கட்டுரை, பேட்டி, கல்வி, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

ஆங்கிலம் ஒரு சமூகச் சவால்: செந்தில் முருகன் பேட்டி

ச.ச.சிவசங்கர்
09 Nov 2022, 5:00 am
1

மிழில் உள்ளூர் வரலாறுகளை எழுதும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் 'அருஞ்சொல்' ஆசிரியர் குழுவானது, 'குளோபலியன் அறக்கட்டளை'யுடன் இணைந்து அப்படி உருவாக்கியிருக்கும் முதல் நூல் 'ஒரு பள்ளி வாழ்க்கை'. இந்திய கல்வியின் மீதான விமர்சனத்தையும், தீர்வாகக் கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதையும் முன்வைக்கும் இந்த நூலானது, கூடவே உள்ளூர் அளவில் பெரும் பணிகளை ஆற்றி அங்கேயே புதைக்கப்பட்டுவிட்ட ஆளுமைகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நூலில் அப்படி இடம்பெற்றிருக்கும் ‘ஃப்ரெஸ்ஸா’ நிறுவனத்தின் தலைவர் செந்தில் முருகனுடைய பேட்டி இது. நம்முடைய கல்விமுறையில் ஆங்கிலம் எவ்வளவு பெரிய குறுக்கீடாக இருக்கிறது என்பதை விவாதிக்கவும் இது ஓர் ஆவணமாக இருக்கிறது. 

செந்தில் முருகன். இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்முனைவோர். ‘ஃப்ரெஸ்ஸா’ நிறுவனத்தின் தலைவர். தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் அந்தப் படிப்பை வரித்துக்கொண்டவர்களில் ஒருவர். மன்னார்குடி போன்ற ஒரு சிறுநகரம் கணினித் துறையில் எப்படி முன்னோடியாக நின்றது என்பதற்கும், மன்னார்குடி ‘தேசிய மேல்நிலைப் பள்ளி’யின் அன்றைய தலைமையாசிரியர் சேதுராமன் இந்த விஷயத்தில் எவ்வளவு தொலைநோக்கோடு சிந்தித்தார் என்பதற்கும் இவரும் ஒரு சாட்சியம். 

உங்களைப் பற்றிய பின்னணியிலிருந்து நாம் பேச ஆரம்பிக்கலாமா? கணினி அறிவியலில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

அப்படியெல்லாம் நான் பகுத்தறிந்து தேர்ந்தெடுத்துக்கொண்ட விஷயம் என்று சொல்லிவிட முடியாது. என்னுடைய பள்ளி எனக்குக் கொடுத்த கொடை இது. அப்படித்தான் சொல்ல வேண்டும். நீங்கள் என்னுடைய பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்னுடைய பெற்றோர் சின்னையன் – அலமேலு இருவருமே கூலித் தொழிலாளிகள். அப்பா, சுருட்டு சுத்தினார்; அம்மா, வீட்டில் தறி போட்டார்கள். சுருட்டுத் தொழில் நொடிந்ததும், வீட்டில் இரண்டு தறிகள் ஓடின. அப்பா அம்மாவோடு வீட்டின் ஐந்து பிள்ளைகளும் தறிகளில் உட்கார்ந்தோம். அப்படியும் வறுமைதான்.

என்னுடைய சகோதரிகளுக்கெல்லாம் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆயிற்று. அண்ணன் தப்பிப் பிழைத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஆனார். நான் வீட்டில் சிகிடா போடுவது, தறி நெய்வதன் வழி கிடைத்த சொற்ப காசை வைத்துக்கொண்டுதான் படிப்பைக் காப்பாற்றிக்கொண்டேன். பண்டிகை நாளில் எடுக்கும் புத்தாடையையே சீருடையாக எடுத்துத் தருவார்கள்; அது ஒன்றுதான் ஒரு வருஷத்தில் எடுக்கப்படும் புத்தாடை. மதியவுணவுக்குப் பள்ளிக்கூடத்தையே நம்பி இருந்தேன். நடுநிலை வரையிலான என்னுடைய படிப்பு வாணி விலாஸ் பள்ளியில் நடந்தது. அது நல்ல பள்ளிக்கூடம் என்றாலும், அங்கு எட்டாவது முடித்துவிட்டு தேசியப் பள்ளியில் ஒன்பதாவது சேரும்போது ஏபிசிடி தவிர ஆங்கிலத்தில் எனக்கு வேறு எதுவும் தெரியாது. மற்ற பாடங்களில் நான் சுமாரான மாணவன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட பின்னணியில் வந்த ஒருவனுக்கு அடுத்த இரண்டு வருடங்களில் கணினி அறிவியலைப் பற்றியெல்லாம் என்ன தெரிந்திருக்கும்! 

அப்படியென்றால் கணினி அறிவியலுக்கு உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? 

அப்போதெல்லாம் எல்லாப் பள்ளிகளிலுமே ஒன்பதாம் வகுப்பில் பெரிய அளவில் வடிகட்டுவார்கள்; பத்தாம் வகுப்பில் சதம் அடிப்பது பள்ளிகள் இடையிலான பெரும் போட்டியாக இருக்கும். வாணி விலாஸ் பள்ளியிலிருந்து தேசிய பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்புக்கு வந்து சேர்ந்த 40 பேரில் நான் உட்பட மூன்று பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தோம். பத்தாம் வகுப்பிலும் ஆங்கிலத்தில் நான் 43 மதிப்பெண்களையே எடுத்திருந்தேன். ஆனால், ஏனைய பாடங்களில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். கணிதத்தில் 92 பெற்றிருந்தேன். எங்கள் பள்ளியில் 1985இல் கணினி அறிவியல் படிப்பை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். நான் 1987 பேட்ஜ். பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். மதிப்பெண்களோடு இந்த மதிப்பீட்டையும் சேர்த்தே மேல்நிலைப் படிப்பில் யாருக்கு எந்தப் பிரிவை ஒதுக்குவதென்று முடிவு எடுப்பார்கள். அப்படித்தான் என்னைக் கணினி அறிவியல் படிக்கும்படி சொன்னார்கள். 

உங்களுக்கு அது பிடித்திருந்ததா? 

எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்பதோடு, என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கும் அதுபற்றி எதுவும் தெரியாததால் இடிந்துபோனேன். தேம்பித் தேம்பி நாளெல்லாம் அழுதேன். ஆசிரியர்கள்தான் தைரியம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். 

சேதுராமன் அப்போதுதான் அறிமுகம் ஆனாரா? 

ஆமாம். அவர் எனக்கு ஆங்கில ஆசிரியர். வகுப்பில் நிறையப் பேர் கிராமப்புற, அடித்தட்டுப் பின்னணியிலிருந்து வருபவர்கள் என்னைப் போன்று ஆங்கிலத்தில் சிரமப்படுபவர்களாக இருந்தார்கள். எப்படியாவது எங்களைக் கரைசேர்த்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் ஆசிரியர் சேதுராமன். அவருக்குப் பள்ளியைப் பற்றி மட்டுமல்லாது கணினித் துறை சார்ந்தும் ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது என்பதைச் சொல்ல வேண்டும். அப்போதே ‘சங்கரா கம்ப்யூட்டர் சென்டர்’ என்ற பெயரில் கணினிப் பயிற்சி மையத்தை மன்னார்குடியில் ஆரம்பித்திருந்தார்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களைப் போல மன்னார்குடியிலும் கணினிப் பயிற்சி நடந்தது. என்னைப் போன்றவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் அங்கு வாய்ப்பும் அளித்தார். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற முதல் தலைமுறை கணினிப் பொறியாளர்களை எடுத்துக்கொண்டால், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அவர்களில் இருப்பார்கள். அதற்கு ஆசிரியர் சேதுராமன் முக்கியமான காரணம். அது கணினி பெரும் விலைக்கு விற்ற காலகட்டம். பல பள்ளிக்கூடங்களில் கணினியையே பார்க்காமல் படிப்பு முடிக்கப்பட்ட அவலம் அன்றைக்கு இருந்தது. 

இங்கே கட்டமைப்பு மற்றும் தரம் எப்படி இருந்தது? 

பள்ளியில் கணினித் துறையைப் பெரிய அளவில் ஆசிரியர் சேதுராமன் வளர்த்தெடுத்தார். மாநில அளவில் குறிப்பிடத்தக்க இடத்தில் அன்றைக்கு தேசியப் பள்ளி இருந்தது. அதேபோல, கணினிப் பயிற்சி மையங்களில் படிப்பவர்கள், அன்றைக்கு ‘சிஎஸ்ஐ’ (கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆப் இந்தியா) நடத்தும் தேர்வை முக்கியமான ஒன்றாகக் கருதுவார்கள். 1989இல் அகில இந்திய அளவில் முதல் ரேங்க்கில் வென்றார் இங்கே படித்த சிவசுப்ரமணியன். அடுத்த ஆண்டில் இங்கே படித்த ஜெயஸ்ரீ இரண்டாம் ரேங்க்கில் வென்றார்.

பெருநகரங்களை ஒப்பிடக் கட்டமைப்பு சுமார் என்றாலும், தரம் நன்றாகவே இருந்தது. அடுத்து, ‘சங்கரா கம்யூட்டர்ஸ்’ என்று பட்டுக்கோட்டையிலும் ஒரு மையத்தை நடத்தலானார் சேதுராமன். பிறகு ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அவர்களுக்கான ஒரு மென்பொருளை வடிவமைத்துத் தரும் பணியில் எங்களை இறக்கினார். கணினித் துறை சார்ந்து அவருக்குப் பெரிய கனவுகள் இருந்தன. எதிர்காலத்தில் கணினித் தொடர்பில்லாத துறை என்று எதுவும் இருக்கப்போவதில்லை என்று சொல்வார். ஆனால், விரைவிலேயே தலைமையாசிரியரானார்; பள்ளிக்கூட நிர்வாகப் பணி அவரை விழுங்கிவிட்டது. என் வாழ்வைப் பொறுத்தவரை திருப்புமுனை என்பது நான் கணினி அறிவியலில் காலடி எடுத்துவைத்துதான். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

உள்ளூர்மொழியில் உயர்கல்வி ஏன் முக்கியம்?

அமித் ஷா 07 Nov 2022

அடுத்தடுத்த உங்கள் பயணங்கள் எப்படி இருந்தன? 

அடுத்து அதிராம்பட்டினம் காதர் மொஹைதீன் கல்லூரியில் பி.எஸ்சி. சேர்ந்தேன். கணினி அறிவியலில் சேர எட்டாயிரம் கட்டணம். என்னிடம் பணம் இல்லை என்பதால் கணிதத்தில் சேர்ந்தேன். என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ‘சரி, மூவாயிரம் ரூபாய் கட்டு’ என்றது நிர்வாகம். கஷ்டப்பட்டுப் பணத்தைத் திரட்டிக் கட்டி கணினி அறிவியலுக்குள் நுழைந்தேன். அங்கே உடன் படித்த நண்பர் சிவகுமார்தான் இன்றைக்கு ‘ஃபெரஸ்ஸா’வில் என்னுடைய கூட்டாளி. அடுத்து அங்கேயே எம்.எஸ்சி. முடித்தேன். இந்தக் காலகட்டத்திலேயே பட்டுக்கோட்டையில் சேதுராமனின் கணினி பயிற்சி மையத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்தேன். 

படிப்பு முடிந்ததும் கோவில்பட்டியில் மத்திய அரசு வேலை கிடைத்தது. சுங்கத் துறையில் ‘கம்ப்யூட்டர் ஆபிஸர்’ உத்யோகம். மாதம் 7,000 ரூபாய் சம்பளம். ஆனால், கணினித் துறை என்னை இழுத்தது. ‘மைக்ரோ பாயின்ட் கம்ப்யூட்டர் சென்டர்’ என்று ஒரு கணினிப் பயிற்சி மையம்; அதை நடத்திவந்த ஆம்ஸ்ட்ராங்கைச் சந்தித்தேன். கற்பித்தல் - கற்றலில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த அவர் என் நண்பர் ஆகிவிட்டார். தன் வீட்டிலேயே என்னைத் தங்கிக்கொள்ளச் சொன்னார். அலுவலக நேரம் போக மீதி நேரங்களில் கணினி அறிவியலில் புதிய விஷயங்களைத் தேடிப் படித்ததோடு, அங்கு வரும் மாணவர்களோடும் என் படிப்பைப் பகிர்ந்துகொண்டேன்.

இடைப்பட்ட காலகட்டத்தில் என்னுடைய நண்பர்களில் ஒருவரான மணிகண்டனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது. அவர் என்னை அங்கே வேலைக்கு அழைத்தார். ‘ஃப்ரைட் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தில் வேலை. அரசுப் பணியிலிருந்து விலகி துபாய் சென்றேன். அங்கே அப்போது 3,000 திர்ஹம் எனக்குச் சம்பளம். நம்மூர் மதிப்பில் அப்போது 30,000 ரூபாய். 2010இல் ‘டிரான்ஸ் வேர்ல்டு குரூப்’ நிறுவனத்துக்கு மாறினேன். அங்கு கிடைத்த பணி அனுபவம் சொந்தமாகத் தொழில் தொடங்கும் உத்வேகத்தைக் கொடுத்தது. 2012இல் ‘ஃபெரஸ்ஸா’ நிறுவனத்தை ஆரம்பித்தோம். இதற்கு என்னுடைய துபை நண்பர் அமுதன் பக்கபலம்.

இன்று பல நூறு பேருக்கு வேலை அளிக்கிறோம். என்னைப் பொறுத்த அளவில் இவையெல்லாமே பெரிய விஷயம். ஒருவேளை உணவுக்கும் மாற்றுச் சீருடைக்கும் ஏங்கிக்கொண்டிருந்த சிறுவன் நான். பண முடையால் மனம் உடைந்து பல சமயங்களில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என் அப்பா. பள்ளியும் கல்வியும் என்னைப் பெரும் அவலத்திலிருந்து வெளியே தூக்கியிருக்கின்றன. இன்றும் நான் பிறந்து வாழ்ந்த பகுதியில் பல குழந்தைகள் பரிதவித்து நிற்பதைப் பார்க்கிறேன். கல்வி தொடர்பான நம்முடைய சமூக அணுகுமுறை மேம்பட வேண்டும்; அதற்கான என்னாலானதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். 

 

கல்வித் துறையில் நம்முடைய அணுகுமுறை எப்படியானதாக இருக்க வேண்டும் என்கிறீகள்? 

அரவணைக்கும் அணுகுமுறை வேண்டும். ஒரு மொழியை அல்லது குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக்கொள்வதில் உள்ள குறைபாடானது அறிவுக் குறைபாடு இல்லை. ஆங்கிலத்தை வைத்து ஒரு மாணவரை மதிப்பிடுவது என்றால், ஒன்பதாம் வகுப்பில் ஏபிசிடி மட்டுமே தெரிந்த என்னை எந்தப் பள்ளிக்கூடமும் தேர்ந்தெடுத்திருக்காது. தேசிய பள்ளி அப்படியான அணுகுமுறையை உடைத்துதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. மொழி சம்பந்தமான நம்முடைய பார்வை மாற வேண்டும். ஆங்கிலம் எப்படி ஒரு சமூக வாய்ப்போ, அதேபோல சமூகச் சவாலாகவும் இருக்கிறது. தாய்மொழி வழியிலான கல்விக்கு நாம் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

மாணவர்களை அவர்களது மதிப்பெண்களைத் தாண்டி அவர்களுடைய சமூகப் பொருளாதாரப் பின்னணி, அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் ஆகியவற்றை எங்கோ அடையாளம் கண்டு மதிப்பிடும் பண்பு என் பள்ளி ஆசிரியர்களிடையே இருந்ததாலேயே எனக்குக் கணினிக் கல்வி வாய்ப்பு கிடைத்தது. 

சேதுராமன் ஒரு பிராமணர் என்பதைப் பிற்பாடுதான் அறிந்துகொண்டேன். ஏனென்றால் தேர்வுக் காலங்களில் அவர் வீட்டு மாடியிலேயே எங்களைத் தங்கிப் படிக்க வைத்தார். அவருடைய மனைவி அன்றாடம் காபி கொடுப்பார்கள். சேதுராமன் குடும்பத்தினரிடம் நான் எந்தப் பாகுபாட்டையும் உணர்ந்ததில்லை. ஆசிரியர் - மாணவர் உறவு வெறுமனே அலுவல் சார்ந்தது இல்லை. 

என்னுடைய வாழ்வில் அடுத்த கட்ட ஒளி ஏற்றிய இரு இடங்கள்; அதிராம்பட்டினமும் கோவில்பட்டியும். முஸ்லீம்கள் நடத்திய காதர் மொஹைதீன் கல்லூரி என்னுடைய வறுமையை உணர்ந்து சிறு சலுகையை அளித்தது. கிறிஸ்தவரான ஆம்ஸ்ட்ராங் என்னுடைய அண்ணன்போல என்னிடம் அன்பு பாராட்டியதோடு என் திறமைக்கு நான் மேலே வருவேன் என்ற உத்வேகத்தைத் தந்தார். என்னுடைய சொந்த அண்ணனான கௌதமன் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கிறார். அவருக்கு இணையாக இவர்களையே நான் நினைக்கிறேன். 

ஒவ்வோர் இடத்திலும் சாதி, மதப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உதவும் உள்ளமும் எளியோர் மீதான இந்தப் பரிவான அணுகு முறையும்தான் நம் சமூகச் சூழலுக்கு இன்று தேவைப்படும் அணுகுமுறை என்று எண்ணுகிறேன். மாறாக, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு, ‘நீட் தேர்வு’ உள்ளிட்ட இன்றைய பொது நுழைவுத் தேர்வுகள் ஓர் உதாரணம். சமூகப் பாகுபாட்டையும் காலங்காலமாக நீடிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க உதவும் பெரும் கருவி கல்வி. நாம் அதை முடக்கிவிடக் கூடாது! 

(ஒரு பள்ளி வாழ்க்கை நூலிலிருந்து…)

 

நூலைப் பெற அணுகுங்கள்...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ச.ச.சிவசங்கர்

ச.ச.சிவசங்கர், பத்திரிகையாளர்.


3

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

The interview with Senthil Murugan is an eye-opener for those who wish to achieve great things, but feel handicapped due to lack of financial resources and social standing. A great moral booster! I was moved by what he said about his teacher Shri Sethuraman's dedication and foresightedness. This interview, a small part of the book is enough for one to decide to buy the book and go through it fully.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சாரு அருஞ்சொல் பேட்டிசமஸ் கி.ரா.விவசாயிகளைத் தாக்காதீர்கழிவு மேலாண்மைசாதி இந்துக்கள்ஸ்மிருதி இராணிஜனநாயக நெருக்கடி பாதகமா?காகித தட்டுப்பாடுபேரிடர் மேலாண்மைபுத்தாக்க முயற்சிஉலகம் சுற்றும் வாலிபன்ஜெயப்ரகாஷ் நாராயண்ஆர்வம் இல்லாத வேலைஇல்லாத தலைமை!ஷிஃப்ட் கணக்குஜிஎஸ்டி ஆணையம்மலம் அள்ளும் வேலைசசிகலாசொல்லும் செயலும்கெளதம் அதானிமுரளி மனோகர் ஜோஷிநுகர்வு உறுப்புமாநகர் ஒரே தேர்தல்உஜ்ஜையினிகான்கிரீட்பாதகமா?வடக்கு: மோடியை முந்தும் யோகிசுருக்கி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!