கட்டுரை, வரலாறு, சமஸ் கட்டுரை, கல்வி 7 நிமிட வாசிப்பு

மன்னை: மாண்புமிகு மாணவர்

சமஸ் | Samas
23 Aug 2022, 5:00 am
0

மிழில் உள்ளூர் வரலாறுகளை எழுதும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் 'அருஞ்சொல்' ஆசிரியர் குழுவானது, 'குளோபலியன் அறக்கட்டளை'யுடன் இணைந்து அப்படி உருவாக்கியிருக்கும்  முதல் நூல் 'ஒரு பள்ளி வாழ்க்கை'. இந்திய கல்வியின் மீதான விமர்சனத்தையும், தீர்வாகக் கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதையும் முன்வைக்கும் இந்த நூலானது, கூடவே உள்ளூர் அளவில் பெரும் பணிகளை ஆற்றி அங்கேயே புதைக்கப்பட்டுவிட்ட ஆளுமைகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நூலில் அப்படி இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரை இது.

ர்ப் பெயரைத் தன்னுடைய பெயரின் முன்னொட்டாக மாற்றிக்கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. அரிதாக, சில தலைவர்களுக்கு மக்களே சேர்த்து ஊர்ப் பெயரைச் சூட்டிவிடுவதும் உண்டு. அரிதினும் அரிதாக, சொந்த பெயரே எல்லோர்க்கும் மறந்துபோகும் அளவுக்கு, ஊர்ப் பெயரே பிரதானமாக சில தலைவர்களுக்கு அமைந்துவிடுவதும் உண்டு. அப்படி தமிழ்நாட்டில் ஊர்ப் பெயரைச் சொன்னாலே ஒரு தலைவரின் முகம் நினைவுக்குப் பிரபலமான தலைவர்கள் இருவர். அவர்கள் அன்பில் பி.தர்மலிங்கமும், மன்னை ப.நாராயணசாமியும். 

                                         

ஓவியம்: எம்.சுந்தரம் 

தமிழ்நாட்டில் சமதர்ம சிந்தனையும் சமூக நீதிக் கோட்பாடுகளும் ஆழ வேர்விட்ட பிராந்தியங்களில் முக்கியமானது ஒருங்கிணைந்த தஞ்சை பிராந்தியம். இதற்கான முக்கியமான காரணம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும். அதேசமயம், இங்கு இந்தச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதோ, அமைப்புகளைக் கட்டி எழுப்புவதோ அவ்வளவு சாமானியமான காரியமாக இருக்கவில்லை; கடும் எதிர்ப்புகள், தடைகள் இடையேதான் சமூக இயக்கங்கள் முன்னகர வேண்டி இருந்தது. காரணம், அன்றைய தஞ்சை பிராந்தியத்தின் பெரும் பகுதி நிலவுடைமை ஆதிக்க சாதி நிலக்கிழார்களிடம் இருந்தது. பல நூறு ஏக்கர்களோடு, பல கிராமங்களையே சொந்த உடைமைபோல வைத்திருந்த ஜமீன் குடும்பங்கள் அன்று இருந்தன. 

ஆள் பலம், பண பலம், ஆட்சியதிகார பலம் என்று சர்வ பலத்துடன் இருந்த இவர்களையெல்லாம் எதிர்கொண்டுதான் முற்போக்கு இயக்கம் வளர்க்க வேண்டியிருந்தது. அப்படி இயக்கம் வளர்த்து, வளர்ந்தவர்தான் மன்னை.

திமுகவின் முக்கியமான களத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மன்னை. 1966 சிவகங்கை மாநாட்டுக்குத் தலைவராக அண்ணாவால் அறிவிக்கப்பட்டதோடு, அவருடைய பெயரைச் சொல்லி தொண்டர்களுக்கு அண்ணா அழைப்பு விடுக்கும் அளவுக்குச் செல்வாக்கோடு இருந்தவர். 

அண்ணாவின் மறைவுக்குப் பின் கட்சி மற்றும் ஆட்சியின் தலைமையில் கலைஞர் கருணாநிதி அமர்ந்திடுவதும், நிலைத்திடுவதும் பெரிய சவாலான காரியமாகவே இருந்தது. களத்தில் அவருக்குப் பக்கபலமாக நின்ற தலைவர்களில் ஒருவர் மன்னை. அதேசமயம், நட்புறவின் உரிமையோடு தன்னுடைய தலைவருக்கு சரிசமமாக உட்கார்ந்து விவாதிக்கும், சண்டை போட்டு தன்னுடைய பிராந்தியத்துக்குத் திட்டங்களை வாங்கி வரும் ஜனநாயகராகவும் அவர் இருந்தார்.                   

அண்ணா, கலைஞர், முரசொலி மாறன் இவர்களோடு மன்னை.

நவீன மன்னார்குடியின் வளர்ச்சிக்குப் பெரும் உழைப்பைக் கொடுத்தவர்களில் மன்னை தலையாயவர். குறிப்பாக, கல்விக்குப் பெரிய முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் அவர் கொடுத்தார். மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கல்லூரி அவர் கொண்டுவந்தது. முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு, தன்னுடைய ஊரான திருவாரூருக்கு ஓர் அரசுக் கல்லூரியைக் கொண்டுவந்தார் கலைஞர். மன்னை இதையே சாக்காக வைத்து, “திருவாரூருக்குச் சளைத்ததா மன்னார்குடி?” என்று கேட்டு இங்கும் ஓர் அரசுக் கல்லூரியை வாங்கினார்.

மன்னார்குடிக்குப் பாமணி உர ஆலை முதலாக மன்னை கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். ஒவ்வொரு கட்டுமானத்திலும் அவர் காட்டும் கவனத்துக்கு ஓர் உதாரணம், சிங்கப்பூர் மாதிரியை மனதில் கொண்டு நவீனமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட நீர்த்தொட்டி. கீழே அடுக்கடுக்கான மாடிகளில் அலுவலகக் கட்டிடங்கள்; மேலே பிரம்மாண்டமான தண்ணீர் தொட்டி என்ற இதன் கட்டுமானத்தை அன்று வியக்காதவர்கள் இல்லை.

கல்வி கற்கும் பிராயம் ஒருவருடைய ஆளுமையைச் செதுக்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது என்பதாலேயே எந்தப் பள்ளி சார்ந்து உதவி கேட்டு வந்தாலும் உதவுபவராக மன்னை இருந்தார். பள்ளிகள் அளவில் அவர் செய்த உதவிகளில் மிக முக்கியமானது, வளனார் பள்ளி விரிவாக்கத்துக்காக இடம் தேவைப்பட்டபோது அந்நாள் நகர்மன்றத் தலைவர் டி.பி.சிங்காரவேலு உடையார் உதவியுடன் அந்த இடத்தை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஆகும்.

சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம்கூட நகர மக்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டவர் மன்னை. சென்னையிலிருந்து அரசுப் பணி சார்ந்து மன்னார்குடிக்கு வந்தவர் மருத்துவர் சி.அசோக் குமார். நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக இருந்ததோடு, மக்கள் நலன் சார்ந்தும் இயங்கியவர். 

சீக்கிரமே சென்னைக்குப் பணி மாற்றலாகிச் செல்லவிருந்தவரை, “இந்த ஊருக்கு உங்களைப் போல ஒரு மருத்துவர் கிடைக்க மாட்டார்; எங்களையெல்லாம் சொந்தக்காரர்களாக எண்ணி இங்கேயே இருந்துவிடுங்களேன்” என்றார் மன்னை. இந்த அன்புக்குக் கட்டுப்பட்ட அசோக் குமார் மன்னார்குடியிலேயே வாழ்ந்து அங்கேயே மறைந்தார் என்பது வரலாறு. 

மன்னார்குடி வரலாற்றில் நூறாண்டு அரசியல் தலைவர்களில் பெரியவர் என்று சொல்லத்தக்கவரான மன்னை ப.நாராயணசாமி, நூற்றாண்டு கண்ட தேசிய பள்ளியின் மகத்தான மாணவரும்கூட. தன்னுடைய பள்ளியுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் மன்னை. பள்ளியின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றதோடு, பள்ளியின் அந்நாள் தலைமையாசிரியர் ஸ்ரீநிவாசன் பள்ளி சம்பந்தமான முக்கியமான விஷயங்களில் எப்போதும்  ஆலோசனை கலப்பவர்களில் ஒருவராகவும் மன்னை இருந்தார்.

மிக அழகான நகைமுரண் இது. அதாவது, பெரும் பகுதி பிராமணர்களால் நிர்வகிக்கப்பட்ட பள்ளியிலிருந்து உருவான ஒரு மாணவர், பெரும் பகுதி பிராமணரல்லாத இயக்கமாகக் கருதப்பட்ட கட்சியின் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததும், இந்த இரு தரப்புகளையும் ஆழமான அன்பும், உறவும் பிணைந்திருந்ததும்! 

                                                                     

“பிராமணியம்தான் எங்கள் எதிரி; பிராமணர்கள் அல்ல!” என்றும் “சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் பீடம் என்பதாலேயே மதத்தையும் சடங்குகளையும் எதிர்க்கிறோம்; கடவுளுக்கும் எங்களுக்கும் வேறு எந்தப் பகையும் இல்லை!” என்றும் பெரியார் வழியில்  முழங்கியவரான மன்னை தன்னுடைய செயல்களில் சொல்லின் உண்மையை வெளிப்படுத்தியவர்.

தன்னுடைய திருமணத்தையே ராகுகாலத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தீவிரமான நாத்திகர் மன்னை. புதிதாக வீடு கட்டியபோதும், கரிநாளைத் தேர்ந்தெடுத்து, ராகு காலத்திலேயே புதுமனைப் புகுவிழா நடத்தினார். இந்தப் பகுதியில் அன்றைய திமுகவிலும் தலித் சமூகத்தினர் மத்தியிலும் முன்னோடி அரசியலர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம்தான் மன்னையின் வீட்டைத் திறந்துவைத்தார்.

இப்படியான கொள்கைத் தீவிரம் கொண்ட மன்னை தன் தந்தையாரால் ஒரு நூறாண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்டு, குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவந்த அன்னச்சத்திரத்தில், தைப்பூசத் திருவிழாவும் விருந்தும் வழக்கம்போல நடப்பதை ஒருநாளும் தடுக்கவில்லை; நண்பர்கள் வழியே அதை முன்னெடுத்தார். பாமணி நாகநாத சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியை மக்களின் வற்புறுத்தலால் ஏற்றிருந்த அவர் தன்னாலான எல்லா அறப்பணிகளும் அக்கோயிலில் நடக்க உதவினார். 

தெளிவான நிர்வாகப் பார்வை மன்னையிடம் இருந்தது. “என்னுடைய கொள்கையை என் பொறுப்பில் உள்ள மக்கள் மீது திணிக்க மாட்டேன்!” என்றார். மன்னார்குடி கல்லூரிக்குப் பெயர் சூட்டும்போது, “கோயில் நிலத்தைக் கல்லூரிக்குப் பயன்படுத்துவதால், கல்லூரிக்கு ராஜகோபால சுவாமி பெயரையே சூட்ட வேண்டும்” என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரியபோது, “எல்லோர் விருப்பமும் எதுவோ, அதுவே என் விருப்பமும்” என்று சொல்லி அந்தப் பெயரிலேயே கல்லூரி அமைய வழிவகுத்தார். “மக்களிடத்தில் உயரிய கருத்துகளைப் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால், மக்கள் மனம் மாறும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். எதையும் திணிக்கக் கூடாது. அதுதான் ஜனநாயகம்” என்றார்.

மன்னையைச் செதுக்கியதில் தேசிய பள்ளிக்கு முக்கியமான பங்கு உண்டு. “நான் உயர்நிலைப் பள்ளியில் முழுவதும் பயின்று முடிக்காதவன். ஆனால், நாட்டுப்பற்றினை தேசிய பள்ளியின் மூலம் நிரம்பப் பெற்று அதிலே திளைத்தவன். பொது வாழ்வில் ஈடுபட்டு என்னால் இயன்ற சிறிய தொண்டுகளைச் செய்துவருகிறேன். இது நான் அப்பள்ளியில் பயின்றதால் கிடைத்த பெரும் வாய்ப்பு என்பதை உறுதிபடக் கூறிட முடியும்” என்று கூறியிருக்கிறார் மன்னை.

இது வெற்றுப் புகழ்ச்சி இல்லை. தேசிய பள்ளிக்கு காந்தி வந்தபோது நெருங்கிச் சென்று அவரிடம் ஆசி பெற்றவர்களில் ஒருவர் அவர். கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரகம், சீமைத்துணிகள் பகிஷ்கரிப்பு… இப்படியான பல போராட்டங்களில் அன்றைக்கு தேசிய பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூடவே மாணவர்கள் இப்படியான அரசியல் நடவடிக்கைகளில் சாத்வீக முறையில் ஈடுபடுவதையும் அனுமதித்தனர். 

ஸ்ரீநிவாசன்  -  மன்னை ப.நாராயணசாமி

காந்தியத்தின் தாக்கத்தில் பள்ளி நாட்களிலேயே கள்ளுக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வெளியே வரும் குடியர்கள் காலில் விழுந்து “ஐயா, தயவுசெய்து குடிக்காதீர்கள்!” என்று கோரிக்கை வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதை மன்னை எழுதியிருக்கிறார். நாட்டுப்பற்றுதான் பின்னர் மக்கள்பற்றாகவும், மொழிப்பற்றாகவும், சமத்துவப்பற்றாகவும் மன்னையிடம் உருவெடுத்தது. தமிழ்நாடு முன்னெடுத்த மொழிப்போரில் உத்வேகமான செயல்வீரராக அவர் உருவெடுத்திருந்தார். மன்னார்குடி கொதிநிலமாக அப்போது தகித்தது.

காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்திருந்த தேசிய பள்ளி திராவிட இயக்கத்தை அதற்குரிய முக்கியத்துவத்தோடு உள்ளணைத்துக்கொண்டதில் அதனுடைய மாணவர் மன்னை முக்கிய பங்கு வகித்தார் என்றே சொல்ல வேண்டும். எவ்வளவோ உயரத்துக்குச் சென்றவர் மன்னை. பள்ளிக்கு வரும்போதெல்லாம் ‘நான் உங்கள் மாணவன்’ என்று பணிவோடு சொல்லிக்கொள்பவராகவே இருந்தார். பள்ளியும் தன்னுடைய மாணவரை எப்போதும் முதல் மரியாதைக்குரியவராகவே கொண்டாடியது!

(ஒரு பள்ளி வாழ்க்கை நூலிலிருந்து…)

இப்போது ஒரு நூல் விலையில் இரு நூல்கள். ஒன்றை நீங்கள் வைத்துக்கொண்டு, இன்னொன்றை உங்களுக்குத் தெரிந்த ஆசிரியருக்குப் பரிசளியுங்கள். 

நூலைப் பெற அணுகுங்கள்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1





இந்திய வரலாறுவரலாற்றிலிருந்து எழுந்து வரும் ஆளுமைகி. ராஜாநாராயணன் கவலை தரும் நிதி நிர்வாகம்!ஆஸ்திரேலியாதணிக்கைக் குழுசுட்டுரைகள்முதலாளித்துவம்லதாஜோதிர் ஆதித்ய சிந்தியாஅடிப்படை உரிமைகள்தூக்கமின்மைசாதி மறுப்புசத்யஜித் ரேபிரிவினைமுஸ்லிம் பெண்கள்மகிழ முடியாதவர்கள்தம்பிக்கு கடிதம்கதவுகளில் கசியும் உண்மைதமிழ்நாடு நௌநெஞ்சு வலிகோர்பசெவ் கடைசிக் கட்டுரைஉள்ளாட்சிகள் கையில் பள்ளிகள்மிஸோக்கள்புயல்கள்எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்திகீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்பொதுப் போக்குவரத்துவிலைவாசிகாங்கிரஸ் - இடதுசாரிகள் ஒற்றுமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!