கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

நொறுங்கின... காங்கிரஸ் பற்றிய 7 கற்பிதங்கள்

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
16 Jun 2024, 5:00 am
0

மூக ஊடகங்களில் கடந்த வாரம் இதைப் பார்த்திருப்பீர்கள்: 85% மதிப்பெண் வாங்கியவன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு போவான், 45% வாங்கியன் வெற்றிக் களிப்பில் மிதப்பான்.

உண்மை என்னவென்றால் இது கேலிச்சித்திரம் அல்ல, பாஜக ஆதரவாளர்கள் தங்களை அறியாமலேயே இதை வெளியிட்டு மன ஆறுதலைத் தேடிக்கொண்டனர், இது கள நிலவரத்துக்கு மிகவும் நெருக்கமானது. நீங்கள் இருக்கும் மாநிலம் எது என்பது முக்கியமில்லை, இப்போது மாறிவரும் போக்குக்கு மிகவும் பொருந்துவதாக இருக்கிறது இது. 

உயிர்த்தெழுந்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 தொகுதிகளை, பாஜக வென்ற 240 தொகுதிகளுடன் நேரடியாக ஒப்பிட்டால் இது மிகப் பெரிய வெற்றி அல்லதான்; மிகவும் குறைந்த தொகுதிகள் வரிசையில் - முந்தைய எண்ணிக்கைகளைவிட சற்றே அதிகம். ஒரு கட்சி எத்தனை தொகுதியை வென்றது என்ற கணக்கைக் கொண்டு உண்மை அரசியலை அறிந்துகொண்டுவிட முடியாது. இந்திரா காந்தி காலத்தில் 1980இல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய மீட்சிக்கு அடுத்து, இது மிக முக்கியமானது.

கடந்த இரண்டு மக்களவை பொதுத் தேர்தல்களில் காங்கிரஸார் மனங்கலங்கும்படியாக 44, 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 2019 தேர்தல் முடிவை ஆராய்ந்தால், அந்த 52இல் 32 கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களிலிருந்து கிடைத்தவை. இந்த மூன்று மாநிலங்களிலுமே காங்கிரஸுக்கு பாஜக பெரிய போட்டியாளர் கிடையாது. தமிழ்நாட்டில் திமுகவுக்கு இளைய தோழமைக் கட்சியாகத்தான் காங்கிரஸ் இருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்த முறை பாஜக மக்களவையில் கூட்டணிக்கு, ‘400 தொகுதிகளுக்கும் மேல்’ என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது; அதன் நோக்கம், தேசிய அளவில் தனக்குப் போட்டியாக இருக்கும் காங்கிரஸை அடையாளம் தெரியாமல் அழித்துவிட வேண்டும்; காங்கிரஸின் மதச்சார்பற்ற – சமத்துவ – சமூக நீதிக் கொள்கையை வெற்றிபெற விடாமல் செய்துவிட வேண்டும், எதிர்காலத்தில் தங்களை வீழ்த்தக்கூடிய தலைவரை (ராகுல் காந்தி) தோற்கடித்து அரசியலைவிட்டே விலக வைத்துவிட வேண்டும் என்பவை.

‘இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 40க்கும் குறைவான தொகுதிகள்தான் கிடைக்கும், அவையும் தென்னிந்திய மாநிலங்களில் மட்டும்தான் சாத்தியம்’ என்றுகூட பேசப்பட்டது. காங்கிரஸைத் தென்னிந்தியக் கட்சியாக ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தன. இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்து வீறுகொண்டு எழுந்த காங்கிரஸ் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டதுடன், தொகுதிகள் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கிக்கொண்டது. இவற்றையெல்லாம் மனதில் இருத்திப் பார்த்தால் தெரியும் இந்த எண்ணிக்கை எவ்வளவு முக்கியமானது என்று.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

ஏறுமுகத்தில் காங்கிரஸ்

அரசியல் ஆதரவையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்வதில் காங்கிரஸ் இப்போது ‘ஏறுமுக’த்தில் இருக்கிறது. இந்த அம்சம்தான் அதன் வியக்க வைக்கும் திருப்புமுனையாகும். எல்லாவிதத்திலும் காங்கிரஸ் ஆதாயம் அடைந்திருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் ஹரியாணா தொடங்கி பிஹார் வரையில் அது வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 5லிருந்து 23 ஆக உயர்ந்திருக்கிறது.

மஹாராஷ்டிரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட வென்றுள்ளது, பஞ்சாபில் பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்காமல் தடுத்துவிட்டது. மணிப்பூரில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியதுடன் நாகாலாந்திலும் மேகாலயத்தின் காரோ குன்றுப் பகுதியிலும் வென்று, வடகிழக்கு மாநிலங்களில் தனது கால் தடத்தை வலுவாகப் பதித்துவிட்டது. எதிர்க்கட்சிகளிடையே மிகவும் வலுவற்ற காட்சியாக முன்னர் பார்க்கப்பட்ட காங்கிரஸ், தனது காலை வலுவாக ஊன்றி எழுந்து நின்றுவிட்டது.

காங்கிரஸின் வளர்ச்சியை, அது வாங்கியுள்ள வாக்குகள்தான் முழுமையாகக் காட்டுகின்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள கூடுதல் வாக்குகள் 1.7%, இதை மிகப் பிரமாதம் என்று கூற முடியாவிட்டாலும் மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சி என்று கூறலாம். கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் கூட்டணி அமைத்துக்கொண்டதால், கடந்த பொதுத் தேர்தலைவிட 93 தொகுதிகள் அதற்குக் குறைந்துவிட்டன. தான் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை மட்டும் பார்க்கும்போது 2019 தேர்தலைவிட 9.8% கூடுதலாக பெற்றிருக்கிறது.

பாஜகவை இத்துடன் ஒப்பிட்டால் அதன் மொத்த வாக்குகள் 1.6% ஒட்டுமொத்தமாகக் குறைந்திருக்கிறது. கேரளம், ஒடிஷா, பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குச் சதவீதம் அதிகரித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் பிற கட்சிக்கு சம கூட்டாளியாகவோ, இளைய கூட்டாளியாகவோ போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கு வாக்குச் சதவீதம் அதிகரித்துள்ளது. தான் போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் 23% வாக்குகளை சராசரியாக கூடுதலாகப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட தொகுதிகளில் அல்லது அது மட்டுமே பெரிய கூட்டாளியாக இருந்த தொகுதிகளில் - வாக்குச் சதவீதம் 3% மட்டும் அதிகரித்துள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

7 கற்பிதங்கள் தகர்ப்பு

‘பாரத் ஜோடோ’ யாத்திரை தொடங்கிய 21 மாத காலத்தில், காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பொதுவெளியில் பேசப்பட்ட ஏழு கற்பிதங்களை இந்தத் தேர்தலில் அது தகர்த்துவிட்டது.

கற்பிதம் 1: ஒரு மாநிலத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டால் காங்கிரஸ் கட்சியால் பிறகு மீளவே முடியாது. 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ், 2023 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்களுடைய அமோக ஆதரவுடன் ஆட்சியையே பிடித்துவிட்டது. இந்த ஆதரவு சமீபத்திய மக்களவைத் தேர்தல் முடிவிலும்கூடத் தொடர்ந்திருக்கிறது.

கற்பிதம் 2: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை தனித்து (ஒண்டிக்கு ஒண்டி) – அதிலும் இந்தி பேசும் மாநிலங்களில், எதிர்த்துப் போட்டியிட முடியாது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் 190 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின, அதில் காங்கிரஸுக்குக் கிடைத்தவை 15 மட்டுமே; 2024இல் 215 தொகுதிகளில் பாஜகவுடன் நேருக்கு நேர் போட்டியிட்டு 62 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அத்துடன் இத்தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாக்குகள் சதவீதத்தையும் பாதியாகக் குறைத்திருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் காங்கிரஸுக்கு வாக்குகள் அல்லது தொகுதிகள் குறைந்துவிடுகின்றன என்ற கற்பிதமும் இந்த முறை ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் தகர்க்கப்பட்டுவிட்டது.

கற்பிதம் 3: மாநிலக் கட்சியாலோ, சமுதாயம் சார்ந்த கட்சியாலோ வெல்லப்பட்ட தொகுதிகளைக் காங்கிரஸால் மீட்கவே முடியாது. அசாமில் ஏஐயுடிஎஃப் கட்சியின் பத்ருதீன் அஜ்மலை, காங்கிரஸ் மண்ணைக் கவ்வ வைத்த விதமானது அந்தக் கற்பிதமும் தவறு என்று நிரூபித்துவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸின் வாக்குகளை இந்தக் கட்சி படிப்படியாக அரித்துவந்தது. ஹரியாணாவில் ஜேஜபி கட்சியையும் காங்கிரஸ் இவ்வாறாகவே தோற்கடித்துவிட்டது.

கற்பிதம் 4: பாஜகவால் மேற்கொள்ளப்படும் ஆள் இழுப்பு வேலையைக் காங்கிரஸால் தடுக்க முடியாது என்பதும் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த மக்களவை பொதுத் தேர்தலின்போதே இமாச்சலத்தின் சில தொகுதிகளில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர், பாஜகவுக்குத் தாவிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிப் பேரை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர்.

கற்பிதம் 5: தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் முழுமையாக வெற்றி பெறாமல், தோழமைக் கட்சிகளுக்குக் காங்கிரஸ் பெரிய சுமையாக இருக்கிறது என்ற கற்பிதமும் இந்தத் தேர்தலில் முறியடிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் மட்டுமல்ல உத்தர பிரதேசம், பிஹார், டெல்லி, ஜம்மு – காஷ்மீரில் தான் போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்குகளையும் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மட்டுமே விதிவிலக்கு. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி வலுவான தோழமைக் கட்சியாகவே இருந்து அதிக வாக்குகளைத் தோழமைக் கட்சிகளுக்கும் ஈர்த்ததுடன், தனது கொள்கைகளாலும் தேர்தல் அறிக்கையாலும் வெற்றியை எளிதாக்கியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

கற்பிதம் 6: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மடிந்துவிட்டது என்பது பொய்யாக்கப்பட்டுவிட்டது. சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்ட காங்கிரஸ், 2% வாக்குகளை மட்டுமே ஈர்த்திருந்தது. இந்த முறை சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கும் காரணமாக இருந்ததுடன் ராய்பரேலி, அமேதி தொகுதிகளுடன் அலாகாபாத், சஹரான்பூர், சீதாபூர், பாராபங்கி ஆகிய முக்கியத் தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளது. போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வெற்றிபெறாவிட்டாலும் பாஜகவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியிடமிருந்து விலகிய பட்டியல் இனத்தவருக்கும், ‘இந்தியா’ கூட்டணியைத் தொடர்ந்து ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கும் காங்கிரஸ் கட்சி பெரிய பற்றுக்கோடாக இந்தத் தேர்தலில் விளங்கியது. இவ்விரு தரப்பு வாக்குகளையும் ஒருங்கிணைக்க முக்கிய காரணியாகச் செயல்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டும் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொண்டது.

கற்பிதம் 7: காங்கிரஸ் கட்சியால் இனி மக்கள் இயக்கங்களை நடத்த முடியாது, அப்படியே நடத்தினாலும் அந்த ஆற்றல் மங்காமல், அதை அப்படியே தேர்தலில் வாக்குகளாக மாற்றும் வலிமை அதற்கு இல்லை என்ற கற்பிதமும் இந்தத் தேர்தலில் உடைந்து நொறுக்கப்பட்டுவிட்டது. ஆளுங்கட்சிக்கு எதிராக எப்படி இயங்க வேண்டும், மக்களுடைய எதிர்ப்பை எப்படி ஆதரவு வாக்குகளாகத் திரட்டி வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தனது அனுபவத்தைக் காட்டி வெற்றிபெற்றுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டம், முஸ்லிம்கள் நடத்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பலன்களைக் காங்கிரஸ் ஒருமுகப்படுத்தி வென்றுள்ளது. (ஆனால் சுரங்கத் தொழிலதிபர்களுக்கு எதிராக பழங்குடிகள் நடத்திய போராட்டத்தின் பலனை, சத்தீஸ்கரில் பெற காங்கிரஸ் தவறிவிட்டது). பாரத் ஜோடோ அபியான், மக்கள் குழுக்கள், அரசியல் சாராத மக்கள் போராட்ட இயக்கங்கள் ஆகியவை இணைந்து பணியாற்றி வெற்றிபெற முடியும் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

தோல்விகளும் உண்டு

இவையெல்லாம் காங்கிரஸ் அரசியலில் புதிய தொடக்கம்தான், ஆனால் இதில் கிடைத்த வெற்றியால் மட்டுமே திருப்தியடைந்து மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. இவ்வளவு வெற்றிகளுக்கும் இடையில் சில தோல்விகளும் ஏற்பட்டுள்ளன. தெலங்கானாவில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, மக்களவை பொதுத் தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி தோல்வி அடைந்தபோது அதன் சமூக அடித்தளத்தை முழுதாகக் கைப்பற்றத் தவறியது.

ஒடிஷா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் – பாஜக இடையிலான கள்ளக்கூட்டுக்கு இடையில் புகுந்து முக்கியமான இடத்தைப் பிடிக்க தவறிவிட்டது. கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மாநில காங்கிரஸ் அரசு நிறைவேற்றியபோதிலும், அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய மக்களவைப் பொதுத் தேர்தலில் தவறிவிட்டது.

குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்டில் பாஜகவின் செல்வாக்கைத் தகர்க்க காங்கிரஸ் வழி கண்டாக வேண்டும். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகளுடன் கூட்டணி என்ற தேர்தல் உத்தியால், திரிணமூல் காங்கிரஸின் தோழமையை வலிமையிழக்கச் செய்தது. பாஜக ஆறு தொகுதிகளில் வெற்றிபெறவும் காரணமாக இருந்துவிட்டது. ஷீலா தீட்சித் தலைமையில் டெல்லியைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சியால் இழந்த ஆதரவையும் செல்வாக்கையும் மீட்க முடியாமல் இருப்பதும் தோல்வியே.

முடிவில்லாத இந்த அரசியல் பயணத்தில் காங்கிரஸ் பயணிக்க வேண்டிய தொலைவு மீக நீண்டது, ஆனால் 99 தொகுதிகள் என்பது – மோசமான அரசியல் களம், (ஆளுங்கட்சிக்கு ஆதரவான) தேர்தல் ஆணையம், விரோத மனப்பான்மையுள்ள அரசியல் விமர்சகர்கள், ஆளைக் குறிவைக்கும் எதிர்க்கட்சியின் தனிப்பட்ட விமர்சனம் ஆகியவற்றின் பின்னணியில் – தோல்விகரமான எண்ணிக்கை அல்ல.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






தேர்தல் சீர்திருத்தங்கள்மடாதிபதிமாணவிகள்1977: மீண்டும் நினைவுக்கு வருகிறதுமாநிலக் கட்சிகள்தீவிரவாதம்வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான்சானியாராம் – ரஹீம் யாத்திரைசீராக்கம்சாதிய ஒடுக்குமுறைமாணவர் அமைப்புகள் அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிகூட்டணி முறிவுமுதல்வர் பதவிமுதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்மணிப்பூரிநீதிபதி கே சந்துருகலைஞர் சமஸ்ரஜாக்கர்கள்புலனாய்வு இதழியல்குறைப் பிரசவம்jawaharlal nehru tamilஇரண்டாம்தர மாநிலம்தமிழ் மன்னர்கள்காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பசோ.கருப்பசாமி கட்டுரைகரண் தாப்பர் பேட்டிதேர்தல் அறிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!