் ஐம்பதாயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை  வாங்கும் பள்ளிகளும் உள்ளன. ஒரு குழந்தைக்கு சராசரியாக ஆண்டுக்கு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த கட்டண முறைப்படுத்துதலில் அரசு நடவடிக்கை எடுத்ததா? எடுத்திருந்தால் ஏன் இப்போது பெற்றோர் கரோனா முடக்கத்தினால் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சென்று சேர்க்கிறார்கள்? இறுதியாக, இந்த அன்னிய தனியார் முதலீட்டு நிறுவனங்கள் செலுத்தும் ஆயிரக்கணக்கான கோடிகள் குறித்து பெருமைப்பட எதுவுமில்லை. அவை முதன்மையான சூதாடிகள். மிகக் குறைந்த சாத்தியமற்ற விலையில் பொருள்களை - சேவைகளை - வழங்கி, சந்தையில் தனது சதவீதம் அதிகமானவுடன் லாபத்துடன் விற்க மட்டுமே குறியாக இருப்பார்கள். 

- சங்கரன்

@ எகிறும் உடல் எடை : என்ன காரணம்?

நல்ல, உபயோகமான கட்டுரை. ஆனால், //பெண்கள் முன்பெல்லாம் ஆட்டுரலில் மாவு ஆட்டினார்கள். இப்போது மிக்ஸி, கிரைண்டரைப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றில் தண்ணீர் இரைத்தார்கள். இப்போது மோட்டார்தான் அந்த வேலையைச் செய்கிறது.// இந்த வரிகள் மூலம் மருத்துவர் என்ன சொல்ல வருகிறார்? பெண்களை மீண்டும் ஆட்டாங்கல், அம்மிக்கல் பயன்படுத்தி, கிணற்றில் நீர் இறைக்கச் சொல்கிறாரா? சரியில்லை. 

- ஆனந்தகுமார் தங்கவேல்

@ இந்த வருஷம் தாத்தா தந்த பரிசுகள் என்ன?

ப.சிதம்பரத்தின் இந்தக் கட்டுரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. இடுக்கண் வருங்கால் நகுக... வராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் மோசமானப் பொருளாதார நிலை. அந்த மோசமானப் பொருளாதார நிலைக்கு காரணம் தவறான பொருளாதாரக் கொள்கைகள். அதனால் வராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் பாஜகதான். எல்லா தொழிலதிபர்களும் நீரவ் மோடிகள் அல்ல. 

- கணேஷ்ராம் பழனிசாமி

 @ ஹனி... எனக்கு நீ மட்டுமே உலகம் இல்லை!

//தன்னை நோக்கி இழுக்கப் பெண் கொடுக்கும் அழுத்தம் அவளிடமிருந்து ஆண் விலகவே வழிவகுக்கிறது// 100% உண்மை. சில சமயம் மூச்சு திணற வைக்கிறார்கள்! அப்படியே அத்துக்கிட்டு ஓடிடலாம்னு தோணும்!

- கருணாமூர்த்தி

 @ இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

திருமாவேலனின் பணி வணங்கத்தக்கது. அவர் நமக்கொரு மாபெரும் கேடயத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்.

- விஜயகுமார்

@ உங்கள் சம்பளம் சரியானதுதானா?

மிகவும் முக்கியமான பார்வை, ஆனால் அரசுத் துறைகளிலும் சமீப காலமாக ஊதியம் குறித்தான தவறான பார்வை முன்வைக்கப்படுகிறது. நல்ல கட்டுரை.

- உமாமகேஸ்வரி

 @ ஆங்கிலக் காலனியத்தின் எச்சங்கள்

ஆ.சிவசுப்பிரமணியன் அய்யாவின் ஆய்வுக்கட்டுரை, வழக்கம்போல் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் புகுந்து ஆய்ந்து வந்திருக்கிறது. மத நிறுவனங்கள் அரசோடு இணைந்தே நிற்பதற்கான பல பாரம்பரிய ஆதாரங்கள். எங்கள் வள்ளியூரில் யாரும் கவனித்து இராத விளக்குத் தூண்களை அய்யா நுட்பமாக ஆராய்ந்து உள்ளார். இந்த கட்டுரையில் சுட்டப்படும் சில நினைவுச் சின்னங்களைப் பார்க்கும்போது, மத நிறுவனங்கள் எந்த அளவுக்கு தங்களுடைய சுய லாபத்திற்காக அரசுகளை அண்டிப் பிழைத்திருக்கின்றன என்பது தெரிகிறது. பிற மதத்தைத் தழுவி நின்ற ஆங்கில அரசையும் தாங்கி பிடிக்கின்ற காரியத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. அன்றுபோல, இப்போதைய ராஜாக்கள் மீதான விசுவாசம் இருப்பதாகத் தெரியவில்லை. காலத்தின் தேவையான சமூக அவசியங்களை ஒருபோதும் மத நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை. சாதாரண மக்களின் உணர்வுகளுக்கும் மடாலயங்களுக்கும் தூரம்தானே?!

- எஸ்.சங்கரநாராயணன்

@ அஜித் தோவலின் ஆபத்தான கருத்து

மன்னராட்சியின் அரசியல் அடையாளங்களான உளவுத் துறையும் காவல்துறையும், இன்றைய நவீன குடியரசமைப்பில் தவிர்க்க முடியாத அம்சங்களானாலும் தற்போதைய அரசு இவ்வம்சங்களை நம்பியே செயல்படுகிறது. இதை மிகத் தெளிவாக திட்டமிட்டு செய்வதால் சிறிது காலம் தொடரும், விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும் நாம் விழித்துக்கொண்டாலொழிய விடிவில்லை.

- ஆர்.பரணி

அருணா ராய் வருக! விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆஸஃப் அலியின் நினைவாக, 1946ஆம் ஆண்டு பிறந்த தன் மகளுக்கு அருணா எனப் பெயர் சூட்டினார் தந்தை ஜெயராமன். சென்னையில் பள்ளிப் படிப்பையும், தில்லியில் கல்லூரிப் படிப்பையும் படித்த அருணா ஜெயராமன், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரியாகச் சிலகாலம் பயின்ற அவர், சமுதாயத்தைச் சீர்திருத்த இளைஞர்கள் வரவேண்டும் என்னும் ஜெயப்ரகாஷ் நாரயணின் குரல் கேட்டு, வேலையை உதறிவிட்டு, தெருவில் இறங்கினார். தன் கல்லூரித் தோழரான பங்கர் ராயை மணந்து அருணா ராய் ஆனவர், தன் கணவருடன் சில காலம் இணைந்து டிலோனியா என்னும் குக்கிராமத்தில் பணியாற்றினார். பின்னர், தனக்கான ஒரு சமூகக் கனவைச் சுமந்து, தேவ்துங்ரி என்னும் இன்னொரு கிராமத்துக்குச் சென்று தன் நண்பர்கள் நிகில் டே, ஷங்கர் சிங் உடன், உழைப்பாளர், உழவர் சக்தி இயக்கம் (Majdoor Kisan Sakthi sabha) என்னும் முறைசாரா இயக்க்கத்தை உருவாக்கினார். இதில் தலைவர், தொண்டர் என்னும் பதவிகள் கிடையாது. அனைவரும், ஒரு வட்டமாக அமர்ந்து விவாதங்கள் செய்து முடிவு எடுக்கும் குழுமுறை. இது நமது மூத்த குடிகளான ஆதிவாசிக் குழுக்களில் உள்ள ஒரு உண்மையான ஜனநாயக முறை. 1987 ஆண்டு, ராஜஸ்தானில் வறட்சி நிவாரணக் கூலியாக 11 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் எனத் தொடங்கிய மக்கள் போராட்டம், வீதிகள் வழியே வளர்ந்து, 18 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் ‘தகலறியும் சட்டமாக’ மலர்ந்தது. தேவ்துங்ரியில் இவரும் நண்பர்களும் வசிக்கும் இடத்தை, புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ரஜ்னி பக்‌ஷி, ‘பாபு குடில்’ (சேவாகிராமம்) போன்றது என அழைக்கிறார். காந்தியைப் பார்த்திராத இக்கால மக்களுக்கு கண்முன்னே வாழும் காந்தி இவர். ’மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ?, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ , என அதிகாரத்தின் எதிர்ப்புறம் நின்று எழும்பிய குரல்களின் வழிவந்த அருணா ராய் அவர்களின் கட்டுரைகளை, ‘அருஞ்சொல்’, தமிழில் வெளியிடுவது, மிக முக்கியமான தொடக்கம். வாழ்க!

- எம்.பாலசுப்ரமணியம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   3 years ago

மிகவும் சிறப்பு , வாசகர்களது பின்னூட்டங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது உமா மகேஸ்வரி , சென்னை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கு.ப.ராஜகோபாலன்அரசியல் எழுச்சிவக்ஃப் சட்டம்தென்யா சுப்பஞ்சாபி உணவகம்அப்துல்லாமராத்திய பேரரசின் பங்களிப்புஅநாகரீக நடவடிக்கைஅயனியாக்கம்இரண்டு செய்திகள்சட்டப் பிரிவு 370நிதா அம்பானிபி.டி.டி.ஆசாரி கட்டுரைமின்னணு சாதனங்கள்ஹிலாரி கிளிண்டன்வதந்திபெரும் வீழ்ச்சிகதைசொல்லல்உயிர் பறிக்கும் இயந்திரக் கற்றல் நுட்பம்தென்னகம்விருப்பமான நடிகர்ஃபுளோரைடுவிசிகமனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்குடிமக்கள் ‘எதிர்’ அரசு ‘எதிர்’ தனியுரிமைதவறான வழிகாட்டல்லிபிதபாசிலி சங்கல்ப்கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைகொடுங்கோன்மை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!