கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை விரைவில் செய்து முடிக்க விரும்பும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் 255 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தத் தீர்மானித்திருக்கிறது. தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடம் தரவும், பாஜகவின் வெற்றித் தொகுதிகளைக் கணிசமாகக் குறைக்கவும் இந்த முடிவை எடுத்திருக்கும் காங்கிரஸ், தோழமைக் கட்சிகளிடமிருந்து 29 தொகுதிகளைதான் பெறக்கூடும் என்றும் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேர்தல் உத்தி தொடர்பாக ஜனவரி 4 அன்று அனைத்திந்திய காங்கிரஸ் பேரவை (ஏஐசிசி) உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் மிக நீண்ட ஆலோசனைகளை நடத்தினார்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் எவ்வளவு தொகுதிகளைக் கேட்கலாம், எப்படி உடன்பாடு செய்துகொள்ளலாம் என்று விரிவாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மொத்தம் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்று கார்கே திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், 255 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸின் யோசனைகளைத் தோழமைக் கட்சிகள் மாநிலவாரியாக எந்த அளவுக்கு ஏற்கும் என்பதைப் பொருத்துத்தான் மொத்தம் எத்தனை தொகுதிகள் என்பது இறுதியாகும்.
உத்தர பிரதேசம், வங்கம், பிஹார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் மொத்தம் 210 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களிலுமே ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் காங்கிரஸுக்கு எவ்வளவு தொகுதிகளை விட்டுத்தரும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதியில் 6 முதல் 10 தொகுதிகள் வரை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது. 2 இடங்களை மட்டும்தான் தர முடியும் என்கிறது திரிணமூல் காங்கிரஸ். இவ்விரு கட்சிகளுடன் சேர்ந்து நிற்கப் போவதில்லை, இடதுசாரி முன்னணி தனியாகத்தான் போட்டியிடும் என்று ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. கேரளத்திலும் அந்த முன்னணி, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறது.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது, ஆனால் 5 தொகுதிகளுக்கு மேல் தருவது வீண் என்று கருதுகிறது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி.
மகாராஷ்டிரத்திலும் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மகா விகாஸ் அகாடியில் முட்டுக்கட்டை நிலையே காணப்படுகிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை ஆகியவை காங்கிரஸுடன் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. அந்த இரு கட்சிகளிலும் பிளவு ஏற்பட்ட நிலையிலும் அவை, தங்களுக்குரிய இடங்களைக் குறைத்துக்கொள்ள தயாராக இல்லை.
அதேபோல், தில்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பகிர்வு தொடர்பிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதக் கூடிய, அதாவது இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்; தங்களுக்கு ஆதரவுள்ள மாநிலங்களைத் தங்களுக்கே விட்டுத்தர வேண்டும் என்றே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன.
காங்கிரஸைவிட மற்ற கட்சியால் பாஜகவைத் தோற்கடிக்க வாய்ப்பு அதிகம் என்றால் அந்தக் கட்சிக்கே காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 423 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்த 423 தொகுதிகளிலும், 186 தொகுதிகளில் பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதின. இந்த 186 தொகுதிகளில் காங்கிரஸால் 16 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இம்முறை காங்கிரஸ் வியூகத்தை மாற்றுகிறது. 255 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த கார்கே விரும்புகிறார். அதில் 128 தொகுதிகள் இமாசலம், உத்தராகண்ட், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. இங்கெல்லாம் பாஜகவுக்கு காங்கிரஸ் மட்டுமே முக்கியப் போட்டியாளர். 2019இல் இந்த மாநிலங்களில் மொத்தமாகவே 4 தொகுதிகளில்தான் காங்கிரஸ் வென்றது. 2024 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சிக்கு வருவது இந்தத் தொகுதிகளில் அது கணிசமான வெற்றியைப் பெறுவதைப் பொருத்தது என்பதால், கூடுதல் கவனம் செலுத்துவது கட்டாயம் ஆகிறது.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
மக்களவைத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக, சமீபத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸால் 2019 தேர்தலில் 3 மக்களவைத் தொகுதிகள் அளவுக்குத்தான் முழுதாக வெற்றி பெற முடிந்திருக்கிறது. இங்கும் எண்ணிக்கையை அது உயர்த்த தலைப்படுகிறது.
அடுத்ததாக அசாம், வட கிழக்கு மாநிலங்கள், ஒடிஷா, தெலங்கானா, ஆந்திரம், ஹரியாணா ஆகியவற்றில் மொத்தமாக 100 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கு செல்வாக்கு ஏதுமில்லை. இங்கெல்லாம் பாஜக அல்லது பிற மாநிலக் கட்சிக்கு காங்கிரஸ்தான் முக்கியப் போட்டியாளர். 2019இல் இந்த மாநிலங்களிலிருந்து காங்கிரஸுக்கு 17 இடங்கள் கிடைத்தன. இந்த எண்ணிக்கையை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மேலும் அதிகப்படுத்துவது அவசியம்.
இப்படியாக 226 முதல் 255 வரை எண்ணிகையுள்ள இந்தத் தொகுதிகள் 19 மாநிலங்களில் பரந்துள்ளன. 2019 தேர்தலில் காங்கிரஸ் இவற்றில் 21 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணியின் பிற கட்சிகள் இப்போது பேசும் போக்கில் சென்றால், காங்கிரஸ் பிரதான இடத்தை வகிக்காத மாநிலங்களில் நாடு முழுவதிலுமே அதிகபட்சம் 29 தொகுதிகளைத்தான் விட்டுத்தரும் என்று தோன்றுகிறது.
இவ்வளவு பெரிய கூட்டணியை அமைத்துவிட்டு, காங்கிரஸ் பெறப்போகும் தொகுதிகள் எண்ணிக்கை 10 மாநிலங்களில் மிக அதிகம் இல்லை என்பதே யதார்த்தம். உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், தில்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் மொத்தம் 308 தொகுதிகள் இருக்கின்றன. 2019இல் காங்கிரஸ் கட்சி இந்த மாநிலங்களிலிருந்து 48 தொகுதிகளில் வென்றது, அவற்றில் 31 கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப்பிலிருந்து கிடைத்தது.
அடுத்ததாக ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மூலம் கட்சிக்கான ஆதரவைப் பெருக்க காங்கிரஸ் கணக்கிடுகிறது. இந்த யாத்திரை நடைபெறவுள்ள பத்து மாநிலங்களில் ஐந்தில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருக்கின்றன; குறிப்பாக மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ்தான் பிரதான போட்டியாளர்.
ஆக, 2024 பொதுத் தேர்தல் முடிவானது இரண்டு அம்சங்களைப் பொருத்தது. முதலாவது, 128 தொகுதிகளில் பாஜகவை நேருக்கு நேர் எதிர்க்கும்போது எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெல்கிறது என்பது ஆகும்; அடுத்தது, ஏனைய கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் 308 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸுக்கு விட்டுத்தரும் என்பது ஆகும்.
எப்படிப் பார்த்தாலும், 2019 தேர்தலைக் காட்டிலும் 2024 தேர்தலைக் கூடுதல் நம்பிக்கையோடுதான் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்கொள்கின்றன!
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா
2024: யாருக்கு வெற்றி?
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.