கட்டுரை, பொருளாதாரம், சர்வதேசம், தொழில் 5 நிமிட வாசிப்பு

அதானி: காற்றடைத்த பலூன்

கார்த்திக் வேலு
03 Feb 2023, 5:00 am
0

லகின் பேசுபொருள் ஆகியிருக்கிறார் அதானி. இது ஒரு தொழிலதிபர் என்ற வகையில் நாம் அணுகக்கூடிய கதை அல்ல; தேசத்தைப் பின்னின்று இயக்கும் கைகளுடன் தொடர்புடைய கதை என்பதால் நாம் இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்வது அவசியம் ஆகிறது.

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க், அதானி குழுமத்தின் பங்குகள் பல்வேறு மறைமுக நடவடிக்கைகளால் ஊதிப் பெருக்கப்பட்டவை, அதானி நிகழ்த்தியிருப்பது கார்ப்பரேட் உலகின் மிகப் பெரிய ஏமாற்று வேலை என்று குற்றஞ்சாட்டி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதானி குழுமத்தின் சார்பாக அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரிகின்றன.

இந்த அறிக்கை வெளிவந்த ஒரு வாரத்துக்குள் அதானி குழுமத்தின் பங்குகள் சந்தை மதிப்பில் மொத்தம் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளன. ஏறக்குறைய ஹரியானா மாநிலத்தின் ஒட்டுமொத்த ஜிடிபிக்கு நிகரான தொகை இது. இந்த வீழ்ச்சியை சரியாகப் புரிந்துகொள்ள அதானியின் எழுச்சியைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். 

பின்னணி 

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் அண்ணன்தான் வினோத் அதானி. அவரின் மகளை சர்வதேச வைர வியாபாரி ஜதின் மெஹதாவின் மகன் சூரஜ் மெஹதாவுக்கு மணம் முடிக்கிறார். இந்த ஜதின் மெஹதா இந்தியாவில் பெரும் பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு தற்போது பிரிட்டனில் ஓடி ஒளிந்திருப்பவர். 

ஜதின் மெஹதா 2013இல் இந்தியாவில் உள்ள 15 வெவ்வேறு வங்கிகளிடம் நகை வியாபாரம் செய்வதாக சொல்லி மொத்தம் ரூ.4,500 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார். அப்படி உற்பத்தி செய்த நகைகளை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 13 நிறுவனங்களுக்கு விற்றதாகச் சொல்கிறார், அந்த நிறுவனங்கள் பொருளுக்கு உரிய பணத்தைச் செலுத்தாததால் தன்னால் வாங்கிய கடனை வங்கிகளுக்குத் திருப்பி தர முடியாது என்று கையை விரித்துவிட்டார். 

எப்படி ஒரே சமயத்தில் 13 நிறுவனங்கள் பணம் தாராமல் திவால் ஆகும்? இதன் பின்னணியை சிபிஐ ஆராய்ந்ததில், இந்த 13 நிறுவனங்களுமே மறைமுகமாக ஜதினுக்குத் தொடர்புள்ள நிறுவனங்கள் என்று கண்டறிந்துள்ளது. அதற்குள் மொத்த குடும்பமுமே பிரிட்டனுக்குத் தப்பி ஓடிவிட்டிருக்கிறார்கள். நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி என்று நீளும் பட்டியலில் இவரும் ஒருவர். இவர்தான் அதானி குடும்பத்தில் பெண் எடுத்திருக்கிறார். வினோத் அதானி ஒருகட்டத்தில் உலகின் மிகப் பெரிய என்ஆர்ஐ பணக்காரராகக் கருதப்பட்டவர். சமீபத்தில் வெளியான பனாமா பேப்பர்ஸ் கருப்பு பண விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது.

கெளதம் அதானியின் இன்னொரு அண்ணன் ராஜேஷ் அதானி மற்றும் அதானியின் மச்சினர் சமீர் வோரா இருவருமே வைர வியாபார முறைகேட்டில், கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். ராஜேஷ் அதானி இது தொடர்பில் முன்னர் இரண்டு முறை கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் இன்றும் அதானி குழுமத்தில் நிர்வாக இயக்குநராகதான் உள்ளார். 

பங்கு மோசடிகள்

இந்திய பங்குச் சந்தை விதிமுறைகளின்படி ஒரு நிறுவனத்தில் நிறுவனர் (promoter) அதிகபட்சம் 75% பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும். அதற்கும் மேல் பங்குகளை வைத்திருந்தால் பங்குகளில் விலையை எளிதாக ‘மேனிப்புலேட்’ (manipulate) செய்துவிடலாம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு. ஆனால், அதானி குழுமத்தின் 90% மேலான பங்குகள் மறைமுகமாக அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதானி குழுமம் வெளிநாடுகளில் பல தனியார் டிரஸ்ட்டுகளை உருவாக்குகிறது. இந்த டிரஸ்ட்டுகள் மூலம் மொரீஷியஸ் தீவில் உள்ள நான்கு- ஐந்து நிறுவனங்களில் பெருமளவு பணத்தை முதலீடு செய்கிறது. அந்த நிறுவனங்கள் ரூ.40,000 கோடிக்கு மேல் அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் குவிக்கின்றன. இப்படி அதிகபட்சம் 75% பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடிகிற குழுமம் இப்போது 90% மேலான பங்குகளை மறைமுகமாக வைத்திருப்பதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

எல்ஐசி: விலை பேசப்படும் கடவுளின் விரல்!

க.சுவாமிநாதன் 19 Jan 2022

இப்படி 90% பங்குகளை அவர்களே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது ஒருபுறம் என்றால் கேதன் பரேக் போன்ற நேரடிப் பங்கு மோசடி செய்பவர்களைக் கொண்டு அதானி பங்கின் விலையை ஊதிப் பெருக்கி இருக்கிறார்கள். இப்படி பங்குகளில் சதவீதத்தைக் கட்டுப்படுத்தியும் செயற்கையாக அதற்கு ஒரு டிமாண்ட் உருவாக்கியும் அதானி பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் அதானி பங்குகளில் விலை 30 மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்தச் சிக்கலான மோசடிகள் எப்படியோ ஒருகட்டத்தில் வெளியே தெரிய வாய்ப்பு உள்ளது என்ற அதானி குழுமம் தனது பங்குகளின் மீதே மீண்டும் கணிசமாக (கிட்டத்தட்ட 20%) கடன் வாங்கியுள்ளது. அதாவது நாளை பங்குகள் விலை அதீதமாக சரிந்தால் அதன் ரிஸ்க் அதானி குடும்பத்தைவிட கடன் கொடுத்த வங்கிகள் தலையில்தான் விடியும். பங்குகளின் விலை ஏறினால் 90% பங்குகளை தன் கையில் அதானி குடும்பம் பெருத்த லாபம் அடையும்.

சிக்கலான தொடர்புகள்

மேலே சொன்னேன் இல்லையா ஜதின் மெஹதா, வினோத் அதானியின் சம்பந்தி, அவர்தான் இந்த மொரீஷியஸ் நிறுவனங்களின் இயக்குநர்களில் ஒருவர்.

அதானியின் தற்போதைய சொத்து மதிப்பில் 85% கடந்த மூன்று வருடத்தில் உருவானதே (அதுவும் கரோனா முடக்கத்தில்). இப்போது இந்த திடீர் அசுர வளர்ச்சிக்கும் பங்குகளைப் பல்வேறு வகைகளில் ‘மேனிப்புலேட்’ (manipulate) செய்வதற்குமான தொடர்பு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அறிக்கை வெளிவந்த முதல் நாளிலேயே அதானி குழுமப் பங்குகளில் விலை 20% சரிந்துவிட்டது. திங்கள் காலை மீண்டும் பங்குச் சந்தை திறந்தபோது மீண்டும் இந்தச் சரிவு தொடரவே செய்தது. இந்த அறிக்கையைப் பெரிதாக மறுத்து சொல்ல அதானி தரப்பில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கணிசமான பங்குகளை அதானி குழுமமே வைத்திருப்பதால் பங்கு விலை ஓரளவுக்கு மேல் சரிந்துவிடாமல் முட்டுக்கொடுக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

எளியோர் மீதான கடும் தாக்குதல்

சி.பி.கிருஷ்ணன் 27 Apr 2022

ஆனால், அதானிக்கு மேலும் கடன் கொடுக்க வங்கிகள் யோசிக்கும், அதானியோ தொடர்ந்து தொழில்களை நடத்த பணம் தேவைப்படும் என்பார். எஃப்பிஓவும் (FPO) இப்போது எதிர்பார்த்தபடி கலெக்‌ஷன் ஆகவில்லை என்றால் நிறுவனங்களைத் தொடந்து நடத்த மேலும் கடன் கொடுக்கவில்லை என்றால் ஏற்கெனவே வாங்கிய கடனை அடைப்பது கடினம் என்பார். எப்படிப் பார்த்தாலும் கடன் கொடுத்த வங்கிகளின் கை கடிபடும்.

அரசு வங்கியான எஸ்பிஐ மற்றும் எல்ஐசி போன்றவை கணிசமான அளவில் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்துள்ளன. எதிர்பார்த்தபடியே அதானி பங்குகள் சரிந்துபோய்விடக் கூடாது என்ற நிர்பந்தத்தில் இந்த புதிய பங்கு விற்பனையான எஃப்பிஓவில் முதலீடு செய்துள்ளன. இப்படி பங்குகள் தொடர் வீழ்ச்சியடையும் சூழலில் புதிய பங்குகளை விற்பது முறையாக இருக்காது. மேலும் அது நாளை செபி (SEBI) விசாரணைக்கு உட்படும் என்று கருதி எஃப்பிவை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது.

மேலும், இது மென்பொருள் நிறுவனம் அல்ல; கேட்டை இழுத்து மூடலாம் என்பதற்கு, பல முக்கிய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள குழுமம். எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று விட்டுவிடவும் முடியாது. இதைச் சொல்லியே அரசும் வங்கிகளும் அதை வீழாமல் பார்த்துக்கொள்ள முற்படும்.

அதானி குழுமம் வீழ்ந்தால் அதைச் சுற்றி இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் வீழும். அந்த ‘டூ பிக் டு ஃபெயில்’ (too big to fail) என்ற நிலையே அதானிக்கு இப்போதைக்குள்ள பெரும் பாதுகாப்பு. 

வேண்டும் தண்டனை

அதானி என்றில்லை; வேறு பல நிறுவனங்களும் இவ்வாறு செய்துகொண்டிருக்கலாம். நான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்லி வந்திருக்கிறேன், இந்துத்துவம் தேசப்பற்று என்பதெல்லாம் ஒருவித ஷோதான்; திரையின் பின் நிகழ்வது மாபெரும் பொருளாதாரச் சுரண்டல், மோசடி. உண்மையான தேசப்பற்று கொண்ட எந்த அரசும் நாட்டின் பொருளாதாரமும் வளமும் மக்கள் பணமும் இப்படி அப்பட்டமாக சுரண்டப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. இது இந்தியர்களே இந்தியர்களைச் சுரண்ட வழிவகுக்கும் ஒரு புது வகையாக காலனியாதிக்கம்தான்.

நேற்று நான் வங்கிக்கு ஒரு விஷயமாக சென்றிருந்தேன். ஒரு சிறிய வேலைதான். ஆனால், அதற்கும் முப்பது பக்கம் படிவத்தை நிரப்புங்கள், ஆதார் விவரங்களைக் கொடுங்கள், பான் எண் கொடுங்கள், அதையும் இதையும் இணையுங்கள், பாஸ்போர்ட் கொடுங்கள், வருமானத்தைச் சொல்லுங்கள் என்று ஆயிரத்து எட்டு கேள்விகள். அட ஒரு தனிநபர் அரசின் கண்களில் படாமல் ஒரு ரூபாய்கூட செலவு செய்யவோ சம்பாதிக்கவோ முடியாதுபோலவே என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அதே சிஸ்டத்தில்தான் இப்படி அதானி போன்றோர் கேள்வியே இல்லாமல் கோடிக்கணக்கில் மோசடி செய்துகொண்டிருக்கின்றனர்.

நம் பங்குச் சந்தை மற்றும் வங்கி நடவடிக்கை கண்காணிப்பு என்பது மிகவும் வலுவற்ற நிலையில் உள்ளது. அப்படி வலுவில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதானி பங்கு மோசடியின் நீட்சியாக ஆர்பிஐ, செபி, ஈடி போன்ற அமைப்புகள் புத்துயிர் பெற்று சுதந்திரமாக செயல்படும் நிலை ஏற்படும் என்றால் அது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும். பொருளாதாரமே ஒரு நாட்டின் முதுகெலும்பு. பொருளாதாரக் குற்றங்கள் வேறெந்தக் குற்றங்களுக்கும் குறைவான குற்றம் அல்ல. அது மக்கள் வயிற்றில் அடிப்பதன் மூலம் அவர்கள் வாழ்விலும் அடிப்பது. பொருளாதாரக் குற்றவாளிகள் உரிய கடுமையுடன் தண்டிக்கப்பட வேண்டும். கூடவே அவர்கள் பின்னுள்ள குற்றவாளிகளும்!

தொடர்புடைய கட்டுரைகள்

சித்ரா ராமகிருஷ்ணன் முறைகேடுகளின் கதை
சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம் என்னவாகும்?
எல்ஐசி: விலை பேசப்படும் கடவுளின் விரல்!
இந்திய பங்குச்சந்தை எப்படி ஏறுகிறது?
எளியோர் மீதான கடும் தாக்குதல்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சரியான ஒரு முன்மாதிரி இல்லை, ஏன்?
இந்தியா தேடிக்கொள்ளும் ஆபத்து

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: writerkayvee@gmail.com


5

3





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நவீன சிந்தனைகள்நகர்ப்புற நக்ஸலைட்எச்சரிக்கையான பதில்கள்ராஜ விசுவாசம்தமிழ்நாடு பட்ஜெட்பழைய ஓய்வூதிய திட்டம்புதிய காலங்கள்மத்தியதர வர்க்கம்ஸரமாகோ: நாவல்களின் பயணம்உக்ரைன்காதுவலிமவுண்ட் பேட்டன்மறுசீரமைப்புகுற்றவுணர்ச்சிசாமானிய மக்கள்அம்பேத்கரின் இறுதி நாள்இரண்டு பேராபத்துகள்: செயற்கை நுண்ணறிவுகடல்சிங்கப்பூர் அரசுடி.எம்.கிருஷ்ணா சமஸ்எழுத்துதேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேஆறு காரணங்கள்மாய குடமுருட்டிமகேஷ் பொய்யாமொழி75வது சுதந்திர தினம்கொடூர அச்சுறுத்தல்இரட்டைப் பெயர்சோழப் பேரரசு2002

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!