கட்டுரை, அரசியல், நிர்வாகம், தொழில்நுட்பம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க சில யோசனைகள்

யோகேந்திர யாதவ்
10 Jan 2024, 5:00 am
0

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானவைதானா, அதில் தில்லுமுல்லுகள் செய்யவே முடியாதா என்ற விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. ‘இன்டியா’ கூட்டணி இதை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

இந்தக் கூட்டணியின் ‘ஒரு மன’தான தீர்மானம் - கடைசியாக நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ஒரே தீர்மானம்’ இது மட்டுமே – “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) செயல்பாடுகள் குறித்துப் பல சந்தேகங்கள் நிலவுகின்றன; இந்தச் சந்தேகங்களை எழுப்புகிறவர்கள் மின்னணு சாதனங்கள் பற்றிய நிபுணத்துவம் கொண்டவர்கள், அத்துறையிலேயே தொடர்ந்து பணியாற்றுகிறவர்கள்” என்று அத்தீர்மானம் தெரிவிக்கிறது.

எனவே, இதை அடியோடு கைவிட வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, வேறுவிதமான யோசனைகளைக் கூட்டணியின் தீர்மானம் தெரிவித்துள்ளது. “எங்களுடைய யோசனை மிகவும் எளிமையானது. வாக்களித்த பிறகு வாக்காளர் மட்டும் அறியும் வகையில் அதன் திரையில் தெரிந்து பிறகு காகிதத்தில் பதிவாவதோடு முடிந்துவிடுகிறது; அது அப்படியே அதற்குரிய பெட்டிக்குள் விழுவதற்குப் பதிலாக வாக்காளரிடம் தரப்பட வேண்டும், அதை அவர் தனியாக வைக்கப்படும் வேறொரு பெட்டியில் (வாக்குச் சீட்டைப் போலவே), தான் அளித்த சின்னத்தில்தான் பதிவாகியிருக்கிறதா என்று பார்த்த பிறகு போட்டுவிடும் ஏற்பாடு அவசியம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதைப் போலவே இந்தப் பெட்டியில் விழும் காகிதங்களையும் எண்ண வேண்டும்.”

இவ்வாறு அந்தத் தீர்மானம் கோருகிறது. இப்படிச் செய்தால்தான் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கிறது என்று வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முழுச் சந்தேகமும் நம்பிக்கையும் 

இந்த விவாதம் தொடர்பாக என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன்னால் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். இன்றைய அரசியல் உலகில் இரண்டு பெரிய பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முழுமையாக சந்தேகிக்கிறது, இன்னொன்று முழுமையாக நம்புகிறது. நான் நம்புகிற பிரிவைச் சேர்ந்தவன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பொதுத் தேர்தல்களின் முடிவுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்படும் தில்லுமுல்லுகளால் விளைந்தவை என்கிற குற்றச்சாட்டை நம்பாமல் தொடர்ந்து பல ஆய்வுகளைச் செய்திருக்கிறேன்.

தன்னுடைய தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியபோது அதை நான் வன்மையாக எதிர்த்தேன். பாஜகவிலேயே பல தலைவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தனர். அக்கட்சியின் பத்திரிகை தொடர்பாளராக இப்போதிருக்கும் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், அதை எதிர்த்துப் புத்தகமே எழுதினார். 2014, 2019 மக்களவை பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வியடைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என்று பல காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், அதில் தில்லுமுல்லுகள் செய்ய முடியாது என்று தொடர்ந்து வாதிட்டுவருவதால் எனது அரசியல் நண்பர்களிலேயே பலர் என் மீது விரோதம் பாராட்டுகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகப்பட மூன்று அடிப்படைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை.

முதலாவது, இயந்திரத்தின் மீதான அவநம்பிக்கை. எந்த மின்னணு சாதனத்தையும் நாம் விரும்பும்வகையில் செயல்பட வைக்க அதன் கட்டமைப்பில் மாறுதல்களைச் செய்ய முடியும், அதை நம் விருப்பத்துக்கேற்ப அவ்வப்போது மாற்றவும் முடியும்.

இரண்டாவது, இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் மீது பரவலாக நிலவும் அவநம்பிக்கை. இன்றைய ஆட்சியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் தலைவர்களுக்கு தார்மிக தயக்கம் என்று எதுவுமே கிடையாது. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பிறர் அறியாமல் நமக்குச் சாதகமாக மாற்றிவிடலாம், வெற்றிபெறலாம் என்று எவராவது கூறினால், அப்படியெல்லாம் செய்யக் கூடாது, நமக்கு அரசியல் ஆதாயமே வேண்டாம் என்று நிராகரிக்கும் அளவுக்கு நல்ல மனம் உள்ளவர்கள் அவர்கள் என்று எவராலும் கூற முடியுமா?

இறுதியாக, தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் என்ற நிறுவனம் மீதே இப்போது பலருக்கும் அவநம்பிக்கை அதிகரித்துவருகிறது. எனவே, ‘சாதாரண சந்தேகம்’ இப்போது, ‘பெரிய சதித் திட்டம்’ என்றே பேச வைக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரமும் சுயாட்சித்தன்மையும் வெகுவாக அரிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆளுங்கட்சி நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்தாலும் அதை எதிர்க்கும் தெம்பும் திராணியும் அதற்கு இருப்பதாக எவரும் நம்பத் தயாரில்லை. ஆளுங்கட்சியுடன் உடந்தையாக இருந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கூறினால் அதை நம்புவதற்குத்தான் அதிகம் பேர் இருக்கின்றனர்.

ஐயத்துக்கான ஆதாரம் எங்கே?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேவைப்படும் மாறுதல்களைச் செய்து, விரும்பியபடி தேர்தல் முடிவைக் கொண்டுவந்துவிடலாம் என்ற அடிப்படைச் சிந்தனைகள், அது சாத்தியம் என்பதையே உறுதியாகத் தெரிவிக்கின்றன என்பதே என்னுடைய கருத்து. ஆனால், இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் அப்படித்தான் நடந்தது என்று காட்ட சான்று எதுவுமே இல்லை. அதுவும் ஒரு மாநில அளவுக்குத் தேர்தல் முடிவை பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றும் அளவுக்கு மோசடிகள் நடந்தன என்று காட்ட சான்றுகளோ தடயங்களோ இல்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விவாதம் தோன்றியபோதெல்லாம், உங்களுடைய ஐயத்துக்கு ஏதேனும் ஆதாரம் காட்டுங்கள் அது அறிவியல்பூர்வமான ஆதாரமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, முதல் நோக்கில் பார்க்கும்போது வெளிப்பார்வைக்கே அதில் உள்ள மோசடி வெளிப்பட வேண்டும் என்று நானும் கேட்டுப் பார்த்தேன், அப்படி எதுவும் இதுவரை சிக்கவில்லை.

மத்திய பிரதேச சட்டப்பேரவைக்குச் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தல் ஒரு நல்ல உதாரணம். காங்கிரஸைவிட பாஜக 9% வாக்குகள் அதிகமாகப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எந்தத் தேர்தல் நிபுணரும் அனுபவமிக்க பத்திரிகையாளரும், கருத்துக் கணிப்புகளும் (ஒரேயொரு வாக்குக் கணிப்பு மட்டுமே விதிவிலக்கு) எதிர்பார்க்கவே இல்லை.

தேர்தல் முடிவு வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றே கருதுகிறேன். ஆயினும் அதுவே சான்றாகிவிடாது. தபாலில் வந்த வாக்குகள் எண்ணிக்கை விகிதத்துக்கும் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விகிதத்துக்கும் பொருத்தமில்லை என்று காங்கிரஸ் கூறியது.

இது வினோதமாக இருக்கலாம், ஆனால் இதுவும் ஏற்கெனவே நடந்திருக்கும் முன்மாதிரிதான். சிறிய கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதும் வினோதமாக இருக்கிறது, அதே எண்ணிக்கைக்குச் சமமாக பாஜகவுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன என்பதும் நம்பும்படியாக இல்லை. இது வினோதம்தான் - ஆனால் உண்மையில் அப்படியும் நடக்கக்கூடியதே!

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் | Samas 19 Dec 2023

என்ன செய்யும் தேர்தல் ஆணையம்?

இந்த விவாதத்திலேயே பிரச்சினை இதுதான். இயந்திரத்தை நம்புகிறவர்கள், தில்லுமுல்லு என்பதற்கு ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இதில் தில்லுமுல்லுகளே செய்ய முடியாது என்று நிரூபியுங்கள் என்று நம்பாதவர்கள் கேட்கின்றனர். அப்படித் தொழில்நுட்பரீதியாக நிரூபிப்பது தேர்தல் ஆணையத்தால் முடியாது.

இந்த விவாதங்கள் இப்படியே நீடிக்க அனுமதிக்கவும் முடியாது. நம்முடைய ஜனநாயக அமைப்புகள் மீதும் நடைமுறைகள் மீதுமான நம்பிக்கை வேகமாக சரிந்துகொண்டேவருகிறது. தேர்தல் என்பது போட்டியிடும் கட்சிகள் அனைத்துக்கும் சமமான வாய்ப்பைத் தரும் களமாக இல்லை. ஆளுங்கட்சிக்கு ஏராளமான சாதக அம்சங்கள் இருக்கின்றன. ஜனநாயக நடைமுறையில் நியாயமான ஒரே வழிமுறை வாக்களிப்பதும் வாக்கு எண்ணிகையும்தான். இப்போது வாக்கு எண்ணிக்கைதான் சந்தேகத்துடன் அலசப்படுகிறது.

தேர்தல் ஆணையத்துக்குச் சில யோசனைகளைத் தெரிவிக்கிறேன். மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டாம், அது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய பிரச்சினைகளைக் கிளப்பிவிடும். இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறுவதைப் போல வாக்களித்த பிறகு அவரவர் முத்திரையிட்ட வாக்குச் சீட்டை அவரவர்களிடமே தரும் நடைமுறையும் வேண்டாம்.

என் யோசனைகள்!

நான் கூறும் யோசனையை மிகுந்த கவனமுடன்தான் நிறைவேற்ற முடியும். ஆனால், 2024 மக்களவை பொதுத் தேர்தலில் இதை அமல் செய்ய போதிய நேரம் இருக்காது; தேர்தல் முடிவை மக்கள் ஏற்கச் செய்ய, தேர்தல் ஆணையம் நான்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

முதலாவது, வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் அலகு, வாக்களித்த பிறகு பதிவாகும் வாக்குச் சீட்டு ரசீது, வேட்பாளர்களின் சின்னங்களைப் பதிவேற்றும் பிரிவு ஆகியவற்றுக்கான மென்பொருள் என்ன என்பதை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் சரிபார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024: ஆட்டம் முடிந்துவிடவில்லை

யோகேந்திர யாதவ் 08 Dec 2023

இரண்டாவதாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறெந்த இயந்திரங்களுடனும் இணைக்கப்படுவதில்லை, தனியாகத்தான் இருக்கின்றன என்பதை அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தொழில்நுட்ப நிபுணர்கள் சரிபார்க்க அனுமதிக்க வேண்டும்.

மூன்றாவதாக, வேட்பாளர்களின் சின்னங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்கு என்பதை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருவுளச் சீட்டு மூலம் ஆணையம் தீர்மானிக்க வேண்டும்.

நான்காவதாக – இது மிகவும் முக்கியம் – வாக்காளர்களால் சரிபார்க்கப்பட்ட வாக்குச் சீட்டையும், இயந்திரத்தில் பதிவானதையும் எண்ணி, சரி பார்த்த பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். இதில் மாறுபாடு இருந்தால், வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுகள் எண்ணிக்கையின்படியே முடிவை தேர்தல் ஆணையத்தின் விதி 56டி(4)(டி)படி அறிவிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் வாக்குகளை எண்ணவும், முடிவுகளை அறிவிக்கவும் பல மணி நேரம் தாமதமாகலாம்; உடனடியாக முடிவை அறிய, தேர்தல் என்பது டி-20 கிரிக்கெட் போட்டி அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஏன் கூடாது ஒரே நாடு ஒரே தேர்தல்?
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
2024: ஆட்டம் முடிந்துவிடவில்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கரீப் கல்யாண்ஸ்கிரீனிங்இந்தி மாநிலங்கள்ஆகஸ்ட் 15சீரான நிதி மேலாண்மைமகள் திருமணம்ராகுல் காந்தியின் இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்!த கேரவன்கேசவானந்த பாரதிவிவசாயிகள்டாக்டர் தேரணிராஜன்என்ன பேச வேண்டும் என் பிரதமர்?கட்டாயமாக வலிமிகாத இடங்கள்எதிர்க்கட்சி உறுப்பினர்கள்இந்தியக் கடற்படைg.kuppusamyதோற்றவியல்ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடுமரோ எதிர் வேட்மருத்துவம்எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?ஃபாலி சாம் நாரிமன்: நீதித் துறையின் பீஷ்மர்பிளவுப் பள்ளத்தாக்குஎழுத்தாளர் பேட்டிஜேம்ஸ் பால்ட்வின் பேட்டிபா.வெங்கடேசன் சிறுகதைபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அருஞ்சொல்மனிதவளச் செயல்திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யும் என் சரித்திரம்புராஸ்டேட் வீக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!