கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ்
09 Jun 2023, 5:00 am
0

ர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அனைவராலும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை இப்போது முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது: 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிதான் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில்லை என்பதே அது. ஒன்றிய அரசை ஆளும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்பது முடிந்த முடிவல்ல. இந்தியக் குடியரசின் விழுமியங்களில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் இது உண்மையிலேயே நல்ல செய்தி; அதேசமயம் இது எளிதான வெற்றியாகவும் இருந்துவிடப் போவதில்லை. குடியரசின் விழுமியங்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று கருதும் அனைவரும் தங்களுடைய செயல்களையும் சிந்தனைகளையும் ஒருமித்து மேற்கொண்டாக வேண்டும்.

2024 மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான அடிப்படைக் கேள்வி எது என்பதை ஊகிப்பது கடினமல்ல. பாரதிய ஜனதாவின் ‘வலிமை -வலிமையின்மை – வாய்ப்புகள் – ஆபத்துகள்’ ஆகிய நான்கு அம்சங்களுமே பிரதமர் நரேந்திர மோடியைச் சுற்றியே இருக்கின்றன. அந்தக் கட்சியின் வலிமை - மோடிக்கு இருக்கும் செல்வாக்கு. வலிமையின்மை - மோடி அரசின் செயல்பாடு. வாய்ப்பு – மோடி கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடிய தேர்தல் உத்தி, ஆபத்து – மோடி என்கிற பிம்பம் திடீரென உடைந்து விழக்கூடிய வாய்ப்புகள். ஆங்கிலத்தில் இந்த உத்தியை ஸ்வாட் (SWOT) (ஸ்ட்ரென்த் - STRENGTH, வீக்னெஸ் - WEAKNESS, ஆப்பர்ச்சூனிட்டீஸ் - OPPORTUNITIES, த்ரெட்ஸ் - THREATS) என்ற சொல்லால் குறிப்பார்கள்.

எதிர்க்கட்சிகளின் வலிமை - இந்தியாவின் பன்மைத்துவம் நிரம்பிய புவியியல், சமூகவியல் அமைப்பு. வலிமையின்மை – எதிர்க்கட்சிக் கூட்டுகளின் கடந்த கால வரலாறு, அது தொடர்பான உளவியல். வாய்ப்பு – நாட்டு மக்கள் சந்திக்கும் பொருளாதாரச் சோதனைகள். ஆபத்து – அரசியல் களம்.

லோக்நீதி சிஎஸ்டிஎஸ் கணிப்பு

லோக்நீதி – சிஎஸ்டிஎஸ் அமைப்பு நாடு முழுவதும் கர்நாடக பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்திய கருத்துக் கணிப்பு மக்களுடைய பொதுத் தேர்தல் விருப்பம் எப்படி இருக்கும் என்று கணிக்க உதவுகிறது. அந்தக் கணிப்பு ‘என்டிடிவி’ தொலைக்காட்சியில் இரு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது, ‘தி பிரிண்ட்’ நாளிதழில் இரண்டு கட்டுரைகளாக வெளியானது. பொதுமக்களுடைய மனநிலையை சரியாக உணர்த்தும் அளவுமானியாகவே ‘லோக்நீதி’ கணிப்பைப் பார்க்கிறேன். 

அதற்குக் காரணம் அந்த அமைப்போடு ஒரு காலத்தில் எனக்கிருந்த தொடர்பு மட்டுமல்ல. ஏழாயிரம் (7,000) பேரிடம் மட்டும் அது நடத்திய கருத்துக் கணிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் மாநிலவாரியாக எந்த அணிக்கு எவ்வளவு ஆதரவு என்பதைத் தெரிவிக்க முடியவில்லை (அப்படிச் செய்யாமலிருப்பதும் புத்திசாலித்தனம்); அதேசமயம் வாக்காளர் பட்டியலிலிருந்து அங்கும் இங்குமாக பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த மக்களைத் தேர்ந்தெடுத்திருப்பது வாக்காளர்களின் தேர்வை மிகத் துல்லியமாக அறிவதற்கு நிச்சயம் உதவுகிறது. 

கருத்துக் கணிப்புக்கு அது எழுப்பிய கேள்விகள் தரமானவை, கடந்த கால பதில்களுடன் ஒப்பிடக்கூடியவை. அத்துடன் அந்த அமைப்பு தனது கணிப்பு வழிமுறைகளை மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. கடந்த காலத்தில் தங்களுக்குக் கிடைத்த பதில்களையும் வெளியிட்டுள்ளது.

10% காங்கிரஸுக்கு கூடுதல் 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களின் ஆதரவு மேலும் 10% அதிகரித்திருக்கிறது என்பதே மிகவும் வியப்பூட்டும் முடிவாகும். 2024 மக்களவை பொதுத் தேர்தல் முடிவு, எந்தக் கூட்டணிக்கு வேண்டுமானாலும் சாதகமாகலாம் என்ற ஊகத்தை உறுதிப்படுத்துகிறது. 2023 ஏப்ரல் இறுதி வாரத்தில் மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு நாடு முழுவதும் 29% வாக்குகள் கிடைக்கும், 2019இல் கிடைத்த 19.5% வாக்குகளைவிட கிட்டத்தட்ட 10% அதிகம். வாக்குகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு சாய்வதில் இது மிக மிக அதிகமான சதவீதமாகும். 

அப்படியானால் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கூடுதலாக வாக்குகளைத் தரத் தயாராக இருக்கிறார்கள். இதனால் 2014க்கும் முன்னால் காங்கிரஸ் இருந்த பரிதாபமான நிலையைவிட அதிக வாக்குகளும் அதிக தொகுதிகளும் அதற்குக் கிடைத்துவிடும். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், இதே அளவு எதிர்ச் சரிவு பாஜக ஆதரவு வாக்குகளில் ஏற்பட்டுவிடவில்லை. 2019இல் மொத்தம் 37.4% வாக்குகளைப் பெற்ற பாஜக இந்தத் தேர்தலில் மேலும் சிறிதளவு கூடுதலாகப் பெற்று, 39% என்ற அளவுக்குச் செல்கிறது.  

அப்படியானால் காங்கிரஸ் யாருடைய வாக்குகளைக் கூடுதலாக ஈர்க்கிறது. மற்றவர்களுடைய வாக்குகளை – அதிலும் குறிப்பாக மாநிலக் கட்சிகளின் வாக்குகளைத்தான் ஈர்க்கிறது. இப்படி விழும் வாக்குகளை மாநில வாரியாகவோ, சமுதாய வாரியாகவோ அந்தக் கணிப்பு வெளியிடவில்லை. காங்கிரஸுக்கு இந்தக் கூடுதல் வாக்குகள் அதனுடைய தோழமைக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மூலமாகவோ, அல்லது தோழமைக் கட்சிகளாகக்கூடிய வாய்ப்புள்ள சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமிருந்தோ, அல்லது நடுநிலை வகிக்கக்கூடிய பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, ஆம்ஆத்மி கட்சி ஆகியவற்றிடமிருந்தோ கிடைக்கக்கூடும். 

அப்படி தோழமைக் கட்சிகளின் வாக்குகள் அல்லது நடுநிலைக் கட்சிகளின் வாக்குகள் காங்கிரஸுக்கு வருவது உதவிகரமாக இருக்காது. இதனால் தோழமைக் கட்சியாக வர நினைக்கும் கட்சிகளுடன்கூட காங்கிரஸுக்கு உரசல்கள் ஏற்படலாம். சமூகரீதியாக முஸ்லிம்கள், விளிம்புநிலை மக்கள், ஏழைகள் காங்கிரஸைப் பெரிதாக ஆதரிக்கத் தீர்மானித்திருப்பது தெரிகிறது.

இந்த வாக்கு சதவீதங்கள் எவ்வளவு தொகுதிகளைக் கூடுதலாகத் தந்துவிடும் என்ற கோணத்தில் நாம் நமது கற்பனைக் குதிரைகளை சற்றே கட்டிப்போடுவது நல்லது. இந்த கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு வாக்கு சதவீதம் எந்தெந்த பிரிவுகளில் எவ்வளவு என்ற விவரத்தைக் கணிப்பு தரவில்லை. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய தோழமைக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் புதிய கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்பு குறைவு என்பதாலும் அதன் வாக்குகள் அதிகம் அதிகரிக்க வாய்ப்பில்லை. முன்னாள் தோழமைக் கட்சிகளின் ஆதரவாளர்களுடைய வாக்குகளை பாஜக சிறிய அளவுக்கு கவரக்கூடும். ஒட்டுமொத்தாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை இந்த 10% ஒரேயடியாக அதிகப்படுத்திவிடாது என்றாலும், பாஜகவைப் பொருத்தவரை இப்போதிருப்பதைவிட அதிகத் தொகுதிகளை எதிர்பார்க்க முடியாது என்ற நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கட்டத்தில் அனைத்து தரப்புமே பதற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் ஆதரவு ஒரேயடியாக 10% கூடிவிட்டதே என்று பாஜக பதற்றம் அடைந்தாக வேண்டும். பாஜகவுக்குள்ள வாக்கு சதவீதம் குறையவில்லையே என்று காங்கிரஸ் பதற்றப்பட வேண்டும். இரண்டு தேசியக் கட்சிகளும் சேர்ந்து நம்முடைய வாக்குகளைச் சரித்துவிடும் போலிருக்கிறதே என்று எல்லா மாநிலக் கட்சிகளும் பதறியாக வேண்டும். இந்தப் பதற்றம் ஒரே சமயத்தில் ஆக்கப்பூர்வமானதும், அழிவுபூர்வமானதுமாகும், இதுதான் அடுத்த பொதுத் தேர்தலுக்கு நம்மை இட்டுச் செல்லப்போகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு, தேர்தலில் வெற்றிபெற எது உதவும், எது உதவாது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு சற்றே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. பணபலம், ஊடக ஆதரவு பலம், கட்சியின் அமைப்பு பலம், மோடி பற்றி வெகு கவனமாக கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் ஆகியவை சாதகமாக இருக்கின்றன. தேர்தலில் பிற போட்டியாளர்களைவிட மோடிக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதை இந்தக் கணிப்பும் உறுதிப்படுத்துகிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுலுக்கு ஆதரவு கூடியிருந்தாலும் மோடிக்கும் அவருக்கும் இடையில் முன்பிருந்த பெரிய இடைவெளியை இட்டு நிரப்பிவிடும் அளவுக்கு அது உயர்ந்துவிடவில்லை. சர்வதேச அரங்கில் மோடி அரங்கேற்றிய காட்சிகள், அவருக்குச் சாதகமான இந்திய ஊடகங்களால் மிகவும் விசுவாசத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு, மக்களுடைய மனங்களில் அவருடைய செல்வாக்குக் கூடுவதற்கு உதவியுள்ளன. இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியவராக அவரைப் பார்க்க வைத்துள்ளது. சராசரி இந்தியர் இதை மிகவும் விரும்புகிறார்.

பாஜகவின் மிகப் பெரிய பலவீனமும் மோடிதான். அவருடைய அரசு நிர்வாக பாணி, “நடுங்கச் செய்யுமளவுக்கு திறமையற்றதாக” இருக்கிறது என்கிறார் பொருளாதார நிபுணர் பிரபாகர் பர்காலா. மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை மக்கள் உணராமல் தடுப்பது மிகவும் கடினம். தோழமைக் கட்சிகளையே கபளீகரம் செய்யும் மோடி - ஷா உத்தியால் அதற்குத் தோழமைக் கட்சிகளே கிடையாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளமும் சிரோமணி அகாலி தளமும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டன. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு மராட்டிய மக்களிடையே, உத்தவ் தாக்கரேவுக்கு உள்ள ஆதரவில் பாதிகூட இல்லை என்று ‘சகால்’ என்ற மராட்டிய தினசரி நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ் 17 Mar 2023

நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கைத்தான் பாஜக பெரிதும் நம்பியிருக்கிறது. மிகவும் முயற்சி எடுத்துத்தான் அவருடைய பிம்பத்தை அது கட்டமைத்திருக்கிறது. அது உடையும் அளவுக்கு ஏதேனும் நடந்தால் கட்சியின் வெற்றி வாய்ப்பு வேகமாக சரிந்துவிடும். மோடி – அதானி நெருக்கம் குறித்து இந்தக் கருத்துக் கணிப்பு எதையும் தெரிவிக்கவில்லை, அப்படித் தெரிவிப்பது மரபும் இல்லை. ரஃபேல் விமான பேர ஊழலைவிட இது மிகவும் ஆபத்தானது, பெரிது என்பதே உண்மை. எதிர்க்கட்சிகள் மட்டும் இணைந்து இதில் கவனம் செலுத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவந்து மோடிக்கு எதிராக இடைவிடாமல் பிரச்சாரம் செய்தால் 2024 தேர்தல் முடிவுகள் நிச்சயம் திட்டவட்டமான வெற்றியை எதிர்க்கட்சி கூட்டணிக்கே அளிக்கும். 

எதிர்க்கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் வலிமையுடன் இருப்பது புவியியல்ரீதியிலான வலிமை. வெவ்வேறு மாநிலக் கட்சிகள் பாஜகவை அவரவர் மாநிலங்களில் தீவிரமாக எதிர்த்தால், பாஜகவின் வெற்றித் தொகுதிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும். எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் சாதி, சமுதாய அடிப்படையில் மக்களிடையே செல்வாக்கு பெற்றவை, சமூக – பொருளாதார முக்கோணத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஏழைகள், நடுத்தர மக்களை ஆதரவாளர்களாகக் கொண்டவை. எதிர்க்கட்சிகளின் பலவீனமெல்லாம் அவற்றால் வெகு வலிமையாக ஒன்றுபட முடியவில்லை, அவற்றுக்கு நம்பகமான தலைவர் கிட்டவில்லை. தேர்தலுக்கு முன்னதாகவே ஒருமைப்பாட்டுடன் கூட்டணி அமைப்பதைவிட, ஒருங்கிணைந்து செயல்படுவதும் ஒரே குரலில் பேசுவதும் மிக மிக முக்கியம். இதில் உள்ள பலவீனம்தான் பாஜகவால் தொடர்ந்து பிரச்சாரம் செய்து தனது ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. நரேந்திர மோடியை எதிர்க்க மற்றெல்லா தலைவர்களையும்விட முதன்மையானவர் ராகுல் காந்திதான் என்பதைக் கருத்துக் கணிப்பும் தெரிவிக்கிறது. 2014ஐவிட அவருக்கு மக்கள் மத்தியிலான ஆதரவு இரட்டிப்பாகியிருக்கிறது, ஆயினும் மோடியை எதிர்த்து வெற்றிபெறும் அளவுக்குப் பெரிதாக உயர்ந்துவிடவில்லை. 

மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து பிரச்சாரம் செய்தாலே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்பதை இந்தக் கணிப்பு முக்கியமாக உணர்த்துகிறது. மக்களை வாட்டும் பிரச்சினைகள் முன்பைவிடத் தீவிரமாகிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, விலைவாசி உயர்வு ஆகியவை மக்களை வாட்டுகின்றன. கடந்த நான்காண்டுகளில் தங்களுடைய பொருளாதார நிலைமை மிக மோசமாகிவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார முன்னேற்றத்தில் மோடி அரசின் நிர்வாகம் திருப்தி தரவில்லை என்றே சாடியுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு உள்ள மிகப் பெரிய வேலை எதுவென்றால், மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய புதிய, மாற்று திட்டத்தை தயாரித்து அதை மக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்கும்படி அவர்களிடம் கொண்டு செல்வதுதான்.

2018இல் நிலவிய அதே நிலை

ஒரு வகையில் நாம் கடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் 2018இல் இருந்த அதே நிலையில் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவால் மக்கள், மோடி அரசின் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள். அந்த அரசுக்கிருந்த ஆதரவு தொடர்ந்து சரிவு கண்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் பாஜக தோல்வியும் கண்டது. அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 100 இடங்களாவது குறையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அதற்குப் பிறகுதான் புல்வாமா - பலாகோட் ராணுவ மோதல்கள் நிகழ்ந்தன. எதிர்க்கட்சிகளின் ஆட்சி மாற்றக் கோட்டைகள் சரிந்தன. சமீபத்திய கருத்துக் கணிப்பில் பெறப்பட்டுள்ள பல முடிவுகள் 2018இல் பெறப்பட்டதற்கு நெருக்கமாகவே உள்ளன. இந்த முறை கூடுதலாக இருப்பவை பாரத் ஜோடோ யாத்திரையும் எதிர்க்கட்சி முகாம்களில் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் கூடுதல் நம்பிக்கையும்தான்.

மக்கள் மத்தியில் பாஜக அரசுக்கு எதிராக நிலவும் – வளர்ந்துவரும் அதிருப்தியையும் கோபத்தையும் திட்டவட்டமான வெற்றியாக மாற்றிக்கொள்ள முடியுமா? அல்லது 2019இல் கடைசி நேரத்தில் ஏற்பட்ட உத்தி போல எதையாவது செய்துவிடுமா பாஜக? மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடு முழுவதும் மக்களுடைய மனங்களை உணர்ச்சிவசப்பட வைத்து பாஜகவுக்கு ஆதரவாகத் திருப்பக்கூடிய விடயம் எதுவாக இருக்கும் என்றே தனிப்பட்ட உரையாடல்களில் எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொள்கின்றனர். ஜனநாயக முறையிலான தேர்தலில் தோற்று ஆட்சியை இன்னொரு முறை இழக்க பாஜகவால் முடியுமா என்று பிரதாப் பானு மேத்தா ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கட்டுரையில் கேட்டிருப்பதையும் மறந்துவிட முடியாது.  

 

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லை
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்பு
அரசியல் அகராதிக்குப் புதுவரவு ‘மோதானி’
புதிய ராகுல்
மூன்று தேர்தல் முடிவுகளும் சொல்வது என்ன?

யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1


அதிகம் வாசிக்கப்பட்டவை

prerna singhபின்லாந்து பிரதமர்முன்னெடுப்புகருத்துரிமை: மகாவித்வான் காட்டிய எதிர்வினைகும்ப்ளேகன்னட எழுத்தாளர்திருமாவேலன்எங்கே இருக்கிறார் பிராபகரன்?காங்கிரஸ் மடிந்துவிட வேண்டும்அரசமைப்புச் சட்டத் திருத்தம்உணவுமுறைவாக்கு அரசியல்சுந்தர் சருக்கைசித்தர்கள்சமஸ் சனாதனம் பேட்டிஉடல் எடையைக் குறைப்பது எப்படி அருஞ்சொல்உழவர்கள்வரி நிர்வாக முறைமதச்சார்பற்ற ஜனதா தளம்மார்க்ஸியர்இந்திய அரசுகலால் வரிசந்தோஷ் சரவணன் கட்டுரைநடாலி டியாஸ்தௌலீன் சிங் கட்டுரைஇளமரங்கள்தாமஸ் ஃப்ரீட்மன்யார் இந்த சித்ரா?குழந்தைப்பேறுதிருக்குமரன் கணேசன் புத்தகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!