ஏன் எதற்கு எப்படி?, அரசியல் 7 நிமிட வாசிப்பு

இலங்கை நெருக்கடிநிலை: என்ன காரணம்?

கதிரவன்
09 Sep 2021, 12:00 am
1

இலங்கையின் அந்நியச் செலாவணி வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதால் நெருக்கடிநிலைக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகஸ்ட் 30 அன்று நெருக்கடிநிலையை அறிவித்தார். உணவு விலையைக் கட்டுப்படுத்தவும், ஒருசில உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இருக்கும் சூழலில் பதுக்கல்களைத் தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் எண்ணற்ற நெருக்கடிநிலையை இலங்கைவாசிகள் கடந்துவந்திருப்பதால் இந்த அறிவிப்பு அவர்களைப் பதற்றத்துக்குள் தள்ளியிருக்கிறது. ராணுவ ஆட்சிக்குள் சென்றுவிடுவோமோ என்ற பயம்தான் இந்தப் பதற்றத்துக்குக் காரணம். கூடவே, கோவிட் தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக ஊரடங்கு வேறு அமலில் இருப்பதால் இரட்டை நெருக்கடியை இலங்கைவாசிகள் எதிர்கொண்டுவருகிறார்கள். இலங்கையின் இந்த நிலைகுலைவுக்கு என்ன காரணம்? பார்க்கலாம்…

நெருக்கடிநிலைச் சூழல் எப்படி இருக்கிறது? இந்த முடிவு எடுப்பதற்கான காரணம் என்ன?

இந்த ஆண்டு, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தப் பின்னணியில், உள்ளூர் பணமதிப்பை உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கியானது வட்டி விகிதங்களை அதிகரித்தது. பணமதிப்பு குறைந்ததாலும், பெருந்தொற்று காரணமாக உலகச் சந்தை விலை அதிகரித்ததாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை சமீப வாரங்களில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதையே நெருக்கடிநிலை அறிவித்ததற்குக் காரணமாக இலங்கை அரசு சொல்கிறது. கூடவே, சமீப வாரங்களில் அதிகரித்த விலை உயர்வுக்குப் பதுக்கல்தான் காரணம் என்று வியாபாரிகளைக் குற்றஞ்சாட்டவும் செய்கிறது. நெருக்கடிநிலை அறிவிப்பைத் தொடர்ந்து சர்க்கரை, அரசி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பால் பவுடருக்காகவும் மண்ணெண்ணெய்க்காகவும் சமையல் எரிவாயுக்காகவும் மிக நீண்ட வரிசை காத்திருக்கிறது.

நெருக்கடிநிலையில் சட்டத்தின் இடம் என்ன?

பிடியாணை இல்லாமல் மக்களைக் காவலில் வைக்கவும், சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், எந்த வளாகத்துக்குள்ளும் நுழைந்து சோதனை நடத்தவும், சட்டங்களை இடைநிறுத்தவும், நீதிமன்றம் தலையிட முடியாத உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரிகள் யார் மீதும் வழக்கு தொடுக்க முடியாது. வணிகர்களிடமிருந்தும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக முன்னாள் ராணுவ அதிகாரியான என்.டி.எஸ்.பி.நிவுன்ஹெல்லா, அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையராக இலங்கை அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசு நிர்ணயித்திருக்கும் விலைக்கு மேலாக விற்பனை செய்பவர்களையும், பதுக்கல்களையும் கண்காணிப்பதற்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று இதை அரசியல் நோக்கர்கள் வர்ணிக்கிறார்கள்.

உண்மையிலேயே இலங்கையில் உணவுப் பற்றாக்குறை இருக்கிறதா?

பற்றாக்குறை வந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. பெட்ரோல், சர்க்கரை, பால் பொருட்கள், கோதுமை, மருந்துகள் போன்ற இறக்குமதிச் சரக்குகள் நவம்பர் 2019-ல் 7.5 பில்லியன் டாலர் என்றிருந்தது. ஜூலை 2021-ல் இது 2.8 பில்லியன் டாலராகச் சரிந்துவிட்டது. திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை வேறு அச்சுறித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இலங்கைப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.6% சரிந்தது. இலங்கை மத்திய வங்கியின் கணக்குப்படி, டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 10.1% சரிந்திருக்கிறது. இதற்கிடையில், கூலித் தொழிலாளர்களும் குறைந்த அளவில் வருவாய் ஈட்டும் குடும்பத்தினரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறிப்போயினர். அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகள், மீன் போன்றவற்றின் விலையானது பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பல முறை உயர்ந்தது. சமீப வாரங்களில், அவ்விலை உயர்வு பன்மடங்கு அதிகரித்தது.

எதிர்த்தரப்புகள் என்ன சொல்கின்றன?

நெருக்கடிநிலை அறிவிப்பானது விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் என்றும், சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் என்றும் எச்சரிக்கின்றன. இதுபோன்ற குடிமக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இலங்கை ஜனநாயகம் இந்த 75 ஆண்டுகளில் நல்ல கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது என்றும், இந்தக் கட்டமைப்புகளை புதிய அரசு பொருட்படுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கும்கூட நிபுணத்துவம் அற்ற தவறான நபர்களையே கோத்தபய ராஜபக்ச நியமித்தார் என்றும் சாடுகின்றன.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் கரோனாதானா?

கரோனா மட்டும் காரணம் அல்ல. பெருந்தொற்றுக்கு முன்பாகவே இலங்கையின் நிதி நிலைமை மோசமாகத்தான் இருந்தது. 2005-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சீனாவிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கடனைக் குவித்து வைத்துவிட்டது. சரியாகப் பணத்தைச் செலுத்தாததால் ஒரு துறைமுகத்தையே சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பெய்ஜிங் தொடர்ந்து அதிக அளவில் கடன் கொடுக்க முன்வந்துகொண்டே இருக்கிறது.

கோத்தபய ராஜபக்ச தனது ஆர்கானிக் கனவுக்காக இந்த ஆண்டு ரசாயன உரங்களுக்குத் தடை விதித்தார். உலகின் முதல் 100% ஆர்கானிக் உணவு உற்பத்தியாளராக வேண்டும் என்ற ராஜபக்ச அரசின் உந்துதல் காரணமாக இலங்கையின் மதிப்புமிக்க தேயிலைத் தொழில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகிறது. இது பயிர்ப் பேரழிவை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், நெருக்கடி நிறைந்த அதன் பொருளாதாரம் மேலும் சரியக்கூடும். எதிர்வரும் அக்டோபருக்குள் தேயிலைப் பயிரெல்லாம் வீணாய்ப்போய்விடும் என்று கணிக்கிறார்கள். ஏலக்காய், மிளகு, அரசி போன்ற அதிமுக்கிய உணவுப் பொருட்களுக்கான விளைச்சலும் சிக்கலை எதிர்கொள்ளவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, உலகச் சந்தையின் 85% ஏலக்காய், மிளகு தேவையை இலங்கைதான் பூர்த்திசெய்கிறது.

ஆர்கானிக் புரட்சியை வழிநடத்துவதற்காக ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட 46 நிபுணர்களில் ஒருவரும், முதன்மைத் தேயிலைத் தயாரிப்பாளருமான ஹெர்மன் குணரத்னேவும் பீதியில் உறைந்திருக்கிறார். ”இந்தத் தடையானது தேயிலைத் தொழிலை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது. இலங்கை எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகள் கற்பனை செய்ய முடியாதவை. அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி கிலோ அறுவடை செய்யும் இலங்கை, இனி அதில் பாதியைத்தான் பெற முடியும்” என்கிறார் அவர். தேயிலைதான் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருள். ஒவ்வொரு ஆண்டும் இது 1.25 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டித்தருகிறது. இது இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் 10% ஆகும். ராஜபக்ச 2019-ல் ஆட்சிக்கு வந்தபோது உரங்களுக்கு மானியம் தருவதாகச் சொன்னார். இப்போது முதுகைத் திருப்பிக்கொண்டு எதிர்ப்பக்கம் ஓட ஆரம்பித்துவிட்டார். ஆர்கானிக் தேயிலையை உருவாக்குவதற்குப் பத்து மடங்கு அதிகச் செலவாகிறது என்பதும், அதற்கான சந்தை மிகவும் குறைவானது என்பதும் ராஜபக்ச அரசுக்கு உறைக்கவில்லை. தேயிலைத் தொழில் முடங்கியது என்பது 30 லட்சம் மக்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு தொடர்புடையது.

அறுவடை குறைந்திருப்பது, பூச்சிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாகக் காய்கறி உற்பத்தியாளர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும், தன்னுடைய நிலைப்பாட்டில் ராஜபக்ச உறுதியாக இருக்கிறார். இதுதான் இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் வழங்கும் என்கிறார். இலங்கையின் வழியைப் பின்பற்ற உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுக்கவும் செய்கிறார்.

என்னென்ன நாடுகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன?

கிட்டத்தட்ட ஐம்பது நாடுகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக வங்கி நடத்திய ஆய்வு சொல்கிறது. பெருந்தொற்றுக்கு முன்பாகவே சமூகப் பொருளாதார நிலைமை, அரசியல் நடவடிக்கைகள், மோசமான கொள்கைகள், இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றன. பெருந்தொற்றுக் காலமோ அதை மேலும் மோசமானதாக்கியிருக்கிறது. ஏமன், காங்கோ, எத்தியோப்பியா, சூடான், சிரியா, ஆஃப்கானிஸ்தான், மலாவி, நைஜீரியா, செனகல், அல்ஜீரியா, சோமாலியா, கென்யா, இராக் போன்ற நாடுகள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. சென்ற ஆண்டில், 72 – 81 கோடி மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

LION R SARAVANAN   3 years ago

அருஞ்சொல்லுக்கு நல்வாழ்த்துக்கள். இலங்கையின் நெருக்கடியை பெரிய அளவில் விரிவாக எந்த ஊடகமும் வெளியிடாத நிலையில் தெளிவான புரிதலை இக்கட்டூரை தந்துள்ளது. கட்டூரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, உலகச் சந்தையின் 85% ஏலக்காய், மிளகு தேவையை இலங்கைதான் பூர்த்திசெய்கிறது என்கிற தகவலை இக்கட்டுரையை படித்த பின்பு தெரிந்து கொண்டேன். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வைக்கிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பன்மைத்துவம்அம்பேத்கரின் இறுதி நாள்இந்தியன் எக்ஸ்பிரஸ்மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்அருங்காட்சியகம்பகவந்த் மான்மாநகர்லிமிடட் எடிசன்கைவிட்ட ஊடகங்கள்உங்களில் ஒருவன்புத்தரும் அவர் தம்மமும்பினராயி விஜயன்அண்ணாவின் இருமொழிக் கொள்கைஅரசு கட்டிடம்சட்டத்தின் கொடுங்கோன்மைஇந்தியப் பெருங்கடல்சென்னை பதிப்புஆங்கிலம்பசுமை கட்டிடங்கள்நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுப்பது அவசியம். ஏன்?பனவாலி நகரம்தொல்காப்பியம்நிர்வாகிகள்உச்சபட்ச செயற்கை நுண்ணறிவுஎதிர்கால வியூகம்ஆளுநர் முதல்வர் மோதல்தனிநபர் வருமான வரிஅமெரிக்காசிக்கிம்இந்தியத் தொகுதிகள் சீரமைப்புக்கு சரியான தீர்வாகுமா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!