கட்டுரை, அரசியல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

அடித்தளக் கட்டமைப்புக்கு மோடி செய்திருப்பது அதிகம்

தௌலீன் சிங்
17 Feb 2023, 5:00 am
1

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கூச்சல், சூடான வாக்குவாதம், பரஸ்பர மார் தட்டல் ஆகியவற்றுக்கு இடையே சொன்ன ஒரு கருத்து, ‘உண்மைதானே!’ என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. 

மோடியின் பதில்

தொழிலதிபர் அதானியின் நிறுவனம் வேகமாக வளர்ந்ததற்குக் காரணம் பிரதமர் மோடியுடன் அவருக்கிருக்கும் நெருக்கம்தான் என்றும் அவருடைய நிறுவனம் தொடர்பாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் முறைகேடுகள் பற்றிய புகார்களுக்கு மோடி பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து குற்றஞ்சாட்டினர். மோடி தனது பதிலுரையில் அதானியின் பெயரையே உச்சரிக்காததுடன், எந்தக் குற்றச்சாட்டையும் குறிப்பிட்டு தனித்தனியாக மறுக்கவும் இல்லை.

தன் மீது எவ்வளவு அவதூறுகளை எத்தனை முறை வீசினாலும், தான் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை நேரில் காணும் மக்கள், அதனால் பலன் அடைந்த மக்கள் தன்னை ஆதரிக்கும் வரை இந்தக் குற்றச்சாட்டுகளால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்றார் மோடி. நாட்டின் அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரதமர்களைவிட கடந்த 9 ஆண்டுக் காலத்தில் தான் செய்த சாதனைகள் அதிகம் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைக் காக்கும் கேடயமாக அது செயல்படும் என்றும் பதில் அளித்தார். 

காங்கிரஸ் கட்சி மட்டுமே ஏகபோகமாக இந்த நாட்டை ஆளும்விதத்தில் பெரும்பான்மை வலுவுடன் இருந்தபோது பல பதிற்றாண்டுகளை வீணடித்துவிட்டதாகவும், இந்தியாவைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் இயற்கை வளங்களிலும் சிறியதான நாடுகள் பல வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன; இது ஏன் என்று ஆராய்ந்தபோது அடித்தளக் கட்டமைப்பு உள்பட பல துறைகளில் காங்கிரஸ் அரசுகள் போதிய அக்கறையுடன் செயல்படாமல், அலட்சியமாக இருந்ததன் பலனை நாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருப்பது தெரியவருகிறது என்று மோடி குறிப்பிட்டார்.

நம்மைவிட சிறிதான பல நாடுகளுக்குச் சென்றுவந்த எனக்கும் இதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகள் வளர்ந்துவிட்டபோது நம்மால் ஏன் வளர முடியவில்லை என்று அரசியல் ஆட்சியாளர்களையும் மூத்த அதிகாரிகளையும் நான் கேட்டிருக்கிறேன். “இந்தியாவைப் பிற நாடுகளுடன் ஒப்பிடவே முடியாது, இந்தியாவின் பிரச்சினைகள் தனித்துவமானவை, இங்கே வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் கடினம்” என்றே பதில் அளித்தார்கள்.

ஏற்றுக்கொள்ளவே முடியாத சமாதானம் அது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன் 06 Feb 2023

சோனியா காந்தியின் கட்டுரை

நடந்து முடிந்தது நாட்டின் வரவு செலவு பற்றிய நிதிநிலை அறிக்கைக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர். அங்கே நாட்டின் பொருளாதார நிலை குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் அதானி பற்றிய விவகாரத்தை முன்னிறுத்தி அதைத்தான் முதலில் விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றன.

இதற்கு மோடி அரசின் எதிர்வினை முட்டாள்தனமாகவும் மிகவும் அற்பமானதாகவும் இருந்தது. “அதானி விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை உள்நோக்கம் கொண்டது, இந்தியாவுக்கு எதிரான சதி என்று கிட்டத்தட்ட ஒப்பாரியே வைத்ததோடு, அதைப் பற்றி விரிவாக விவாதிக்க விரும்பாமல் நழுவியது அரசு. எந்தக் குற்றச்சாட்டு அரசு மீது வந்தாலும் மோடி அரசின் பதில் இப்படியாகத்தான் இருக்கிறது.

குஜராத் கலவரம் தொடர்பாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் தயாரித்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படாமல் தடைசெய்யப்பட்டது; மோடி அரசை எதற்காக, யார் விமர்சித்து மேற்கத்திய ஊடகங்களில் கட்டுரை எழுதினாலும் அதை உடனே இந்தியாவுக்கு எதிரான சதியாகப் பார்ப்பதே பாஜகவினரின் வழக்கமாகிவிட்டது. இவையெல்லாம் அபத்தமான கற்பனைகள். இந்தியாவை முடக்கவோ, அடக்கவோ ஊடகங்கள் சதி செய்வதில்லை. பாஜக தன்னுடைய கருத்தோட்டங்களை மாற்றிக்கொண்டு முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நரேந்திர மோடியின் பேச்சு எனக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டேன், அதுபற்றி மேலும் சற்று விரிவாகப் பார்ப்போம். அதற்கும் முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய ஒரு கட்டுரையால்தான் அந்த எண்ணம் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற பிரதமராக – அதாவது பொறுப்புகள் ஏதுமில்லாமல் அதிகாரம் மட்டும் கொண்டிருந்த அந்த பத்தாண்டுகளில் – உரிமைகளை நிலைநாட்ட தாங்கள் கொண்டுவந்த சட்டங்களை மோடி அரசு நீர்த்துப்போகச் செய்வதாகப் புலம்பியிருந்தார்.

சோனியா சொன்னதில் ஒன்று, மேலும் கவனத்தை ஈர்த்தது: “இந்த நாட்டுக்கான (காங்கிரஸ் பெற்றுத் தந்த) சுதந்திரமானது ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கானது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன் நில்லாமல் சமூக, பொருளாதார, அரசியல்ரீதியான அதிகாரங்களையும் பெற அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் தருவதற்காகவும் ஆனது!” 

இதையும் வாசியுங்கள்... 9 நிமிட வாசிப்பு

குஜராத் 2002 தழும்புகள் மறையவே மறையாது

ராமச்சந்திர குஹா 04 Jan 2022

மோடியும் முந்தைய பிரதமர்களும் 

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் அதிக ஆண்டுகள் ஆண்ட மூன்று பேர் (ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி) சோனியாவின் குடும்பத்திலிருந்தே வந்தவர்கள். இவர்களுக்குப் பிறகு பிரதமரானவர்களில் இருவர் (பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்) அவரால் சொந்த விருப்பத்தின்பேரில் தேர்வுசெய்யப்பட்டவர்கள். அப்படியிருக்கும்போது நல்ல வாழ்க்கைக்கான கனவு ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியர்களுக்குக் கைகூடாமலே போனது?

பாதுகாப்பான – தூய்மையான குடிநீரைத் தரும் அடிப்படைத் தேவையைக்கூட எல்லா இந்தியர்களுக்கும் வழங்க முடியாமல் இத்தனை ஆண்டுகள் எப்படிக் கழிந்தது? நாடு முழுவதிலுமே அரசாங்கப் பள்ளிகளில், நம்முடைய அரசியல் தலைவர்களின் பிள்ளைகளும் அரசு ஊழியர்களின் பிள்ளைகளும் படிக்க விரும்பாத வகையில் அவற்றின் தரம் ஏன் இவ்வளவு மோசமாகவே தொடர்கிறது?

பொது சுகாதாரமும் அரசின் மருத்துவமனைக் கட்டமைப்புகளும் வரி செலுத்தும் மக்கள் முழுப் பயனும் பெற முடியாதபடிக்கு ஏன் இவ்வளவு போதாமைகளுடனும் தரக்குறைவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கின்றன? ஆயிரக்கணக்கில் அரசுத் துறை நிறுவனங்கள் இருந்தும் பெரும்பாலனவை லாபம் சம்பாதிக்க முடியாத நிலையில் ஏன் இவ்வளவு மோசமாகவும் அக்கறையின்றியும் நிர்வகிக்கப்படுகின்றன?

பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றைத் தீர்க்க முடியவில்லைதான்; ஆனால், சாமானியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் வேறெந்த காங்கிரஸ் பிரதமர்களைவிட மோடி நன்றாகவே செயல்பட்டிருக்கிறார் என்று நான் சொல்வேன். ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) திட்டமாகட்டும், ஏழைகளுடைய வீடுகளில் சமையலுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வலா’ திட்டமாகட்டும்; மிகச் சிறப்பாகவும் நூறு சதவீதமும் பயனளித்துவிடவில்லைதான், ஆனால் சாதித்திருப்பது குறைவானதல்லவே?

வீடு தேடி வரும் நீர்

பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது நான் தங்கிவிட்ட என்னுடைய சொந்த கிராமத்தில்தான் இப்போது நான் இருக்கிறேன். இந்த ஊர் குளத்தைச் சீர்படுத்தி அதிலிருந்து கிராம வீடுகளுக்கு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் குழாய்த் தண்ணீர் வழங்க வேலைகள் நடக்கின்றன. இப்போதுவரை இந்தக் கிராம மக்களுக்கு குடிநீரை தண்ணீர் லாரிகளில்தான் கொண்டுவந்து தருகிறார்கள். இது எவ்வளவு மோசம்!

நம்முடைய பெரும்பாலான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடைப்பிடித்த ‘சோஷலிஸ பாணி’ பொருளாதார அணுகுமுறைதான் காரணம் என்று நம்புவோரில் இன்று நானும் ஓர் ஆள். அதனாலேயே,  சோனியா கொண்டுவந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசும் துணிச்சல் மோடிக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறேன். 

கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்படும் தலைவராக இன்று மோடி இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய முயற்சியால் வங்கிக் கணக்கு தொடங்கப் பெற்றவர்களும் சாலை, குடிநீர், மின்சார இணைப்பு பெற்றவர்களும் முக்கியமான ஒரு காரணம். வீடுகளுக்கே குழாய் நீர் வருவதாலும் சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்திருப்பதாலும் வீட்டுக்குள்ளேயே கழிப்பறை கட்டித் தர நிதியுதவி கிடைத்திருப்பதாலும் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர் மோடி என்று பல கோடி மக்கள் அவருடன் தங்களை அடையாளம் காண்கிறார்கள்.

சோனியா காந்தியின் கட்டுரை, காங்கிரஸ்காரர்கள் இன்னமும் காலத்தால் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

© The Indian Express

தொடர்புடைய கட்டுரைகள்

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
குஜராத் 2002 தழும்புகள் மறையவே மறையாது
நேருவின் நினைவை பாஜகவால் அகற்றிவிட முடியுமா?
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு
வி.பி.சிங் எனும் அரக்கர்

தமிழில்: வ.ரங்காசாரி

22பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   4 months ago

ஒரு முழு சங்கியின் கருத்துக்கள் தான் இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ளது. நாடு விடுதலை பெற்ற போது அடிப்படை கல்வி கற்றவர்கள் 10% அளவு மட்டுமே. பெண்களில் ஒரு சதவீதம் பேர் கூட கல்வி கற்றவர் இல்லை. இன்று பெண்களில் அடிப்படைக் கல்வி பெற்றோர் 80 சதவீதத்திற்கு மேல். இது மோடி அரசின் சாதனை அல்ல. அன்று 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் விவசாயத்தை மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்துக்கு நம்பி இருந்தார்கள். வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்கள் ஏறத்தாழ எழுவது சதவீதத்திற்கு மேல். மற்ற தொழில் வளர்ச்சி மிக அபூர்வமாக இருந்தது. பாஜக மோடி அரசு 2014 இல் வருவதற்கு முன்னரே நாடு மிக நல்ல தொழில் வளர்ச்சி அடைந்து விட்டது. லட்சக்கணக்கான சிறிதும் பெரிதுமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையிலும் அடைந்த மேம்பாடுகள் சாதாரணமானது அல்ல. மோடி அரசில் தொழிலாளர் உரிமைகளும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ளன. அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முற்றிலும் முடக்கப்பட்டு மோடி என்ற தனிமனிதரின் புகழ் மட்டுமே விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்களில் எதிரொலிக்கின்றன. ஏறக்குறைய அனைத்து சிறு தொழில்களும் மத்திய ரக தொழில்களும் நாசமாகிவிட்டன. மோடி ஆதரவில் செயல்படும் ஓரிரண்டு கார்ப்பரேட்டுகள் மட்டும் செழுமையாக இருப்பதை வைத்து நாடு செழுமையாக உள்ளது என்பது உண்மை நிகழ்வுகளை மூடி மறைக்கும் செயல்.

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

இளைஞர் அணிஆஸ்துமாஇன உணர்வுகேட்கும் திறன்பிலஹரி ராகம்ராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரைபதவி விலகவும் இல்லைசாமானிய மக்கள்பகத்சிங்ட்விட்டர் பதிவுகள்பொன்னியின் செல்வன்காலை உணவுத் திட்டம்அருஞ்சொல் ஹிஜாப்சமஸ் நயன்தாரா குஹாபெலகாவிஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிவர்த்தகம்தேசிய பயண அட்டைஜெயமோகன் கருணாநிதி ஸ்டாலின்நடப்புப் பொருளாதாரம்சீருடைசூரிய மின்சக்திபெருநிறுவனங்கள்ஐஏஎஸ் பணிவிதிகளில் திருத்தம்ஃபின்லாந்துஇரண்டு முறை மனவிலகல்சண்முகம் செட்டியார்தமிழகக் கல்வித் துறைஹிண்டன்பெர்க்கல்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!