கட்டுரை, அரசியல், ஆளுமைகள், புத்தகங்கள் 15 நிமிட வாசிப்பு

வி.பி.சிங் எனும் அரக்கர்

தேபஷிஷ் முகர்ஜி
13 Jan 2023, 5:00 am
1

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் தேபஷிஷ் முகர்ஜி எழுதிய ‘அரக்கர்’ நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே!  

வி.பி.சிங்கின் குடும்பத்தில் உள்ளவர்கள் கை ரேகை சாஸ்திரத்திலும் ஜோதிடத்திலும் நம்பிக்கை உடையவர்கள். வி.பி.சிங்கிற்கு அத்தகைய நம்பிக்கை எதுவும் இல்லை. வி.பி.சிங்கின் தந்தையாரும் அண்ணனும் வெறும் நம்பிக்கையாளர்கள் மட்டும் இல்லை. அவர்களே ஜோதிடமும் கை ரேகையும் பார்க்கக் கூடியவர்கள்.

வி.பி.சிங் தனக்கு இவை இரண்டிலுமே எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை என்று கூறுவார். “இவர்கள் கூறும் பல அனுமானங்கள் தவறாகப்போனதை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படித் தவறாகப் போனதைச் சொல்ல மாட்டார்கள். எப்போதாவது அந்த அனுமானம் அப்படியே நடந்துவிட்டால் அதைப் பற்றி மட்டும் சொல்லுவார்கள்”  என்று அவர் கூறுவார். ஆனால், அவரது வீட்டில் இருந்த ஒரு ஜோதிடர் சொன்னது மட்டும் வி.பி.சிங்கின் வாழ்க்கையில் பலித்திருக்கிறது. அந்த ஜோதிடர் வேறு யாருமல்ல. வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி சிங்தான் அவர். தனது கணவர் மிக உயரமான பதவிகளுக்குச் செல்வார். ஆனால், எதிலும் அவர் நிலைத்திருக்க மாட்டார் என்று சீதா குமாரி சொல்லி இருக்கிறார்.

எல்லாம் சில காலம்

வி.பி.சிங் 1980களில் தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களுக்குச் சென்றார். உத்தர பிரதேச முதலமைச்சர் ஆனார். ஒன்றிய வர்த்தக அமைச்சர் ஆனார். ஒன்றிய அரசில் நிதியமைச்சராக இருந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனார். கடைசியில் பிரதமர் பதவி அவரைத் தேடி வந்தது. இவை அனைத்தும் ஒரே பத்தாண்டில் நடந்தன. முன்னதாக 1974 அக்டோபரில் இருந்து 1977 வரையில் இணை அமைச்சர் பதவிகளையும் வகித்தார். ஆனால் ஒவ்வொரு பதவியிலும் வி.பி.சிங் இருந்தது கொஞ்ச காலம்தான். 

உத்தர பிரதேச முதலமைச்சராக அவர் பதவி வகித்தது சரியாக இரண்டே ஆண்டுகள். 1980 ஜூனில் இருந்து, 1982 ஜூன் வரையிலும். ஒன்றிய அரசில் வர்த்தக அமைச்சராக 1983 ஜனவரியில் பதவி ஏற்றார். அந்தப் பதவி ஒரு வருடம் ஏழு மாதங்களில் 1984 ஆகஸ்ட்டோடு முடிவுக்கு வந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக 1985 ஜனவரியில் இருந்து 1987 ஜனவரி வரையில் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சானார். மூன்று ஆண்டுகளில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். கடைசியாக 1989 டிசம்பர் 2ம் தேதி அன்று பிரதமர் பதவியில் அமர்ந்தார். அந்தப் பதவியிலும் 11 மாதங்களே இருந்தார்.

ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அமைச்சரவையில் கடைசியாக பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் அடுத்து ஜனதா தள அரசில் பிரதமராகவும் அவர் பதவி வகித்த காலங்களுக்கு இடையில் இரண்டரை ஆண்டுகள் அவர் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தார். வி.பி.சிங்கின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.

அரசியல் வரலாற்றின் உச்சம்

சமூகரீதியிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்தவருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதுதான் வி.பி.சிங்கின் அரசியல் வரலாற்றில் உச்சம். இந்திய வரலாற்றிலும் அது ஒரு மறக்க முடியாத பக்கம்.

இந்துச் சமூகத்தில் உள்ள சாதியப் படிநிலைகளின் காரணமாக பின்தங்கியுள்ள மக்களை கை தூக்கிவிட இந்திய அரசியல் சாசனம் முயற்சித்தது. அதன் விளைவாக பட்டியல் சாதியினருக்கும் பட்டியலினப் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை.

இது தொடர்பாக ஆய்வு செய்ய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. மண்டல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரும் அது நீண்ட காலமாக அமல்படுத்தப்படாமலே இருந்தது. 1990 ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று அந்த அறிக்கையை அமல்படுத்தி சட்டமாக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் வி.பி. சிங்.

இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் சமூகப் பொருளாதார கல்விரீதியிலான மாற்றங்களுக்கு அந்த அறிவிப்புதான் விதையாக இருந்தது.

இருதரப்பு அணிசேர்க்கை

ஆண்டாண்டு காலமாக கல்வியிலும் அதிகாரத்திலும் உச்சத்தில் இருந்தவர்களுக்கு வி.பி.சிங்கின் இந்த அறிவிப்பு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. ஆத்திரப்பட்ட அவர்கள் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். உயர் ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொண்டு, தங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்துவிட்டதாக உலகிற்குக் காட்டினர். அரசுப் பணிகளில் தங்களின் சமூக சதவீதத்தை மீறி அளவுக்கு மீறி ஆக்ரமித்துக்கொண்டிருந்தது பறிபோய்விடும் என அச்சமடைந்தனர். அவர்களின் கலவரம் ஒருபுறம் இருக்க, ஆண்டாண்டு காலமாக அரசுப் பதவிகளை அனுபவித்துப் பார்க்க முடியாத பிற்படுத்தப்பட்ட மக்களிடையே வட இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரும் அணிசேர்க்கை நிகழ்ந்தது.  

அடுத்து வந்த தேர்தல்களில் அது எதிரொலித்தது. அந்த மாற்றத்தை உத்தர பிரதேசத்திலும் பீகாரிலும் பார்க்க முடிந்தது. அதுவரையில் அந்த இரண்டு மாநிலங்களிலும் செல்வாக்கு மிக்க கட்சி காங்கிரஸ்தான். இந்த மாநிலங்களில் உயர்சாதியினர், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் எனும் இந்த மூன்று பிரிவினர்தான் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்தனர். 1984 வரையில் (1977 எமர்ஜென்சி விளைவாக இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஒரு இடம்கூடப் பெறவில்லை. அந்த ஆண்டைத் தவிர) மேற்குறிப்பிட்ட மூன்று சமூகத்தினரின் வாக்கு வங்கியால் காங்கிரஸ் வெற்றிகளையே ஈட்டி வந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஈட்டிய வெற்றிகளில் பெற்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கை இந்த இரு மாநிலங்களில் இருந்து மட்டும் பெற்றது. 1985 வரையில் இந்த இரு மாநிலங்களிலும் பெரும்பாலான சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சி காங்கிரஸ். 

ஆனால், மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்படும் என்ற வி.பி.சிங்கின் அறிவிப்பு காங்கிரஸுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் அதை காங்கிரஸ் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் 1977 எமர்ஜென்சி விளைவு போல இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான் என்றுதான் காங்கிரஸ் நினைத்தது. ஆனால் அது நிரந்தரமானது என்று பின்னர் தெரியவந்தது. அதன் பிறகு வந்த தேர்தல்களில் (2009 தவிர) காங்கிரஸ் கட்சியால் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு மேல் பெற முடியவில்லை. அதேபோல் பீகாரில் 5 இடங்களுக்கு மேல் பெற முடியவில்லை. அதன் பிறகு அந்தக் கட்சியால் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சிக்கே வர முடியவில்லை.

வி.பி.சிங் அமைச்சரவையில் துணைப் பிரதமராக தேவி லால் இருந்தார். அவருக்கும் வி.பி.சிங்கிற்கும் இடையே முரண்பாடு இருந்தது. அந்த நேரத்தில் அவரை ஓரம் கட்டவும், எம்பிக்களின் ஆதரவைப் பெறவுமான தனது சொந்த அரசியல் லாபத்திற்காக வி.பி.சிங், மண்டல் அறிக்கையை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் என்று சில விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதற்கேற்றார்போல் தேவிலாலை வி.பி.சிங் தனது அமைச்சரவையில் இருந்து நீக்கினார். ஆனாலும் 1990 நவம்பரில் அவரின் ஆட்சி கவிழ்ந்தது. 

துணிச்சலான முடிவுகள்

உண்மையில் தேவிலாலுடன் வி.பி.சிங்கிற்கு முரண்பாடு வருவதற்கு முன்பே, மண்டல் அறிக்கையை அமல்படுத்தும் முடிவை அவர் எடுத்துவிட்டார். அதற்கும் தேவிலால் முரண்பாடுக்கும் சம்பந்தம் இல்லை. மிக முக்கியமான இந்த முடிவை அவர் எடுப்பதற்கு முன் அதற்கான விளைவுகளைக் களத்தை யோசிக்காமல் எடுத்திருக்க மாட்டார். அவரது இந்த முயற்சியின் காரணமாக பல்வேறு பின்னடைவுகள் அவருக்கு ஏற்பட்டன. அவரது ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்று அதனால் ஆட்சியே கவிழ்ந்தது. இவை எதுவுமே மண்டல் அறிக்கையை அமல்படுத்திய வி.பி.சிங்கின் முடிவின் முக்கியத்துவத்தை குறைத்துவிடவில்லை. 

இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயத்தை நோக்கிக் கூட்டிச் சென்ற இரண்டுபேர் 1991இல் பிரதமரான நரசிம்மராவும், அந்த நேரத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும். லைசன்ஸ் ராஜை ஒழித்துக்கட்டி தாராளமயத்தைக் கொண்டுவந்தனர். ஆனால், அவர்களுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் இந்தத் திசைவழியில்தான் பயணிக்க வேண்டும் என கணித்த முன்னோடி வி.பி.சிங். ஆனால், அவரை அரிதாகவே ஒப்புக்கொள்கின்றனர்.

1985 மார்ச் 16 அன்று வி.பி.சிங் முதன்முறையாக பட்ஜெட் உரை நிகழ்த்தியபோது அந்த உரையைக் கேட்டு (அதற்கு பிரதமர் ராஜீவ் காந்தி ஆதரவுதான்) பலர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உரையில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டிருந்தன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட தொழிலில் குறிப்பிட்ட நிறுவனங்கள் ஏகபோகமாகிவிடும் என்ற அச்சத்தில் முந்தைய அரசுகளால் நிர்ணயிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு அளவை வி.பி.சிங்கின் அந்த பட்ஜெட் உரை அதிகரித்தது.

1991இல் இந்தியாவின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும் கொள்கை முடிவுகளைத் திருத்தும் ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்புக்களைப் பெற்றிருந்தனர். ஆனால் அப்படிப்பட்ட எந்தக் கட்டாயமும் இல்லாதபோதே, அதாவது பெரும் பொருளாதார நெருக்கடி எதுவும் இல்லாத போதே, இந்தியப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் கை ஓங்கி நிற்கிறது என்றும் அது பொருளாதார வளர்ச்சியைத் திணறடிக்கிறது என்றும் உணர்ந்து வி.பி.சிங் அதற்கான நடவடிக்கைகளை துவக்கினார்.

ஆனால், பிற்போக்குத்தனம் என்பது மிகவும் கடினமானது. வி.பி.சிங்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்ல; பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. வி.பி.சிங்கின் நடவடிக்கையை முதலாளித்துவத்திடம் சரணாகதி அடைந்த நடவடிக்கை என அவர்கள் விமர்சித்தனர். அடுத்த வருட பட்ஜெட் பழைய சோஷலிஸ பாணியிலேயே அமைய வேண்டும் என வி.பி.சிங்கை அது நிர்ப்பந்தித்தது. வி.பி.சிங் பிரதமரான பின் 1990இல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மீண்டும் முயற்சித்தார். புதிய தொழில் மற்றும் விவசாயக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். ஆனால் அவரது ஆட்சி கூட்டணி ஆட்சி. கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் அவரது சொந்தக் கட்சியிடமிருந்தும் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. அது அவரது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைத் தடுமாறச் செய்தது.

ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையைக் கொண்டுவந்தவர் வி.பி.சிங். அத்தகைய வி.பி.சிங், சமூகநீதி பேசிய வி.பி.சிங், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எப்படி ஆதரித்தார். உண்மையில் இடஒதுக்கீட்டுக்கு அவர் குரல் கொடுத்ததெல்லாம் வழக்கமான அரசியல்வாதிகள் செய்வதைப் போன்ற ஒரு அரசியல் தந்திரம்தானா? அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் வி.பி.சிங். அவரிடமிருந்த அந்தத் தனித்தன்மை முதன் முதலாக 1969 பிப்ரவரியில் உத்தர பிரதேசத்தில் சோரான் தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தைத் துவக்கி வைத்ததில் இருந்து, கடைசியாக 1994 அதே உத்தர பிரதேசத்தில் பதேபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் உடல் நலக் குறைவு காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கும் வரையில் நீடித்தது.

ஜமீன்தார் வி.பி.சிங்கும் காந்தியும்

அலகாபாத் மாவட்டத்தில் இருந்த மிகப் பெரிய ஜமீன்தார்களில் ஒருவரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங்கின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வி.பி.சிங். அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராஜா மண்டா ராம் கோபல் சிங், வி.பி.சிங்கை அவரது ஐந்து வயதில் தத்தெடுத்துக்கொண்டார். அவர் வி.பி.சிங்கின் தந்தையைவிடப் பெரிய ஜமீன்தார். அதனால் இந்தக் காலத்தில்கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் ஆடம்பர வாழ்க்கையை வி.பி.சிங் வாழ்ந்தார்.

ஆயினும்,  காந்தியின் சுதந்திர இயக்கத்தின் தாக்கம் வி.பி.சிங்கிடம் இருந்தது. அவர் தனது பள்ளிப் படிப்பை முடிக்கும்போது இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்தக் காலத்தில் டாயா மண்டா பகுதியில் பள்ளிக்கூட வசதி இல்லை. வி.பி.சிங் பட்டப் படிப்பை முடித்ததும் தனது சொந்தச் செலவில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டினார். 

1952இல் கட்டப்பட்ட அந்தப் பள்ளி இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கல்லூரிக்குப் பிறகு, தேசிய அளவிலான காந்தியத் தொண்டு நிறுவனமான சர்வோதயா சமாஜில் வி.பி.சிங் இணைந்தார். பொது வேலைகளில் தானாக முன்வந்து பங்கெடுத்துக்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டார். 1957இல் பூமிதான  இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தனது அனைத்து நிலங்களையும் தானமாக வழங்கினார். இப்படி எப்போதும் அடித்தட்டு மக்களுக்காகவே துடித்துக்கொண்டிருந்தது அவரது இதயம்.

அரசியல் வாழ்க்கையை விட்டு ஒய்வெடுத்து, சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்கூட, நகரத்தை விட்டு அப்புறப்படுத்தப்படும் சேரிவாழ் மக்களின் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டார். அரசுத் திட்டங்களுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தங்களுக்கு அதிகமாக இழப்பீடு தர வேண்டும் எனப் போராடிய போது அவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

பெரும் லட்சியர்

வி.பி.சிங் வெறும் கொள்கைவாதியாக இருக்கவில்லை லட்சியவாதியாக இருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்கங்களோடும் சோஷலிஸ சிந்தனைகளோடும் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அதேசமயத்தில் அவை அவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையில் காந்தியம் உள்பட  வி.பி.சிங்கிடம் எந்தக் கொள்கையையும் பெரிய பிடிப்பை உண்டாக்கவில்லை. அதேசமயத்தில் தனக்கென்று ஒரு தனிபாணி வைத்திருந்தார். பின்னாளில் அவர் காங்கிரஸ் அரசில் பங்கேற்ற போதும், உண்மையில் காங்கிரஸ் பின்பற்றும் சோஷலிச கொள்கைகள் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என உணர்ந்தார். 1990இல் அவர் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த பட்ஜெட்டில் தாராளமயக் கொள்கைகளும் இருந்தன. மக்கள் நலத் திட்டங்களும் இருந்தன. இதில் முரண்பாடு எதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

இந்திய அரசியல் வரலாற்றில் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கத்திற்குத் திறந்துவிட்ட வி.பி.சிங், அதற்கு அக்கம்பக்கமாக சில நடவடிக்கைகளையும் எடுத்தார். தனியார் துறையை ஊக்குவித்த அதேசமயத்தில் கார்ப்பரேட் ஊழலைத் தடுப்பதற்கும் சில அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இது அவரது லட்சியவாதத்தையும் பொருளாதார ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும் என்ற அவரின் விடாப்பிடியான ஆர்வத்தையும் பிரதிபலித்தது. அவரது இந்தத் தனித்தன்மை அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. இதை அவரது எதிர்ப்பாளர்கள்கூட ஒப்புக்கொண்டனர்.

பெருமுதலாளிகளுடன் மோதல்

நிதியமைச்சராக நியாயமான தரமான வர்த்தகம் இருக்க வேண்டும் என்ற அவரின் முயற்சியில் காங்கிரஸுக்கு நன்கொடை அளிக்கும் தொழிலதிபர்களைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. அவர்களின் தொழில் நிறுவனங்களில் வி.பி.சிங்கின் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கிய அமலாக்கப்பிரிவுகளின் அதிரடி சோதனைகள் நடந்தன. சில நேரங்களில் அது விசாரணையோடு முடிவடைந்தது. சில நேரங்களில் கைதுகளும் நடந்தன. அதை ரைடு ராஜ்யம் என்றே வர்ணித்தனர். கடைசியில் தொழிலதிபர்களின் அழுத்தத்தால் விபி.சிங்கை நிதியமைச்சகத்தில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு மாற்றினார் ராஜீவ் காந்தி.

இந்த இட மாற்றங்கள் வி.பி.சிங்கிற்கு ஆத்திரத்தை விளைவித்தன. வி.பி.சிங்கின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு ராஜீவ் காந்தியும் ஒத்துழைத்தது அவரது ஆத்திரத்தின் அளவைக் கூட்டியது. இந்தக் கோபம் பின்னாளில் ஒரு வரலாற்றை உருவாக்கியது. பாதுகாப்புத் துறைக்கு அவர் மாற்றப்பட்டாலும் அவரது குணம் மாறவில்லை. பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களை ஆய்வு செய்தார். அவர் பதவிக்கு வருவதற்கு முன் அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

ஜெர்மனைச் சேர்ந்த ஹோவால்ட்ஸ்ரெக் டெட்ச்சே வெர்ஃப்ட் (Howaldtswerke-Deutsche Werft (HDW)) எனும் கப்பல் கட்டுமான நிறுவனம், இந்தியாவிற்கு நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான 350 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள (ரூபாய் மதிப்பில் சுமார் 2796 கோடி) ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக (அந்த ஒப்பந்த மதிப்பு பின்னர் 465 மில்லியன் டாலாக உயர்ந்தது) சட்ட விரோதமாக 7 சதவீதம் கமிஷன் வழங்கியதை வி.பி.சிங் கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ராஜீவ் காந்தியைக் கலந்தாலோசிக்காமல் விசாணைக்கு உத்தரவிட்டார். அதைப் பத்திரிகைகளிலும் வெளியிட்டார். ராஜீவ் காந்தி இதனால் கோபமடைந்தார். இருவருக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது. அடுத்த நாள் வி.பி.சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த மூன்று மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

உருவானார் பெருந்தலைவர்

வி.பி.சிங்கின் விமர்சகர்கள், இந்திய வர்த்தகத்தை ஊழலில் இருந்து மீட்கப்போவதாக அவர் சொல்வது போலியானது என்று விமர்சித்தனர். இந்திய தொழிலதிபர்கள் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக தேர்தல் காலங்களில் நிதி தர வேண்டிய கட்டாயம் எற்படுகிறது என்று அவர்கள் கூறினர். நீர்மூழ்கிக் கப்பல் பேர விசாரணைகூட அதற்காகத்தான் அமைக்கப்பட்டது என்று அவர்கள் கூறினர். அவர்களின் இந்த வாதத்தை வி.பி.சிங் ஒப்புக்கொண்டார். அதேசமயத்தில் அரசியல் கட்சிகளுக்கு தொழிலதிபர்கள் நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கூறினார். பின்னாளில் அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணத்திற்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை காப்புப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்றுகூட வி.பி.சிங் கூறினார்.

வி.பி.சிங் காங்கிரஸைவிட்டு வெளியேறிய பிறகு வலிமையான எதிர்க்கட்சித் தலைவரானார். ராஜீவ் காந்தியையும் காங்கிரஸையும் ஊழலையும் எதிர்த்து மிகப் பெரும் பிரச்சார இயக்கத்தை நடத்தினார். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து நடைபெற்ற மூன்று பெரிய ஊழல் எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தில் வி.பி. சிங் நடத்திய இயக்கம் இரண்டாவது. முதலாவது, இந்திரா காந்திக்கு எதிராக 1974இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்தியது. மூன்றாவது லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் எனக் கோரி 2011இல் அன்னா ஹசாரே - அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய இயக்கம்.

இந்த மூன்று ஊழல் எதிர்ப்பு பிரச்சார இயக்கங்களும் ஒரே மாதிரியான முடிவைத்தான் தந்தன. மூன்று இயக்கங்களின் போதும், அதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் பதவி இறங்கினார்கள். ஆனாலும் ஊழல் எப்போதும்போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

வி.பி.சிங் பல்வேறு தலைவர்களையும் காங்கிரஸுக்கு எதிராக ஒன்றிணைத்தார். ஜனதா தளம் எனும் புதிய கட்சி ஒன்றை உருவாக்கினார். அதற்குத் தலைவரானார். பிற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டார். 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கினார்.

முன்னதாக, 1977 எமர்ஜென்சியின்போதுதான் இப்படிப்பட்ட கூட்டணி ஒன்று உருவானது. அந்த நேரத்தில் இந்திரா காந்தி முக்கியமான தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்தார். மறுபடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்திரா காந்திக்கு எதிராக ஒன்றிணைந்தனர். வி.பி.சிங் காலத்தில் அத்தகைய நெருக்கடி எதுவும் இல்லை எனினும், அவர் ராஜீவ் காந்திக்கு எதிராகவும் காங்கிரசுக்கு எதிராகவும் அனைத்திந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்தார். அதற்கு முந்தைய 1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 491 இடங்களில் போட்டியிட்டு 404 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. அத்தகைய காங்கிரஸ் கட்சியை வி.பி.சிங் அணி தோற்கடித்தது.

ஏன் அது ஒரு வரலாற்று வெற்றி?

வி.பி.சிங்கின் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் பிறகு ஒரு 25 ஆண்டுகளில் மத்தியில் உருவான கூட்டணி அரசுக்கு வி.பி. சிங்கின் கூட்டணி அரசுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. 1952இல் துவங்கிய இந்திய ஜனநாயக அரசியலில் அப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது. போட்டி போடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெறத் தொடங்கியது. அரசியல் அதிகாரத்தில் தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் இந்த சகாப்தம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் முடிவுக்கு வந்தது. மறுபடியும் ஒரே கட்சியின் ஆட்சி வந்தது. பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

வி.பி.சிங்கின் அரசியல் ஒற்றுமைக்கான முயற்சியில் பாதகமான பக்க விளைவுகள் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை என்கிறார்கள் அவரை எதிர்க்கும் விமர்சகர்கள். இந்து தேசியவாதம் பேசும் பாஜகவுடன் அவர் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டார். அவருக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் காங்கிரஸைத் தோற்கடிக்க அவருக்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. கடைசியில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டார். அதன் விளைவாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

1984இல் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டுதான். அது 1989 தேர்தலில் 85 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பாஜக தடுக்க முடியாதபடி வளர்ந்தது. 1991இல் 120 இடங்களையும், 1996ல் 161 இடங்களையும், 1998இல் 182 இடங்களையும் பாஜக பெற்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியையும் பிடித்தது. 1999க்குப் பிறகு 2014 மற்றும் 2019லும் மீண்டும் அது வென்றது.

பாஜக அதன் மதவாத சித்தாந்தத்தை ஒருபோதும் மறைக்கவில்லை. சிங் ஆட்சிக்குப் பிறகு, 1992 டிசம்பர் 6 அன்றுதான் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. அப்போது உத்தர பிரதேசத்தில் இருந்த பாஜக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால், அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது.

அதற்கு முன்பு பாஜகவின் மூதாதை அமைப்பான ஜன சங்கம் காங்கிரஸைப் பதவியில் இருந்து இறக்குவதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து செயல்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சம்யுக்தா விதாயக் தளத்தில் ஜன சங்கமும் ஒரு அங்கத்தினராக இருந்தது. அந்தக் கூட்டணி 1967ல் இருந்து 71 வரையில் பல்வேறு மாநிலங்களில் அரசமைத்தது. அந்தக் கூட்டணி ஆட்சியில் ஜனசங்கமும் பங்கேற்றது. 1977இல் ஜனசங்கம் தன்னை ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு அதன் அரசிலும் பங்கேற்றது. (பின்னர் பாஜக உருவானது) 1987இல் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் லோக் தள் (B) கட்சி - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பாஜகவுடன் வி.பி.சிங் கூட்டணி வைத்திருந்தாலும், அவரது கொள்கையில் உறுதியாக இருந்தார். 1990 அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாஜகவின் பாபர் மசூதி இடிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார். அதற்கு தனது ஆட்சி அதிகாரத்தை விலையாகக் கொடுத்தார். பாஜக வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.

ஆதிக்க சாதிகளின் புறக்கணிப்பு

இந்திய அரசியலில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய வி.பி.சிங், அவரது மரணத்திற்குப் பிறகு நினைவுகூரப்படாமல் புறக்கணிக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். அவரை கௌரவிக்கும் விதமாக ஒரு அஞ்சல் தலையைக்கூட எந்த அரசாங்கமும் வெளியிடவில்லை. அவரது சொந்த ஊரான அலகாபாத்தில்கூட அவரது பெயரில் ஒரு தெரு இல்லை. அரசு அலுவலகக் கட்டிடம் எதற்கும் அவரின் பெயர் சூட்டப்படவில்லை. இதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. இந்திய அரசியலின் இரு துருவங்களான காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் அவர் எதிரியாக இருந்தார். இரு கட்சிகளுமே அவரை கெளரவிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.

அவரது வாரிசுகள் என்று அறியப்பட்ட ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி தனிக்கட்சி கண்ட மிகப் பெரிய தலைவர்கள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர்கூட வி.பி. சிங்கை நினைவு கூறவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தவர்கள். அந்தக் காலகட்டத்தில்கூட அரசுரீதியாக எந்த ஒரு கௌரவத்தையும் அவர்கள் வி.பி. சிங்கிற்கு வழங்கவில்லை. இத்தனைக்கும் மண்டல் அறிக்கை அமல்படுத்தப்பட்டதால் அதிகம் பயனடைந்தவர்கள் இவர்கள்தான். இத்தனைக்கும் முலாயம் சிங் யாதவும் வி.பி.சிங்கும் நெருக்கமானவர்கள்தான். 

அவருக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் எனது சிறிய முயற்சிதான், அவரது 90வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, வெளிவரும் இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம்.


நூல்: அரக்கர் 
ஆசிரியர்: தேபஷிஷ் முகர்ஜி 
தமிழில்: க.சிவஞானம்
விலை: ரூ.695
வெளியீடு: ஆழி பதிப்பகம்

தொடர்புக்கு: ஆழி பப்ளிஷர்ஸ், 
எண்.5, கே.கே.சாலை, 
காவேரி ரங்கன் நகர், 
சாலிகிராமம்,
சென்னை – 600093. 
செல்: 9715089690 
www.aazhibooks.com

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: க.சிவஞானம்

3

2

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாரி!மேலாண் இயக்குநர்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிகிசுமுடி.ஆர்.நாகராஜ்உணவு மானியம்மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்முர்க் கட்டுரைஊர்வசி புட்டாலியாவர்ணாசிரமம்நவீனத் தமிழ் ஓவியர்தொழில்நுட்பம்வீட்டுக்கடன் சலுகைGandhi’s Assassinமுடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுசாத்தானிக் வெர்சஸ்அரசமைப்புச் சட்டம்வேளாண் ஆராய்ச்சிஅரசு நடவடிக்கைபத்திரிகையாளர்கள்தகுதித் தேர்வுதொல்லை தரும் தோள் வலி!நாடெங்கும் பரவட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்புமரிக்கோஇந்திய பிரதமர்14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?சித்தார்த்ஒன்று திரண்ட மாணவர்கள்ஆரியவர்த்தம்சீர்திருத்த நடவடிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!