கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கான வாக்களிப்பா?

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
23 Jun 2024, 5:00 am
0

டந்து முடிந்த 2024 பொதுத் தேர்தல் ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆதரவான வாக்களிப்பா? இந்தத் தேர்தல் தொடர்பாக ஆறு தொகுப்பு கட்டுரைகளைத் தயாரித்த நாங்கள் மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை காண்பதுடன் நிறைவுசெய்கிறோம்.

ஒரு வகையில், இதற்கான வெளிப்படையான பதில் – ‘ஆமாம்’. கடந்த பத்தாண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய மாபெரும் தலைவர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசை அடுத்த ஐந்தாண்டுகளில் மாற்றியமைத்துவிட இத்தேர்தலில் ஆதரவு கோரினார். அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப அங்கீகாரம் வழங்க இந்திய வாக்காளர்கள் மறுத்துவிட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக கசப்பான விமர்சனங்களை அவர் முன்வைத்தபோதும் இந்தி பேசும் மாநிலங்களில் அவருடைய வகுப்புவாதப் பிரச்சாரம் வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இந்தத் தேர்தல் முடிவு அவருக்குத் தனிப்பட்ட வகையில் தோல்வியே, தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற பிம்பமும் இப்போது சரிந்துவிட்டது.

சில கேள்விகள் வெளிப்படையானவை: ‘போட்டியிடும் சர்வாதிகார முறை’யிலிருந்து ‘முழு அளவு சர்வாதிகார நாடு’ ஆகச் சரிந்துவிடும் போக்கு தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆளுங்கட்சிக்கு (பாஜக) உள்ளேயும் - வெளியேயும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் – வெளியேயும், ஜனநாயக செயல்பாடுகளுக்கான இடம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இந்து பேரினவாதத்துக்கு ஆதரவாக நாட்டின் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுவிடாமல் ஆளுங்கட்சியின் கருத்தியல் திட்டத்துக்குக் கடிவாளம் போடப்பட்டுவிட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இவை எல்லாமே முக்கியமான அம்சங்கள்தான், ஆனால் இந்த முறை கிடைத்த தேர்தல் வெற்றி ‘ஜனநாயகம் – மதச்சார்பின்மைக்கு ஆதரவான வாக்களிப்பு’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடப் போதுமானவை அல்ல. ‘வாக்களிப்பால் வந்த விளைவுகள்’ என்று வேண்டுமானால் இவற்றைக் கூறலாமே தவிர, வாக்காளர்கள் இந்த நோக்கத்துடன்தான் வாக்களித்தார்கள் என்று கூறிவிட முடியாது. இந்தத் தேர்தல் முடிவு ஆய்வு என்பது வாக்காளர்கள் அளித்த பதில்களிலிருந்து ஆய்வர்களாகத் திரட்டுவது. வாக்காளர்களின் மனங்களை உண்மையாக அறியும் வரையில் இந்த முடிவுகளில் எவ்வளவு செல்லத்தக்கவை என்பதை உறுதியாகக் கூற முடியாது.

லோக்நீதி - சிஎஸ்டிஎஸ் அறிக்கை

ஆனால் இவற்றை நேரடியாக அறிய, லோக்நீதி - சிஎஸ்டிஎஸ் அமைப்பு வாக்காளர்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தியபோது கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த விடைகள் மூலம் நாம் நேரடியாகவே தெரிந்துகொள்ளலாம். வாக்களிப்புக்குப் பிறகு – வாக்கு எண்ணிக்கைக்கு முன்னால் என்று சுமார் 20,000 வாக்காளர்களை நாடு முழுவதும் சந்தித்து உரையாடிப் பெற்ற பதில்கள் இவற்றுக்கான விடைகளைத் தருகின்றன. அந்த அமைப்பு கடந்த முப்பதாண்டுகளாக இப்படி ஆய்வுசெய்கிறது.

கடந்த காலத்தில் எங்களில் இருவர் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். இந்த முறை நாங்கள் அதில் இல்லை. வழக்கமான வாக்குக் கணிப்புகள், வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் - அவருடைய சமூகப் பின்புலம் என்ன என்பதோடு தரவுகளை நிறுத்திக்கொள்ளும். இந்த அமைப்போ, ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் கேள்விக் கேட்டு பதில்களை ரகம் வாரியாகப் பதிவுசெய்யும். இந்த அறிக்கையை முழுதாக ஆராய்ந்து அறிஞர்கள் முடிவைச் சொல்வதற்குள், எங்களுக்குத் தெரிந்தவரை சிலவற்றைக் கூறுகிறோம்.

ஜனநாயகம் பழகிவிட்டது

நாட்டில் எழுபதாண்டுகளாக ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடப்பதால், மக்களிடையே ஜனநாயக உணர்வு ஊறியிருக்கிறது, அதை யாராலும் எளிதில் தகர்த்துவிட முடியாது. நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்குத்தான் ஜனநாயகம் என்று பதில் அளித்தவர்களில் 46% தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர்.

பதில் சொல்லத் தெரியாது என்றவர்களை நாங்கள் ஆய்வில் சேர்க்கவில்லை. எஞ்சியவர்களை வைத்துப் பார்த்தால் மூன்றில் இரண்டு பங்கினர், ஒரே கட்சி அல்லது கூட்டணிக்கு தொடர்ந்து வாக்களிக்கக் கூடாது, மாற்றி மாற்றி வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் வளர்ச்சி இருக்கும் என்றனர்.

ஜனநாயகத்துக்கான ஆதரவு என்பது அரசுகளை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றும் வல்லமையிலும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மனம்போனபடி செயல்பட்டுவிடாமல் தடுப்பது அவசியம் என்றும் வாக்காளர்கள் கருதுகின்றனர் - ஆனால், இது மோடிக்கு பிடிக்காது. அரசு எடுக்கும் முடிவு சரியில்லை என்றால் குறுக்கிட்டு தடுக்கக்கூட மக்களுக்கு உரிமையிருக்கிறது என்று 77% பேர் கருத்து தெரிவித்தனர். அரசின் முடிவு தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று அதே 77% தெரிவித்தனர்.

அரசமைப்புச் சட்டப்படியான தடைகளும் கண்காணிப்புகளும் அவசியம் என்று 68% பேர் ஆதரிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தவறான முடிவுகளை நீதித் துறையும், அரசமைப்புச் சட்டப்படி உருவான பதவிகளில் உள்ளவர்களும் தடுத்து நிறுத்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.

தடைகளற்ற ஜனநாயகம் என்றால் என்ன என்று விவரிக்கும் ஆற்றல் இந்திய வாக்காளர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். தான்தோன்றித்தனமாக, யாருக்கும் பதில் சொல்ல விரும்பாத, தடையே இல்லாத ஒரு நிர்வாகத்தை ஏற்க அவர்கள் விரும்பவில்லை.

வாக்காளர்களுடைய இந்த ஜனநாயக ஆதரவுப் போக்கைக் கொண்டாடும் அதேநேரத்தில், மிதமான சர்வாதிகாரம் இருக்கலாமா என்ற கேள்வியை நிராகரித்துவிட்டு, தேர்தலைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக முடிவெடுக்கும் தலைவர்தான் தேவை என்று நான்கில் ஒரு பங்கு (25%) வாக்காளர்கள் பதில் அளித்திருப்பதையும் கவனிக்க வேண்டும். 

மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் அதை ஏற்பதாகவும் மேலும் மூன்றில் ஒரு பங்கினர், ஒரு வகையில் அந்தக் கருத்தையும் ஏற்பதாகவும் பதில் அளித்துள்ளனர். அதாவது, துணிச்சலாக முடிவெடுக்கும் தலைவர் தேவை என்கின்றனர்.

2019ஆம் ஆண்டு இதே கேள்விகளுக்குப் பதில் அளித்தவர்களைவிட இப்போது பதில் அளித்தவர்களுடைய சதவீதம் குறைந்துவிட்டது குறித்து நாம் ஆறுதல் அடையலாம். சர்வாதிகாரம் கூடாது என்பதற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் இருந்தாலும், சர்வாதிகாரி போல முடிவெடுப்பதை ஆதரிக்கும் வாக்காளர்களின் சதவீதம் லேசாக உயர்ந்திருக்கிறது!

கடந்த ஐந்தாண்டு ஆட்சி ஜனநாயகம் குறித்த கவலையையும் அதிகப்படுத்தியிருக்கிறது. மக்களில் 67% மட்டுமே தங்களுடைய வாக்குகளுக்குப் பயன் இருக்கிறது என்று நம்புகின்றனர். இந்தியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஜனநாயகம் தொடர்பாக நம்பிக்கை தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.

தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்திருப்போர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. தேர்தல் நடைமுறை நம்பகமானது என்று 2019இல் கூறியவர்கள் எண்ணிக்கை 57%லிருந்து 47% ஆகவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று கூறியவர்கள் எண்ணிக்கை 57%லிருந்து 34% ஆகவும் சரிந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு அவர்களுடைய நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் என்று நம்புவோம்.

அடிப்படையான ஜனநாயகக் கூறுகள் மீறப்பட்டதற்குக் காரணம் மோடி தலைமையிலான அரசுதான் என்று கருதி, அந்த அரசைத் தண்டிக்கும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா என்று இன்னமும் அறிய முடியவில்லை. இந்த ஆய்வு இந்தக் கோணத்தில் கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெறவில்லை. தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

பாஜகவில் உள்ளவர்களைவிட எதிர்க்கட்சிக்காரர்கள் அதிக ஊழல் செய்தவர்கள் என்பதால் கைதுசெய்யவில்லை, அவர்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் என்பதால்தான் கைதுசெய்யப்பட்டனர் என்றே மக்கள் கருதுகின்றனர். இந்த அரசிடம் பிடிக்காதது எது என்று கேட்டபோது, 0.8% பேர் இது சர்வாதிகார அரசு என்றனர். இந்த அரசுக்கு ஏன் இன்னொரு வாய்ப்பைத் தர மாட்டீர்கள் என்று கேட்டபோது - இது சகிப்புத்தன்மையில்லாத அரசு, மக்களுடைய உரிமைகளை நசுக்கும் அரசு என்று 1.1% பேர் கூறியுள்ளனர்.

இவையெல்லாம் மிகவும் குறைவான எண்களே. ஆனால், இந்தத் தேர்தலில் குறைவான எண்கள்தான் பல முடிவுகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன.

பேரினவாதம் பற்றி…

ஜனநாயக உரிமைகள் அவசியம் என்று வலியுறுத்திய அதே எண்ணிக்கையில், மதவாதம் குறித்து தீவிரமாக கருத்து தெரிவிக்கவில்லை மக்கள். இது வியப்பைத் தரவும் இல்லை. இந்து மதப் பேரினவாதத்துக்கு ஆதரவாக மக்களைத் திருப்பிவிட்டது பாஜக என்று பேராசிரியர் சுஹாஸ் பல்ஸிகர் அடிக்கடி நிரூபித்துவருகிறார். சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் குறித்து பெருந்தலைவர் கடுமையாக சாடிய நிலையில், மக்கள் இந்த விவகாரத்தில் திடீரென மதவாதத்தை எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

ராமர் கோவில் திறப்பு விழா முக்கியமான சாதனை என்று 22% பேர்தான் கூறினர், ராமர் கோயிலுக்காக  வாக்களிப்போம் என்று 5% பேர்தான் கூறியுள்ளனர் என்பது பாஜக – ஆர்எஸ்எஸ் இரண்டின் நம்பிக்கையையும் தகர்த்திருக்கும். ராமருக்குக் கோயில் கட்டியதால் சிலர் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருகின்றனரே தவிர அதற்காக ஆதரவு வாக்குகள் ஒரேயடியாகக் குவிந்துவிடவில்லை.

‘அனைவருக்குமானதுதான் இந்தியா’ என்பதையே பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் ஏற்கிறார்கள். இது தொடர்பாக பிரதமர் செய்த பிரச்சாரங்களுக்குப் பயன் இல்லை. ‘இந்துக்களுக்கு மட்டும்தான் இந்தியா சொந்தம்’ என்பதை ஒரு பங்கினர் மட்டுமே ஏற்றால், ஏழு பங்கினர் ‘அனைவருக்கும் சொந்தம்’ என்பதையே ஏற்கின்றனர். ‘பெரும்பான்மை மத மக்களுடைய நம்பிக்கைகள் ஏற்கப்பட வேண்டும்’ என்ற கருத்து 2019ஐவிட 2024இல் சரிவையே சந்தித்திருக்கிறது. 2004, 2009இல் அதிகமாக இருந்தாலும் படிப்படியாக குறைந்துவருகிறது. 2014இல் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்கள் 40%, 2019இல் - 29%, 2024இல் - 21%.

அதேவேளையில், சிறுபான்மைச் சமூக மக்களுக்கான உரிமைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு இதே அளவில் ஆதரவும் அதிகரிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பிரதமரின் பிரச்சாரம் இதற்கு ஓரளவு காரணமாக இருக்கலாம். சிறுபான்மைச் சமூக மக்களின் நலன்களைக் காப்பது அரசின் கடமை என்பதை இருபதாண்டுகளுக்கு முன்னால் 67% ஆதரித்தனர் 2014இல் சரிந்த இது, இப்போது 2024இல் 38% ஆக இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்

பார்த்த எஸ். கோஷ் 16 Jun 2024

‘ஓரளவுக்கு ஏற்கிறோம்’ என்பவர்களையும் இத்துடன் சேர்த்தால், மூன்றில் ஒரு பங்கினர் ஆதரிக்கின்றனர் என்று கருதலாம். சிறுபான்மை மக்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியவர்கள் எண்ணிக்கை 2019இல் 34% ஆக இருந்து, 2024இல் 27% ஆக சரிந்திருக்கிறது. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட முடியாது.

மதப் பேரினவாதத்துக்கு அரசியல்ரீதியாக ஆதரவு தருவது மிதமாகிவிட்டாலும் பண்பாட்டு அடிப்படையில் இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதற்கான அழுத்தம் அதிகரித்துவருகிறது. பெரும்பான்மை சமூகத்தின் பழக்க வழக்கங்களைச் சிறுபான்மையினர் ஏற்க வேண்டும் என்று கூறுவோர் எண்ணிக்கை 2019 காலத்தைவிட 2024இல் 7% அதிகரித்திருக்கிறது.

‘இந்தக் கருத்தை ஏற்கிறோம்’ அல்லது ‘வலுவாக ஏற்கிறோம்’ என்று கூறுகிறவர்கள் எண்ணிக்கை 2004ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ‘இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறோம்’ – ‘வலுவாக ஏற்க மறுக்கிறோம்’ என்று கூறுகிறவர்களுடைய எண்ணிக்கையைவிட அதிகமாகியிருக்கிறது.

இந்தத் தரவுகளை ஆராயும்போது, மதச்சார்பின்மைக்கு ஆதரவாக வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. தேர்தல் முடிவை வைத்து வாக்காளர்களின் மனங்களை முழுதாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது என்றாலும் பேரினவாத பரப்புரை இந்திய வாக்காளர்களை முழுமையாக முடிவை மாற்றிக்கொள்ளும்படிச் செய்துவிடவில்லை.

மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் எதிர்காலத்திலும் இந்தியர்கள் ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் தொடர்ந்து ஆதரவாகவே இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமானவை அல்ல என்றாலும், நம்முடைய குடியரசை மீட்க நினைப்போர் செய்ய வேண்டியவற்றுக்கான அடிப்படையாக நிச்சயம் உதவும். இந்தியக் குடியரசையே மாற்றியமைத்துவிட முயன்ற ஒரு தேர்தலில் கிடைத்துள்ள இந்த முடிவைத் தவிர வேறெதையும் பெரிதாக நாம் எதிர்பார்த்துவிடவும் முடியாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜக அடைந்தது தோல்வியே!
2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்
நொறுங்கின... காங்கிரஸ் பற்றிய 7 கற்பிதங்கள்
இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1
ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்
இந்திய மக்களின் மகத்தான தீர்ப்பு!
வாஜ்பாய் போன்று தோற்றிருக்க வேண்டியவர் மோடி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


ஷாங்காய் நகரம்அரசியல் தலைவர்பாமகஊர்வலம்சீர்திருத்தங்கள்துணை மானியம்பாதுகாப்பு மீறல்தீண்டத்தகாதவர்கள்அறநிலைத் துறைநர்த்தகி நடராஜ்ஒரு பள்ளி வாழ்க்கைநார்சிஸ்ட்காந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்கடுப்புபத்திரிகைச் சுதந்திரம்தேர்வுக்குழுகோவைசாருவுக்கு விஷ்ணுபுரம் விருதுகி.வீரமணி பேட்டிநம்முடைய அடித்தளமே விமானமாக இருக்கிறது: வித்யாசங்கஎன்சிஇஆர்டிதாராளமயம்பத்திரிகைகள்அந்தரம்பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?பெரியாரும் வட இந்தியாவும்பீமாகோரேகாவோன்இரவு நேர அரசு மருத்துவமனைஇன அழிப்புகள்லலிதா ராம் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!