கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 15 நிமிட வாசிப்பு
வெறுப்பு: நரகத்தில் செய்யும் முதலீடு
வெறுப்பின் உடற்கூறு:
மனித உணர்வுகளில் தவிர்க்க முடியாத ஒன்றான வெறுப்பைப் புரிந்துகொள்வதற்கு வசதியாக அதை இரண்டாகப் பகுப்போம். ஒன்று, தனிநபர்மயப்பட்ட வெறுப்பு (personalized); மற்றொன்று, அரசியல்மயப்பட்ட வெறுப்பு (politicalized). இன்னும் நுட்பமாகப் பகுத்தால், வெறுப்புக்கு உள்ளூர்த்தன்மை (localized) உண்டே ஒழிய, உலகளாவியதன்மை (universalized) இல்லை. கிளாசிக்கல் மார்க்ஸியத்தின்படி இரு வர்க்கமாக மனித இனத்தைப் பிரித்துப் பார்த்தால் மட்டுமே உலகளாவியமயப்பட்ட வெறுப்புக்கு ஓர் உதாரணம் கிடைக்கிறது. ஒட்டுமொத்த மனித இனமே ஒன்றை வெறுக்கிறது என்று சொல்வதற்குத் தற்போது நம்மிடம் ஏதுமில்லை. ஹாலிவுட்டின் அதியுயர் தொழில்நுட்ப வேற்றுக் கிரகப் படையெடுப்பாளர்களின் மீதுகூட வெறுப்புக்குப் பதிலாக ஆர்வமே கொள்கிறோம். ஆனால், உள்ளூர்த்தன்மையுடைய வெறுப்போ இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இங்கே இடம் என்பதை நிலமாக அன்றி, கலாச்சாரமாகப் புரிந்துகொள்வோம். வெறுப்பின் வெவ்வேறு வடிவமுடைய தாவரங்களெல்லாம் கலாச்சாரங்கள் கட்டி வைத்த பாத்திகளில் பயிராகின்றன. வெறுப்பின் மூலகமாகக் கலாச்சாரம் இருக்கிறது.
அரசியல்மயப்பட்ட வெறுப்பு தனிநபர்களை ஊடுருவினால் அதன் விளைவுகள் நாகரிகச் சமூகத்தின் முன்வைப்புகளுக்குப் பொருத்தமில்லாதவையாக மாறிவிடும். அரசியல் ஏதோவொரு வகையில் தனிநபர் வெறுப்பின் ஊதிப் பெருக்கப்பட்ட வெளிப்படையான வடிவமாகவே இருக்கிறது. மனித மனங்களின் இருளில் வாழும் ஓர் உயிரியாக வெறுப்பு இருக்கிறது. அந்த இருண்ட பகுதிகளின் கதவுகள் திறக்கப்பட்டால், திடீரென வெளிச்சத்துக்கு வரும் வெறுப்பு தனது கட்டற்ற சுதந்திரத்தின் வெள்ளத்தைத் திசையெங்கும் பெருக்குகிறது.
வெறுப்பு நெகிழ்வானது. யூத நாட்டார் உயிரியான ‘கோலம்’ (Golam) போன்றது அது. சேற்றிலிருந்து, மண்ணிலிருந்து அதை வடித்து சட்டென உயிர் கொடுத்துவிட முடியும். எல்லா வடிவங்களும் அவற்றின் மூலகங்களில் ஏற்கெனவே ஒளிந்திருக்கின்றன. இதன் பொருள், மூலகங்களில் அவை வடிவங்களாகவே ஒளிந்திருப்பது என்றில்லை; மாறாக, மூலகங்கள் அந்த வடிவங்கள் உயிர்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. வெறுப்பின் மூலகமான கலாச்சாரத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஒளிந்திருக்கின்றன. அரசியல் மூலகத்திலிருந்து புதிய கோலம்கள் பலவற்றை உயிர்ப்பிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்த தனிநபரை ஒரு மேசையாக உருவகித்தால், அந்த மேசை மீது பலவித வடிவங்களில் இந்த கோலம்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
வெறுப்பின் ஆயிரம் வடிவங்கள்:
ஆயிரம் எனும் எண்ணானது முடிவின்மையைப் புரிந்துகொள்வதன் எளிய தொடக்கமாக இருப்பதாலும், நமது கற்பனைகளில் அனைத்துப் பன்மைகளின் மொத்த தொகுப்பின் பிரம்மாண்டத்தைக் குறிக்க ஒரு குறியீடாகப் பதிந்திருப்பதாலும், இங்கே வெறுப்பின் வடிவங்களுக்கு ஆயிரம் எனும் குறியீட்டு எண்ணிக்கை வழங்கப்படுகிறது.
கோலம் 1:
உயர்ரக ஐஸ்க்ரீம் கடையொன்றில், ‘டெத் பை சாக்லேட்’ ஐஸ்க்ரீமைச் சுவைத்துக்கொண்டிருந்தபோது, ஊனமுற்ற பிச்சைக்காரி ஒருத்தி உள்ளே நுழைந்து, கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டாள். அவளைக் கவனித்தும் கவனிக்காததைப் போன்ற கண்கள் மீண்டும் ஐஸ்க்ரீமின் மீது பதிந்தன. ஆனால், ‘டெத் பை சாக்லேட்’டின் அடர் பழுப்பு பிரவுனி கேக்கும், வெனிலா ஐஸ்க்ரீமின் வெண்ணிறமும் இப்போது அந்தப் பிச்சைக்காரியின் கிழிந்து தொங்கும் ஆடையின் ஒரு துண்டாகத் தெரிந்தன.
நாம் எல்லோரும் பிச்சைக்காரர்களை வெறுக்கிறோம். எல்லா நாகரிகச் சமூகங்களும் பிச்சைக்காரர்களை வெறுக்கின்றன. பொருள் உற்பத்தி முறையின் அடிப்பகுதிக்கும் வெளியே இருப்பவர்களின் மீதான வெறுப்பானது முழுக்கவே பொருளின் அடிப்படையிலானது. பிச்சைக்காரர்களே இல்லாத சமூகங்களும் இருக்கின்றன; அவை பழங்குடிச் சமூகங்கள்.
கோலம் 2:
நகரத்தின் பிரதான சாலை. நடைபாதையிலே நேரடியாகக் கதவைத் திறக்கும் புகழ்பெற்ற உணவு விடுதி. சாலையைப் பார்த்தவண்ணம் அமர்ந்து, புதினா இலைகளாலும் முட்டைக்கோஸ் துருவல்களாலும் அலங்கரிக்கப்பட்ட மீன் துண்டையும், கூடவே அழகாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி சீசாவில் நிரம்பியிருக்கும் பழச்சாறையும் ஆர்வத்தோடு உண்ணும்போது, கதவுக்கு வெளியே ஒரு திருநங்கை. அடர்த்தியான, ஆனால் மலினமான வாசனைத் திரவத்தின் நெடியை உணவு மேசை வரை படரவிட்டு, உணவு விடுதியின் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் காசு கேட்டாள். அவர் மறுக்க, ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு, அணிந்திருந்த புடவையைத் தூக்கிக் காட்டினாள். அதன் பின், மீனும் பழச்சாறும் மலினமான சுவையை அடைந்தன.
இங்கே பாலினத்தின் அடிப்படையில் வெறுப்பு எழுகிறது. நான் ஓர் ஆண் என்பதாலும், எனது உணவு மேசைக்கு நேரே வந்து தனது ஒதுக்கப்பட்ட உடலைக் காண்பிப்பவளின் மீதான வெறுப்பானது அவள் செய்கையால் வந்ததல்ல; அவளது உடலால் வந்தது.
கோலம் 3:
பெண்கள்தான் ஆண்களின் துயரத்துக்குக் காரணமானவர்கள் எனும் கருத்து அப்போது கொஞ்சமாக மிச்சமிருந்தது. தெருவே ஓய்ந்து கிடக்க, எனது வீடு இன்னும் சற்று தொலைவில், குகையைப் போல என்னை உள்ளே இழுத்து நுழைவாயிலைப் பாறை கொண்டு மூடிவிடக் காத்திருந்த வார இறுதி. வீதித் திருப்பத்தில் ஓர் இளைஞன் கல்நார் கூரை வேய்ந்த வீட்டிலிருந்து அவனுடைய மனைவியை இழுத்துவந்து தெருவில் வைத்து அடித்தான். வலி தாங்க முடியாமல் அவள் கதறியது காலத்தின் கவனித்தில் படத்தக்க அளவு நேரம் மகிழ்ச்சியை அளித்தது. வீட்டில் ஒரு பெண்ணும் இல்லைதான். நானே அடித்ததுபோல் கட்புலனாகாத ஒரு பெண்ணின் கதறலால் வீடு நிரம்பியிருந்தது.
மீண்டும் இங்கே பாலின அடிப்படையிலான வெறுப்பு முன்னெழுகிறது. பெண்களின் மீதான வன்முறையை வேடிக்கை பார்ப்பதில், பெண்களின் மீதான ஓர் ஆணின் வெறுப்பு, தன்னுடலையே நக்கிக்கொண்டு சமாதானம் செய்துகொள்கிறது.
கோலம் 4:
அவள் என் உறவினரின் மகள். படிப்பே வராது அவளுக்கு. எதைச் சொல்லிக்கொடுத்தாலும் அவளால் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருந்தது. அவளுடைய பெற்றோர் அடித்துச் சொல்லிக்கொடுத்தாலும், தேம்பி அழுதவண்ணமே அவள் பாடங்களைக் கற்க முனைந்தாலும் அவளால் தேர்ச்சி அடைய முடியவில்லை. எனக்கு வருத்தம்தான். ஆனால், எனது உறவினருக்கு வெறுப்பு. தனது மகள் மற்றவர்கள் உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு முட்டாளாக இருக்கிறாளே என்று. நான் அந்தச் சிறுமியைக் காட்டிலும் என்னுடைய உறவினருக்காக வருத்தமடைந்தேன்.
இங்கே அறிவின் அடிப்படையில் வெறுப்பு அமைகிறது. முட்டாள்தனத்தை வெறுப்பது என்பது அறிவின் தவிர்க்க முடியாத குணமாக இருக்கிறது.
கோலம் 5:
ராயல் என்ஃபீல்ட் அதுவாகவே உற்சாகமடைந்து பயணிப்பதற்கான 20-23 டிகிரி செல்சியஸ் அளவே இருந்த இளங்காலை. சாலையில் வாகனங்கள் குறைவாகவே என்னோடு பயணித்தன. அவற்றில் விலையுயர்ந்த கார்களின் மீது கவனம் பதிய, மீதியெல்லாம், இல்லறத்தார் சிக்கனம் கருதி வாங்கிப் பயன்படுத்தும் விலை மலிவான இருச்சக்கர வாகனங்களும், அசிங்கமான சிறு பார வண்டிகளும். ஏறக்குறைய இடிப்பதைப் போல வந்து, மிக வேகமாக முந்திச் சென்ற இருச்சக்கர வாகனத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள். அவர்கள் மீது எழுந்த கோபமே அந்த இளங்காலையைக் கொதிநிலைக்குத் தள்ளியது.
இந்த கோலம் தன்னை மதத்திலிருந்து உயிர்ப்பிக்கிறது. அதுவும் நான் நீட்டிக்க விரும்பிய அனுபவமொன்றின் மீது இடையூறு செய்யும் இளைஞர்களின் மதமே அந்த வெறுப்புக்கு உடனடிக் காரணமாக அமைகிறது. நான் அந்நிகழ்வை இளைஞர்களின் குறும்புத்தனமாகப் பார்க்கவில்லை. அங்கே உயிர்பெற்ற கோலம் அவர்களை மதத்தின் கண்கள் வழியாகப் பார்த்தது.
வெறுப்பானது இனம், மொழி, வர்க்கம், மதம், பாலினமாக வடிவங்கள் கொண்டிருக்கிறது. அவற்றின் உள்ளேயும் ஆயிரம் துணை வடிவங்கள் நிலைகொண்டிருக்கின்றன.
வெறுப்பின் காலத்தில் சட்டத்தின் பங்கு:
நாம் வெறுப்பின் காலத்தில் வசிக்கிறோம் என்பதன் பொருள், வெறுப்பு புதிதாகத் தோன்றி இப்போது அதன் ஆளுகைக்குக் கீழே நம்மைக் கொணர்ந்திருக்கிறது என்பதல்ல. சமூகத்தின் பல்வேறு அங்கங்களின் ஏற்பை (legitimized) வெறுப்பு பெற்றிருக்கிறது என்பதே அதன் பொருள். ஏற்பு வழங்கப்படாத வெறுப்பு, எல்லைகளில் கூச்சலிட்டு அவ்வப்போது சமூகவெளிக்குள் ஊடுருவலை நிகழ்த்தும். ஆனால், ஏற்பு வழங்கப்பட்ட வெறுப்போ தனக்கு எல்லையே இல்லாததுபோல் சமூகம் முழுமைக்கும் ஆகாயத்தாமரையெனப் படரும்.
சட்டம் ஓரளவுக்கேனும் வெறுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சட்டத்தின் உலகளாவிய குணம் என்னவென்றால் அது இழப்பவர்களின் பக்கத்தில் நிற்க விரும்புகிறது. உடல், உயிர், பொருள் இவற்றை இழப்பவர்களின் பக்கத்தில் நின்று அவர்களைக் காக்க விரும்புகிறது. சட்டத்தை வெகு எளிதாகச் சொல்லப்போனால், சமையல் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வைப் போல. குக்கர் வெடித்துவிடாமல் காப்பது அந்தச் சிறு வால்வே.
ஆனால், வெறுப்பைச் சட்டம் அங்கீகரித்தால், அதன் ஆற்றலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தால், நாம் ஏற்கெனவே வெடிப்பின் பின்னாலான உலகில் வசிப்பவர்களைப் போல ஆகிவிடுவோம். வெறுப்பைச் சமூக சக்திகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, சமத்துவத்தைத் தனது ஆதாரமாகக் கொண்ட சட்டத்தின் விரல்களையே நாம் பிடிக்க விழைவோம்.
சட்டத்தின் ஆட்சி என்பது ஒருவகையில் நாகரிகத்தின் ஆட்சி. இருப்பில் இருக்கும் சட்டங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டதா என்றால் அவ்வாறு இல்லைதான். எனினும், சட்டத்தின் தத்துவம் நிறையவே விவாதிக்கப்பட்ட ஒன்று. சமூக ஏற்பை எதிர்த்து, சட்டம் நீண்ட போராட்டத்தை நடத்துகிறது.
வெறுப்பின் காலத்துக்கு முன்னுதாரணம்:
வரலாற்றின் பக்கங்களில் கிடைக்காத முன்னுதாரணங்களைக் கடந்து மனிதச் சமூகம் ஒரு நிகழ்வையும் புதிதாக உருவாக்கியிருக்கவில்லை. வெறுப்பின் ஆகப் பெரிய பரிசோதனையாக நான் இரண்டாம் உலகப் போரைச் சொல்வேன். மனித இனம் தன் மீதே செய்து பார்த்த பரிசோதனைகளில் பென்னம் பெரியது அதுவே. மீண்டும் அந்தப் பரிசோதனையைப் புதிய பாணியில் நிகழ்த்தாது என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை (போரில் என்ன புதிய பாணி!).
இங்கே ஏன் என்பதே இல்லை:
பிரைமோ லெவியைப் போல வெறுப்பின் ராட்சதத்தனங்களை எழுதிய வேறொருவர் இல்லை (வாஸிலி கிராஸ்மனைச் சொல்லலாம்தான்). அவருடைய ‘இஃப் திஸ் இஸ் அ மேன்’ (If This Is a Man) நாவலில் ஒரு காட்சி. மூன்று நாள் பயணமாக நீரும் உணவும் இன்றி ஃபாசிஸ்ட் ராணுவத்தினரால் ரயிலில் ஏற்றிச் செல்லப்படும் யூதர்களில் ஒருவன், வதைமுகாமில் தாகம் மிகுதியாக, கம்பிவேலியில் உறைந்திருக்கும் ஐஸ் துணுக்கு ஒன்றை உடைத்து வாயில் இடப் போவான். ராணவ வீரன் அதைத் தட்டிவிடுவான். யூதன் கேட்பான்: ஏன்? ராணுவ வீரன் பதிலளிப்பான்: இங்கே ஏன் என்பதே இல்லை. வெறுப்பின் காலத்தில் ஏன் என்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்கள் கிடைக்காது. ஏனெனில், அங்கே ஏன் என்பதே இல்லை.
வெறுப்பும் பொருளாதாரமும்:
இது ஒரு விநோதமான கலவைதான். வெறுப்பு எவ்வாறு பொருளாதாரத்தோடு தொடர்புடையதாகிறது? அரசியல்மயப்பட்ட வெறுப்பு, முதலில் தனது எதிரிகளின் உயிரில் அல்ல, உடைமைகளில்தான் கை வைக்கும். நாகரிகச் சமூகத்தில் கொலைகள் அருவருப்பானவை. ஆனால், உடைமைகளின் மீது செலுத்தப்படும் தாக்குதல்களுக்கான எதிர்வினைகள் முன்னதைக் காட்டிலும் பின்னதில் வீரியமாக இருப்பதில்லை. வெறுப்பின் பொருளாதார வடிவம் பல்முனையிலானது. அதன் குறிக்கோளை அடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்கும் பொறுமையும் உள்ளது. ரொம்பவே சிக்கலானது, ஆழமானது. எளிதில் மீண்டுவர முடியாத பாதிப்பை மறைமுகமாக உண்டாக்குவது. ஆழத்தில் புதைபடுபவற்றுக்குத் தோற்றம் மறைந்து, குரலும் மங்கிவிடுகிறது.
சில இடைக்கருத்துகள்:
- ஒரு மனிதர் தன்னுள் வெறுப்பின்றி இருக்க முடிவதற்கான சாத்தியம் மிகக் குறைவே. அது விடுதலை மனநிலை அடைந்தவர்களுக்கே உரிய ஒன்று. ஆனால், ஒரு சமூகம் தன்னுள் வெறுப்பின்றி இருக்க முடியுமா? எல்லாப் பிரிவினைகளும் வெறுப்பால் உருவாக வேண்டிய அவசியமில்லை. ஆனால், வெறுப்பானது எல்லாவற்றிலும் பிரிவினைகளையே உருவாக்க விரும்புகிறது. வெறுப்பு ஒரு பிரிவினை சக்தி. அதனால், தற்காலிகப் பலன்களை ஒரு சமூகம் அடைந்தாலும் அந்தப் பலன்களுக்காகக் கொடுக்கும் விலை நீண்ட காலத்தில் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.
- மனிதர்களில் அன்பும் வெறுப்பும் அவர்களின் இயல்பிலேயே உள்ளது. அன்பைக் காட்டிலும் வெறுப்பு எளிதானது. வெறுப்பது எளிதானது மட்டுமல்ல, அது ஒருவகையில் அமைதிப்படுத்தவும் ஒன்றிணையவும் வழிவகுக்கிறது. அன்புக்கும் இதே குணங்கள் உண்டு என்பது எவ்வளவு முரண்பாடு பாருங்கள். ஆனால், அன்பில் இருதரப்பும் பலனடைய வெறுப்பிலோ ஒரு தரப்பு மட்டுமே பலனடைய முடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அன்பானது பேச்சுவார்த்தைக்கு மேசைக்கு வந்தால், வெறுப்போ சண்டையிடுவதற்கு தெருவுக்குப் போகும். வெறுப்பும் அன்பும் வலிமை தரக்கூடியவை. ஆனால், வெறுப்பால் உண்டாகும் வலிமையானது வன்முறைக்கே இட்டுச் செல்லும். வலிமை தன்னை வலிமையானது என்று நிரூபிக்க பலவீனமானவற்றின் மீது வன்முறை செலுத்தவே முயலும். வலிமை மற்றொரு வலிமையோடு மோதி அல்ல, பலவீனமானதோடு மோதியே தன்னை வலிமையானது என்று நிரூபிக்கிறது. ஆனால், பலவீனமானது பலவீனத்தோடு அல்ல, வலிமையானதோடு மோதியே தனது பலவீனத்திலிருந்து விடுபடுகிறது. அன்பானது பலவீனத்தை உருவாக்கினாலும் அது வலிமையோடு மோதுகிறது.
- வெறுப்பால் ஒரு சமூகத்தை அரசியல்மயப்படுத்த முடியும். வெறுப்புக்குக் கதை சொல்லும் தன்மை உண்டு. அரசியல் ஓர் ஒப்பற்ற கதைசொல்லும் நிறுவனம். அன்பால் கதை சொல்ல முடியாது. வெறுப்பால் வரலாற்றிலிருந்தோ சமகாலத்திலிருந்தோ ஒரு கதையாடலை (narrative) உருவாக்க முடியும். அன்போ வரலாறும் சமகாலமும் அற்றது. கதையாடலை உருவாக்கும் கருப்பை அற்றது. எனவே, அரசியல்படுத்தவே முடியாதது.
- வெறுப்பும் அன்பும் வளங்களைச் சார்ந்தே இருக்கின்றன. வளங்கள் தீரத் தொடங்கினால் அன்பே வெறுப்பாக மாறுகிறது. இரண்டுக்கும் ஆக்கிரமிக்கும் பண்பும் உண்டு. ஒரு சமூகத்தின் வளங்கள் தீர்ந்து போனால் அது நிச்சயம் மற்றொரு சமூகத்தைத் தனக்குச் சமமாக நடத்தாது. எஞ்சியிருக்கும் வளங்களைக் கைப்பற்றவே, வெறுப்பு நமது சமகாலத்தில் உலகளாவிய போக்காக உருவாகியிருக்கிறது.
- வெறுப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் யார்? அன்பால் அரசியல்மயப்படுபவர்கள் அல்ல. ஏற்கெனவே நாம் சொன்னபடி, அன்பால் ஒரு கதையாடலை உருவாக்க முடியாது. மாறாக, வெறுப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் மற்றொரு கதையாடலைச் சேர்ந்தவர்கள். வெறுப்பின் நெருக்கடியாலும் அதன் அழுத்தத்தாலும் அதற்கு எதிராகப் போராடப் புகுந்தவர்கள். தன்னுள் நெகிழ்வையும் இடத்தையும் கொண்டிருக்கும் கதையாடலைச் சேர்ந்தவர்கள்.
- தனிநபர்மயப்பட்ட வெறுப்பை வெல்வது அவரவர் தேர்வைப் பொறுத்தது. ஆனால், அரசியல்மயப்பட்ட வெறுப்பை வெல்வது அமைதியை விரும்பும், தனது ஆற்றலை ஆக்கபூர்வமான வழிகளில் செலுத்த விரும்பும் சமூகத்தின் ஓர் அத்தியாவசியத் தேவை.
- அரசியல்மயப்பட்ட வெறுப்பின் இறுதி நோக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடைய அங்கத்தினர் அனைவரின் தனிநபர்மயப்பட்ட வெறுப்பாக அதை மாற்றுவதே.
- யாரால் வெறுப்பை வெல்ல முடியும்? அன்புடையவர்களால் அல்ல. ஏனெனில், தடுமாற்றமில்லாத அன்பு என்பது யதார்த்தமானதல்ல. மாறாக, புரிதல் உள்ளவர்களால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும். கல்வியே புரிதலுக்கு வழிவகுக்கும். கல்வி என்பது பள்ளிகளில், கல்லூரிகளில் கற்பிக்கப்படுவதல்ல. அதோடு சேர்த்துப் பாடத்திட்டங்களுக்கு வெளியே கற்பதும் இணைந்ததுதான் கல்வி. புரிதலானது ஏற்றுக்கொள்வதையும் அங்கீகாரத்தையும் மரியாதையையும் உருவாக்கும். இவை மூன்றும் இணைந்ததே அன்பு எனப்படுவது.
வெறுப்பின் கதை சொல்லும் ஆற்றல்:
வேறெவற்றையும்விட வெறுப்பின் கதை சொல்லும் ஆற்றல் வியப்புக்கு உரியது. அதனால் வரலாற்றை, பொருளாதாரத்தை, ஏன் எதிர்காலத்தையேகூட தனது மொழியாகக் கொண்டு ஒரு புனைகதையை உருவாக்க முடியும். அதற்கே உரியதான ஈர்ப்புமிக்க தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு நம்பத் தகுந்த, அதே சமயம் நம்மை அதன் முடிவுகளை ஏற்கச் செய்யும் கதைகளை உருவாக்கிவிட முடியும். உண்மையை எதிர்கொள்ளுதல் எளிதானது. ஆனால், புனைவுமயமான உண்மையை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது. அதன் தர்க்க ஈர்ப்பின் முன்னே உண்மையின் எளிமை தனது எடையை எப்போதோ இழந்துவிட்டதைப் போல நிற்கும்.
வெறுப்பை நீட்ஷேவின் வார்த்தைகளில் சொன்னால் ஒரு ‘ரேடிக்கல் எவில்’ (radical evil) எனலாமா? வெறுப்பு வெறும் உணர்வுகளின் நிறங்களை மட்டுமே கொண்டிருப்பதில்லை, அது தர்க்கத்தின் நைலான் வயர்களால் முடையப்பட்டிருப்பதால் எளிதில் அறுந்துவிடாது. வெறுப்பானது பகுத்தறிவைப் பயன்படுத்துகிறது. ஆனால், புனைவை உருவாக்கவே அதன் பகுத்தறிவு ஊடுபாவாக அமைகிறது. இவை இரண்டும் அபாயகரமான கூட்டணியை அமைக்கின்றன. முன் சென்ற சொற்றொடரில் ‘அபாயகரமான’ எனத் தட்டச்சு செய்கையில், தவறுதலாக ‘அபயகரமான’ என அடிக்கப்பட்டது. வெறுப்பு யாருக்கு அபயமளிக்கிறதோ அவர்களின் ஆற்றல் விரைவில் வடிந்து தீராது.
இறுதிச் சொற்களாக:
வெறுப்பின் கசப்பைச் சுமக்காதவர்கள் நம்மில் யார்? அது நம்மை ஆற்றல் உடையவர்களாக ஆக்கினாலும், நம்மையே அகவெடிப்புக்கு (implosion) உள்ளாகச் செய்யும். தனிநபர் எல்லைகளுக்குள் இயங்கினாலும், சமூகவெளிகளில் நிரம்பினாலும், நரகத்தில் செய்யும் முதலீடே வெறுப்பு.
பின்குறிப்பு: ‘வெறுப்பின் ஆயிரம் வடிவங்கள்’ எனும் பகுதியில் சொல்லப்படும் ‘நான்’ இதை எழுதியவர் அல்ல. இதை எழுதியவர் வெறுப்பின் பல்வேறு சூழல்களில் தன்னை ஒரு கதாபாத்திரமாக வைத்துப் பார்க்கிறார்.
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Prabhu 3 years ago
சம்பிரதாயமான வார்த்தைகளில் "அற்புதமான கட்டுரை" என்று வாழ்த்தி இந்த பின்னூட்டத்தை முடிக்கலாம். ஆனால், இந்த 15 நிமிட வாசிப்பு கட்டுரையைப் படித்து முடித்த அளவில் மனதில் எழும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அந்த இரு வார்த்தைகள் இராது. இதைப் போன்ற கட்டுரைகள் ஒரு பொதுஜன தினசரியில் வெளியிடப்பட வாய்ப்பே இல்லை என்பதில்தான் சமஸ் அவர்களின் அறுஞ்சொல் ஸ்தாபிதம் அர்த்தம் பெறுகிறது. வெறுப்பின் கதையாடல் வரலாறு முழுக்க தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதன் புனைவை ஊடுருவி பார்ப்பவர் வெகு சிலரே. அவர்களுக்கும் எதிராக வெறுப்பு தனது புதிய கதையாடல் ஒன்றைத் துவக்கும். வெறுப்பின் உடற்கூறை உணர்ந்து கொள்வது கதையாடல்களின் நோய்மைகளை அறிந்து கொள்ள உதவும். பாலசுப்ரமணியன் பொன்ராஜ் அவர்கள் சொல்வது போல, அன்பு பலவீனமானதுதான். ஆனால், பலவீனம் பலத்துடன் மோதியே தன்னை வலிவாக்கிக் கொள்கிறது. வாசகர்கள் தமது அறிவுப்பரப்பை விலாசிமாக்கிக் கொள்ள இதைப் போன்ற கட்டுரைகள் மிகவும் உதவும். நன்றி சமஸ்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Valavan 3 years ago
வெறுப்புக்கு கதைசொல்லும் தன்மை உள்ளது. அன்பிற்கு இல்லை என்ற கருத்து அருமையான கருத்தாக்கங்களை கொடுக்கிறது. அன்பு தன்னிச்சையான, நிதர்சனமான காரண காரியங்களற்று அந்தந்த நொடியில் நிகழ்கிறது. காந்தியின் வாழ்க்கை முழுதும் அவர், அன்புக்கான கோட்பாடுகளை தன் அன்றாட செயல்களின் மூலமே கண்டுகொள்கிறார். வெறுப்பு போன்ற எதிர்வினைக்குதான் ஒரு முதல்வினை வரலாற்றில் தேவைபடுகிறது. அன்பு போன்ற முதல்வினைக்கு கதைசொல்லல் தேவையில்லாமல் போகிறது.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.