கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
அரசியல் கட்சியே குற்றவாளியாகிவிடுமா?
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் பிணை கோரிய மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் ஆழமான பரிசீலனைக்குரியவை.
முதலாவது, நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வின் கருத்து. “சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு வழக்கில் (பிஎம்எல்ஏ) ஆம்ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவதால், அவர்கள் சார்ந்த ஆம்ஆத்மி கட்சி (ஆஆக) அமைப்பும் அதில் ஈடுபட்டதாகக் கருத முடியுமா?” என்று கேட்டார் கன்னா. “இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியின் பங்கு என்ன? அந்தக் கட்சியையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுமா?” அமர்வு இந்தக் கேள்வியைக் கேட்டதும் வழக்கைத் தொடுத்த ‘வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு இயக்குநரகம்’ (இ.டி.), கேஜ்ரிவால் வழக்கில் ஆஆகவையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக (‘எதிரியாக’) சேர்த்துவிட்டது!
கொள்கைகள் அடிப்படையிலும் அரசியல் திட்டங்களின் அடிப்படையிலும் மக்களைத் திரட்டி, தேர்தல்களில் போட்டியிட்டு வென்று, ஆட்சியைப் பிடித்த பிறகு அரசு நிர்வாகத்தையும் நடத்தக் காரணமாக இருக்கும் அரசியல் கட்சிகளை, இப்படிக் குற்ற வழக்குகளில் குற்றவாளியாகச் சேர்ப்பது மிகப் பெரிய சிக்கல்களை உருவாக்கிவிடும்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சட்டப்படி நிலைமை என்ன?
இந்த வழக்கின் தன்மைக்குள் புகாமல், இந்தக் குற்றச்சாட்டின் தன்மை, விளைவு ஆகியவை குறித்து ஆய்வுநோக்கில் அலசிப் பார்ப்போம். சட்டத்தின் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டு எப்படிப்பட்டது?
‘பிஎம்எல்ஏ’ சட்டத்தின் 70வது பிரிவின் கீழ், ஆஆக கட்சியை ‘வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்’ (இ.டி.) இந்த வழக்கில் ‘குற்றவாளி’யாக சேர்த்திருப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரிவின் சாரம் கூறுவது என்னவென்றால், ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் சட்டத்தின் எந்தப் பிரிவையாவது மீறி குற்றச் செயலில் ஈடுபட்டால், அந்த நிறுவனமும் குற்றம் செய்ததாகக் கருதப்பட்டு வழக்கு மேற்கொண்டு நடத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும். ‘நிறுவனம்’ என்றால் பதிவுபெற்ற ஒரு நிறுவனம் அல்லது சில தனிநபர்கள் சேர்ந்து நடத்தும் நிறுவனம் என்று சட்டப் பிரிவு அதற்கு விளக்கம் தருகிறது. இந்த வரையறையின் கீழ், அரசியல் கட்சி எப்படி இடம்பெறுகிறது?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல், அரசியல் கட்சி எது என்பதற்கு அளித்துள்ள விளக்கத்திலிருந்து இதற்குப் பொருள்கொண்டு, ஆஆகவை ‘பிஎம்எல்ஏ’ சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் சேர்த்திருக்கிறது இயக்குநரகம். “தன்னை அரசியல் கட்சி என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பு அல்லது தனிநபர்கள் சேர்ந்து உருவாக்கும் கட்சி – அரசியல் கட்சியாக கருதப்படும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29ஏ பிரிவு கூறுகிறது. இந்த விளக்கப்படி ஒரு கூட்டமைப்பு அல்லது தனிநபர்கள் கூடி அமைக்கும் ‘சங்கம்’ போன்ற ‘அமைப்பு’, தன்னை அரசியல் கட்சி என்று அறிவித்தால் மட்டுமே அது அரசியல் கட்சியாக முடியும்.
தன்னை அரசியல் கட்சியாக அறிவித்துக்கொள்ளாத மக்கள் அமைப்புகள் அரசியல் கட்சியாகிவிட முடியாது. ‘பிஎம்எல்ஏ’ சட்டத்தின் 70வது பிரிவு, ‘தனிநபர்களின் கூட்டமைப்பு’ என்று மட்டும்தான் கூறுகிறதே தவிர, தன்னை ‘அரசியல் கட்சி’ என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பை அதில் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த வகையில், இதில் இருவேறு தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. எனவே, பிஎம்எல்ஏ சட்டத்தின் 70வது பிரிவு அரசியல் கட்சியை உள்ளடக்கியதல்ல; அரசியல் கட்சி ஒன்றை இந்தப் பிரிவின் கீழ், நடவடிக்கைக்கு உரியதாக்க சட்டம் அனுமதிக்கவில்லை.
அடுத்து அந்த விளக்கத்தில், ‘தனிநபர்கள் சேர்ந்து ஏற்படுத்தும் எந்த அமைப்பும்’ என்ற வாசகத்துக்கு முன்னால், ‘எந்த (தொழில்) ஆலை அல்லது (வணிக) நிறுவனம்’ என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த இடத்தில், ‘தனிநபர்கள் சேர்ந்து நடத்தும் தொழில் நிறுவனம்’ அல்லது ‘வர்த்தக நிறுவனம்’ என்பது மட்டுமே இதற்குப் பொருள். அரசியல் கட்சியைத் தொழில் நிறுவனமாகவோ வணிக நிறுவனமாகவோ கருத முடியாது. ஆஆக வழக்கு என்னவென்றால் முறைகேடாக லஞ்சம் பெற்று அந்தக் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட (சட்ட விரோத பணப் பரிமாற்றம்) குற்ற நடவடிக்கை தொடர்பானது.
அரசியல் கட்சிகள் கொடுக்கல் – வாங்கலுக்கான வேலையைச் செய்வது கிடையாது. அரசியல் கட்சிகளின் வேலை, மக்களைத் தங்களுடைய சித்தாந்தங்களின் அடிப்படையில் திரட்டுவது, தேர்தலில் போட்டியிடுவது, ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் நாட்டை நிர்வகிப்பது ஆகியவை மட்டுமே. தொழில் நிறுவனங்களையோ சட்ட அமைப்புகளையோ நடத்துவது அரசியல் கட்சிகளின் வேலையல்ல.
தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டுதான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. சட்டம் இதை அனுமதிக்கிறது, அத்துடன் தனிநபர்களோ நிறுவனங்களோ எதற்காக நன்கொடைகளை அளிக்கின்றன என்று சட்டம் கவலைப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் பெறக் கூடாது என்பதுடன் தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெரும் நன்கொடைகள் எவ்வளவு என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29 சியின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
இந்தப் பிரிவின் கீழ் தகவலை அளிக்காவிட்டால் அந்த அரசியல் கட்சி பெற்ற நன்கொடைக்கு வருமான வரிச் சட்டத்திலிருந்து முழு விலக்கு கிடைக்காது. ஓர் அரசியல் கட்சி நன்கொடையாகப் பெறும் முழுத் தொகைக்கும் வருமான வரியிலிருந்து முழு விலக்கு உண்டு. அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தில் ஆற்றும் பங்கை கருத்தில்கொண்டே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை விஷயத்தில் இவ்வளவு பெரிய சலுகை தரப்படுகிறது. எனவே இந்த வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓர் அரசியல் கட்சியையும் எதிரியாகச் சேர்க்குமாறு நீதிபதியே யோசனை கூறியது ஏன் என்று புரியவில்லை.
கொள்கையும் குற்றத்தன்மையும்
டெல்லி துணை முதல்வர் சிசோடியா, சிறையிலிருந்து தன்னை பிணையில் விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் - கே.வி.விசுவநாதன் அடங்கிய அமர்வு தெரிவித்த கருத்தும் பரிசீலனைக்குரியது. “அரசின் கொள்கை முடிவுக்கும், அதில் கலந்திருப்பதாகக் கருதும் குற்றநோக்கத்துக்குமான எல்லையை எப்படி நீங்கள் பகுத்துப் பார்க்கிறீர்கள்?” என்று மிக ஆழமான கேள்வியைக் கேட்டது அமர்வு. அமைச்சரவை கூடி எடுத்த கொள்கை முடிவை, ‘உள்நோக்கம் கொண்டது’ – ‘ஊழலுக்கு வழிவகுப்பது’ என்றே கருதினாலும் அதை எப்படி விசாரணை அமைப்பு கேள்விக்குள்ளாக்குவது என்பது முக்கியமான அம்சம்.
பிரிட்டனில் கடைப்பிடிக்கப்படும் (வெஸ்ட்மின்ஸ்டர்) நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் நம் நாட்டிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒன்றிய அரசாக இருந்தால் பிரதமர் தலைமையிலும், மாநிலங்களாக இருந்தால் முதல்வர் தலைமையிலும் அமைச்சரவைகள் கூடி கொள்கை அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன. ஒரு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உள்ளது.
“தேசியக் கொள்கையை வகுப்பதில் அமைச்சரவைதான் வழிகாட்டும் அமைப்பு” என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் ஐவர் ஜென்னிங்ஸ் கூறுகிறார். அந்தக் கொள்கை சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அமைச்சரவைதான் அதற்கான இடம். கொள்கை தவறென்று கருதினால் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ அதை நிராகரித்துவிடும். ஆனால், அந்த முடிவு தொடர்பாக மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு அமைச்சரவையுடையது.
தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் முடிவு என்றால் அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் அந்த அரசுக்கு எதிராக வாக்களித்து தண்டிக்க முடியும். ஆனால், எந்தச் சமயத்திலும் அந்தக் கொள்கை சரியா – தவறா என்று தலையிட்டு ஆராயும் உரிமை நீதித் துறைக்குக் கிடையவே கிடையாது. இந்திய உச்ச நீதிமன்றமும் தொடர்ச்சியாக இதே நிலையைத்தான் பல வழக்குகளில் எடுத்துவந்திருக்கிறது. எனவே, ஒரு கொள்கை முடிவை, குற்றநோக்கம் கொண்டது என்று எவராலும் கூறிவிட முடியாது.
அமைச்சரவை எடுத்த முடிவுக்காக முழு அமைச்சரவையையும் தனி அமைச்சர் ஒருவரையும் குற்றவாளியாகக் கருதிவிட முடியாது. எனவே, அமைச்சரவை எடுத்த முடிவில் ஒரு அமைச்சரை மட்டும் குற்றவாளி என்று முடிவுகட்ட சட்டத்தில் இடமே இல்லை, இதுவரை அமைச்சரவை முடிவுகள் தொடர்பான வரலாறிலும் இதுவரை கேட்டதுமில்லை.
‘பொது ஊழியர்’ என்ற வகையில் - அமைச்சர் செய்யும் தவறுகளுக்கு அவர் மீது வழக்கு தொடுக்கலாம், நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கலாம். ஆனால், அமைச்சரவை ஒட்டுமொத்தாக எடுக்கும் முடிவுக்கு அமைச்சர் ஒருவரை மட்டும் அதற்குப் பொறுப்பாக்க முடியாது. கூட்டுப்பொறுப்பில் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஒரு துறையின் அமைச்சரை மட்டும் குற்றவாளியாகப் பொறுப்பாக்கினால், எந்த அமைச்சரவையும் எதிர்காலத்தில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.
விளக்க வேண்டும் நீதித் துறை
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழும் அரசியல் கட்சிகளைக் கொண்டுவருவது மிகவும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்களுக்கு வேண்டாத அரசியல் எதிரிகளை ஆட்சியதிகாரம் மூலம் பழிவாங்குவது நடைமுறையாகிவிட்ட நாட்டில், இப்படியொரு முடிவை எடுத்துச் செயல்படுத்தினால் அது எல்லா மாற்றுக் கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும். எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு இந்த விவகாரம் தொடர்பான சட்ட விளக்கத்தை அளிக்க வேண்டும், அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு தனியொரு அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதையும் விளக்க வேண்டும்.
© தி இந்து
தொடர்புடைய கட்டுரைகள்
கேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்
தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.